வெள்ளி, 31 ஜனவரி, 2020

சிந்தனை - தந்தை பெரியார்


(முனைவர் மா.நன்னன் தொகுத்தவை- நூலின் “பெயர் பெரியார் கணினி”)

1) எந்தச் சங்கதியாய் இருந்தாலும், நன்றாகச் சிந்திக்க வேண்டும்; ஆராய்ந்து பார்க்க வேண்டும். இது கடவுளாச்சே, இது சாத்திரமாச்சே, இது பகவான் வாயிலிருந்து வந்ததாச்சே, பெரியபுராணம் சொல்லுகிறதே, சின்ன புராணம் சொல்கிறதே, என்று எல்லாம் நினைக்கக் கூடாது.
(குடிஅரசு -26-3-51) (34-4-11)

2) ஒரு காலத்தில் உலகத்திற்கே நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்த மக்களை இன்று கல்லையும், மண்ணையும், சாணியையும் கடவுளென்று கருதி இருக்கிற நிலைமைக்கு மடசென்மங்களாக்கி இழிவு படுத்திக் கடந்த 3,000 வருடமாக இந்த நிலையிலேயே இருக்கச் செய்திருக்கிறார்கள் என்றால், இதற்கு என்ன அர்த்தம்? இந்த மக்களுக்கு ஆராயும் புத்தி இருந்திருந்தால் இந்த நிலை ஏற்படுமா?
(விடுதலை – 3-5-54) (34-4-12)

3) மிருகங்களைவிட மனிதர்கள் பகுத்தறிவுள்ளவர்கள் என்று கூறப்படுகிறதே ஒழிய பெரும்பாலோர் பகுத்தறிவு கொண்டே சிந்திப்பதில்லை. பார்ப்பனர் சொல்கிறபடி கேட்டு, அவர்கள் நடத்துகிற மாதிரி நடந்து, இயங்கி வருவது வெட்கக் கேடல்லவா? மனித அறிவு வளர்ச்சிக்கு – முற்போக்குக்குப் பெருங்கேடானது அல்லவா?
(விடுதலை – 11-1-61) (34-4-17)

4) பகுத்தறிவுடன் சிந்திக்காமல் கண் மூடித்தனமாக நம்பி நம்பித்தான் இத்தகைய காட்டு மிராண்டி நிலைக்கு நம் மக்கள் வந்துள்ளனர். நாடும் இத்தகைய இழி நிலைக்கு வந்துளளது. எனவே சொல்வது யார் என்பது பற்றிச் சிந்தியாமல் சொல்லப்படுவன எவை; அவற்றுள் அறிவுக்கு ஏற்கக் கூடாதன எவை என்று சிந்தித்துப் பார்ப்பது ஏற்கக் கூடியனவற்றை ஏற்று மற்றவற்றைத் தள்ளிவிட வேண்டும்.
(விடுதலை – 16-1-61) (34-4-18)

5) எதையும் சிந்தித்துப் பார்க்காத காரணத்தினாலேயே நம் மக்கள் இந்த 20ஆம் நூற்றாண்டுக் காலத்திலும் இழி சாதிகளாக இருக்கின்றோம். நாங்கள் சொல்வதையும் கேட்க வேண்டும்; மற்றவர்கள் சொல்வதையும் கேட்க வேண்டும்; சிந்தித்துப் பார்த்து எது உங்களுக்குச் சரி யென்று படுகிறதோ அதனை ஏற்றுக்கொண்டு மற்றதைத் தள்ளிவிட வேண்டும்.
(விடுதலை – 11-5-61) (34-4-21)

6) மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்க வேண்டும. அப்போதுதான் மனிதன் காட்டு மிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை – 13-8-61) (34-4-23)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக