ஞாயிறு, 1 மார்ச், 2020

கால வேகம் – தந்தை பெரியார்


(சமூக மாற்றத்தையும் வளர்ச்சியையும் கால மாற்றத்திலேயே பெரியார் காண்கிறார், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியே சமூகத்தை வளர்க்கவும் மாற்றவும் செய்கிறது என்கிறது மார்க்சியம்)

பெரியோர்களே! தோழர்களே!

நம் கடவுள், மதம், ஒழுக்கம் இவைகளைப்பற்றிய நூல், ஆகியவைகள் கூட மாற்றக் கூடியவையாகத்தானே இருக்கமுடியும். மற்ற துறைகளில் அக்கால மக்களுக்கு என்ன அறிவு, அனுபவம் இருந்ததோ அதுதானே இந்தத் துறைகளிலும் இருந்திருக்கும்

உதாரணமாக, அந்தக் காலத்தில் பொய் பேசுகிற மனிதன் இருப்பது அதிசயிக்கத் தக்கதாக இருந்திருக்கும்; ஆனால், இந்தக் காலத்தில் பொய் பேசாத மனிதன் இருப்பது அதிசயமாக இருக்கிறது. ஏன் என்றால், காலம் மக்களை அப்படித் தள்ளிக்கொண்டு போகிறது. காலப் போக்குக்கு மனிதன் கட்டுப்பட்டே ஆகவேண்டும், இல்லாவிட்டால் சாட்டுக்குப் போய்விடவேண்டும்; அங்குங்கூட காலம் அவனைத் தொடர்ந்து கொண்டு தான் போகும். பள்ளத்தை நோக்கித் தண்ணீர் ஓடுவதுபோல, காலத்தை நோக்கி மனிதன் போய்த்தான் தீருவான். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை.

என் பேச்சும் இந்தக் கூட்டமும், உங்கள் இருக்கையும் காலப்போக்கைப் பொறுதி தவையே தவிர என்னையோ, உங்களையோ, பொறுத்தவையல்ல. காலப்போக்கை அறியாத பட்டிக்காட்டார், பாமரத் தனம் கொண்டவர்கள் ஆகியவர்கள் தான் மாறுதல் என்னாலும் உங்களாலும் ஆனதாகக் கருதுவார்கள். ஆனால், அவர்களும் அறிவு, அனுபவம் பெற்றவுடன் காலப்போக்குத்தான் காரணம் என்பதை உணர்ந்துகொள்ளுவார்கள். ஆனால், அதற்குக் கொஞ்சநாள் பிடிக்கும். உதாரணமாக, அந்தகி கொஞ்ச நாள் பிடிக்கும் என்பதுதான் புரட்சிக்காரர்கள் என்பவர்களுக்கும் , வைதீகர்கள், மாறுதல் வேண்டாத வரிகள், பழைமை விரும்பிகள் என்பவர்களுக்கும் உள்ள பேதமாகும். அதுவேதான் வாலிபர்கள் என்பவர்களுக்கும் வயோதிகர்கள் என்பவர்களுக்கும் உள்ள பேதமாகும். அதாவது, வாலிபர்களுக்குப் புதுமை சீக்கிரம் தோன்றும் , சீக்கிரம் பிடிக்கும். காரணம், அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டுப் போன்றது. வயதானவர்கள் உள்ளம் பல சங்கதிகள் எழுதப்பெற்றது. புதிய தன்மைகள் பதியப்பட வேண்டுமானால் முன்னால் பதிந்தவைகள் அழிக்கப்படவேண்டும்; அவைகள் சுலபத்தில் அழிக்கமுடியாத மாதிரி ஆழப் பதிந்துபோயிருக்கும்.

இதைத்தான் வைதீகம் என்றும், பிடிவாதம் என்றும், காலத்திற்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்ள முடியாமை என்றும் பெரிதும் சொல்லுகிறோம்.
(இராஜபாளையத்தில், 6-12-1944-ல் சொற்பொழிவு-4 குடிஅரசு 16-12-1944)
(ஈ.வெ.ரா. சிந்தனைகள் – 1974- வே.ஆனைமுத்து, பக்கம்- 2008 -2009)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக