பம்பாயில் பயங்கர வேலை நிறுத்தம்
(பெரியார் 4-9-1927 ஆம் ஆண்டுகளில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை
எதிர்த்து வந்தார். சம்பள உயர்வால் தொழிலாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று கூறிவந்தார்.
ஆனால் 1934ல் இக்கட்டுரையில் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்தும், தொழிலாளர் தலைவர்களின்
ஒற்றுமையையும் தொழிலாளர்களுக்குப் பயன்படும்வகையில் ஆதரிக்கிறார். முதலாளிகளை ஈவிரக்கம்
இல்லாதவர் கல்நெஞ்சக்காரர் என்கிறார். இதே உறுதியோடும், பார்ப்பனிய எதிர்ப்பைபோல் முதலாளிததுவ
எதிர்ப்பையும் தொடர்ந்திருந்தால் பெரியாரைப் பற்றிய மதிப்பு மாறியிருக்கும். பெரியார்
சிங்காரவேலருடன் கை கோர்த்திருந்தால் தமிழகத்தின் இன்றைய முகம் மாறியிருக்கும்.)
தந்தை
பெரியார்:-
உலக முழுவதும் தொழிலாளர் நிலைமை படுமோசம். இந்தியாவிலோ
சொல்ல வேண்டியதில்லை. எண்ணெய்க் கொப்பரையில் வெந்து கொண்டிருக்கிறார்கள் தொழிலாளிகள்.
பொருளாதார நெருக்கடி சில காலமாக மனித வர்க்கத்தை இறுகப்பிடித்து உலுக்கி வருகிறது.
கல்நெஞ்ச முதலாளிகள் ஈவிரக்கமின்றிச் சம்பளக்
குறைப்பால் தொழிலாளிகளை உயிரோடு உடம்பை உரிக்கும் சித்திரவதை செய்து வருகிறார்கள்.
இன்றைய இந்தியத் தொழிலாளர் வாழ்வோ அழுவாரற்ற பிணமாகவும், சீந்துவாரற்ற சவமாகவுங்
கிடக்கிறது. கடந்த ஒரு வாரமாய்ச் சம்பளத்தைக் குறைத்ததினால் பம்பாய்த் தொழிலாளர் வேலை
நிறுத்தம் செய்து வருகின்றனர். பம்பாய் ஆலைகள் 57-ல் 43 ஆலைகள் மூடப்பட்டுவிட்டன.
8 ஆலைகள் மாத்திரம் திண்டாட்டத்தின் பேரில் வேலை நடத்தி வருகின்றன. 80 ஆயிரம் தொழிலாளர்கள்
வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். பம்பாயில் துப்பாக்கிப் பிரயோகமும், அடிதடிகளும்,
கல்வீச்சம் நடந்த மயமாயிருக்கிறது. உயிர்ச் சேதமும், படுகாயமும் கோரக் காட்சியளிக்கிறது.
பம்பாய் அமளி துமளியாய்க் கிடக்கிறது.
பொறுப்பு
வாய்ந்த இந்திய சர்க்கார் தொழிலாளிகளை அனாதைக் குழந்தைகளாய்ப் பாவித்துக் கைவிட்டு
விட்டதாக தெரிகிறது.
யதேச்சாதிகாரிகளாள ஹிட்லரும், முசோலினியுங்கூட தொழிலாளிகளைக் கௌரவித்து ஒத்தாசை புரியும்
நிர்பந்தத்திலிருக்கும் இந்நாள் ஜனநாயகத்துவத்தை நீட்டி நீட்டிப் பேசும் பிரிட்டிஷ்
சர்க்காரின் பிரதிநிதியான இந்திய சர்க்கார், பம்பாய்த் தொழிலாளிகளுக்கு ஏற்பட்டிருக்கும்
நெருக்கடியைக் கவனியாது தூங்கிக் கொண்டிருப்பது மானக் கேடாகும். தன் கையே ஆபத்துக்குதவும்
என்று தொழிலாளிகளுக்கு எடுத்துக்கூற ஆசைப்படுகிறோம். தொழிலாளர் தலைவர்கள் தங்களுக்குள் ஒற்றுமைப்பட்டு தொழிலாளர் சங்கங்களை பெயரளவிலன்றி
உண்மையாகவே பலப்படுத்தி சக்தியைப் பெருக்க வேண்டிக் கொள்கிறோம். பம்பாய்த் தொழிலாளருக்கு
ஆதரவு காட்டும் பொருட்டு 6500 பேர் டில்லியில் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள்.
நாகபுரியிலும் மே 1-ந் தேதி வேலை நிறுத்தம் ஆரம்பமாகுமென்று தெரியவருகிறது. தென்னாட்டுத் தொழிலாளிகளும், சமதர்மிகளும்
பம்பாய்த் தோழர்களுக்கு ஆதரவு காட்டுத் தோரணையில் மே தினத்தன்று தீர்மாளங்கள் நிறைவேற்றி
ஆவன செய்யக் கோறுகிறோம்.
(புரட்சி - துணைத் தலையங்கம் - 29.04.1934)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 7-8)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக