மே விழாவும் ஜூபிலி விழாவும் ( 12-05-1935)
(இக்கட்டுரையில் மே நாள் விழா பற்றியும், ஆட்சி புரியும் அரசரின்
25 ஆண்ட கால ஆட்சியை வாழ்த்தும் விழா பற்றியும் பெரியார் எழுதியுள்ளார்.
தொழிலாளி முதலாளி என்றால் பெரியாரைப் பொறுத்தளவில் சூத்திரர்
பிராமணர் தான்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆங்கில அரசால்தான்
விடிவு ஏற்படும் என்று பெரியார் கூறுகிறார். அதற்காக அவ்வரசை 100 ஆண்டு ஆள வேண்டும்
என்று ஆசைப்படுகிறார். அத்தோடு நில்லாது, அரசரின் தங்க விழா சமதர்ம விழாவாகப் பேதமற்று
இருக்கும் படியாகச் செய்த தினத்தைக் கொண்டாடும் விழாவாக இருக்க வேண்டும் என்பதே அவரின்
அபிப்பிராயமாக இருக்கிறது.)
தந்தை பெரியார்:-
“மே மாதம் முதல் தேதியில் மே தினக் கொண்டாட்டமும்,
மே மாதம் 6ந் தேதி மன்னர் ஜூப்பிலியும் தமிழ்நாட்டில் ஏறக்குறைய ஒன்று போலவே எங்கும்
கொண்டாடப்பட்டிருக்கும் விஷயம் தினசரிப் பத்திரிகைகளில் பரக்கக் காணலாம்.
மே தின விழாவானது உலகம் பாடுபட்டு உழைக்கும் மக்களின்
ஆட்சியின் கீழ் வர வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டாடுவதாகும்.
ஜூபிலி விழா இன்று ஆட்சி புரியும் அரசரின் ஆட்சியைப்
பாராட்டியும் அவரது ஆட்சிக்கு கால் நூற்றாண்டு ஆயுள் ஏற்பட்டதை பற்றி ஆனந்தமடைந்தும்
இனியும் நீடூழி காலம் இவ்வாட்சி நீடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டும் கொண்டாடியதாகும்.
இந்தியாவின் பிரதிநிதித்துவ சபை என்று சொல்லப்படும்
இந்திய தேசீயக் காங்கிரசானது மேற்கண்ட இரண்டு தத்துவங்களுக்கும் விரோதமான மனப்பான்மையைக்
கொண்டது.
எப்படியெனில்
முறையே (சூத்திரர்) தொழிலாளி, (பிராமணர்) முதலாளி அல்லது அடிமை எஜமான் என்கின்ற இரண்டு
ஜாதிகள் பிறவியின் பேரிலேயே இருக்க வேண்டும் என்றும், அன்னிய ஆட்சி என்பதான
பிரிட்டிஷ் ஆட்சி கூடாது என்றும் சொல்லும்படியான கொள்கைகளைக் குறிக்கோளாகக் கொண்டதென்று
சொல்லிக் கொள்ளும் ஸ்தாபனமாகும்.
ஆனால் இந்திய மக்கள் இந்த இரண்டு கொள்கைகளைக் குறிக்கோளாகக்
கொண்ட காங்கிரசை சிறிதும் மதிக்கவில்லை என்பதை இந்த இரண்டு விழாவும் உள்ளங்கை நெல்லிக்கனி
போல் எடுத்துக்காட்டி விட்டது.
காங்கிரசானது வெளிப்படையாக இந்த இரண்டு விழாக்களையும்
எதிர்க்க யோக்கியதை இல்லையானாலும் மனதிற்குள் தனக்கு உள்ள அதிர்ப்தியை பல வகைகளில்
காட்டியது போலவே நடித்துக் கொண்டது.
…
… …
இன்று இந்தியாவில் பிரிட்டிஷ் அரசராலோ, அரசாங்கத்தாராலோ
ஏதாவது காரியங்கள் ஆக வேண்டி இருக்குமானால் அது பழய அரசர்களைப் போல் பிராமணர்களைக்
காப்பாற்றுவதோ சுதேச அரசர்களுக்கும் ஜமீன்தாரர்களுக்கும் பாதுகாப்புகள் அளிப்பதோ வியாபாரிகளுக்கும்
வட்டிக் கடைக்காரர்களுக்கும் கொள்ளை லாபம் உண்டாகும்படி நீதி செலுத்துவதோ அல்ல. இந்தக்
கூட்டங்கள் ஏற்கனவே உச்ச ஸ்தானத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தையும் கைக்குள் போட்டுக்
கொண்டு சுபீக்ஷமாக ஒன்று பத்தாக அக்ஷயமாக வாழ்ந்து வருகின்றன.
எனவே அரசர் கருணையும் அரசாங்க நீதியும் ஏழை மக்களுக்கும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அடிமைப்படுத்தப்பட்ட பெண்களுக்கும் ஏதாவது விமோசனம் செய்வதற்குப்
பயன்பட வேண்டியதே முக்கியமாகும். இந்தத் துறைகளில் இதுவரை இந்த ஆட்சி ஏழை மக்களுக்கு
ஒரு விதாயமும் செய்ததாகத் தெரியவில்லையானாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பெண் மக்களுக்கும்
இதுவரை இந்தியாவில் இருந்த எந்த அரசும் ஆட்சியும் செய்திராத காரியத்தை ஒரு அளவுக்காவது
செய்திருக்கிறது என்பதை நாம் தைரியமாய்ச் சொல்லுவோம்.
…
… …
….. ஆதலால்
நமது மன்னர் அவர்களும் அவரது ஆட்சியும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களால் பாராட்டக்
கூடியதே என்பதோடு இந்த ஆட்சியை நீடூழி காலம் நிலவ வேண்டும் என்றும் அவர்களால் வேண்டப்படுவதுமாகும்.
…
… …
ஏழைகளுக்கு உதவி செய்வது என்பது ஏழ்மைத் தன்மை மனித
சமூகத்தில் இல்லாமல் இருக்கும்படி செய்வதே ஒழிய இங்கொருவனுக்கு அங்கொருவனுக்கு சோறு
போடுவதால் அல்ல என்பதே நமது அபிப்பிராயம்.
ஏழ்மைத்
தன்மை என்பது மனித சமூகம் ஒட்டுக்கே அவர்களது சாந்தமான வாழ்க்கைக்கே ஒரு பெரும் தொல்லையும்
அசௌகரியமுமான காரியம் ஆகும்.
ஆதலால் மன்னர்பிரான் இந்த ஏழ்மைத் தன்மையை அடியோடு
ஒழிப்பதற்கு சென்ற 25 ஆண்டு மாத்திரம் அல்லாமல் இன்னும் 50 ஆண்டும் அல்லாமல் 100 ஆண்டு
ஆள வேண்டும் என்றும் ஆசைப்படு கின்றோம். அவரது வெள்ளி விழா, மே விழாவை ஒட்டி வந்திருப்பதாலும்,
மே விழா வெள்ளி விழாவை விட உலக முழுவதும் சுதந்திரத்தோடும் குதூகலத்தோடும் உணர்ச்சியோடும்
கொண்டாடப் பெற்றிருப்பதாலும் இதுவே உலக பாட்டாளி மக்களின் அபிலாசையைக் காட்ட ஒரு சாதனமாய்
இருப்பதாலும் அடுத்த விழா அதாவது அரசரின் தங்க
விழா சமதர்ம விழாவாக மக்கள் எச்சாதியினராயினும், எம்மதத்தினராயினும், எத்தேசத்தவராயினும்
பேதமற்று ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் எங்கும் இல்லாமல் இருக்கும்படியாகச் செய்த
தினத்தைக் கொண்டாடும் விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்பதே நமதபிப்பிராயமும் ஆசையுமாகும்.”
(குடி அரசு – தலையங்கம்- 12-05-1935)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 33-39)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக