புதன், 25 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 65:-


கம்யூனிசம் - உண்மை - பிப்ரவரி, மார்ச் 1972

(புலவர் பா.வீரமணி அவர்களால் மூன்று தொகுதியாக அண்மையில் வெளியிடப்பட்ட "தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்" என்கிற நூல்களில் இருந்து சிலவற்றைப் பதிபித்து அதற்கான எனது எதிவினையையும் எழுதிவந்துள்ளேன்.

அந்நூலின் தொகுப்பாசிரியர் கூறுவது போல் அந்நூல்களில், 1949 ஆண்டுவரை தான், பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளது. இறுதிவரை பெரியார் பேசியது பின்னர்த் தொகுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இங்கே “கம்யூனிசம்” பற்றி 1972ஆம் ஆண்டுப் பெரியார் கூறியதோடு இந்தத் தொடர் முடிவுக்கு வருகிறது.

சமதர்மம், கம்யூனிசம் என்று பெரியார் இறுதிவரை பேசிவந்தாலும், அது மார்க்ஸ் கூறுகிற விஞ்ஞானக் கம்யூனிசத்தைதிற்கு மாறாகவே இருந்துள்ளது.

1950லில் “நமது இயக்கமும் கம்யூனிசமும்” என்ற தலைப்பில் பேசியதைப் படித்தறிந்தாலே பெரியாரின் சமதர்மம் என்பது மார்க்சிய விஞ்ஞான வழிப்பட்டதல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.

தமது இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு எதிரானது இல்லை என்று தொடக்கத்தில் கூறினாலும் பெரியார் கம்யூனிஸ்டுகளின் செயற்பாட்டை மறுதலித்துத் தமது பாதைக்கு அழைப்பு விடுக்கிறார்.

"பொருளாதாரச் சமத்துவத்தால் சமுதாயப் பேதாபேதங்கள் அகன்றுவிடும் என்பது மேல் நாடுகளுக்குச் சற்றுப் பொருத்தமானதாயிருக்கலாம். மேல் நாட்டு மக்கள் எல்லோருமே ஒரே மதத்தை-அதாவது கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர்கள் ஆவார்கள், எனவே, இயல்பிலேயே அங்குச் சமுதாயத்தில் பேதாபேதம் இல்லாமலிருந்து வருகிறது. நம் நாட்டு நிலை அப்படி இல்லை. இங்குப் பிறவியிலேயே பேதாபேதம் கற்பிக்கப்பட்டு, மக்கள் பல சாதிகளாகப் பிரிந்து கிடப்பதோடு, உயர்த்தசாதி-தாழ்ந்த சாதி என்கின்ற பேதமும், தாழ்த்த சாதி மக்கள் உழைக்கக் கடமைப்பட்டவர்கள், உயர்ந்த சாதி மக்கள் அந்த உழைப்பின் பயனை அனுபவிக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதான கருத்தும், இன்னும் பற்பல மூடநம்பிக்கைக் கருத்தும் ஆட்சிபுரிந்து வருகின்றன. இந்தப் பகுதிதறிவுக் காலத்திலும் இன்னும் கரும காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே, ஏழை மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் பணம் நாளடைவில் உயர்சாதிப் பார்ப்பான் கைக்கு எப்படியோ போய்ச் சேர்த்துவிடும்; மறுபடியும் மறுபடியும் பொருளாதாரப் பேதாபேதம் ஏற்பட்டுவிடும். ஆகவே, முதலில் தம் ஏழை மக்களுடைய உள்ளத்தில் மாற்றம் ஏற்படவேண்டும், அவர்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படவேண்டும். அதன் பிறகு நான் கம்யூனிசம் (பொருளாதாரச் சமத்துவம்) அவர்களுக்கு முழுதும் பயன்படும்.

குளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ-அதேபோல், மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதாரச் சமத்துவம் கொள்கை இந்தாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மேல் நாட்டினரைப் போல் பகுத்தறிவுள்ள மக்களாக ஆகிவிடுவோமானால், அப்புறம் கம்யூனிசம் நமக்கு முற்றிலும் பயன்படும். இதைக் கம்யூனிஸ்டுகள் உணர்ந்து மக்களுக்கு முதலில் அறிவு பெருகச் செய்ய வேண்டும்.
… … …
தோழர்களே! கம்யூனிஸ்டுகளின் இன்றைய கிளர்ச்சி நடைபெற்று வந்தாலும், நடைபெறாவிட்டாறும் இந்த நாட்டிற்கும் கம்யூனிசம் வரத்தான் செய்யும். ஏன்! கம்யூனிசம் ஒன்றுதான் உலக அமைதிக்கே, உலக மேம்பாட்டிற்கே உற்ற சாதனமாகும் என்ற அறிவு,-அதுவே சத்தியமானது, அதுவே உண்மையானது என்ற அறிவு எல்லா நாடுகளிலும் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்திருக்கிறது. அந்தச் சுவாலை இன்றில்லை யானாலும் நாளை இந்நாட்டையும் கவ்வத்தான் போகிறது. ஆங்கிலேயரின் தந்திரமோ, அமெரிக்கரின் அணுகுண்டோ கம்யூனிசத்தின் பரவலை இனியும் தடை செய்து கொண்டிருக்க முடியாது.”
(நமது இயக்கமும் கம்யூனிசமும்)

பொருளாதாரக் காரணங்களால் தான் நமது நாட்டில் சாதியம் தோன்றியது. இங்குள்ள உற்பத்தி முறையினால் ஏற்பட்ட உற்பத்தி உறவுகளில் காணப்படும் முரண்பாட்டின் வெளிப்பாடு தான் சாதியம். பெரியார் சாதியதை பார்ப்பனர்கள் படைத்தாகக் கருதிக் கொண்டு, அதன் தோற்திற்கான பொருளாதாரப் போக்கை முறியடிப்பதற்கு முயலாமல், தோன்றிய சாதியத்தைக் காப்பாற்றும் பார்ப்பனர்களை முதன்மைப்படுத்தி அவர்களை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் பணம் படைத்தவர்களின் சுரண்டலை நீடிக்கச் செய்கிறார், அதாவது காப்பாற்றுகிறார்.

வர்க்க முரணிற்குத் தீர்வு தான் கம்யூனிசம். ஆனால் பெரியார் இதனை ஒரு பெரிய குடும்ப உறவாகப் பார்க்கிறார். அதனால் தான் இன்றைய வர்க்க முரணுக்குக் காரணமான தனிச்சொத்துடைமையை ஒழிக்க முயற்சிக்காமல், அந்தத் தனிவுடைமையைக் காப்பாற்றுகிற சிந்தனையை முதலில் ஒழிக்கப் பெரியார் முயற்சிக்கிறார். கம்யூனிசத்தை வந்தடைதல் என்பது அறிவு வளர்ச்சியாகப் பார்க்கிறார். அதற்கான பொருளாதார வளர்ச்சியும், அதனை ஒட்டிய தத்துவப் போக்கையும் பெரியார் கண்டுகொள்ளவே இல்லை.

அதுமட்டுமல்லாது, கம்யூனிசம் என்பது ஏழைகளின் துன்பத்தை நீக்குவதாக மட்டும் கூறிடாது, கோடிகளை வைத்துக் கொண்டு, பாதுகாக்க முடியாத பணக்காரர்களின் கவலைக்குத் தீர்வாகவும் பெரியார் கூறுகிறார். எந்தப் பணம்படைத்தவனும் தமது பிரச்சினைக்குத் தீர்வாகக் கம்யூனிசத்தை ஏற்கமாட்டான். பணம்படைத்த சுரண்டலாளர்களின் சுரண்டும் போக்கினை எத்திர்த்துத் தொழிலாளர்கள், கம்யூனிசத்தைத் தீர்வாக வைக்கிறார்கள். வர்க்க சார்பில்லாத பகுத்தறிவுவாதப் பார்வையைப் பெரியார் பின்பற்றுகிறார். அனைத்திலும் உள்ள வர்க்க சார்பை வெளிப்படுத்தி அதனை நீக்குவதற்கான வழிகளையே கம்யூனிசம் வலியுறுத்துகிறது.

வர்க்கப் பார்வையுள்ள கம்யூனிசத்தைப் பெரியார் பேசவில்லை. அப்படி அவரால் பேசவும் முடியாது. அதனால் தான் தொழிலாளர்களின் அரசை பலாத்காரத் தூண்டுதலற்ற முறையில் அமைப்பது பற்றிப் பெரியார் பேசுகிறார். அமைதி வழியா, பலாத்காரமா என்பதைச் சூழ்நிலைதான் தீர்மானிக்கிறது. எந்தத் தனிப்பட்ட இயக்கங்களின் முடிவினால் அல்ல என்கிற பார்வை பெரியாருக்கு இல்லை. வேலைநிறுத்த போராட்டத்தைப் பற்றிய பெரியாரின் கருத்து, முதலாளித்துவ ஆதரவாளர்களின் கருத்துப் போலவே காணப்படுகிறது. அதே போல், பலாத்காரம் பற்றிய பெரியாரின் கருத்தும் சுரண்டலாளர்களுடைய ஆதரவாளர்களின் கருத்தாகவே இருக்கிறது.

பெரியார், பேசுகிற சமதர்மம், மனிதர்களிடையே காணப்படும் போட்டி பொறாமை ஆகிவற்றுக்கான, அறிவுவழிப்பட்ட தீர்வு ஆகும். சமூகத்தில் காணப்படும் வர்க்க முரணை நீக்குவதற்கான பொருளாதார வழிப்பட்ட தீர்வை மார்க்சினுடைய கம்யூனிசம் வைக்கிறது. மார்க்சியம் தொழிலாளர்களின் வர்க்கச் சார்பானது.

கம்யூனிஸ்டுகள் கிளர்ச்சி செய்தாலும் செய்யாவிட்டாலும் கம்யூனிசம், நம் நாட்டிற்குத் தானே வரும் என்கிற பெரியரின் கூற்று வர்க்கப் பார்வையற்றதாகும். பெரியார் தமது வர்க்க சார்பின்படியே சமதர்மம் பேசுகிறார். இதனைப் புரிந்து கொண்டு அவரின் பொதுவுடைமைச் சிந்தனைகளை விமர்சித்து, மார்க்சின் விஞ்ஞான வழிப்பட்ட கம்யூனிசமே நமது நாட்டு தொழிலாளர்களுக்கு விடுதலை என்பதை நிலைநிறுத்தப்பட வேண்டும்.

இந்த எதிர்வினைகளின் அடிப்படையில் எனது “பெரியாரின் சமதர்மமும் மார்க்சின் விஞ்ஞானக் கம்யூனிசமும்” என்கிற நூல் ஏழுதப்படும்.

விரைவில் முழு நூலாக வெளிவரும்.)

தந்தைப் பெரியார்:-
நாட்டு மக்கள் எல்லாம் ஒரு குடும்பம்போல, எல்லா மக்களும் பாடுபடவேண்டும்; வருகின்ற இலாபம் - விளைபொருள் முதலியவற்றை எல்லா மக்களுக்கும் பகிர்ந்தளிப்பது. இதுதான் பொதுவுடைமையாகும்.

இதன் அடிப்படைத் தத்துவம் என்ன? இப்படிப்பட்ட நிகழ்ச்சி ஏன் நடத்தப்படுகின்றது என்பனவற்றை யெல்லாம் புரிந்து கொண்டால்தான் பொதுவுடைமைத் தத்துவத்தின் சிறப்பு விளங்கும். மனிதன் அறிவைக் கொண்டு வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். ஆனால், மனிதனென்றால் கவலை உள்ளவனாகவே இருக்கின்றான். பிரதமரானாலும், முதன்மந்திரியானாலும் அவர்களுக்கும் கவலைதான், “கோடீசுவரன்” ஆனாலும் அவனுக்கும் கவலைதான் நாட்டை ஆளுபவர்களுக்குப் பல பிரச்சினைகளைச் சமாளிக்கவேண்டிய கவலை நிலை உண்டாகிறது.

கோடீஸ்வரனுக்கு எப்படித் தனது ஒரு கோடி ரூபாயைக் காப்பது என்பது கவலை; அத்தோடு நின்று விடுவதில்லை; தனக்கு ஒரு கோடி ரூபாய்தானே உள்ளது அடுத்தவனுக்கு 2 கோடி இருக்கின்றதே என்று தம்மிலும் மேம்பட்டவனைப் பற்றிக் கவலை யடைகின்றான்.

ஏழை தனக்குச் சாப்பாட்டிற்கு வழியில்லையே அவன் நல்வாழ்வு வாழ்கின்றானே என்ற வேதனையடைகின்றான். குச்சு வீட்டுக்கும் வழியில்லாத ஒருவன், வசதிபடைத்த ஒருவன் பங்களாவில் வாழ்வதைப் பார்த்து மனம் புழுங்குகிறான். இதுபோலக் கவலை, மனக் குறையென்பது எல்லாத் துறைகளிலும் இருக்கின்றது.
… … …
பொதுவுடைமை என்று கூறுவதன் அடிப்படைத் தத்துவமே, மனிதன் கவலையற்ற வாழ்வு வாழவேண்டும் என்பதுதான். சொந்த உடைமை என்பது கவலை நிறைந்த வாழ்வாகும்.

மனிதனுக்கு உணவுப் பண்டம் பற்றவில்லையானாலும், சற்றுக் குறைவாக இருப்ப தனாலேயே குறைகூறமாட்டான். ஒருவனுக்கு அதிகம்; இன்னொருவனுக்குச் சும்மா ஒன்றுமில்லை என்றிருந்தால்தானே குறைபாட்டுக்கு - எதிர்ப்பதற்கு இடமேற்படும்!

மனிதனுடைய கவலைக்கும் குறைபாட்டிற்கும் பரிகாரமாக, முடிந்த முடிவாக அறிஞர்களால் பலகாலும் சிந்திக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்டதுதான் பொதுவுடைமைதி தத்துவம்.

இதன்மூலம் சந்தோஷமான, கவலை-துக்கமற்ற, தெளிவுள்ள வாழ்க்கை மக்களுக்குக் கிட்டுகின்றது. மனிதன் சிந்தித்து அறிவை வளர்த்துக்கொண்டே போனால் அங்குதான் (பொதுவுடைமையில் தான்) கொண்டுபோய்விடும்.
... … …
நம் நாட்டிலும் கம்யூனிஸ்டுக்காரர்கள் இருக்கிறார்கள்; இவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு மட்டும் பொதுவுடைமையைச் சாதனமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்களே ஒழிய, பொதுமக்கள் கடைத்தேற ஒன்றும் செய்யவில்லை; பொதுவுடைமை என்றால் மக்களுக்கும் ஒன்றும் தெரியாது.

எனவே, நாட்டில் பொதுவுடைமைக் கொள்கையைக் கொண்ட அரசாங்கம் ஏற்பட்டு முயன்றால்தான், மக்களின் குறைபாடுகள் நீங்குமே ஒழிய, பொறுக்கித் தின்னும் இந்தக் கம்யூனிஸ்ட்டுகளின் காலித்தனம், பலாத்காரத் தூண்டுதல் மூலம் ஒன்றும் முடியாது. அரசாங்கத்தைக் கைப்பற்ற ஆட்சி இந்தத் துறையில் ஈடுபட்டால்தான் மார்க்கம் ஏற்படும். ஒருவன் சட்டைப் பையில் இருப்பதை இன்னொருவன் எடுப்பதுபோல், ஒருவன் நிலத்தில் மற்றொருவன் பிரவேசிப்பதால் இது ஆகிவிடாது.
… … …
குறைபாடு இரண்டு விதங்களில் உண்டு. போதவில்லை என்பது ஒன்று-அதாவது கால்படி அரிசி தேவையானால் அதற்கும் குறைவாகக் கிடைக்கின்றதே என்பது.

இரண்டாவது, போதுமான அளவுக்குமேல் வேண்டும் என்று ஆசைப்படுவது. உதாரணமாக ஒரு 'ரூமில்' வசிப்பவன் இரண்டு ரூம்கள் இருந்தால் நன்றாய் இருக்கும் என்று ஆசைப்படுவது.

இப்படி ஆசையினால் ஏற்பட்ட குறையும் தேவையினால் ஏற்பட்ட குறையும் பொது வுடைமையினால் தீர்ந்துவிடும்.

இருக்கின்ற உணவுப் பொருள் எல்லோர்க்கும் பகிர்ந்து கொடுக்கப்படும்போது, ஒரே விதமாக எல்லோருக்கும் உணவுப் பொருள் கிட்டுவதால், தமக்குக் குறைவு என்ற எண்ணம் ஏற்படாது. எல்லோருக்கும் ஒரு ரூம் தான் என்று எண்ணி சமாதானம் அடைந்து கொள்வான்.

இதனாலேயே, போட்டி பொறாமை ஏற்பட வழி இருக்காது, கவலை ஒழிந்து எல்லோரும் மன நிறைவோடு வாழச் செய்யும்.

(திருச்சி சிந்தனையாளர் சழகச் சார்பில், உறையூரில்,
9-1-1972-இல் ஆற்றிய சொற்பொழிவு
–உண்மை - பிப்ரவரி, மார்ச் 1972]

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக