புதன், 11 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 34:-


இன்றைய ஆக்ஷி ஏன் ஒழிய வேண்டும்?

(இந்தத் தலையங்கத்திற்காகத்தான் பெரியார் மீது ஆங்கில அரசு வழக்குத் தொடுத்தது. பெரியார் தொடர்ந்து சமதர்ம பிரச்சாரத்தைச் செய்வதையும், சமதர்ம சங்கங்களை நிறுவியதையும் கண்ணுற்ற ஆங்கில அரசு இந்தப் போக்கை ஒடுக்க முனைத்தது.

ஆங்கில அரசாங்கம், ஏழை மக்களுக்கு மிகவும் கொடுமை செய்ததை இதில்
சுட்டிக்காட்டுகிறார். மேலும இந்த ஆட்சி முதலாளித் தன்மை கொண்டது என்றும் எழை மக்களுக்கு விஷம் போன்றது என்று எழுதியுள்ளார்.

இந்த முதலாளித்துவ எதிர்ப்புக் குரல் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு ஆபத்து என்பதை அரசு உணர்ந்து கொண்டது. அதனால் இதனைக் கண்டிப்பாக அழிக்க வேண்டும் என்று பெரியார் எழுதியிருக்கிறார்.

இந்த ஆட்சியை கண்டிப்பாக அழிக்க வேண்டும் என்று பெரியார் நேரடியாகக் கூறியதனாலும், பெரியார் சமதர்மத்திற்குச் சில ஆண்டுகளாகக் குரல் கொடுப்பதாலும் ஆங்கில அரசு பெரியார் மீது வழக்கு தொடுத்தது)

தந்தை பெரியார்:-

இந்தியாவில் இன்றைய அரசாங்கமானது ஆட்சி முறையில் எவ்வளவு தூரம் பாமர மக்களுக்கு விரோதமாகவும், பணக்காரர்களுக்கு அனுகூலமாகவும் இருக்கின்றது என்கின்ற விஷயம் ஒருபுறமிருந்தாலும், நிர்வாக முறையானது ஏழைக்குடி மக்களுக்கு மிகவும் கொடுமை விளைவிக்கக் கூடியதாகவே இருந்து வருகின்றது.
… … …
பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்து சுமார் 175 வருஷ காலமாகிய பிறகும் இன்றும் கல்வித் துறையில் 100க்கு 8 பேர்களேதான் நம்மவர்கள் படிக்கத்தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்றால் அதுவும், பெரிதும் பணக்காரர்களும், மேல் ஜாதிக்காரர்களுமே என்றால் இந்த நிர்வாகமானது ஏழைகளுக்குப் பயன்படும் முறையில் தனது வரிப் பணத்தைச் செலவு செய்து இருக்கின்றது என்று சொல்லமுடியுமா? என்று கேட்கின்றோம்.

ஆனால் அரசாங்கத்திற்கு வரி வருமானங்கள் மாத்திரம் நாளுக்கு நாள் விஷம் ஏறுவது போல் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது.

நமக்குத் தெரியவே இந்திய வருமானம், வருஷம் ஒன்றுக்கு 75 கோடி ரூபாயாக இருந்தது இன்று வருஷம் 1-க்கு 175கோடி ரூபாயாக ஆகி யிருக்கின்றது.

இராணுவச் செலவுக்கு வருஷம் 20 கோடி ரூபாயாக இருந்தது 7 கோடியாகி, இன்று 60 கோடியாக இருந்து வருகின்றது.

மற்ற அநேக துறைகளிலும் உத்தியோகச் செலவுகள் இதுபோலவே உயர்வாகி வருகின்றது.

உதாரணமாக கல்வித்துறையை எடுத்துக்கொண்டால் கல்வி இலாக்கா உத்தியோகச் செலவுகள் இதுபோலவே வளர்ந்திருக்கிறது. ஆனால் கல்விப் பெருக்கத்தில் மாத்திரம் சென்ற 10 வது வருஷத்திற்குமுன் 100 க்கு 7 பேராயிருந்த கல்விவான்கள் இன்று 100-க்கு 8 பேராகத்தான் ஆகி இருக்கிறார்கள் என்றால் இந்த நிர்வாகம் ஏழை மக்களுக்கும், பொது மக்களுக்கும் அனுகூலமானது என்று எப்படிச் சொல்லமுடியும்? ரூ. ஒன்றுக்கு பட்டணம் படியால் 6 படி 7 படி சில இடங்களில் 8 படி அரிசிவீதமும் கிடைக்கக்கூடிய இந்தக் காலத்தில் B.A.M.A படித்த மக்கள் மாதம் 15ரூ 20ரூ. சம்பளம் கூட வெளியில் கிடைக்காமல் திண்டாடுகின்ற இந்தக் காலத்தில் அரசாங்க நிர்வாக உத்தியோகங்களில் ஏராளமான ஆட்களை நியமித்துக்கொண்டு அவர்களுக்கு மாதம் 100, 200, 500, 1000, 5000 வீதம் சம்பளங்களை அள்ளிக் கொடுப்பதென்றால் இப்படிப்பட்ட அரசாங்கமும், அரசாங்க நிர்வாக உத்தி யோகங்களும் இந்திய பாமர ஏழை குடி மக்களைச் சுரண்டும் கூட்டுக் கொள்ளை ஸ்தாபனம் என்று சொல்லவேண்டியதா? அல்லவா? என்று கேட்கின்றோம்.

இன்றைய ஆட்சியானது அழிக்கப்படவேண்டியது என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதாதா என்றும் கேட்கின்றோம். ஆட்சி நிர்வாகம் என்பது சுத்த விளையாட்டுத்தனமாகவும், யோக்கியப் பொறுப்பற்ற தனமாகவும் இருந்து வருகின்றது என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.
… … …
இப்படிப்பட்ட கொடுமைகளையும் அயோக்கியத்தனங்களையும் மக்கள் என்றென்றும் தெரிந்துகொள்ளாமலும், தெரிந்தாலும் சகித்துக் கொண்டும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளுக்குக் கடவுள் செயல் பிரசாரத்தையும் ராஜ பக்தி பிரசாரத்தையும் கொண்ட புஸ்தகமும் படிப்பும் கற்பிக்கப்படுகின்றது என்று தீர்மானிக்க வேண்டியதாய் இருக்கிறது.

ஆயிரம் சமாதானம் சொன்ன போதிலும் இன்றைய ஆக்ஷி முறையும் நிர்வாக முறையும் முதலாளித் தன்மை கொண்டது என்பதிலும், இவை ஏழைமக்களுக்கு விஷம் போன்றது என்பதிலும், கண்டிப்பாக இவை அழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதிலும் நமக்குச் சிறிதும் சந்தேகமோ தயவோ தாண்யமோ தோன்றவில்லை. ஆனால் இப்படிப்பட்ட சூழ்ச்சி ஆக்ஷித் தன்மைக்கு இந்தியாவில் இன்று தூண்கள் போல் இருந்து வரு பவை முதலாளித்தன்மையும் புரோகிதத்தன்மையுமே பிரதானமாகும்.
… … …
இக்கூப்பாட்டைக் கண்டு முதலாளிகளும் முதலாளிகளின் கூலிகளும் உத்தியோக வர்க்கங்களும் உருமுவதில் நமக்கு அதிசயமொன்று மில்லை. ஆனால் ஏழைமக்கள் தொழிலாளிகள் சரீரத்தால் சதாகாலமும் பாடுபட்டு துன்பப்படும் கூலிமக்கள், முதலாளிகளுக்கும் முதலாளிகள் கூலி களுக்கும் ஆதரவளிப்பதும் அவர்களை அண்டுவதும் நமக்கு அதிசய மாய் இருக்கின்றது.

ஆகையால் வரப்போகும் தேர்தல்களில் ஏழை மக்கள் தொழிலாளிகள் ஆகியவர்கள் இவற்றை உணர்ந்து ஏமாந்து போகாமல் நடந்து கொள் வார்களாக.
(குடி அரசு - தலையங்கம் - 29.10.1933)
 (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 170------174)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக