வெள்ளி, 31 ஜனவரி, 2020

சிந்தனை - தந்தை பெரியார்


(முனைவர் மா.நன்னன் தொகுத்தவை- நூலின் “பெயர் பெரியார் கணினி”)

1) எந்தச் சங்கதியாய் இருந்தாலும், நன்றாகச் சிந்திக்க வேண்டும்; ஆராய்ந்து பார்க்க வேண்டும். இது கடவுளாச்சே, இது சாத்திரமாச்சே, இது பகவான் வாயிலிருந்து வந்ததாச்சே, பெரியபுராணம் சொல்லுகிறதே, சின்ன புராணம் சொல்கிறதே, என்று எல்லாம் நினைக்கக் கூடாது.
(குடிஅரசு -26-3-51) (34-4-11)

2) ஒரு காலத்தில் உலகத்திற்கே நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்த மக்களை இன்று கல்லையும், மண்ணையும், சாணியையும் கடவுளென்று கருதி இருக்கிற நிலைமைக்கு மடசென்மங்களாக்கி இழிவு படுத்திக் கடந்த 3,000 வருடமாக இந்த நிலையிலேயே இருக்கச் செய்திருக்கிறார்கள் என்றால், இதற்கு என்ன அர்த்தம்? இந்த மக்களுக்கு ஆராயும் புத்தி இருந்திருந்தால் இந்த நிலை ஏற்படுமா?
(விடுதலை – 3-5-54) (34-4-12)

3) மிருகங்களைவிட மனிதர்கள் பகுத்தறிவுள்ளவர்கள் என்று கூறப்படுகிறதே ஒழிய பெரும்பாலோர் பகுத்தறிவு கொண்டே சிந்திப்பதில்லை. பார்ப்பனர் சொல்கிறபடி கேட்டு, அவர்கள் நடத்துகிற மாதிரி நடந்து, இயங்கி வருவது வெட்கக் கேடல்லவா? மனித அறிவு வளர்ச்சிக்கு – முற்போக்குக்குப் பெருங்கேடானது அல்லவா?
(விடுதலை – 11-1-61) (34-4-17)

4) பகுத்தறிவுடன் சிந்திக்காமல் கண் மூடித்தனமாக நம்பி நம்பித்தான் இத்தகைய காட்டு மிராண்டி நிலைக்கு நம் மக்கள் வந்துள்ளனர். நாடும் இத்தகைய இழி நிலைக்கு வந்துளளது. எனவே சொல்வது யார் என்பது பற்றிச் சிந்தியாமல் சொல்லப்படுவன எவை; அவற்றுள் அறிவுக்கு ஏற்கக் கூடாதன எவை என்று சிந்தித்துப் பார்ப்பது ஏற்கக் கூடியனவற்றை ஏற்று மற்றவற்றைத் தள்ளிவிட வேண்டும்.
(விடுதலை – 16-1-61) (34-4-18)

5) எதையும் சிந்தித்துப் பார்க்காத காரணத்தினாலேயே நம் மக்கள் இந்த 20ஆம் நூற்றாண்டுக் காலத்திலும் இழி சாதிகளாக இருக்கின்றோம். நாங்கள் சொல்வதையும் கேட்க வேண்டும்; மற்றவர்கள் சொல்வதையும் கேட்க வேண்டும்; சிந்தித்துப் பார்த்து எது உங்களுக்குச் சரி யென்று படுகிறதோ அதனை ஏற்றுக்கொண்டு மற்றதைத் தள்ளிவிட வேண்டும்.
(விடுதலை – 11-5-61) (34-4-21)

6) மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்க வேண்டும. அப்போதுதான் மனிதன் காட்டு மிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை – 13-8-61) (34-4-23)

பகுத்தறிவு - தந்தை பெரியார்


(முனைவர் மா.நன்னன் தொகுத்தவை- நூலின் “பெயர் பெரியார் கணினி”)

1) பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பபதாகக் கிடையாது. அறிவு என்றாலே பகுத்தறிவு என்றுதான் பொருள். அந்தப்படியான அறிவைப் பயன்படுத்துகிற, செலுத்துகிற முறையைக் கொண்டுதான் பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள்
(விடுதலை- 11-9-53) (-33-1-1)

2) மனிதன் தன்னைக் காப்பாற்ற மட்டும் போதிய அறிவை அடைந்திருப்பதோடு அதற்கும் மேம்பட்ட அறிவையும் அடைந்திருக்கிறான். அப்படி அதிகமாக அடைந்துள்ள அறிவுதான் பகுத்தறிவு. அறிவு எல்லாச் சீவ ராசிகளுக்கும் பொதுவானது. மத வழக்கம் சாத்திர விதி என்று அநாகரிக ஆபாசங்களைக் கடைப்பிடிப்பவன் பகுத்தறிவு இல்லாச் சீகனுக்கு ஒப்பானவன.
(விடுதலை- 14-2-55 (-33-1-2)

3) பகுத்தறிவு என்பது யாவற்றையும்விட மேலானது. சிந்தித்தும், ஆழந்து யோசித்தும், ஆராய்ந்தும், அனுபவத்தை யொட்டியும், சூழ்நிலைக் கேற்ற வண்ணமும் அப்போதைக்கப்போது தன் வாழ்க்கையின் நிலைமை மாற்றி அமைத்துக் கொள்வதும் வாழ்க்கையின் நலனுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு புதிய சாதனங்களையும் அமைத்துக் கொள்வதும் இதன் சம்பந்தப்பட்டதாகும்.
(விடுதலை- 30-11-55) (33-1-3)

4) சாதாரண அறிவு பெரிதும் மனிதனைத் தவிர மற்ற சீவன்களுக்கும் உரியது. ஆனால் பகுத்தறிவோ பெரிதும் மனிதனுக்கே உரியது. முற்றிலும் மனிதனுக்கே உரியது. பகுத்தறிவு என்று சொல்லப்படுவதால் முற்றிலும் மனிதச் சமுதாயம்தான் காலத்திற்கேள்ள வண்ணம் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளுகிறது. அதன் மேன்மையைப் பார்க்கும் பொழுது அதைவிட மேலானது உலகத்தில் வேறொன்றும் இல்லை என்று அமைந்துவிட்டது. ஏனெனில் அதை அடிப்படையாகக் கொண்டதே மனிதனின் முன்னேற்றம், மனிதச் சமுதாயத்தின் நாகரிகம், மேன்மை, முற்போக்கு யாவையும் ஆகும்.
(விடுதலை- 30-11-55) (33-1-4)

5) மனிதன் பகுத்தறிவு படைத்திருந்தாலும் அந்தச் சக்தியானது மனிதனுக்குச் சாந்தியற்ற நிலையையும், எல்லையற்ற ஆசையையும், பொறாமையான போட்டி உணர்ச்சிகளையும் உண்டாக்கிச் சதா ஓய்வில்லாமல் இருக்கச் செய்து வருகிறது. சிந்தனா சக்தியால் மற்ற சீவனுக்கு தொல்லை கொடுக்காமல் இருப்பதே பகுத்தறிவுன் பயன் ஆக வேண்டும்.
(விடுதலை- 16-1-59) (33-1-9)

6) ஒரு பகுத்தறிவுவாதிக்கு எல்லாக் காரியங்களிலும் பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தித்துப் பகுத்தறிவுப்படி நாட்டைத் திருத்திப் பலன்பெற வேண்டுமானால் விஷயாதிகளில் எந்தவிதப் பற்றும் இருக்கக் கூடாது. பகுத்தறிவுவாதிக்குக் கடவுள் நம்பிக்கை, கடவுள் பற்றிருக்குமானால் அவனால் பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்கவோ, அறியவோ முடியாது. அவனது நம்பிக்கை அவனை வழுவச் செய்துவிடும்.
(விடுதலை- 22-6-65) (33-1-9)

7) பகுத்தறிவு என்றால் அன்றன்றைய கருத்துக்கேற்ப நடப்பிற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்வதுதான்.
(விடுதலை- 20-6-66) (33-1-14)

8) பகுத்தறிவாளர்கள் ஒரு குடும்பம் போன்று பழக வேண்டும். சுய நல உணர்ச்சி அற்றவர்களாகக் குற்றம் அற்றவர்களாகக் கூடுமானவரைக்கும் மற்றவர்களுக்குப் பயன்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும். மக்களிடம் உண்மையாகவே அன்பு காட்ட வேண்டும். பகுத்தறிவு என்பது ஒரு பெரிய உன்னதமான உயரிய தத்துவமாகும்.
(விடுதலை- 30-1-73) (33-1-17)

9) நமது இழிநிலை நமது முட்டாள்தனம் மாற வேண்டுமானால் நாம் ஒன்றும் பெரிய கஷ்டப்பட்டு முயற்சி செய்ய வேண்டியதில்லை. பகுத்தறிவு கொண்டு தாரளமாய்ச் சிந்தித்தால் போதும். நமது கொள்கை பகுத்தறிவு; பகுத்தறிவு என்றால் நாத்திகம் என்பது பொருள். அறிவு கொண்டு சிந்திப்பது தான் நாத்திகம் ஆகும்.
(விடுதலை- 20-6-73) (33-1-18)

10) பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; ஏதாவது ஒரு  விசயம் நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றிவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திரச் சக்தி என்றோ நம்பிவிடக் கூடாது. எப்படிப்பட்ட விசயமானாலும் நடு நிலைமையில் இருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்க வேண்டும்.
(குடிஅரசு- 9-12-28) (33-4-1)

சுயமரியாதை நோக்கம்- தந்தை பெரியார்



“மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும், சகோதரத்துவமும் தோன்ற வேண்டும்; ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் அகல வேண்டும்; உலகுயிர் அனைத்தும் ஒன்றெனும் எண்ணம் உதிக்கவேண்டும். வகுப்புச் சண்டைகள் மறைய வேண்டும். மேற்சொன்ன கொள்கைகளைப் பரவச்செய்தற்காக நாம் உழைக்கும் காலத்தில் நம்மைத் தாக்குபவர்களுடைய, வார்த்தைகளையாவது செய்கைகளையாவது நாம் சிறிதளவும் பயமின்றி, சிநேகிதர்-விரோதி என்கிற வித்தியாசமில்லாமல் யாவரையும் கண்டிக்க நாம் பயப்படப்போவதில்லை.”
 ('குடி அரசு - தலையங்கம்-9-41933)

எந்தவிதமான அபிப்பிராயத்தையும் ஆட்சேபிக்கவும், அடியுடன் மறுத்து எதிர்க்கவும் யாருக்கும் உரிமையுண்டு – தந்தை பெரியார்

“ஏதோ என் புத்திக்குச் சரியென்று பட்ட வகையில் நான் சிறிது தொண்டுசெய்து வருகிறேன். அது எனது கடமை என்று கருதிச் செய்கிறேன். அதற்கு இவ்வளவு புகழ்ச்சி வேண்டியதவசியமில்லை. அன்று நான் கொண்ட அனேக அபிப்பிராயங்களுக்கு இன்று நான் மாறுபட்ட அபிப்பிராயம் உடையவனாய் இருக்கிறேன். இனி நாளை எவ்வித அபிப்பிராயம் ஏற்படும் என்று எனக்கே தெரியாது. உலகம் மாறிக்கொண்டிருப்பது. மனிதனின் அறிவு சதா நேரமும் படிப்பி லேயே இருக்கிறது அப்படிப்புக்குதக்க அபிப்பிராயங்கள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.

இந்நிலையில் தோழர் சிவதாணுப்பிள்ளை அவர்களுடைய ஒரு அபிப்பிராயத்துக்கு நான் மாறுபட்டிருப்பதற்கும் அவர் மன்னிப்பாராக. அதாவது, எனது தீவிரமான சில அபிப்பிராயங்கள், அபிப்பிராய பேதத்துக்கு இடமானதென்றும் அதைப்பற்றிப் பேச எவருக்கும் உரிமை இல்லை என்றும் சொன்னார். அதை நான் தாழ்மையுடன் பலமாய் மறுக்கிறேன்.

ஏனெனில், அது எனது கொள்கைக்கு விரோதமானதாகும். ஒருவன் எப்படிப் பட்ட மனிதனாயினும், மனிதத் தன்மைக்கு மேற்பட்டவன் என்று சொல்லப்படுவானாகிலும் அவனது அபிப்பிராயங்கள் எப்படிப்பட்ட மனிதனாலும் பரிசோதிக்கப்படவும் தர்ககிக்கப்படவும் தக்கதாகும் என்பதே, எனது அபிப்பிராயமாகும். யாருடைய அபிப்பிராயத்தையும் - எந்தவிதமான அபிப்பிராயத்தையும் ஆட்சேபிக்கவும், அடியுடன் மறுத்து எதிர்க்கவும் யாருக்கும் உரிமையுண்டு என்பதும் எனது அபிப்பிராயம். ஆதலால், எனது அபிப்பிராயங்களைப் பற்றிக் குறை கூறவோ, தர்க்கிக்கவோ யாரும் தகுதியுடையவர்கள் அல்ல என்று தோழர் சிவதாணுப் பிள்ளை அவர்கள் சொன்னதை நான் ஏற்கமுடியாமல் இருக்கிறது.

ஒரு விஷயத்தை வேண்டுமானால் நான் ஒப்புக்கொள்ளுகிறேன். அதாவது, எந்த மனிதனுக்கும் அவனது அபிப்பிராயம் என்னும் பேரால் எதையும் சொல்ல உரிமையுண்டு. அதைத் தடுப்பது என்பது யோக்கியமற்ற காரியமாகும். யார் எதைச் சொன்னாலும் சொல்ல அவகாசமளித்த பிறகுதான் அதை மறுத்துப் பேசவேண்டும்.”
(நாகர்கோவில் சொற்பொழிவு (13-08-1933) - 'குடிஅரசு' 20-08-1933)

பெரியாரின் பன்முகச் சிந்தனைகள்


தந்தை பெரியாருடைய சிந்தனைகளின் பன்முகத் தன்மை அனைத்தும் 
இந்த வலைபூவில் 
சுருக்கமாக சுட்டப்படும்
**************
சில படைப்புகள்
முழுமையாக வெளியிடப்படும்

*********************************************************************************


சிந்தனையும் பகுத்தறிவும் – தந்தை பெரியார்


“நான் சொல்வதற்கு முன்பு, உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால், நான் சொல்வதை நம்பாதீர்கள்; அதன்படி நடக்க வேண்டுமென்று உடனே இறங்கி விடாதீர்கள்; என்ன செய்ய வேண்டுமென்றால் சொல்லுவதை சிந்திக்க வேண்டும். சரியா, தப்பா என்று ஆராய வேண்டும். உங்களுக்கு எது சரி என்று பட்டதோ அதை ஒத்துக் கொள்ள வேண்டும் மற்றும் எந்தக் காரியம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதைச் செய்ய வேண்டும். 'நாங்கள் சொன்னோம். நான் சொன்னேன்' என்பதற்காக ஒன்றையும், எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது”

(மேட்டுப்பாளையத்தில் பகுத்தறிவாளர் மன்றத் துவக்க விழா - 22-06-1971)


ஏன் சுயமரியாதை இயக்கத்தில் சேரவேண்டும்? – தந்தை பெரியார்

1) அது ஒன்றேதான் மக்கள் சமூகவாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக்கூடாது என்று கூறி சமதர்மத்துக்கு போராடுகின்றது.

2) அது ஒன்றேதான் மனிதசமூகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன் ஏழை என்கின்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.

3) அது ஒன்றேதான் மனிதசமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரிசமத்துவம் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.

4) அது ஒன்றேதான் மனிதசமூகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக நேய, ஒருமையே வேண்டும் என்று கூறி சமதர்மத்திற்குப் போராடுகின்றது.

5) அது ஒன்றேதான் உலகில் உழைப்பாளி என்றும், முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும் சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரிசமமாக அனுபவிக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.

6) அது ஒன்றேதான் ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும் எவ்விதத்தும் அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்க சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.
(புரட்சி - பெட்டிச் செய்தி – 01-2-1933)



பெரியார் கணினி
(முனைவர் மா.நன்னன் தொகுத்தவையில் இருந்து)

2) சிந்தனை

3) நாத்திகம்

4) பொதுவுடைமை

5) தொழிலாளர்



தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்