(சமதர்மவாதி அல்லாதவர்களைகளைச் சமதர்ம இயக்கத்தில் சேர்ப்பதில் பெரியாருக்கும் சிங்காரவேலருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அதற்கான பதிலே இந்தக் கட்டுரை.
சமதர்மத் திட்டம் பிரச்சார நிலையில் தான் இப்போது இருப்பதாகப் பெரியார் கருதினார். அது மட்டுமல்லாது சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவகளில் சமதர்மத் திட்டத்தை ஆட்சேபிப்பவர்களும், மறுத்துப் பிரச்சாரம் செய்பவர்களும் இருக்கின்றனர். அதனால் சமதர்மத் திட்டத்தை ஒப்புக் கொண்ட ஆத்திகரையும், முதலாளிகளையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று பதிலளிக்கிறார். சமதர்மத்தை ஏற்றவர் முதலாளியாகச் செயற்பட முடியாது. மேலும் சங்கராச்சாரி மாநாட்டிற்குத் தலைமை வகிக்க ஒப்புக் கொண்டால் அதையும் ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்.
சமதர்ம இயக்கம் என்பது அன்றைய சமூகத்திற்கு எதிரான இயக்கமாகும். அதனால் அதற்குக் கடுமையான எதிர்ப்பு இருக்கும், அந்த எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு உறுதியான இயக்கமாகத்தான் கட்ட முடியும் என்பதைப் பெரியார் உணரவில்லை.)
தந்தை
பெரியார்:-
தோழர் சிங்காரவேலுக்கு
“தோழர் சிங்காரவேலு அவர்களின் வியாசத்தின் கருத்தைச் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், “சமதர்மவாதி அல்லாதவர்களையும் சம யோசிதமாய் பேசுபவர்களையும், மேல் பூச்சுக்கு அனுகூலமாய் முகம் துடைக்கப் பேசுகின்றவர்களையும் நம் இயக்கத்தோடு சம்மந்தம் வைத்துக் கொள்ள இடங்கொடுக்கக் கூடாது” என்பதேயாகும். மேலும், “அப்படிப்பட்டவர்கள் நம் மகாநாடுகளில் தலைமை வகிக்கவிட்டு வருகின்றபடியால் கூட்டத்தில் குழப்பமும், மாச்சரியமும், விரோதமும் ஏற்படுகின்றன" என்பதும் அவரது வியாசத்தின் கருத்தாகும்.
இந்தக் கருத்துக்கள் சற்றேரக்குறைய திருநெல்வேலி மகாநாட்டு நிகழ்ச்சிகளை சரி என்று ஆதரிப்பதாகவே நமக்குத் தோன்றுகின்றது. ஆதவால் இதற்கு நமது சமாதானத்தைக் கூறவேண்டியது நம் கடமையாகும்.
சுயமரியாதை
இயக்கத்துக்கு சில திட்டங்களை லட்சியமாகவும் சில திட்டங்களை காரியாம்சையில் நடத்தவும் ஈரோடு வேலைத்திட்டக் கூட்டத்தில் தீர்மானித்திருப்பது
யாவரும் அறிந்ததே என்றாலும் காரியாம்ச திட்டத்திற்கு சுயமரியாதை சமதர்ம திட்டம் என்பதாகப் பெயர் கொடுத்து அதை மாகாண மகாநாட்டில் ஊர்ச்சிதப்படுத்த எதிர்பார்த்து அதுவரையில் அத் திட்டங்கள் பிரசார தத்துவத்தில் இருக்கவேண்டுமென்கின்ற
கருத்தின்மீது பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது.
அன்றியும்
இப்படி இரண்டு விதமாக அதாவது வழியம் ஒரு விதமாகவும், திட்டம் ஒரு விதமாகவும் பிரித்து ஏற்பாடு செய்ததற்குக் காரணமும் அப்போதே எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதென்னவென்றால், லட்சியத்தை இப்போதே எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதென்றும், லட்சியத்தை ஒப்புக் கொள்ளாதவர்களும் கூட நம்முடன் இருந்து வேலை செய்யத்தக்க மாதிரியிலும் கூடியவரை யாரும் ஆக்ஷேபிக்க முடியாத மாதிரியிலும் ஒரு திட்டம் வகுக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின்மீதுமே ஒரு திட்டம் வகுத்து அதற்கு சமதர்ம திட்டம் என்று பெயர் கொடுத்திருப்பது அக் கூட்டத்தில் இருந்த யாவருக்கும் தெரிந்த விஷயமாகும்.
மேற்கண்ட
திட்டம் இரண்டையும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்த = இருக்கின்ற தோழர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டவர்கள் என்றோ, மறுக்காதவர்கள் என்றோ, ஆக்ஷேபித்து எதிர்ப்பிரசாரம் செய்யாதவர்கள் என்றோ
, சொல்லிவிட முடியாது.
இன்றும் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றவர்களுக்குள்ளாகவே சிலர் ஆக்ஷேபித்தும், மறுத்தும், எதிர்ப்பிரசாரம் செய்து கொண்டும் அவைகளை ஒழிக்க கட்சி சேர்க்கவும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் முயற்சி செய்தும் வருவது அநேகருக்குத் தெரிந்த விஷயமேயாகும். இந்தக்காரியங்கள் செய்ய அவர்களுக்கு இப்பொழுது உரிமை இருக்கின்றது என்று கருதித்தான் அப்படிப்பட்ட வர்களையும் இயக்கக்காரர்கள் என்று கருதி வருகிறோம்.
இது ஒருபுறமிருந்தாலும், சமதர்மத் திட்டத்தை ஒப்புக்கொண்டவர்கள் யார்? ஒப்புக்கொள்ளாதவர்கள்
யார்? என்று கண்டுபிடிக்க நம்மிடம் என்னவிதமான அளவு கருவி இருக்கிறது? நம்மிடம் என்ன விதமான மெம்பர் விஸ்ட்டு இருக்கின்றது?
அன்றியும்
ஒரு தோழர் ஆஸ்திகறாயிருந்து விட்டதாலேயே அவர் சும. இயக்க சமதர்ம கட்சியில் மெம்பராக அருகதையற்றவறாக ஆகிவிடுவாறா? ஒரு ஆஸ்திகனும் சமதர்ம திட்டத்தை ஒப்புக் கொள்ளாதவறுமான ஒருவர் நம் மகாநாட்டுக்கு வந்ததாலோ கலந்து கொண்டதாலோ, ஒரு கூட்டத்திற்கு தலைமை வகித்ததாவோ நம் இயக்கம் ஒழிந்து போகுமா? அல்லது ஆடிப்போகுமா? அப்படிப்பட்டவர்கள் வந்தால் சுயமரியாதைக் காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கலகமும், கூச்சலும், குழப்பமும் ஏற்படும்படி செய்துதான் ஆகவேண்டுமா? என்று தோழர் சிங்காரவேலு அவர்களை பணிவாய் வினவுகின்றோம்.
நாம் பல தடவைகளில் தெரிவித்து இருப்பதுபோல் சங்கராச்சாரி என்பவர் நமது மகாநாட்டிற்கு தலைமை வகிக்க ஒப்புக்கொண்டாலும் ஏற்றுக் கொள்வதில் நமக்கு ஆட்சேபனை இல்லை என்று இப்போதும் சொல்லுகின்றோம்.
ஏனெனில் அவர் நமது கூட்டத்திற்கு வருவதற்கு முன் நம் லட்சியங்களையும், கொள்கைகளையும், திட்டங்களையும், உணர்ந்து கொண்டுதான் வருவார். அப்படி இல்லாவிட்டாலும் கூட அவரது உபதேசத்தாலோ பிரசாரத்தாலோ நமது இயக்க கொள்கைகள் மறைந்துவிடும் அல்லது மறைக்கப்பட்டுவிடும் - அல்லது நமது கொள்கைக்காரர்கள் சங்கராச்சாரி போன்ற - அப்படிப்பட்டவர்கள் பிரசங்கங்களைக் கேட்டு மனம் திரும்பிவிடுவார்கள் என்று நாம் பயப்படவேண்டியதில்லை.
… … …
மற்றும்
பல மகாநாடுகளில் பழுத்த ஆஸ்திகர்களையும் போட்டு இருக்கின்றோம். அனேக கூட்டங்களில் ஆஸ்திகர்கள், முதலாளிகள் ஆகியவர்கள் தலைமையில் காரியங்கள் நடத்தி இருக்கின்றோம். இதுவரையில் அனுபவத்தில் நமது பக்கத்தை முழுவதும் ஒப்புக் கொள்ளாதவர்கள் தலைமையில் எத்தனையோ மகாநாடுகளும், கூட்டங்களும் நடந்தும் அதனால் நமது இயக்க லட்சியங்களோ, கொள்கைகளோ திட்டங்களோ மாறிவிட்டதாகவோ, பலங்குறைந்து விட்டதாகவோ, சிலராவது மனந்திரும்பிவிட்டதாகவோ சொல்வதற்கு இல்லாமல் இருந்து வந்திருக்கிறது என்றுதான் கருதுகிறோம்.
நாம் இன்று பிரசார நிலையில் இருக்கின்றோம் என்பதையும், நமது காரியத்திட்டங்களை எல்லோரிடமும் பரப்பவேண்டும் என்கின்ற வேலையில் இருக்கின்றோம் என்பதையும் வேறு ஒரு கருத்துள்ள தோழரின் பிரசாரத்தால் நாம் ஏமாந்துவிடமாட்டோம் என்பதையும் சந்தேகமற உணர்ந்தோமேயானால் அதற்காக நமக்குள் பயமோ குழப்பமோ உண்டாக சிறிதும் இடமில்லை.
… … …
நமக்கு அப்படிப்பட்ட அவசியம் என்ன என்பது விளங்கவில்லை. தோழர் சிங்காரவேலு அவர்கள் “நமது வணியத்துக்கு கொள்கைகளுக்கு, திட்டத்துக்கு விரோதமானவர்களைச் சேர்க்கக்கூடாது"
என்று மாத்திரம் சொல்லியிருந்தாலும் அதற்குச் சாதாரண சமாதானமே போதுமானதாயிருக்கலாம். அப்படிக்கில்லாமல் அப்படிப்பட்டவர்களை நமது இயக்கக் கொள்கைகளை ஒப்புக் கொள்ளாதவர்களைச் சேர்த்தால் “குழப்பமும், விரோதமும், மாச்சரியமும் நேரிடுகின்றன” என்று சொல்லியிருப்பதானது சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாத விஷயம் என்று வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்த வேண்டியதாய் இருக்கிறோம். இதுவரையில் நடந்திருக்கும் மகாநாடுகளுக்கும், பிரசாரங்களுக்கும் பெரும்பாகமான உதவிகளும் நமது கொள்கைகளை ஒப்புக் கொள்ளாதவர்களிடமிருந்து ஏற்பட்டிருக்கின்ற தென்பதை யாரும் மறுக்கமுடியாது.
அதோடு மாத்திரமல்லாமல் அப்படிப்பட்டவர்களைச்
சேர்த்ததாலும், தலைமைவகிக்க விட்டதாலும் அப்படிப்பட்டவர்கள் பெரிதும் மனமாற்ற மடைந்து நமது கொள்கைகள், திட்டங்கள் எல்லாவற்றையும் அடியுடன் தழுவாவிட்டாலும் பெரும்பாகங்களின் மனம் திரும்பியும், சிலவற்றைத் தழுவியும் இருக்கிறார்களே ஒழிய சுயமரியாதைக்காரர்கள் யாரும் மனம் திரும்பி விடவில்லை.
நிற்க நமது சமதர்மத் திட்டத்தின்படி அடுத்துவரும் தேர்தலில் சுயமரியாதைக்காரர்கள்
நிற்க வேண்டுமானால் நாஸ்திகர்களும் முதலாளிகள் அல்லாதவர்களுமாகவே கிடைத்துவிடுவார்களா?
என்று யோசிக்கும்படி வினயமாய் வேண்டுகின்றோம்.
முதலாளிகளாய் இருந்தாலும் சரி, ஆஸ்திகர்களாய் இருந்தாலும் சரி அதைப்பற்றி விசேஷமாய்க் கவனிக்காமல் சமதர்மத்திட்டத்தை ஒப்புக் கொண்டு கையெழுத்துப் போட்டு சட்டசபைக்கு நின்று வெற்றி பெற்ற பிறகு அத்திட்டத்தை நிறைவேற்றத் தகுந்த சட்டம் செய்ய வேலை செய்வாரா இல்லையா? என்பதைத்தான் நாம் முக்கியமாய்க் கவனிக்க வேண்டும் என்ப தாகத்தான் நாம் கருதியிருக்கிறோம்.
… … …
அரசாங்க சட்டத்தை மதித்து அச்சட்டத்திற்குட்பட்ட கிளர்ச்சி செய்து காரியத்தை சாதிக்கக் கருதியிருக்கும் நாம், ஆஸ்திகர்களையும், முதலாளிகளையும் உதவிக்கு அதுவும் நமது கொள்கைக்கு திட்டத்திற்கு பாதகமில்லாமல் அவர்களாக சம்மதித்து வருபவர்களை ஏற்றுக்கொள்வதால் நமது காரியம் கெட்டுப் போகுமென்றோ, அதற்காக கூச்சலும் குழப்பமும் ஏற்பட வேண்டியது கிரமம் என்றோ கருதி பயப்படவேண்டுமா? என்றும் அறிய விரும்புகிறோம். ”
(குடி அரசு - தலையங்கம் -
22.10.1933 )
(தந்தை பெரியாரின் பொதுவுமைமைச் சிந்தனைகள் I I – பக் 159------163)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக