நாஸ்திகமும்
சமதர்மமும்
(உழைப்பாளிகள் ஏழைகளாக இருப்பதற்கு, முன்ஜென்மத்தையும், சாதியையும்
மதம் காரணமாக்குகிறது. ஆனால் இது உண்மையான காரணம் அல்ல. சொத்துடைமையின் காரணமாகவே சமூகம்
வர்க்கமாகப் பிரிந்துள்ளது.
சொத்துள்ளர்களுக்குச் சாதகமாக எழுதப்பட்டதே சாதிய விளக்கமும்,
முன்ஜென்மம் பற்றிக் கற்பிதமும்.
மதத்தின் நோக்கமே சொத்துடைமையின் காரணமாக ஏற்பட்ட வர்க்கப் பிரிவை
நியாயப்படுத்துவதுதான்.
மதம் எந்தச் சமூகத்தையும் படைத்திடவில்லை, பிரிந்து கிடக்கும்
வர்க்கப் பிளவை நியாயப்படுத்துகிறது - உறுதிப்படுத்துகிறது கருத்தில் இருந்து சமூகம்
தோன்றுவதில்லை. தோன்றிய -தோன்றுகின்ற சமூகத்தில் இருந்தே கருத்துக்கள் உருவாகிறது.
ஆளும் வர்க்கத்தின் கருத்தாக இருந்தாலும் சரி, அதற்கு எதிரான கருத்தாக இருந்தாலும்
சரி. அது பொருளாதார நிலைமைகளில் இருந்தே தோன்றுகிறது. இவ்வாறு தான் மார்க்சியம் கூறுகிறது.
இதனை எந்த வகையிலும் மேல்நாட்டுச் சித்தாந்தமாகக் கருதிட முடியாது. இங்குள்ள வர்க்க
வடிவம் சாதியமாகத் தோன்றியதால் மார்க்சியம் இங்குப் பொருந்தாது என்பது மார்க்சியத்தைப்
புரிந்து கொள்ளாததின் விளைவே ஆகும். சாதிய சமூகத்திற்கு மார்க்சியமே தொழிலாளர்களுக்கு
வழிகாட்டியாக இருக்கிறது. இதனைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சின் சாதியம் பற்றிய கருத்தில்
இருந்தே தொடங்கினால் போதுமானது.
மதம் தோன்றியதற்கான பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் கொள்ளாது,
பொருளாதார ஏற்றத் தாழ்வையும், சாதிய ஏற்றத் தாழ்வையும் நியாயப்படுத்துகிற மதத்தைப்
பெரியார் முதன்மைப்படுத்துகிறார். அதனால் மதத்தை ஒழித்தால் சாதியற்ற சமூகமும், சமதர்ம
சமூகமும் தோன்றிவிடும் என்று எண்ணுகிறார். உண்மையில் பொருளாதாரக் காரணங்களே அடிப்படை
மற்றவைகள் இந்த அடிப்படைகளால் தோன்றியவை.
லெனின்:-
“தொழிலாளர்கள் மீதான இந்தப் பொருளாதார ஒடுக்குமுறை
எல்லா விதமான அரசியல் ஒடுக்குமுறையையும், சமூக இழிநிலையையும், வெகுஜனங்களது ஆன்மீக
(அறிவுசார்), அறநெறி வாழ்வின் நயமற்ற இருண்ட நிலையையும் உருவாக்கிய வண்ணமுள்ளது. தொழிலாளர்கள்
தமது பொருளாதார விடுதலைக்காகப் போராடுவதற்காக அதிக அளவிலோ குறைந்த அளவிலோ அரசியல் சுதந்திரம்
பெற்றுக் கொண்டுவிடலாம், ஆனால் மூலதனத்தின் அதிகாரம் வீழ்த்தப்படாதவரை, எந்த அளவிலான
சுதந்திரத்தாலும் அவர்களுடைய வறுமைக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் ஒடுக்கு
முறைக்கும் முடிவு கட்டிவிட முடியாது. மிகப் பெருந் திரள்களான மக்களை, ஏனையோருக்காகத்
தாம் செய்யும் ஓயாத வேலையாலும் மற்றும் இல்லாமையாலும் தனிமைப்பாட்டாலும் நசுக்கப்படும்
இம்மக்களை, எங்கும் அழுத்தி இருத்திவைக்கும் ஆன்மீக (அறிவுசார்) ஒடுக்குமுறையின் பல
வடிவங்களில் மதமும் ஒன்றாகும்”.
(சோஷலிசமும்
மதமும்)
சொத்துடைமையின் உற்பத்தி முறையினால் உருவான உற்பத்தி உறவுகளே
உள்ளடக்கம் அதற்கான வடிவமே அரசியல், மதம், அரசு, நீதி மன்றம் போன்றவை. பெரியார் வடிவத்துடனான
போராட்டத்தையே முதன்மைப்படுத்துகிறார்.
உள்ளடக்கத்தை இரண்டாவதாக வைத்தனால் உள்ளடக்கம் எத்தகைய பாதிப்பும்
இல்லாது நீடிக்கிறது. உள்ளடக்கத்தின் ஒழிப்பில் தான் வடிவ மாற்றம் இருக்கிறது. தனிச்சொத்துடைமையை
எதிர்க்காமல் அதனால் உருவான வடிவத்தை எதிர்ப்பதனால் இன்றைய தனிவுடைமை சமூகம் காப்பாற்றப்படுகிறது.)
தந்தை பெரியார்:-
“என்னை “நாஸ்திகன்” என்று சொல்லுகிறவர்கள் நாஸ்திகன்
என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகிறார்களோ அந்த அருத்தத்தில் நான் நாஸ்திகன்தான்
என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன். நாஸ்திகத்திற்குப் பயந்தவனானால் ஒரு காரியமும்
செய்ய முடியாது. அதிலும், சமதர்ம கொள்கையைப் பரப்ப வேண்டுமானால் நாஸ்திகத்தினால்தான்
முடியும். நாஸ்திகமென்பதே சமதர்மம் என்று பெயர்.
அதனால் ருஷியாவையும் நாஸ்திக ஆட்சி என்கிறார்கள். பவுத்தரையும் நாஸ்திகம் என்றதற்குக்
காரணம், அவர் சமதர்மகொள்கையைப் பரப்ப முயன்றதால்தான் நாஸ்திகம் என்பது சமதர்ம கொள்கை
மாத்திரமல்ல, சீர்திருத்தம் அதாவது ஏதாவது ஒரு பழைய கொள்கையை மாற்ற வேண்டுமானால், அந்த
மாற்றத்தையும், ஏன், எவ்விதச் சீர்திருத்தத்தையுமே நாஸ்திகம் என்றுதான் யதாபிரியர்கள்
சொல்லித்திரிவார்கள். எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ. சமத்துவத்திற்கு இடமில்லையோ
அங்கு எல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கின்றது. கிறிஸ்துவையும், மகமது நபியையும்
கூட நாஸ்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும். அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான்
காரணமாகும்.
…
… …
மக்களில் நான்கு ஜாதி கடவுளால் உற்பத்தி செய்யப்பட்டது
என்று சொல்லப்படுகையில், மேற்படி ஜாதி ஒழிய வேண்டுமென்றால், அவன் கண்டிப்பாகக் கடவுளை
மறுத்தோ அலட்சியம் செய்தோதான் ஆகவேண்டும். எல்லா மதங்களும், மதக்கொள்கைகளும் கடவுளாலோ,
அவதாரங்களாலோ, கடவுள் தன்மையாலோ ஏற்பட்டவை என்று சொல்லப்படுகையில், அம்மத வித்தியாசங்கள்
ஒழிய வேண்டும் என்றும் மதக்கொள்கைகள் மாற்றப்படவேண்டும் என்றும் சொல்லும்போது, அப்படிச்
சொல்லுபவன் அந்தந்தக் கடவுள்களை, கடவுள்களால் அனுப்பப்பட்ட தெய்வீகத் தன்மை பொருந்தினவர்களை
அலட்சியம் செய்தவனேயாகின்றான். அதனால்தான், கிறிஸ்துவர்
அல்லாதவர் "அஞ்ஞானி" என்றும், மகமதியரல்லாதவர் "காபர் என்றும், இந்து
அல்லாதவர் "மிலேச்சர் என்றும் சொல்லப்படுகின்றது. அன்றியும் கேவலம் புளுகும்,
ஆபாசமும் நிறைந்த புராணங்களை மறுப்பதே இந்துமதக் கொள்கைப்படி நாஸ்திகம் என்று சொல்லப்படும்போது,
ஜாதியையும், கர்மத்தையும் மறுப்பதை ஏன் நாஸ்திகம் என்று சொல்லமாட்டார்கள்?
…
… …
நம்மைப் பொறுத்தவரை நாம் பல மாறுதல் ஏற்பட விரும்புவதால்,
அவை கடைசியாய் நாஸ்திகமேயாகும். நாஸ்திகமும்
சாஸ்திர விரோதமும் தர்மத்திற்கு விரோதமும் செய்யாமல் யாரும் ஒரு சிறிதும் உண்மையான
சீர்திருத்தம் செய்ய முடியவே முடியாது. நமது நாட்டினர்களே ஏழைகளை வஞ்சித்துக் கொள்ளை
அடிக்கிறார்கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொள்வதால், தினமும் ஏய்த்துக்
கொண்டே வருகின்றார்கள் அப்படிப்பட்ட பாமர மக்களை விழிக்கச் செய்து நீங்கள் ஏழைகளாய் தரித்திரர்களாய் இருப்பதற்குக்
கடவுள் செயல் காரணமல்ல; உங்கள் முட்டாள் தனம்தான் காரணம், ஆதலால், நீங்கள் கடவுள் செயலை
லட்சியம் செய்யாதீர்கள் என்று சொன்னால்தான், செல்வந்தர்களின் அக்கிரமங்களைப் பாமர மக்கள்
அறியக்கூடும். அப்பொழுது கடவுள் செயலையும், அதிக மூடர்களிடம் கடவுளையும் மறுத்துத்தான்
ஆகவேண்டும்.
…
… …
காலம் போகப்போக நேரில் உழுது பயிர்செய்ய
முடியாதவனுக்குப் பூமி இருக்க வேண்டியதில்லை என்றும், அப்படியிருந்தாலும் சர்க்காருக்கு
வரி கொடுப்பதுபோல் ஒருசிறு அளவுதான் பாத்தியமுண்டேயொழிய, இப்போது இருப்பது போல் உழுகின்றவன்
தன் வயிற்றுக்கு மாத்திரம் எடுத்துக் கொண்டு, ஏன் சில சமயங்களில் அதற்கும் போதாமலும்
இருக்கப் பூமிக்குடையவனுக்குப் பெரும்பாகம் கொடுப்பது என்கின்ற வழக்கம் அடிபட்டாலும்
அடிபடலாம்.
…
… …
அரசியல், சமுக இயல், பொருளாதார இயல் ஆகியவைகளில்
உள்ள இன்றைய கொடுமையான நிலையும், முட்டாள் தனமான நிலையும், அயோக்கியத்தனமான நிலையும்
எல்லாம் கடவுள் கட்டளையாலும், மோட்ச சாதனங்களாலும், சாஸ்திர தர்மங்களாலுமே ஏற்பட்டவைகளாகும்.
ஆகையால்தான் அவ்விஷயங்களில் நான் அவ்வளவு உறுதியாய் இருக்கிறேன்.”
('குடிஅரசு' - கட்டுரை - 21.05.1949)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 217/221)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக