திங்கள், 23 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 54:-


பொது உடைமையா, பொது உரிமையா? எது முதலில்வேண்டும்?

(பொதுவுடமை என்பது சமபங்கு, பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்று பெரியார் விளக்குகிறார். தனி உரிமையை முதலில் ஒழித்துவிட்டால், தனி உடைமையை மாற்ற, அதிகப்பாடுபடாமலே நம் நாட்டில் பொதுவுடைமை ஏற்பட வசதி உண்டாகும் என்கிறார். பொதுவுரிமை உள்ள எந்த நாட்டிலும் பொதுவுடமை அவ்வளவு எளிதில் ஏற்படவில்லை என்பதே உண்மை. பொதுஉரிமையும் இல்லாது பொதுவுடைமையும் இல்லாது இருக்கும் நம் நாட்டில் இரட்டிப்புப் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது.

“பொதுவுரிமை மறுப்பு” என்பது தனிவுடைமையின் வெளிப்பாடு, அதனால் பொதுவுடைமைக்கான போராட்டத்துடன் தான் பொதுவுரிமைக்கான போராட்டம் நடத்தப்பட வேண்டும். தொடர்புள்ள இரண்டில் ஒன்றை மட்டும் கணக்கில் கொள்வது மற்றதிற்குச் சாதகமாகப் போய்விடும். அதாவது தனிவுடைமைக்குச் சாதகமாகிப் போய்விடும். அதனால் தான் கம்யூனிஸ்டுகள் வர்க்கப் போராட்டத்திற்குள் தான் வர்ணப் போராட்டத்தை நடத்த முடியும் என்கின்றனர்.

கோடீஸ்வரார்களாக இருக்கும் செட்டியார்கள் ஒரு கீழ்த்தரப் பிச்சைக்காரப் பார்ப்பானுக்கு, உடைமையே அடியோடு இல்லாவிட்டாலும், அவனுக்குப் போகப் போக்கியம் குறைபடுவதே இல்லை என்கிறார் பெரியார். கோடீஸ்வர்களை நம்பி வாழும் பார்ப்பான் எவ்வாறு அவர்களைவிடச் சிறப்பாக வாழ்ந்திட முடியும். கோவிலில் ஒரு செல்வந்தர் திடீர் என்று வந்துவிட்டால் அங்குள்ள சாதாரணப் பக்தர்களைக் கண்டுகொள்ளாமல் செல்வந்தவரிடம் ஓடி, வரவேற்று பணிவோடு, அண்டி பிழைக்கும் பார்ப்பான் எப்படிக் கோடிஸ்வரர்களைவிடச் சிறப்பாக வாழ்ந்திட முடியும்.

“அண்டிப் பிழைபக்கும்” பார்ப்பான் அனைவரையும்விடத் தான் சிறந்தவன் என்று “சுலோக”த்தில் சொல்லிக் கொள்ள்லாம், ஆனால் உண்மை அதுவாக இருக்க முடியாது. புருஷ சூக்த சுலோகத்தில் அவன் தலைமையானவன். நடைமுறையில் அவன் செல்வந்தர்களை அண்டி தான் பிழைக்க வேண்டும்.

சாதி காரணமாகத்தான் பலர் மேன் மக்களாய், பணக்காரர்களாய் இருக்கிறார்கள் என்று பெரியார் கூறுகிறார். செட்டியாராகப் பிறந்த அனைவரும் செல்வந்தர்களாக ஆகிவிடவில்லை. அப்படிச் செல்வந்தர்களாகியது பெரியார் குறிப்பிடுவது போல் “பலர்” அல்ல “மிகச் சிலர்” தான்.

பொதுவுரிமை மறுப்பு என்பது தனிவுடைமைச் சுரண்டலின் வெளிப்பாடு, அதாவது தனிவுடைமை காரணம், பொதுவுரிமை மறுப்புக் காரியம். காரணத்தில் இருந்துதான் காரியம் நடைபெறுகிறது. காரணம் இல்லையேல் காரியம் நடைபெறாது. அதனால் காரியத்தை ஒழிக்க வேண்டுமானால் அதற்கான காரணத்தை ஒழிக்க வேண்டும். உள்ளடக்கத்தை ஒழிக்காமல் வடிவத்தை ஒழிக்க முடியாது. நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை ஒழிக்காமல் நிலப்பிரபுத்துவச் சிந்தனையை ஒழிக்க முடியாது. இதை மார்க்சின் விஞ்ஞானப் பொதுவுடைமைக் போட்பாடு நமக்குச் சிறப்பாகப் புரிய வைத்துள்ளது. அதனால் ““பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்துகொண்டே இருக்கும்” என்பது பொதுவுடைமைத் தத்துவத்துக்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணரவேண்டும்.” என்கிற பெரியாரின் போதனை தலைகீழ் பாடம் என்பதை மார்க்சியர்கள் அறிவார்கள்.

உள்ளடக்கத்தை விடுத்து வடிவத்துடன் போராடி, உள்ளடக்கத்தை பெரியார் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். உள்ளடக்கம் ஒழியாமல் வடிவம் முழுமையாக ஒழியாது. உள்ளடக்கம் ஒழிந்தாலும் மரபு வழியில் வடிவம் சில காலம் செயற்படும் அதனையும் போராடி வெல்ல வேண்டும். ஆனால் பெரியார் உள்ளடக்கத்தை அப்படி விடுத்து வடித்தை மட்டும் ஒழித்துவிடலாம் என்று கனவு காண்கிறார். இவற்றை ஒழிப்பதற்கு விஞ்ஞான வழிப்பட்ட மார்க்சியமே கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்டியாகும்.

பலப்பிரயோகம் இல்லாது இதுவரை சோஷலிசம் சாத்தியப்படவே இல்லை. உண்மை இப்படி இருக்கப் பலப்பிரயோகத்தை மறுக்கிற பெரியார் கூறுகிற வழிமுறை அதற்குத் தக்கபடி தானே இருக்கும்.

கம்யூனிஸ்டுகள் விஞ்ஞான வழிப்பட்ட மார்க்சிய வழியிலும், பெரியாரிஸ்டுகள் பெரியாரின் பகுத்தறிவுவாத வழியிலும் செல்வர்.

பெரியாரிய கம்யூனிஸ்டுகள் எவ்வழியில் செல்வர்?)

தந்தை பெரியார்:-
இன்று நம் நாட்டில் காங்கிரஸ் பிரச்சாரம் அடக்கப்பட்டதும், பல காங்கிரஸ் வாலிபர்கள், பொது உடைமைப் போர்வையைப் போர்த்திக் கொண்டு காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்தப் பொது உடைமை வேடக்காரர், சர்க்காருக்குத் தாங்கள் யுத்த ஆதரவுப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லி வாக்குக் கொடுத்திருக்கிறபடியால், சர்க்காரார் மற்றப் பொது உடைமைப் பிரச்சாரர்களைப் போல் இவர்களைக் கருதாமல் இருக்கிறார்கள். ஆனால் இந்தக் காங்கிரஸ் வாலிபர்கள், பொது உடைமைக்காரர் என்று பெயர் வைத்துக்கொண்டு, மேடைகளில் "உலகச் சண்டைக்காக சர்க்காருக்கு உதவி செய்ய வேண்டும்" என்று இரண்டொரு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு காங்கிரஸையும், காந்தியாரையும் பற்றிப் புகழ்ந்துவிட்டு, கடைசியாக ஜஸ்டிஸ், சுயமரியாதைக் கட்சிகளை வைவதையே முக்கிய வேலையாய்க் கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். சில இடங்களில் பொது உடைமைக்காரர்கள், பிரச்சாரங்களில் ஜஸ்டிஸ், சுயமரியாதைக் கட்சிகளைப் பற்றிக் குறைகூறிப் பேசியதைக் கூட்டத்திலிருந்தவர்கள் கண்டித்ததோடு, பேசிய பேச்சுகளையும் 'வாபஸ்' வாங்கிக் கொள்ளும்படி செய்திருப்பதாகவும் தெரிகிறது.

அப்படி இருந்தும், பொது உடைமைப் பிரச்சாரக்காரர்கள் தட்டிப் பேச ஆளில்லாத கூட்டங்களில், தங்கள் இஷ்டப்படி பேசி ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றித் தாறுமாறாகப் பேசி இருப்பதாகவும் தெரிகிறது. தமிழ்நாட்டில் பொது உடைமைப் பிரச்சாரக்காரர்கள் பெரிதும் பார்ப்பனர்களாய் இருப்பதால், நாம் அவர்களிடம் இம்மாதிரி நடத்தையைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? காங்கிரஸ் என்றாலும், பொது உடைமை என்றாலும், இந்து மதம் என்றாலும், வேறு எந்தப் பொதுநலப் பேரை வைத்துக் கொண்டாலும், பார்ப்பனர்கள் செய்யும் பிரச்சாரம் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சியையும், சுயமரியாதைக் கட்சியையும் பற்றி விஷமப் பிரச்சாரம் செய்வதல்லாமல், அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?
… … …
பார்ப்பனர்கள் பாடுபடாமலும், எவ்விதக் குறைபாடில்லாமலும் வாழ்ந்து கொண்டும், மற்ற மக்களுக்கும் மேலானவர்களாக இருந்து கொண்டும், பொது உடைமைப் பிரச்சாரத்தில் காங்கிரசையும், பார்ப்பனியத்தையும் கண்டிக்காமல், அவற்றைக் கண்டிக்கும் ஜஸ்டிஸ் கட்சியையும், சுயமரியாதைக் கட்சியையும், ஏன் குறை கூறுகிறார்கள் என்றால், இந்த இரண்டு கட்சிகளும் வருணாசிரமக் காங்கிரசுக்கும் பார்ப்பனியத்திற்கும் விரோதமாக இருப்பதால்தானே ஒழிய வேறில்லை.

பார்ப்பனர்களுக்கு நன்றாய் தெரியும். என்னவென்றால் வருணாசிரமத்தையும், பார்ப்பனியத்தையும் பத்திரப்படுத்திவிட்டு எப்படிப்பட்ட பொது உடைமையை ஏற்படுத்திவிட்டாலும், திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பனரிடம் தானாகவே வந்து விடும் என்றும், ஜாதி இருக்கிற வரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும், பார்ப்பனருக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல், அவர்கள் வாழ்வு முன் போலவே நடைபெறுமென்றும் தைரியம் கொள்ளத் தெரியும்.

ஆதலால், பார்ப்பனர் பேசும் பொதுவுடைமை, ''கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதால்'' அவர்களுக்கு நட்டம் ஒன்றும் இல்லை என்பதோடு, உடைபட்ட தேங்காயும் அவர்களுக்கே போய்தான் சேரும். அதனால்தான் பார்ப்பனர்களுக்குப் பொதுவுடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாக மேற்படக் காரணமாகும்.

நம் தொழிலாளி மக்களும், ஏழை மக்களும், பொறுப்பற்ற வாலிபர்களும், யோசனை அற்றவர்களாதலால், இதில் சுலபத்தில் ஏமாந்து மயங்கி விடுகிறார்கள்.

பொதுவுடைமை வேறு பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும், பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.

இந்நாட்டில் பார்ப்பனியத்தால், ஜாதியால் கீழ்ப்படுத்தப்பட்ட மக்களுக்குச் சம உடைமை இருந்தாலும், சம உரிமை (அனுபவம்) இல்லை என்பது குருடனுக்கும் தெரிந்த சங்கதியாகும். அதனாலேயே அவர்கள் உடைமை கரைந்துகொண்டே போகிறதுடன், உடைமைக்கு ஏற்ற அனுபவமும் இல்லாமல் இருக்கிறார்கள்.

உதாரணமாக ராஜா சர். அண்ணாமலை செட்டியார் கோடீஸ்வரர், சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் பல லட்சாதிபதி. இருவரும் பெரும் தனிவுடைமைக்காரர்கள். இவர்களுக்கு ஒரு சாதாரண பிச்சைக்காரப் பார்ப்பானுக்கு இருக்கும் பொது உரிமை இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். ஆனால் தனி உரிமை உள்ள ஒரு கீழ்த்தர பிச்சைக்காரப் பார்ப்பானுக்கு உடைமையே அடியோடு இல்லாவிட்டாலும், அவனுடைய போக போக்கியம் குறைபடுவதே இல்லை. அன்றியும் பாடுபடாமல், கை முதல் இல்லாமல், தனக்குள்ள தனி உரிமை காரணமாகவே தன் மகனை அய்.சி.எஸ். படிக்கவைத்து ஜில்லா கலெக்டர் ஜில்லா ஜட்ஜ், ஏன் அய்கோர்ட் ஜட்ஜாகவும் சங்கராச்சாரி, ஜீயர் ஆகவும் ஆக்க முடிகிறது.

இந்த நிலையில் தனி உரிமையை முதலில் ஒழித்து விட்டோமேயானால், தனி உடைமையை மாற்ற அதிகப் பாடுபடாமலே இந்த நாட்டில் பொதுவுடைமை ஏற்பட வசதி உண்டாகும். உண்மையான பொதுவுடைமையும் நிலைத்து நிற்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், ஜாதி காரணமாகத்தான் பலர் மேன் மக்களாய், பணக்காரர்களாய் இருக்கிறார்கள்; இருக்கவும் முடிகிறது. ஜாதி காரணமாகத் தான் எல்லோரும் கீழ் மக்களாய் ஏழைகளாக இருக்கிறார்கள்; இருக்கவும் வேண்டி இருக்கிறது. இது இன்றைய பிரத்தியட்ச காட்சியாகும்.
… … …
பார்ப்பனர்களுக்கும் மற்றும் மேல் ஜாதிக் காரர்களுக்கும், இருக்கும் உயர்வை முதலில் ஒழித்தாக வேண்டும். இதிலேயே அரை பாகம் பொது உடைமை நமக்கு ஏற்பட்டுவிடும். அதாவது, ஜாதியினால் அனுபவிக்கும் ஏழ்மைத் தன்மையும் ஜாதியினால் சுரண்டப்படுகிறவர்களாக இருக்கும் கொடுமையும், நம் பெரும்பான்மை மக்களிடமிருந்து மறைந்து விடும்.

“பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்துகொண்டே இருக்கும்” என்பது பொதுவுடைமைத் தத்துவத்துக்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணரவேண்டும். இன்றுள்ள கோவில், குளம், உற்சவம், சடங்கு, பண்டிகை, சுபகாரியம், அசுப காரியம் என்பவைகள் எல்லாம் பிறவி காரணமாகவே சிலருக்கு அதிக உரிமை இருப்பதாலும், சிலர் சுரண்டுபவர்களாய் இருப்பதாலும், ஏற்பட்டு இருந்து வருபவைகளே ஒழிய, அவர்களுக்காகவே இருந்து வருபவைகளே ஒழிய, இவற்றிற்கு வேறு காரணம் சுரண்டப்படும் ஜாதியாரிடத்தில் உள்ள ஜாதி இழிவை, மடமையை ஒழிக்க முயற்சிப்பார்களா? அல்லது ஒழியத்தான் சம்மதிப்பார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.
('குடிஅரசு' - தலையங்கம் - 25.03.1944)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 133/136)

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக