சனி, 28 மார்ச், 2020

வைக்கம் சத்தியாக்கிரகம் – தந்தை பெரியார்


திருவாங்கூர் அரசாங்கத்தார் வைக்கம் சத்தியாக்கிரகத்தை விரைவில் முடித்துவிட ஆவலாய் இருப்பதாகத் தெரிய வருகிறது. அதாவது அச் சமஸ்தானத்துத் திவானான ஸ்ரீமான் ஆர்.கிருஷ்ணபிள்ளை யவர்களை சமஸ்தானத்து மகாராணி அவர்கள் வைக்கம் சத்தியாக்கிரக சம்பந்தமாக தமது அபிப்பிராயமென்ன வென்று கேட்டிருப்பதாகவும், அதற்குத் திவான் அவர்கள் கீழ்க்கண்ட பதில் பகர்ந்திருப்பதாவும் அறிகிறோம்.

“இவ்விவகாரத்திலுள்ள ரோடுகளை சாதிமத வித்தியாசமில்லாமல் எல்லாப் பிரஜைகளும் உபயோகப்படுத்திக் கொள்ளும்படி விட்டுவிட வேண்டியதென்று யான் அபிப்பிராயப்படுகிறேன். அம்மாதிரி செய்வதை சமஸ்தான அரசாங்கத்தார் எப்பொழுதுமே எதிர்க்கவில்லை. இந்த உரிமையை சிலர் பலாத்காரத்தினால் அடைய முயற்சி செய்ததால் கலகம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சியே அரசாங்கத்தார் தடை உத்தரவு போட்டனர். இந்த உரிமையை அவர்களுக்கு கொடுக்கக்கூடாதென்று ஸநாதன இந்துமதம் கூறவில்லை. தாழ்ந்த நிலையிலுள்ள இந்துக்களல்லாதவர்கள் அந்த ரஸ்தாக்களின் வழியாக நடக்கச் சம்மதம் கொடுத்திருக்கின்றபொழுது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த உரிமையைக் கொடுக்க மறுப்பதில் கொஞ்சமும் ஒழுங்கிருப்பதாகக் காணப்படவில்லை. கூடிய விரைவில் ஒரு அரச விளம்பரத்தின் மூலம் இந்த வித்தியாசத்தைப் போக்க வேண்டுவது அவசியமென்று யான் அபிப்பிராயப்படுகிறேன்
.
இவ்வண்ணமாக திவான் அவர்கள் அபிப்பிராயம் கொடுத்த பிறகு, கூடிய விரைவில் மகாராணி அவர்களுடைய அனுகூலமான ஸ்ரீமுகம் எதிர்பார்ப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை. ஆனால் இதிலிருந்தே நமது முயற்சிகளை விட்டுவிட வேண்டுமெனயாரும் நினைத்தல் கூடாது. திருவாங்கூர் அரசாங்கத்தாரிடமிருந்தே ஒருவேளை அரைகுறையான ஸ்ரீமுகம் வெளியாயினும் ஆகலாம். ஏனெனில் இரண்டு கட்சியாரையும் சமாதானப் படுத்த வேண்டுமென நினைத்து அவர்கள் முயற்சி செய்து கொண்டிருந்ததை யாம் அறிவோம். அம்மாதிரி திருடருக்கும் - திருட்டுக் கொடுத்தவருக்கும் நல்லவர்களாக வேண்டுமென நினைத்து ஏதாவது கொஞ்சம் இடம் வைத்துக் கொண்டு மேற்சொல்லியபடி ஸ்ரீமுகம் வெளியாகுமேயாகில் பூரண வெற்றி பெறும் வரை நமது நிலையினின்றும் தளரக்கூடாது. ஒருவேளை பூரண வெற்றி கிடைத்துவிடினும் அதனுடன் உலகத்தினிடை இம்மாதிரி நிறைந்துள்ள அக்கிரமங்களெல்லாம் ஒழிந்து விட்டனவென்று நினைக்கக் கூடாது. எங்கு எங்கு இவ்விதக் கொடுமைகள் உள்ளனவோ ஆங்காங்குச் சென்று நமது சத்தியாக்கிரகக் கொடியை நாட்டி இக்கொடிய வழக்கத்தை ஒழிக்க அஹிம்சையுடன் பாடுபடுதல் வேண்டுமென்பதை தெரிவித்துக் கொள் கிறோம்.
(குடி அரசு -துணைத் தலையங்கம் - 07.06.1925)


கதர் (21.05.1925)– தந்தை பெரியார்


நாலாவது தீர்மானம் கதரைப் பற்றியது. நமது ஜனங்களுக்குக் கதருக்கும், தேசவிடுதலையாகிய சுயராஜ்யத்திற்கும் என்ன சம்பந்த மென்பதே தெரியாது. சுயராஜ்ய மென்றால் என்ன என்பதைப் பற்றி நமக்குள் பெரிய அபிப்பிராய பேதமாயிருக்கிறது. நம்மில் படித்தவர்கள் சுயராஜ்ய மானது நம்மை ஆள்வோர்களால் சீமையிலிருந்து அனுப்பப்படுமெனக் கருதுகிறார்கள். நம்மை ஆளுகிறவர்கள் யாரென்பதை நாம் நன்றாய் கவனிக்க வேண்டும். அநேகர் போலீசாரும் கலெக்டரும்தான் நம்மை ஆளுகிறவர்களென்று கருதுகிறார்கள். சிலர் கவர்னரும், நிர்வாகசபை மெம்பர்களும், மந்திரிகளுமென்று கருதுகிறார்கள். வேறுசிலர் வைஸிராயும், பார்லிமெண்டும், இந்திய மந்திரியுமென்று கருதுகிறார்கள். இவர்களில் யாரும், சுதாவாய் நம்மை ஆளுகிறதில்லை, பின்னையாரென்று கேட்பீர்கள்; ஐரோப்பாவிலுள்ள வர்த்தகக் கூட்டத்தார் அரசாட்சி என்கிற பெயரால் நம் நாட்டில் செய்யும் வர்த்தகத்தைத்தான் நாம் அரசாங்கம் என்று கருதி வருகிறோம்.

ஒரு வியாபாரி எப்படி அயலூரிலுள்ள தன்னுடைய வியாபாரத்திற்குத் தன்னூரிலிருந்து ஒரு ஏஜண்டை அனுப்பிக் காரியம் பார்க்கச் செய்கிறானோ, அதுபோலவே ஐரோப்பிய வியாபாரிகள் இந்திய வியாபாரத்திற்கு வைஸிராய் என்ற பெயரால் தங்களது ஏஜண்டு ஒருவரை அனுப்பி விடுகிறார்கள். அவர் தனக்கு வேண்டிய காரியஸ்தர்களையும், கணக்குப் பிள்ளைகளையும், காவல்காரர்களையும், எடுபிடி ஆள்களையும், கவர்னர், நிர்வாகசபை மெம்பர்கள், மந்திரிகள், ஜட்ஜிகள், கலெக்டர்கள், தாசில்தார்கள், மாஜிஸ்ட்ரேட்டுகள், டாக்டர்கள், போலீஸ்காரர்கள், பாரஸ்டுகாரர்கள், ஆப்காரி இலாகாதார்கள் என்கிற பெயர்களால் சிப்பந்திகளாக நியமித்து மேற்சொன்ன தங்கள் வியாபாரத்தை நடத்துகிறார்கள். இவ்வளவு உத்தியோகஸ்தர்களும், இவர்களுடைய தொழில்களும், ஐரோப்பிய வியாபாரிகளுக்குத்தான் பொருப்பே தவிர நமக்கு எந்த வழியிலும் ஜவாப்தாரிகளென்று சொல்லுவதற்கில்லை.

உதாரணமாக, ஓர் வைஸிராய் என்ற ஏஜண்ட் புதிதாக இந்தியாவிற்கு வருவாரேயானால் இந்தியாவிலிருக்கிற ஐரோப்பிய வியாபாரிகளிடம் போய் அவர்கள் நன்மைகளைக் கவனிக்கத் தானிருப்பதாகவும், அது விஷயத்தில் கவலைப்பட வேண்டியதில்லையென்றும் அவர்களுக்குத் தைரியம் சொல்லி அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றுத்தான் ஆசனத்தில் அமருவதைப் பார்க்கிறோம். இதுமாதிரியே ஒவ்வொரு குட்டி அதிகாரி ஏஜண்டும் அந்த வியாபாரிகளுக்குத்தான் ஜவாப்தாரிகளாயிருப்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த முறையில் அவர்கள் நம் நாட்டில் செய்யும் வியாபாரமென்பது கேவலம் நம்மிடமிருந்து வரி வசூல் செய்கிறார்களே அது அல்லவே அல்ல. அதனால் அவர்களுக்கு ஒன்றும் பெரிய லாபம் கிடையாது. தங்கள் வியாபாரத்தின் செலவுக்கு நமது வரிப்பணங்களை உபயோகித்துக் கொள்ளுவது தவிர அதுவே அவர்களுடைய நோக்கமும் லாபமும் அல்ல. ஆனால், அவர்களுடைய லாபமெல்லாம் நம்நாட்டு விளைபொருள்களை தங்கள் நாட்டிற்கு அள்ளிக்கொண்டு போவதும், அவற்றை அங்கு சாமான்களாகச் செய்வதும், அந்தச் சாமான்களை நம் நாட்டில் கொண்டுவந்து விற்பதும் அவைகளை நாம் வாங்கும்படிச் செய்வதும், அதனால் 100-க்கு 100-ம் சில தருணங்களில் 100-க்கு 1000மும் லாபம் சம்பாதிப்பதுதான் அவர்களின் நோக்கம். இந்த வகையாய் அவர்கள் செய்யும் வியாபாரத்தினால் நம் தேசத்திலிருந்து தங்கள் நாட்டிற்கு அவர்கள் கொண்டுபோகும் செல்வம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களாய் விடுகின்றது. இப்படி நமது செல்வம் கொள்ளை போவதால் தான் நம் தேசத்தில் வறுமையும், பஞ்சமும், பிணியும் ஏற்படுகிறதே தவிர வேறுவிதமாகத் தாங்கமுடியாத வரிப்பளுவினா லென்றோ, உத்தியோகமும் அதிகாரமும் இல்லாததினாலென்றோ மாத்திரம் சொல்லமுடியாது. நம் நாட்டுச் செல்வம் அந்நிய நாட்டிற்குப் போகாத முறையில் நம்மை யாராண்ட போதிலும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

நம் செல்வங்களெல்லாம் இப்படிக் கொள்ளை போய்க் கொண்டிருக்க நம்மை நாமே ஆண்டு கொண்டாலும் ஒருக்காலும் அது சுயராஜ்யமேயாகாது. ஆகையால்தான் மகாத்மா காந்தி அவர்கள் சுயராஜ்ய மென்பதை நம்நாட்டுப் பொருள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாதென்பதைத்தான் முதலாவதாகக் கருதுகிறார். அந்நிய நாட்டு சாமான்கள் நமக்கு வேண்டாமென்று நாம் சொல்லிவிட்டால் அந்நியர்கள் உங்களுடைய தேசம் எங்களுக்கு வேண்டிய தில்லை. அநாவசியமாய் நாங்களிங்கு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க முடியாதென்று மூட்டை கட்டிக்கொண்டு சவாரி அடிக்கப் பார்ப்பார்கள். அப்பொழுது நாம் அவர்களைப் பார்த்து அவசரப்படாதீர்கள் இன்னும் கொஞ்ச காலத்திற்கு இருங்கள்; எங்களுக்குள்ளிருக்கும் தகராறுகளைத் தீர்த்துவிட்டுப் போங்கள் என்றுதான் சொல்ல வேண்டிவரும்.

ஆகையால் சுயராஜ்யம் பெறுகிற நிலையில் யார் நம்மை ஆளுகிறார்கள். ஆங்கிலர்கள் என்பதைப் பற்றி நாம் கவலையெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. நம்மையும் நம் தேசத்தையும் யாருடைய சாமான்கள் ஆளுகிறது? நம் தேசத்து ஏழைகளை, தொழிலாளர்களை எந்த எந்த தேசத்துச் சாமான்கள் பட்டினி போட்டு அவர்களது சுயமரியாதையையும் ஆண்மையையும் கெடுக்கின்றது என்று யோசித்து அந்தச் சாமான்களை விலக்கி நம் சாமான்களை நம்மை ஆளும்படி செய்வதுதான் சுயராஜ்யம். இந்த சுயராஜ்யம் சம்பாதிப்பதற்கு முதலாவது நம்மையும் நமது மானத்தையும் ஆண்டு கொண்டிருக்கிறதும் நம் தேசத்திலிருந்து வருஷம் ஒன்றுக்கு 60, 70 கோடி ரூபாய்க்கு மேலாகக் கொள்ளை கொண்டு நம் நாட்டு ஸ்திரீகளுக்கும், தொழிலாளிகளுக்கும் வேலையில்லாமல் செய்வதான அந்நிய நாட்டுத் துணிகளுக்குப் பதிலாக நம் நாட்டு ஸ்திரீகளைக் கொண்டு கைராட்டினத்தால் நூல் நூற்கச் செய்து நம் நாட்டு நெசவாளர்களைக் கொண்டு கைத்தறியால் நெய்வித்த துணியை நாம் எல்லோரும் உபயோகிப்பதுதான் மகாத்மா அவர்கள் கதர், கதர் என்று சொல்லுவது.

இந்தக் கதர் மாத்திரம் மகாத்மாவினிஷ்டப்படி நம்மெல்லாராலும் அங்கீகரிக்கப்படுமேயானால் நம் நாட்டின் தாங்கமுடியாத வரி யென்று சொல்லப்படுகின்ற 150 கோடி ரூபாயில் அரைவாசியாகிய 75 கோடி ரூபாய் நம் நாட்டுக்கு மிகுதியாகி விடும். அந்நிய சாமான்களால் நம் நாட்டிலிருந்து போகிற பணம் ரசவாதத்தைவிட அதிக தந்திரமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. 20 கெஜமுள்ள அந்நிய நாட்டு மல் துணியாகிய பீஸை எடைபோட்டுப் பார்த்தோமேயானால் 2.1/2 இராத்தல் கனம் தான் இருக்கும். அதை வண்ணானுக்குப் போட்டுத் துவைத்து அதன் பேரிலிருக்கும் கொழுப்பையும், வெள்ளைக் களிமண்ணையும் நீக்கி எடைபோட்டுப் பார்த்தால் இரண்டு இராத்தல் தானிருக்கும். இந்த இரண்டு இராத்தல் எடையுள்ள இருபது கெஜம் துணியை நமக்கு விற்பது 15 ரூபாய்க்கு. இதற்காக அந்நிய நாட்டார் நம்மிடமிருந்து வாங்கிக் கொண்டுபோகும் பஞ்சிற்கு நமக்குக் கொடுப்பது இரண்டு இராத்தல் எடைக்கு 1.1/4 ரூபாய் இந்த 1.1/4  ரூபாய்க்கு நம்மிடமிருந்து பஞ்சு வாங்கிக் கொண்டு போய்ச் செய்த துணியை நம்மிடமே 15 ரூபாய்க்கு விற்று 13.3/4 ரூபாய் லாபம் சம்பாதிக்கிறார்களானால் நம் தேசத்தில் இப் பொழுது உபயோகப்படுத்துகிற இவ்வளவு அந்நிய நாட்டுத் துணிக்கும் இன்னும் மற்ற மருந்துச் சாமான்கள், கண்ணாடி, பீங்கான்கள் முதலிய எண்ணிறந்த சாமான்களுக்கும் எவ்வளவு பணத்தைக் கொடுத்து நம் தேசம் ஏழையாய்ப் போய்விடுகிறது? அது மாத்திரமல்லாமல் நம் ஏழைத் தொழிலாளிகள் வேலையில்லாமல் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? ஆகையால் உண்மையாய் நமக்குச் சுயராஜ்யம் வேண்டுமானால் நம் தேசத்திலிருக்கும் ஏழைகளிடமும் தொழிலாளிகளிடமும் நமக்கு அன்பிருக்குமேயானால் நாம் ஒவ்வொருவரும் கதர் உடுத்த வேண்டியதும், கதர் உற்பத்திக்கு வேண்டிய அனுகூலம் செய்யவும் வேண்டியதும்தான்.
(குறிப்பு: 23,24.05.1925, பள்ளத்தூரில் நடைபெற்ற
காரைக்குடி மாவட்ட முதலாவது அரசியல் மாநாடு - நிறைவுரை தொடச்சி)
குடி அரசு -சொற்பொழிவு - 07.05.1925
(தொடச்சி. குடி அரசு - 21.05.1925)




வெள்ளி, 27 மார்ச், 2020

அஞ்சுதல் ஒழிக (17.06.1925)– தந்தை பெரியார்


அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கதர் அணிய அஞ்சுவதைப் பற்றி ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் “நெஞ்சு பொறுக்குதிலையே" என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ள அரிய கட்டுரையை மற்றொரு பத்தியில் பிரசுரித்திருக்கிறோம். மற்றவர்களைவிட உத்தியோகஸ்தர்களே இராட் டையை ஆதரிக்கப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஏழை எளிய வர்கள் உள்படப் பொது ஜனங்கள் கொடுக்கும் வரிப்பணத்திலிருந்து தான் இவர்கள் ஊதியம் பெறுகின்றனர். ஆகவே, ஏழை எளியவர்களுக்கு உணவளித்துக் காக்க வல்லதான இராட்டையை ஆதரித்தல் இவர்கள் கடனன்றோ? ஸ்ரீமான் ஆச்சாரியார் எடுத்துக்காட்டுகின்ற வண்ணம் இவர்கள் கதரணிய பயப்படுபவதற்குச் சிறிதும் ஆதாரமில்லை . ஆதாரம் ஓரளவு இருப்பதாகவே வைத்துக்கொண்டாலும், ஆடை அணியும் விஷயத்தில்கூட நமது சுதந்திரத்தைப் பறிகொடுத்தல் பேதமையேயாகும். உத்தியோகஸ்தர்கள் அஞ்சி அஞ்சிச் சாவதொழிந்து தமது கடனாற்ற முன்வருவார்களாக.
(குடிஅரசு - நுணைத் தலையங்கம் - 17.06.1925)


இயந்திரமும் கை இராட்டினமும் (02.05.1925) – தந்தை பெரியார்


நூல் நூற்கும் விஷயத்தில் விசை இயந்திரத்திற்கும் கை இராட்டினத் துக்குமுள்ள தாரதம்மியத்தை நமது நாட்டாரில் சிலர் நன்கு அறிந்து கொள்ளவில்லையென்றே நினைக்க வேண்டியிருக்கிறது. இராட்டை சுற்றுவதினால் நமக்கு வேண்டிய அளவு நூல் உற்பத்தி செய்வது கஷ்ட மென்றும், போதுமான கூலியும் இதில் கிடைக்காதென்றும், இயந்திரத்தினால் அதிக நூல் உற்பத்தி செய்யக்கூடுமென்றும், கூலிக்காரர்களுக்கு அதிகக் கூலி கிடைப்பதுடன், முதலாளிகளுக்கும் நல்ல லாபம் வருகிறதென்றும் இவர்கள் சொல்லுகிறார்கள். நமது நாட்டின் கொடிய வறுமைக்கு முக்கிய காரணம் மேற்சொன்ன இயந்திரங்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இயந்திரப் பெருக்கினால் ஒருசில கூலிகளும் தனிப்பட்ட முதலாளிகள் சிலரும், பிறநாட்டு இயந்திர வியாபாரிகளுந்தான் பிழைக்க முடியுமே தவிர ஜனங்கள் பிழைக்க முடியாது.

நமது ஏழை நாட்டில் வேலையில்லாமல் கஷ்டப்படுவோர் எத்தனையோ பேர் குறைந்த அளவு கூலியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இவர்களெல்லோருக்கும் இயந்திர ஆலைகளில் வேலை கொடுக்க முடியாது. ஒவ்வொரு தொழிலிலும் இம்மாதிரியே அநேகம் பேருடைய கூலியை இயந்திரங்கள் விழுங்கி விடுகின்றன. நம் தேசம் உள்ள நிலைமையில் பெரு வாரியான ஏழைக் கூலிக்காரர்களுக்கு வேலை கிடைத்தால்தான் வறுமை நீங்கும். ஒரு சில முதலாளிகளும், அந்நிய நாட்டு இயந்திரத் தொழிலாளரும் பிழைப்பதினால் தேசத்தின் தரித்திரம் நீங்காது. உதாரணமாக, நம் நாட்டில் மில்கள் என்று சொல்லப்படும் நூல் ஆலைகள் அதிகமான நூல் உற்பத்தி செய்கின்றன. ஆனால், இவை எவ்வளவு பேருடைய கூலியைக் கெடுத்து விடுகின்றனவென்பது யோசித்துப் பார்த்தால் தெரியும்.

சாதாரணமாக 20 அல்லது 25 லட்சம் ரூபா மூலதனத்துடன் ஆரம்பிக் கப்பட்ட ஒரு நூல் யந்திர ஆலையை எடுத்துக்கொள்வோம். இவ்வாலையில் ஒவ்வொன்றிலும் 400 - ராத்தல் எடையுள்ள 40 - சிப்பம் (Bale) நூல் உற்பத்தி யாகக்கூடும். அதாவது, மொத்தம் 16,000 - ராத்தல் நூல் உற்பத்தியாகலாம். இவ்வளவு நூல் உற்பத்தி செய்யும் ஓர் ஆலை சுமார் 2000 கூலிகளுக்கும் வேலை கொடுக்க முடியும். தலைக்கு 4 அணா முதல் 1ரூபாய் வரையில் கூலி கிடைக்கும். முதலாளிகளுக்கு 100 - க்கு 50 சதவீதம் வருஷந்தோறும் லாபம் கிடைக்கலாம். (இதற்கு மேலாகவும் ஆலை முதலாளிகளுக்குச் சில சமயம் லாபம் கிடைத்திருக்கிறது.) இதனால் ஏழைகளுக்கு ஏற்படும் நஷ்டத்தைப் பற்றி யோசிப்போம். மேற்சொன்ன 16,000 - ராத்தல் நூலும் கிராமத்தில் வேலையில்லாமல் தவிக்கும் ஏழைக் கூலிக்காரர்களைக் கொண்டு கை இராட்டினத்தில் தயார் செய்து கொள்வதா யிருந்தால் ஒரு நாளில் ஒரு ராத்தல் நூலுக்குக் குறைந்தது மூன்று பேர் வேலை செய்ய வேண்டும். ராத்தலுக்குக் குறைந்த விகிதம் 4-அணா கூலி கொடுப்பதாயிருந்தாலும் நபர் ஒன்றுக்கு 1- அணா 4- பைசா கிடைக்கும். இப்படியாக 16,000 - ராத்தல் நூல் உற்பத்தியில் 48,000 பேருக்கு 1- அணா 4-பைசா கூவி கிடைக்கிறது.

இவ்வளவு நூலையும் ஓர் ஆலை நூற்றுவிடுவதினால் வேலை செய்யக்கூடிய 46,000 பேருக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது. இவ்வளவு பேருக்கும் கிடைக்கவேண்டிய கூலியில் சிறுபகுதி ஒரு சில வேலைக்காரர்களுக்கும் பெரும்பகுதி முதலாளிகள், அந்நிய நாட்டு இயந்திர வியாபாரிகள் ஆகிய இவர்களுக்கும் போய்விடுகின்றது. மகாத்மாவினுடைய சுயராஜ்யத்திற்குப் பொருள் ஏழைகள் பிழைக்க வேண்டுமென்பதே. முதலாளிகளும், அந்நிய நாட்டு இயந்திர வியாபாரிகளும் பொருள் சேர்க்க வேண்டுமென்பது மகாத்மாவினுடைய சுயராஜ்யத்தின் கருத்தன்று. சிலருக்கு உத்தியோகமும், அதிகாரமும் கிடைக்க வேண்டுமென்பதும் அன்று. இந்த அம்சத்தை நாம் மனதிலிருத்திக் கொண்டால் இராட்டை இயக்கத்தின் கருத்தைச் சரியாக அறிந்து கொள்ளலாம். ஏழைகளிடத்திலும் கூலிக்காரர் களிடத்திலும் அன்பில்லாதவர்களுக்கு மகாத்மா கூறும் சுயராஜ்யத்தின் பொருள் நன்கு விளங்காது.

உத்தியோகமும் அதிகாரப் பதவியும் பொருள் தேடலும் தான் சுயராஜ்யமென்று அவர்கள் கருதுவார்கள். இத்தகைய அபிப்பிராயம் தேசத்தில் பரவக் கூடாதென்பதை மனதிற் கொண்டே மகாத்மா காந்தி காங்கிரஸ் அங்கத்தினருக்கு நூல் நூற்பதை முக்கிய கடமையாக ஏற்படுத்தி யிருக்கிறார். இந்த முக்கிய கடமையை தேசத்தார் ஏகமனதாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கருதியே வேறு சில விஷயங்களில் தமது உறுதியான கொள்கைகளையும் ஓரளவு விட்டுக் கொடுத்திருக்கிறார். நூல் சந்தாவின் முக்கியத்தை நமது ஜனங்கள் கொஞ்சங் கொஞ்சமாக உணர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மாதா மாதம் நூல் சந்தா செலுத்து வோரின் தொகை பெருகிக்கொண்டு வருகிறது. ஆனாலும் மற்ற திட்டங்களில் மகாத்மாவின் அபிப்பிராயத்திற்குத் தமிழ்நாடு எவ்வளவு ஆதரவா யிருந்ததோ அவ்வளவு இவ்விஷயத்தில் ஊக்கங்காட்ட வில்லையென்றே சொல்ல வேண்டும். இனியேனும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாய் இருந்து வருவோமானால் நூல் சந்தாவை எடுத்துவிட வேண்டுமென்று இதற்குள்ளாகவே கூற ஆரம்பித்துவிட்ட சிலருக்கு அனுகூலமாகிவிடும். மற்ற விஷயங்களில் தமிழ்நாடு பெற்றிருக்கும் நற்பெயருக்கும் இதனால் தீங்கு ஏற்பட்டுவிடும்.

நிற்க, நமது தேசத்தின் நிலைமையில் இயந்திரத்தொழில் ஏன் பொருந்தாது என்பதற்கு ஒரு காரணம் மட்டும் கூறி இதை முடிக்கிறேன். இயந்திர மோகமுள்ளவர்கள் தேச முழுவதையும் இயந்திரமயமாக்கி விட்டால் எல்லா ஏழைகளுக்கும் நல்ல கூலி கிடைக்குமென்று எண்ணலாம். 48,000 பேர் செய்யக்கூடிய வேலையை 2,000 பேரின் உதவி கொண்டு ஓர் இயந்திரம் செய்து விடுவதால் பாக்கி 46,000 பேருக்கும் வேலையில்லாமல் போய்விடுகிறது என்று மேலே கூறினேன். ஆனால், இவர்கள் எல்லோருமே வேலை செய்யும்படி நாட்டில் ஆலைகளைப் பெருக்கி விட்டால் எல்லோருக்குமே நல்ல கூலி கிடைக்குமே என்று நினைக்கலாம். ஆனால் சிறிது யோசித்துப் பார்த்தால் இந்தியாவில் இது அசாத்தியம் என்பது விளங்கும். இங்கிலாந்து போன்ற தேசத்தில் இது சாத்தியமாகக்கூடும். இதற்கும்கூட ஒரு சிறு தேசத்தின் ஆலையில் தயாராகும் துணிகளை வாங்க பெரிய தேசம் ஒன்று இருந்தால்தான் முடியும். இங்கிலாந்தில் ஜனத்தொகை சுமார் மூன்று கோடி.

ஆனால், 33 கோடி ஜனத்தொகையுள்ள இந்தியா, இங்கிலாந்தின் சாமான்களுக்கு சந்தையாக இருக்கிறபடியால் இங்கிலாந்து ஜனங்களில் பெரும் பகுதியினர் ஆலைத்தொழிவில் பிழைப்பது சாத்தியமாயிருக்கிறது. இந்தியா இன்றைய தினம் துணி வாங்க மறுத்துவிட்டால் ஆலைத்தொழில் நிலைமை ஆபத்தாகிவிடும். இங்ஙனமிருக்க 33 கோடி ஜனத்தொகையுள்ள இந்தியாவில் வேலை வேண்டி நிற்கும் கோடிக்கணக்கான ஜனங்கள் ஆலைத் தொழிலில் ஈடுபட்டால் எவ்வளவு துணி உற்பத்தியாகும்? அவ்வளவு துணியையும் விற்பனை செய்யக்கூடிய பெரிய சந்தை நமக்குக் கிடைக்குமா? என்று யோசிக்க வேண்டும். இந்த அம்சத்தைக் கவனித்தால் நமது நாட்டின் நிலைமையில் கோடிக்கணக்கான ஏழைகளுக்குத் தொழிலளித்துக் காக்கக் கூடிய சாதனம் இராட்டை ஒன்றே என்பது நன்குவிளங்கும்.
குறிப்பு - குடி நூலில் எழுதிய கட்டுரை
(குடிஅரசு - கட்டுரை - 02.05.1925)



புதன், 25 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 65:-


கம்யூனிசம் - உண்மை - பிப்ரவரி, மார்ச் 1972

(புலவர் பா.வீரமணி அவர்களால் மூன்று தொகுதியாக அண்மையில் வெளியிடப்பட்ட "தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்" என்கிற நூல்களில் இருந்து சிலவற்றைப் பதிபித்து அதற்கான எனது எதிவினையையும் எழுதிவந்துள்ளேன்.

அந்நூலின் தொகுப்பாசிரியர் கூறுவது போல் அந்நூல்களில், 1949 ஆண்டுவரை தான், பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளது. இறுதிவரை பெரியார் பேசியது பின்னர்த் தொகுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இங்கே “கம்யூனிசம்” பற்றி 1972ஆம் ஆண்டுப் பெரியார் கூறியதோடு இந்தத் தொடர் முடிவுக்கு வருகிறது.

சமதர்மம், கம்யூனிசம் என்று பெரியார் இறுதிவரை பேசிவந்தாலும், அது மார்க்ஸ் கூறுகிற விஞ்ஞானக் கம்யூனிசத்தைதிற்கு மாறாகவே இருந்துள்ளது.

1950லில் “நமது இயக்கமும் கம்யூனிசமும்” என்ற தலைப்பில் பேசியதைப் படித்தறிந்தாலே பெரியாரின் சமதர்மம் என்பது மார்க்சிய விஞ்ஞான வழிப்பட்டதல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.

தமது இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு எதிரானது இல்லை என்று தொடக்கத்தில் கூறினாலும் பெரியார் கம்யூனிஸ்டுகளின் செயற்பாட்டை மறுதலித்துத் தமது பாதைக்கு அழைப்பு விடுக்கிறார்.

"பொருளாதாரச் சமத்துவத்தால் சமுதாயப் பேதாபேதங்கள் அகன்றுவிடும் என்பது மேல் நாடுகளுக்குச் சற்றுப் பொருத்தமானதாயிருக்கலாம். மேல் நாட்டு மக்கள் எல்லோருமே ஒரே மதத்தை-அதாவது கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர்கள் ஆவார்கள், எனவே, இயல்பிலேயே அங்குச் சமுதாயத்தில் பேதாபேதம் இல்லாமலிருந்து வருகிறது. நம் நாட்டு நிலை அப்படி இல்லை. இங்குப் பிறவியிலேயே பேதாபேதம் கற்பிக்கப்பட்டு, மக்கள் பல சாதிகளாகப் பிரிந்து கிடப்பதோடு, உயர்த்தசாதி-தாழ்ந்த சாதி என்கின்ற பேதமும், தாழ்த்த சாதி மக்கள் உழைக்கக் கடமைப்பட்டவர்கள், உயர்ந்த சாதி மக்கள் அந்த உழைப்பின் பயனை அனுபவிக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதான கருத்தும், இன்னும் பற்பல மூடநம்பிக்கைக் கருத்தும் ஆட்சிபுரிந்து வருகின்றன. இந்தப் பகுதிதறிவுக் காலத்திலும் இன்னும் கரும காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே, ஏழை மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் பணம் நாளடைவில் உயர்சாதிப் பார்ப்பான் கைக்கு எப்படியோ போய்ச் சேர்த்துவிடும்; மறுபடியும் மறுபடியும் பொருளாதாரப் பேதாபேதம் ஏற்பட்டுவிடும். ஆகவே, முதலில் தம் ஏழை மக்களுடைய உள்ளத்தில் மாற்றம் ஏற்படவேண்டும், அவர்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படவேண்டும். அதன் பிறகு நான் கம்யூனிசம் (பொருளாதாரச் சமத்துவம்) அவர்களுக்கு முழுதும் பயன்படும்.

குளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ-அதேபோல், மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதாரச் சமத்துவம் கொள்கை இந்தாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மேல் நாட்டினரைப் போல் பகுத்தறிவுள்ள மக்களாக ஆகிவிடுவோமானால், அப்புறம் கம்யூனிசம் நமக்கு முற்றிலும் பயன்படும். இதைக் கம்யூனிஸ்டுகள் உணர்ந்து மக்களுக்கு முதலில் அறிவு பெருகச் செய்ய வேண்டும்.
… … …
தோழர்களே! கம்யூனிஸ்டுகளின் இன்றைய கிளர்ச்சி நடைபெற்று வந்தாலும், நடைபெறாவிட்டாறும் இந்த நாட்டிற்கும் கம்யூனிசம் வரத்தான் செய்யும். ஏன்! கம்யூனிசம் ஒன்றுதான் உலக அமைதிக்கே, உலக மேம்பாட்டிற்கே உற்ற சாதனமாகும் என்ற அறிவு,-அதுவே சத்தியமானது, அதுவே உண்மையானது என்ற அறிவு எல்லா நாடுகளிலும் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்திருக்கிறது. அந்தச் சுவாலை இன்றில்லை யானாலும் நாளை இந்நாட்டையும் கவ்வத்தான் போகிறது. ஆங்கிலேயரின் தந்திரமோ, அமெரிக்கரின் அணுகுண்டோ கம்யூனிசத்தின் பரவலை இனியும் தடை செய்து கொண்டிருக்க முடியாது.”
(நமது இயக்கமும் கம்யூனிசமும்)

பொருளாதாரக் காரணங்களால் தான் நமது நாட்டில் சாதியம் தோன்றியது. இங்குள்ள உற்பத்தி முறையினால் ஏற்பட்ட உற்பத்தி உறவுகளில் காணப்படும் முரண்பாட்டின் வெளிப்பாடு தான் சாதியம். பெரியார் சாதியதை பார்ப்பனர்கள் படைத்தாகக் கருதிக் கொண்டு, அதன் தோற்திற்கான பொருளாதாரப் போக்கை முறியடிப்பதற்கு முயலாமல், தோன்றிய சாதியத்தைக் காப்பாற்றும் பார்ப்பனர்களை முதன்மைப்படுத்தி அவர்களை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் பணம் படைத்தவர்களின் சுரண்டலை நீடிக்கச் செய்கிறார், அதாவது காப்பாற்றுகிறார்.

வர்க்க முரணிற்குத் தீர்வு தான் கம்யூனிசம். ஆனால் பெரியார் இதனை ஒரு பெரிய குடும்ப உறவாகப் பார்க்கிறார். அதனால் தான் இன்றைய வர்க்க முரணுக்குக் காரணமான தனிச்சொத்துடைமையை ஒழிக்க முயற்சிக்காமல், அந்தத் தனிவுடைமையைக் காப்பாற்றுகிற சிந்தனையை முதலில் ஒழிக்கப் பெரியார் முயற்சிக்கிறார். கம்யூனிசத்தை வந்தடைதல் என்பது அறிவு வளர்ச்சியாகப் பார்க்கிறார். அதற்கான பொருளாதார வளர்ச்சியும், அதனை ஒட்டிய தத்துவப் போக்கையும் பெரியார் கண்டுகொள்ளவே இல்லை.

அதுமட்டுமல்லாது, கம்யூனிசம் என்பது ஏழைகளின் துன்பத்தை நீக்குவதாக மட்டும் கூறிடாது, கோடிகளை வைத்துக் கொண்டு, பாதுகாக்க முடியாத பணக்காரர்களின் கவலைக்குத் தீர்வாகவும் பெரியார் கூறுகிறார். எந்தப் பணம்படைத்தவனும் தமது பிரச்சினைக்குத் தீர்வாகக் கம்யூனிசத்தை ஏற்கமாட்டான். பணம்படைத்த சுரண்டலாளர்களின் சுரண்டும் போக்கினை எத்திர்த்துத் தொழிலாளர்கள், கம்யூனிசத்தைத் தீர்வாக வைக்கிறார்கள். வர்க்க சார்பில்லாத பகுத்தறிவுவாதப் பார்வையைப் பெரியார் பின்பற்றுகிறார். அனைத்திலும் உள்ள வர்க்க சார்பை வெளிப்படுத்தி அதனை நீக்குவதற்கான வழிகளையே கம்யூனிசம் வலியுறுத்துகிறது.

வர்க்கப் பார்வையுள்ள கம்யூனிசத்தைப் பெரியார் பேசவில்லை. அப்படி அவரால் பேசவும் முடியாது. அதனால் தான் தொழிலாளர்களின் அரசை பலாத்காரத் தூண்டுதலற்ற முறையில் அமைப்பது பற்றிப் பெரியார் பேசுகிறார். அமைதி வழியா, பலாத்காரமா என்பதைச் சூழ்நிலைதான் தீர்மானிக்கிறது. எந்தத் தனிப்பட்ட இயக்கங்களின் முடிவினால் அல்ல என்கிற பார்வை பெரியாருக்கு இல்லை. வேலைநிறுத்த போராட்டத்தைப் பற்றிய பெரியாரின் கருத்து, முதலாளித்துவ ஆதரவாளர்களின் கருத்துப் போலவே காணப்படுகிறது. அதே போல், பலாத்காரம் பற்றிய பெரியாரின் கருத்தும் சுரண்டலாளர்களுடைய ஆதரவாளர்களின் கருத்தாகவே இருக்கிறது.

பெரியார், பேசுகிற சமதர்மம், மனிதர்களிடையே காணப்படும் போட்டி பொறாமை ஆகிவற்றுக்கான, அறிவுவழிப்பட்ட தீர்வு ஆகும். சமூகத்தில் காணப்படும் வர்க்க முரணை நீக்குவதற்கான பொருளாதார வழிப்பட்ட தீர்வை மார்க்சினுடைய கம்யூனிசம் வைக்கிறது. மார்க்சியம் தொழிலாளர்களின் வர்க்கச் சார்பானது.

கம்யூனிஸ்டுகள் கிளர்ச்சி செய்தாலும் செய்யாவிட்டாலும் கம்யூனிசம், நம் நாட்டிற்குத் தானே வரும் என்கிற பெரியரின் கூற்று வர்க்கப் பார்வையற்றதாகும். பெரியார் தமது வர்க்க சார்பின்படியே சமதர்மம் பேசுகிறார். இதனைப் புரிந்து கொண்டு அவரின் பொதுவுடைமைச் சிந்தனைகளை விமர்சித்து, மார்க்சின் விஞ்ஞான வழிப்பட்ட கம்யூனிசமே நமது நாட்டு தொழிலாளர்களுக்கு விடுதலை என்பதை நிலைநிறுத்தப்பட வேண்டும்.

இந்த எதிர்வினைகளின் அடிப்படையில் எனது “பெரியாரின் சமதர்மமும் மார்க்சின் விஞ்ஞானக் கம்யூனிசமும்” என்கிற நூல் ஏழுதப்படும்.

விரைவில் முழு நூலாக வெளிவரும்.)

தந்தைப் பெரியார்:-
நாட்டு மக்கள் எல்லாம் ஒரு குடும்பம்போல, எல்லா மக்களும் பாடுபடவேண்டும்; வருகின்ற இலாபம் - விளைபொருள் முதலியவற்றை எல்லா மக்களுக்கும் பகிர்ந்தளிப்பது. இதுதான் பொதுவுடைமையாகும்.

இதன் அடிப்படைத் தத்துவம் என்ன? இப்படிப்பட்ட நிகழ்ச்சி ஏன் நடத்தப்படுகின்றது என்பனவற்றை யெல்லாம் புரிந்து கொண்டால்தான் பொதுவுடைமைத் தத்துவத்தின் சிறப்பு விளங்கும். மனிதன் அறிவைக் கொண்டு வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். ஆனால், மனிதனென்றால் கவலை உள்ளவனாகவே இருக்கின்றான். பிரதமரானாலும், முதன்மந்திரியானாலும் அவர்களுக்கும் கவலைதான், “கோடீசுவரன்” ஆனாலும் அவனுக்கும் கவலைதான் நாட்டை ஆளுபவர்களுக்குப் பல பிரச்சினைகளைச் சமாளிக்கவேண்டிய கவலை நிலை உண்டாகிறது.

கோடீஸ்வரனுக்கு எப்படித் தனது ஒரு கோடி ரூபாயைக் காப்பது என்பது கவலை; அத்தோடு நின்று விடுவதில்லை; தனக்கு ஒரு கோடி ரூபாய்தானே உள்ளது அடுத்தவனுக்கு 2 கோடி இருக்கின்றதே என்று தம்மிலும் மேம்பட்டவனைப் பற்றிக் கவலை யடைகின்றான்.

ஏழை தனக்குச் சாப்பாட்டிற்கு வழியில்லையே அவன் நல்வாழ்வு வாழ்கின்றானே என்ற வேதனையடைகின்றான். குச்சு வீட்டுக்கும் வழியில்லாத ஒருவன், வசதிபடைத்த ஒருவன் பங்களாவில் வாழ்வதைப் பார்த்து மனம் புழுங்குகிறான். இதுபோலக் கவலை, மனக் குறையென்பது எல்லாத் துறைகளிலும் இருக்கின்றது.
… … …
பொதுவுடைமை என்று கூறுவதன் அடிப்படைத் தத்துவமே, மனிதன் கவலையற்ற வாழ்வு வாழவேண்டும் என்பதுதான். சொந்த உடைமை என்பது கவலை நிறைந்த வாழ்வாகும்.

மனிதனுக்கு உணவுப் பண்டம் பற்றவில்லையானாலும், சற்றுக் குறைவாக இருப்ப தனாலேயே குறைகூறமாட்டான். ஒருவனுக்கு அதிகம்; இன்னொருவனுக்குச் சும்மா ஒன்றுமில்லை என்றிருந்தால்தானே குறைபாட்டுக்கு - எதிர்ப்பதற்கு இடமேற்படும்!

மனிதனுடைய கவலைக்கும் குறைபாட்டிற்கும் பரிகாரமாக, முடிந்த முடிவாக அறிஞர்களால் பலகாலும் சிந்திக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்டதுதான் பொதுவுடைமைதி தத்துவம்.

இதன்மூலம் சந்தோஷமான, கவலை-துக்கமற்ற, தெளிவுள்ள வாழ்க்கை மக்களுக்குக் கிட்டுகின்றது. மனிதன் சிந்தித்து அறிவை வளர்த்துக்கொண்டே போனால் அங்குதான் (பொதுவுடைமையில் தான்) கொண்டுபோய்விடும்.
... … …
நம் நாட்டிலும் கம்யூனிஸ்டுக்காரர்கள் இருக்கிறார்கள்; இவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு மட்டும் பொதுவுடைமையைச் சாதனமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்களே ஒழிய, பொதுமக்கள் கடைத்தேற ஒன்றும் செய்யவில்லை; பொதுவுடைமை என்றால் மக்களுக்கும் ஒன்றும் தெரியாது.

எனவே, நாட்டில் பொதுவுடைமைக் கொள்கையைக் கொண்ட அரசாங்கம் ஏற்பட்டு முயன்றால்தான், மக்களின் குறைபாடுகள் நீங்குமே ஒழிய, பொறுக்கித் தின்னும் இந்தக் கம்யூனிஸ்ட்டுகளின் காலித்தனம், பலாத்காரத் தூண்டுதல் மூலம் ஒன்றும் முடியாது. அரசாங்கத்தைக் கைப்பற்ற ஆட்சி இந்தத் துறையில் ஈடுபட்டால்தான் மார்க்கம் ஏற்படும். ஒருவன் சட்டைப் பையில் இருப்பதை இன்னொருவன் எடுப்பதுபோல், ஒருவன் நிலத்தில் மற்றொருவன் பிரவேசிப்பதால் இது ஆகிவிடாது.
… … …
குறைபாடு இரண்டு விதங்களில் உண்டு. போதவில்லை என்பது ஒன்று-அதாவது கால்படி அரிசி தேவையானால் அதற்கும் குறைவாகக் கிடைக்கின்றதே என்பது.

இரண்டாவது, போதுமான அளவுக்குமேல் வேண்டும் என்று ஆசைப்படுவது. உதாரணமாக ஒரு 'ரூமில்' வசிப்பவன் இரண்டு ரூம்கள் இருந்தால் நன்றாய் இருக்கும் என்று ஆசைப்படுவது.

இப்படி ஆசையினால் ஏற்பட்ட குறையும் தேவையினால் ஏற்பட்ட குறையும் பொது வுடைமையினால் தீர்ந்துவிடும்.

இருக்கின்ற உணவுப் பொருள் எல்லோர்க்கும் பகிர்ந்து கொடுக்கப்படும்போது, ஒரே விதமாக எல்லோருக்கும் உணவுப் பொருள் கிட்டுவதால், தமக்குக் குறைவு என்ற எண்ணம் ஏற்படாது. எல்லோருக்கும் ஒரு ரூம் தான் என்று எண்ணி சமாதானம் அடைந்து கொள்வான்.

இதனாலேயே, போட்டி பொறாமை ஏற்பட வழி இருக்காது, கவலை ஒழிந்து எல்லோரும் மன நிறைவோடு வாழச் செய்யும்.

(திருச்சி சிந்தனையாளர் சழகச் சார்பில், உறையூரில்,
9-1-1972-இல் ஆற்றிய சொற்பொழிவு
–உண்மை - பிப்ரவரி, மார்ச் 1972]

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 64:-


கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தடை!

(1949 ஆண்டு இந்திய அரசு கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்த போது பெரியார் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். ஒரு முற்போக்காளர்களுக்குப் பிரச்சினை வந்தால் பிற முற்கோக்காளர்கள் உதவுவது அவசியமே ஆகும். அதே போலப் பாசிசம் போன்ற பொதுப் பிரச்சினையில் நாம் ஒன்றுகூடி அதனை எதிர்க்க வேண்டும். அப்போது தான் எதிரியை பலத்துடன் எதிர்த்து சாய்க்க முடியும்.)

தந்தை பெரியார்:-
““பொதுமக்களிடமிருந்து தங்களுக்குஎவ்வித அனுதாபமோ, ஆதரவோ கிடைக்காதென்பதைக் கண்ட கம்யூனிஸ்ட்டுகள், வேறு வழியின்றித் தற்போது குழப்பம் உண்டுபண்ணவும், அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளவும் முயல்கின்றனர்.” இது நமது சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட்கட்சியைச் சட்டவிரோதமானதென்று, ஏன் தடைவிதித்தோம் என்பதை விளக்கி மாகாண சர்க்கார் கொடுத்திருக்கும் அறிக்கையில் காணப்படும் குற்றச்சாட்டு.

இந்தக் காரணத்தைக் கூறிச் சென்னை மாகாணத்திலுள்ள பல வகையான 19 தொழிலாளர் சங்கங்களுக்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்தில் அவைகள் இருக்கின்றன என்பதாக அவைகள் எல்லாவற்றையும் சர்க்கார் தடைப்படுத்தி இருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்காக நாம் வக்காலத்து வாங்குவதோ, கம்யூனிஸ்ட் கட்சியினரின் மீது சர்க்கார் சாட்டியிருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்து, அப்படிப்பட்ட தீச்செயல்களுக்குப் பரிந்து பேசவேண்டுமென்பதோ நம் கருத்தல்ல.
… … …
ஒரு சிலர் பலாத்கார நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக, அக்கட்சியினர் எல்லோருக்குமே ஏன் தடைவிதிக்க வேண்டும்? அப்படியே கட்சிக்குத் தடை விதிக்க வேண்டுமென்றாலும், அக்கட்சியினரின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்று சொல்லப்படும் 19 வகையான தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளிகளின் நடவடிக்கைகளுக்கும் ஏன் தடை விதிக்க வேண்டும்? என்று கேட்பது இந்நாட்டில் பாடுபடும் ஒவ்வொருவருக்கும் உரிய கடமையல்லவா என்று கேட்கிறோம்.

பலாத்கார நடவடிக்கைகளை அதாவது பொது ஸ்தாபனங்களைத் தீயிட்டுக் கொளுத்துவது, கொள்ளையிடுவது போன்ற அட்டூழிய நடத்தைகளை வீரச்செயல்கள், புனிதமான தொண்டு என்று பலபடியாக வர்ணித்து, அப்பேர்ப்பட்ட காலித்தனங்களில் பங்குகொண்டவர்களைத் தியாகிகள் என்பதாக முத்திரைக்குத்தி, அவர்களுக்கு வீரமானியமும் கொடுக்க முன்வந்த ஒரு கட்சியின் சர்க்கார், தம் பழைய அடிச்சுவட்டைப் பின்பற்றுகிற சில கம்யூனிஸ்ட்டுகளை மட்டும் இன்று குற்றம் சுமத்தி அழிவு வேலைக்காரர்கள் என்று அறிவிக்கிறார்கள் என்றால் இந்த அறிவிப்பு, ஆகஸ்டு தியாகிகளின் சாயத்தை வெளுத்து விடமாட்டாதா? என்றுதானே பொதுமக்கள் எண்ண வேண்டும்.

எந்தக் கட்சிக்காரர்களாய் இருந்தாலும், பலாத்காரச் செயல்களில் ஈடுபட்டவர்களை, நாம் ஒவ்வொரு தடவையிலும் வன்மையாகவே கண்டித்து வந்திருக்கிறோம். இந்த நாட்டுநலம் கருதும் எவரும் எந்தக் காரணத்தாலும் பலாத்காரச் செயல்களை ஆதரிக்க முடியாதென்பது உறுதி. ஆனால் “மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்கிற நியாயம் கம்யூனிஸ்ட்டுகள் விஷயத்தில் காட்டப்படுகிற காரணத்திற்காகத்தான் நாம் இதை எடுத்துக்காட்ட நேர்ந்தது.
… … …
சர்க்கார் கம்யூனிஸ்ட்டுகள் மீது சாட்டியிருக்கும் குற்றச்சாட்டு, நாச வேலைகள், குழப்பம் உண்டுபண்ணும் முயற்சி! கம்யூனிஸ்ட்டு தோழர்கள் பலாத்காரத்தில் நம்பிக்கையுடையவர்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோம். குழப்பம் உண்டு பண்ணுவதுதான் வெற்றிக்குவழி - தொழிலாளிக்கு நன்மை என்று முடிவு கட்டியிருக்கிறார்கள் என்பதையும் நாம் ஒப்புக்கொள்கிறோம். ஒப்புக்கொள்வது மட்டுமல்ல, இந்தப்பாதை தவறானது என்பதையும் வற்புறுத்திக் கூறுகிறோம். ஆனால் பலாத்காரத்தில் நம்பிக்கையுடைய, சர்க்கார் வியாக்கியானப்படி செல்வாக்கில்லாத "கால்கள்” சட்டவிரோதம் என்கிற ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கிவைத்து நசுக்கவேண்டிய அளவுக்கு எப்படிப் பலம் பெற்றார்கள்? அதற்கான சூழ்நிலையை அறிந்து அதற்கான பரிகாரம் செய்திருந்தால்"காலிகள் எப்படி வளர்ச்சியடைந்திருக்க முடியும்?
… … …
பொது மக்களிடம் ஆதரவு பெற, அவர்களின் அனுதாபத்தையடைய கம்யூனிஸ்ட்கள் எத்தனையோ வழிகளில் முயன்றார்கள். அந்தமுயற்சி பலன்தரவில்லை. வேறுவழியில்லாமல் இப்போது குழப்பமுண்டு பண்ணுகிறார்கள் என்று விளக்கந்தரும் சர்க்கார், தங்கள் ஜம்பத்துக்காக இப்படிச் சொல்லியாக வேண்டியிருக்கிறதென்றால் நன்றாகச் சொல்லிக்கொள்ளட்டும், ஆனால் குறிப்பிட்ட தொழில் ஸ்தாபனங்களைத் தவிர, மற்ற மக்களிடம், இந்தநாட்டுக் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எந்தக்காலத்திலும் தொடர்பு இருந்ததில்லை, தொடர்பை உண்டாக்கிக் கொள்ள முயலவும் இல்லை, அதற்கான திட்டமுமில்லை என்பதை நாடறியும்.

"கம்யூனிஸ்ட்டுகள் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள முயல்கிறார்கள்". தடைவிதிப்பதற்கு இதை ஒரு காரணமாகச் சொல்லும் சர்க்காரின் அறிக்கையைக் கண்டு நாம் உண்மையாகவே பரிதாபப்படுகிறோம். ஆளவந்தவர்கள் எப்படிப்பட்ட அறியாமையின் சிகரத்தில் வீற்றிருக்கிறார்கள் என்பதை எண்ணும் போது எவரும் சிரிக்காமல் இருக்க முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்றி, ஆளும் உரிமை, என்றைக்குமே தமக்குத்தான் சாஸ்வதம் என்கிற பைத்தியக்கார எண்ணத்தைத் தவிர, இந்தக் குற்றச்சாட்டுக்கு வேறு என்ன உண்மையான காரணம் சொல்லமுடியும்?
… … …
கம்யூனிஸ்ட் ஆதிக்கத்திலுள்ளவையென்று கூறிப் பல தொழிலாளர்களின் சங்கங்களுக்கு விதித்திருக்கும் தடையை மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். கண்டிப்பது மட்டுமல்ல, இன்றைய காங்கிரஸ் சர்க்கார், முதலாளிகள் - பனியாக்களின் ஒரு அய்க்கிய முன்னணி என்பதையும் உலகத்துக்கேகாட்டவில்லையா? என்றும் கேட்கிறோம்"

பாடுபட்டுழைக்கும் பாட்டாளிக்கு மதிப்புத் தருபவர்கள்தான் இன்றைய ஆளவந்தார்கள் என்று சொல்வது உண்மையானால், உடனடியாகச் செய்யக்கூடிய வேலை, முதலில் தொழிலாளர் சங்கங்களுக்குப் போட்டிருக்கும் தடையை நீக்கிவிடுவதுதான் ஆனால் இன்றைய பனியா ஏகாதிபத்தியம் அப்படிச் செய்யுமா?

அடக்குமுறைகளை அடிக்கடி கூப்பிட்டு, அதன் கொடூர நர்த்தனத்தைக் கண்டு கும்மாளமிட்டுக் கோலோச்சியோரை, எந்த நாடும், எந்தக் காலத்திலும் வரவேற்றதுமில்லை , நெடுங்காலம் வாழவிட்டதுமில்லை. உலக வரலாறு கூறுகிற இந்த உண்மையை ஆளவந்தார்கள் அறிந்திருக்க வேண்டும். இன்றேல் அறிந்து கொள்வார்களாகம்!”
('குடிஅரசு' - தலையங்கம் - 01.10.1949)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 236/240)

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

திங்கள், 23 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 63:-


நாஸ்திகர்களே சமதர்மவாதிகள்!

(1949லிலும் பெரியார் நமது நாட்டிற்க சமூகச் சமதர்மமே முதலானது பொருளாதாரச் சமதர்மமே அதற்கு அடுத்தப்படியானது என்கிறார். பணம் படைத்தவர்களிடம் பணம் சேர்ந்த முறையை யார்தான் சரியானது என்று சொல்ல முடியும் என்று கேள்வு எழுப்பும் பெரியார் அடுத்த என்ன கூறுகிறார் என்பதைப் பாருங்கள். இந்தப் பணக்காரர் ஏழை முறையை மாற்ற வேண்டும் என்று சொல்லும் போது கடவுளையும் மதக் கொள்கைகளையும் குறுக்கே கொண்டுவந்து போட்டால் அக்கடவுளையும் மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்? என்று கேட்கிறார்.

குறுக்கே அவர்கள் போடுவதற்குக் காரணமே பணம் படைத்தவர்களைக் காப்பாற்றுவதற்குத் தானே. பணம்படைத்தவர்களின் சுரண்டலை ஒழித்துவிட்டால் யாருக்காக. யார் குறுக்கே கொண்டு வந்து மததைப் போடுவார்கள். பணம்படைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கு உருவானதை ஒழிக்கப் பெரியார் விரும்புகிறார். ஆனால் பணக்காரர்களை ஒழிக்காமல் மதத்தை ஒழிக்க முடியாது என்பதே உண்மையாகும்.

மூலதனத்திற்கும் மதத்திற்கும் உள்ள பிணைப்பை பெரியார் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதனால் தான், “மனித வாழ்க்கைக்கும் பேதாபேதங்களுக்கும் கடவுள் சம்பந்தமில்லை என்று சொல்லும் பட்சம் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?” என்று கூறுகிறார். இது வாதத்திற்குக் கூறியதாகத் தெரியவில்லை. மதத்தில் காணப்படும் வர்க்க சார்பை தெரியாததனால் தான் அவ்வாறு கூறுகிறார்.)


தந்தை பெரியார்:-
சமதர்மம் என்கின்ற வார்த்தைக்கு, சமுகத்துறையிலும் பொருளாதாரத் துறையிலும், மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய்ப் (பேதமின்றி) வாழவேண்டும் என்பதையே, சமதர்மம் என்று நான் கருத்துக்கொண்டு சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்குப் பிரயோகிக்கின்றேன்.

ஏனெனில், மற்ற நாட்டில் சமுகத் துறையில் நமது நாட்டில் உள்ளது போன்ற பிறவி உயர்வு, தாழ்வு, பேதா பேதம் இல்லை. பொருளாதாரச் சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றன. நமது நாட்டுச் சமுதாய உயர்வு தாழ்வானது, பிறவியிலேயே வகுக்கப்பட்டு அதை மதத்தோடு பொருத்தி, அதற்கு அரசியல் பாதுகாப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது.

அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால், அதற்கு நம் நாட்டு மக்கள், அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மத நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்களே சிறிது கூட ஒப்பமாட்டார்கள். ஒப்பமாட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல், அவர்களே நமக்கு எதிரிகளாகவும் இருப்பார்கள். ஏனெனில் பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு, அம்மதம் பாமர மக்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும், அதை மாற்றாமல் அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல், மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவது, பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவேயாகும்.

முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டுச் சமதர்மத்துக்கு முதற்படியாகும். அதனாலேயே பொருளாதார சமதர்மமே மனித சமுக சாந்திக்கு, மருந்து என்று கருதி இருக்கும் நான், சமுதாயத்தில் வாழ்க்கையில் சமதர்மத்தை அபேதவாதத்தை முக்கியமாய் வலியுறுத்திவருகிறேன்.
… … …
நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து, மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிருக்கிறது. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான், சமுக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழமுடியும். பொருளாதார பேதத்துக்கும், சமுக ஜாதி பேதமுறைதான் பெரிதும் காரணமாய்க் காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதிபேதமே பொருளாதாரச் சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதாரப் பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது.

எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம். எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும், நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்குப் பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணமெல்லாம், அவர்களில் பிறவியில் கீழ் மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நமது மக்களுக்கு வெறும் பொருளாதாரச் சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி, பொருளாதாரச் சமதர்மம் சொன்னால் தான் உண்மையாகக் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது.

ஆகவே சமுக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம் பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கின்றது என்றும், பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம். மதத்தைப் பற்றியோ மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை நாஸ்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால் தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாஸ்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.

நாஸ்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்றுகூடச் சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போதுமானதாக இருக்கிறது.
… … …
ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது. நாட்டுக் கோட்டையார்களில் 10 லட்சம், 20 லட்சம், கோடிக் கணக்கான ரூபாய் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும் பாட்டிற்கும் இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும் இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா? ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத்தினால், தொழில் முறையினால், மனவலிமையினால், சம்பவங்களால் ஏற்பட்டதென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதாரமாய் இருந்த முறையை யார்தான் சரியானமுறை என்று சொல்லிக்கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார்தான் நல்லநிலை என்று சொல்ல முடியும்? இவற்றையெல்லாம் மாற்றவேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டுவந்து குறுக்கே போட்டால் அக்கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?
… … …
எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இருக்கக் கூடாது என்பதற்காக நான் கூறவில்லை. மனிதச் சமூக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய், எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும், அப்படிப்பட்ட கடவுளை இருக்கவிடக் கூடாது என்றும் தான் வற்புறுத்திக் கூறுகிறேன். மனித வாழ்க்கைக்கும் பேதாபேதங்களுக்கும் கடவுள் சம்பந்தமில்லை என்று சொல்லும் பட்சம் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?
('குடிஅரசு' - கட்டுரை - 18.06.1949)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 230/235)