(முனைவர்
மா.நன்னன் தொகுத்தவை- நூலின் “பெயர் பெரியார் கணினி”)
1) பகுத்தறிவு வேறு; அறிவு
வேறு என்பபதாகக் கிடையாது. அறிவு என்றாலே பகுத்தறிவு என்றுதான் பொருள். அந்தப்படியான
அறிவைப் பயன்படுத்துகிற, செலுத்துகிற முறையைக் கொண்டுதான் பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள்
(விடுதலை- 11-9-53) (-33-1-1)
2) மனிதன் தன்னைக் காப்பாற்ற
மட்டும் போதிய அறிவை அடைந்திருப்பதோடு அதற்கும் மேம்பட்ட அறிவையும் அடைந்திருக்கிறான்.
அப்படி அதிகமாக அடைந்துள்ள அறிவுதான் பகுத்தறிவு. அறிவு எல்லாச் சீவ ராசிகளுக்கும்
பொதுவானது. மத வழக்கம் சாத்திர விதி என்று அநாகரிக ஆபாசங்களைக் கடைப்பிடிப்பவன் பகுத்தறிவு
இல்லாச் சீகனுக்கு ஒப்பானவன.
(விடுதலை- 14-2-55 (-33-1-2)
3) பகுத்தறிவு என்பது யாவற்றையும்விட
மேலானது. சிந்தித்தும், ஆழந்து யோசித்தும், ஆராய்ந்தும், அனுபவத்தை யொட்டியும், சூழ்நிலைக்
கேற்ற வண்ணமும் அப்போதைக்கப்போது தன் வாழ்க்கையின் நிலைமை மாற்றி அமைத்துக் கொள்வதும் வாழ்க்கையின் நலனுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு புதிய சாதனங்களையும் அமைத்துக் கொள்வதும் இதன்
சம்பந்தப்பட்டதாகும்.
(விடுதலை- 30-11-55) (33-1-3)
4) சாதாரண அறிவு பெரிதும்
மனிதனைத் தவிர மற்ற சீவன்களுக்கும் உரியது. ஆனால் பகுத்தறிவோ பெரிதும் மனிதனுக்கே உரியது.
முற்றிலும் மனிதனுக்கே உரியது. பகுத்தறிவு என்று சொல்லப்படுவதால் முற்றிலும் மனிதச்
சமுதாயம்தான் காலத்திற்கேள்ள வண்ணம் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளுகிறது. அதன்
மேன்மையைப் பார்க்கும் பொழுது அதைவிட மேலானது உலகத்தில் வேறொன்றும் இல்லை என்று அமைந்துவிட்டது.
ஏனெனில் அதை அடிப்படையாகக் கொண்டதே மனிதனின் முன்னேற்றம், மனிதச் சமுதாயத்தின் நாகரிகம்,
மேன்மை, முற்போக்கு யாவையும் ஆகும்.
(விடுதலை- 30-11-55) (33-1-4)
5) மனிதன் பகுத்தறிவு படைத்திருந்தாலும்
அந்தச் சக்தியானது மனிதனுக்குச் சாந்தியற்ற நிலையையும், எல்லையற்ற ஆசையையும், பொறாமையான
போட்டி உணர்ச்சிகளையும் உண்டாக்கிச் சதா ஓய்வில்லாமல் இருக்கச் செய்து வருகிறது. சிந்தனா
சக்தியால் மற்ற சீவனுக்கு தொல்லை கொடுக்காமல் இருப்பதே பகுத்தறிவுன் பயன் ஆக வேண்டும்.
(விடுதலை- 16-1-59) (33-1-9)
6) ஒரு பகுத்தறிவுவாதிக்கு
எல்லாக் காரியங்களிலும் பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தித்துப் பகுத்தறிவுப்படி நாட்டைத்
திருத்திப் பலன்பெற வேண்டுமானால் விஷயாதிகளில் எந்தவிதப் பற்றும் இருக்கக் கூடாது.
பகுத்தறிவுவாதிக்குக் கடவுள் நம்பிக்கை, கடவுள் பற்றிருக்குமானால் அவனால் பகுத்தறிவைக்
கொண்டு சிந்திக்கவோ, அறியவோ முடியாது. அவனது நம்பிக்கை அவனை வழுவச் செய்துவிடும்.
(விடுதலை- 22-6-65) (33-1-9)
7) பகுத்தறிவு என்றால்
அன்றன்றைய கருத்துக்கேற்ப நடப்பிற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்வதுதான்.
(விடுதலை- 20-6-66) (33-1-14)
8) பகுத்தறிவாளர்கள் ஒரு
குடும்பம் போன்று பழக வேண்டும். சுய நல உணர்ச்சி அற்றவர்களாகக் குற்றம் அற்றவர்களாகக்
கூடுமானவரைக்கும் மற்றவர்களுக்குப் பயன்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும். மக்களிடம்
உண்மையாகவே அன்பு காட்ட வேண்டும். பகுத்தறிவு என்பது ஒரு பெரிய உன்னதமான உயரிய தத்துவமாகும்.
(விடுதலை- 30-1-73) (33-1-17)
9) நமது இழிநிலை நமது முட்டாள்தனம்
மாற வேண்டுமானால் நாம் ஒன்றும் பெரிய கஷ்டப்பட்டு முயற்சி செய்ய வேண்டியதில்லை. பகுத்தறிவு
கொண்டு தாரளமாய்ச் சிந்தித்தால் போதும். நமது கொள்கை பகுத்தறிவு; பகுத்தறிவு என்றால்
நாத்திகம் என்பது பொருள். அறிவு கொண்டு சிந்திப்பது தான் நாத்திகம் ஆகும்.
(விடுதலை- 20-6-73) (33-1-18)
10) பகுத்தறிவுக்கு மதிப்புக்
கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; எழுதி வைத்திருப்பதாலேயே
ஒன்றை நம்பிவிடக் கூடாது; ஏதாவது ஒரு விசயம்
நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றிவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திரச் சக்தி
என்றோ நம்பிவிடக் கூடாது. எப்படிப்பட்ட விசயமானாலும் நடு நிலைமையில் இருந்து பகுத்தறிவுக்குத்
தாராளமாய் விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்க வேண்டும்.
(குடிஅரசு- 9-12-28) (33-4-1)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக