வெள்ளி, 31 ஜனவரி, 2020

எந்தவிதமான அபிப்பிராயத்தையும் ஆட்சேபிக்கவும், அடியுடன் மறுத்து எதிர்க்கவும் யாருக்கும் உரிமையுண்டு – தந்தை பெரியார்

“ஏதோ என் புத்திக்குச் சரியென்று பட்ட வகையில் நான் சிறிது தொண்டுசெய்து வருகிறேன். அது எனது கடமை என்று கருதிச் செய்கிறேன். அதற்கு இவ்வளவு புகழ்ச்சி வேண்டியதவசியமில்லை. அன்று நான் கொண்ட அனேக அபிப்பிராயங்களுக்கு இன்று நான் மாறுபட்ட அபிப்பிராயம் உடையவனாய் இருக்கிறேன். இனி நாளை எவ்வித அபிப்பிராயம் ஏற்படும் என்று எனக்கே தெரியாது. உலகம் மாறிக்கொண்டிருப்பது. மனிதனின் அறிவு சதா நேரமும் படிப்பி லேயே இருக்கிறது அப்படிப்புக்குதக்க அபிப்பிராயங்கள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.

இந்நிலையில் தோழர் சிவதாணுப்பிள்ளை அவர்களுடைய ஒரு அபிப்பிராயத்துக்கு நான் மாறுபட்டிருப்பதற்கும் அவர் மன்னிப்பாராக. அதாவது, எனது தீவிரமான சில அபிப்பிராயங்கள், அபிப்பிராய பேதத்துக்கு இடமானதென்றும் அதைப்பற்றிப் பேச எவருக்கும் உரிமை இல்லை என்றும் சொன்னார். அதை நான் தாழ்மையுடன் பலமாய் மறுக்கிறேன்.

ஏனெனில், அது எனது கொள்கைக்கு விரோதமானதாகும். ஒருவன் எப்படிப் பட்ட மனிதனாயினும், மனிதத் தன்மைக்கு மேற்பட்டவன் என்று சொல்லப்படுவானாகிலும் அவனது அபிப்பிராயங்கள் எப்படிப்பட்ட மனிதனாலும் பரிசோதிக்கப்படவும் தர்ககிக்கப்படவும் தக்கதாகும் என்பதே, எனது அபிப்பிராயமாகும். யாருடைய அபிப்பிராயத்தையும் - எந்தவிதமான அபிப்பிராயத்தையும் ஆட்சேபிக்கவும், அடியுடன் மறுத்து எதிர்க்கவும் யாருக்கும் உரிமையுண்டு என்பதும் எனது அபிப்பிராயம். ஆதலால், எனது அபிப்பிராயங்களைப் பற்றிக் குறை கூறவோ, தர்க்கிக்கவோ யாரும் தகுதியுடையவர்கள் அல்ல என்று தோழர் சிவதாணுப் பிள்ளை அவர்கள் சொன்னதை நான் ஏற்கமுடியாமல் இருக்கிறது.

ஒரு விஷயத்தை வேண்டுமானால் நான் ஒப்புக்கொள்ளுகிறேன். அதாவது, எந்த மனிதனுக்கும் அவனது அபிப்பிராயம் என்னும் பேரால் எதையும் சொல்ல உரிமையுண்டு. அதைத் தடுப்பது என்பது யோக்கியமற்ற காரியமாகும். யார் எதைச் சொன்னாலும் சொல்ல அவகாசமளித்த பிறகுதான் அதை மறுத்துப் பேசவேண்டும்.”
(நாகர்கோவில் சொற்பொழிவு (13-08-1933) - 'குடிஅரசு' 20-08-1933)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக