திங்கள், 23 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 52:-


சமதர்மம் (29.11.1936)

(இந்தியாவில் உழைப்பாளி, சுகபோகி என்கிற இரண்டு வகுப்புகள் இருக்கின்றன என்று பெரியார் கூறுகிறார். சுகபோகி என்று பெரியார் இங்கே குறிப்பிடுவது பணக்காரர்களை அல்ல. பார்ப்பனர்களை மட்டுமே.

சமதர்மத்திற்காக உழைக்க வேண்டுமானால் பார்ப்பான் என்கிற சுகபோகியை முதலில் ஒழிக்க வேண்டும் என்கிறார். இத்தோடு பெரியார் நிறுத்தவில்லை, பணக்காரனை மாத்திரம் குறைகூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சமதர்மம் என்கிறார். பணக்காரனை ஒழிக்காத, பார்ப்பனரை மட்டும் முதலில் ஒழிக்கும் பெரியாரின் சமதர்மத்தை நாம் என்ன பெயரிட்டு அழைப்பது!!!!

நாட்டில் பணக்காரர்கள் ஏழைகள் இருக்கின்றனர், பணக்காரர்களுக்கு உதவிடும் வகையில் மதக் கண்ணோட்டதை நிலைநிறுத்துகிற பார்ப்பனர்கள் இருக்கின்றனர். பார்ப்பனர்களுடன் மற்ற சமய பிரச்சாரகர்களும் இருக்கின்றனர். இத்தகையவர்களைப் பார்ப்பனர் அல்லாத ஆதிக்கச் சாதிகள் என்று கூறலாம். இந்தச் சிக்கல்கள் முழுமையும் நீக்க வேண்டுமானால் பணக்காரர் ஏழை என்ற பாகுபாடு இல்லாத பொருளாதார நிலை (தனிசொத்து ஒழிக்கும் நிலை) வேண்டும் என்பதே மார்க்சியம்.

ஆனால் பெரியரின் பகுத்தறிவுவாதம் என்ன சொல்கிறது என்றால், முதலில் பணக்காரரை விடுத்து பணக்காரர்களுக்கு உதவிடும் பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்கிறது.

எதோ திடீர் நிகழ்வின் மூலம் இந்தியாவில் பொருளாதாரச் சமதர்மம் ஏற்பட்டாலும், பிறவி பேதம் நீக்கப்படாதவரை எப்படிப்பட்ட பொருளாதாரச் சமதர்மமும் கடுகளவு மாற்றத்தை ஏற்படுத்தாது. சமதர்மம் ஏற்பாட்டாலும் மக்களிடையே உள்ள மூடநம்பிக்கையினால் பங்கிடப்பட்ட பணம் பார்ப்பானிடம் சென்று, முடிவில் பழைய நிலையே ஏற்பட்டுவிடும் என்கிறார் பெரியார். இதற்கு உதாரணமாக நாட்டுக்கோட்டையார்கள் தங்களிடம் உள்ள செல்வத்தில் பெரிதும் கோவில் கட்டுவதற்குப் போன்றவற்றில் செலவு செய்திடுவதைக் குறிப்பிடுகிறார்.

உண்மையில் பணம் படைத்தவர்கள் கோவில் போன்ற ஆன்மீகக் காரியங்களுக்குச் செலவு செய்வது இரண்டு விஷயத்திற்குத்தான் ஒன்று தமது பாவத்தை நீக்கி புன்னியம் தேடுவதற்கு, மற்றது சுரண்டப்பட்ட உழைக்கும் மக்களின் எழுச்சிகளை ஆன்மீகத்தின் மூலம் ஒடுக்குவதற்கு. மதத்தின் வர்க்கத் தன்மையைப் பெரியார் உணராததால் பிறவி ஏற்றத் தாழ்வுகளே பணக்காரன் - ஏழை என்ற பாகுபாட்டை உருவாக்குவதாகக் கருதுகிறார். தனிச்சொத்துடைமையின் சுரண்டல் தன்மையினைக் காப்பதற்கே மதம், நீதிமன்றம், சிறைசாலை, அரசு போன்றவை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவைகள் இருப்பதினால் பணக்காரன் ஏழை என்கிற பேதம் உருவாகவில்லை. இந்த வர்க்கப் பார்வை பகுத்தறிவுவாதப் பார்வைக்கு எட்டுவதில்லை.

இந்தப் பார்வையின் அடிப்படையில் பெரியார் கம்யூனிஸ்டுகளைப் பார்த்துக் கூறுகிறார், உண்மையான சமதர்மக்காரர்கள் இன்று பணக்காரனுடன் போராடிக் கொண்டிருப்பதை விடுத்து சாதி ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பார்ப்பானை ஒழிக்க வேண்டியது முதற்காரியம். ஆனால் மார்க்சியம் அடித்தள மாற்றத்தால் தான் மதம் போன்ற மேற்கட்டமைப்பு ஒழிக்கப்படும் என்கிறது.

இதனை உணர்ந்து கொண்டு கம்யூனிஸ்டுகள் செயற்படப் போகிறார்களா? அல்லது பெரியார் கூறுகிற படி மேல்நாட்டைப் பற்றிய படித்துவிட்டுப் புத்தகப் பூச்சியாய் இல்லாது பொருளாதாரச் சமதர்ம போராட்டத்தைக் கைவிட்டு முதலில் மேற்கட்டுமானத்தை ஒழிக்கக் போகிறார்களா?

பெரியாரியவாதிகளைப் பார்த்து இந்தக் கேள்வி எழுப்படவில்லை, பெரியாரிய கம்யூனிஸ்டுகளைப் பார்த்து எழுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையின் இறுதியில் பெரியார் நேரடியாகவே கூறியுள்ளார், “ஆதலால் இன்று சமதர்ம வாலிபர்கள் தயவு செய்து கொஞ்ச நாளைக்காவது பணக்காரனை வைவதை மறந்துவிட்டு ஜாதியை ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டுச் சமுதாயச் சமதர்மத்தை உண்டாக்கவும் சமுதாயப் புரட்சிகளை உண்டாக்கவும் பாடுபடுவார்களாக. எதிர்பாராத சம்பவங்களால் நிலைமை அனுகூலமாய் இருக்கும் சமயம் பொருளாதாரத்தைப் பற்றியும் யோசிப்போமாக.”

பெரியாரிய கம்யூனிஸ்டுகள் பெரியார் கூறியபடி எதிர்பாராத நிகழ்வுக்காகக் காத்துக்கொண்டே பார்ப்பானை ஒழிக்கப் போகிறார்களா? மார்க்ஸ் கூறியபடி வர்க்கப் போராட்டத்தின் மூலம், தனிச்சொத்துடைமையின் ஒழிப்பின் மூலம் மேற்கட்டுமானமான மத்தை ஒழிக்கவும் அதனோடே பார்ப்பனியத்தை ஒழிக்கப் போகிறார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

வர்க்கப் போராட்டத்தை ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்டுகள் வர்க்கப் போராட்டத்தின் ஊடேயே தனிச்சொத்துடைமைக்கு உதவிடும் மேற்கட்டமைப்புகளான மதம், சாதி, பார்ப்பனியம் போன்ற வற்றை ஒழிக்கப் போராடுவார்கள். கம்யூனிஸ்டுகள் பகுத்தறிவுவாதிகள் கிடையாது, அவர்கள் பொருள்முதல்வாதிகள் சமூக மாற்றத்தை வரலாற்றியல் பொருள்முதல்வாதப் பார்வையிலேயே அணுகுவர். பகுத்தறிவுவாதப் பார்வையில் உள்ள குறைபாடுகளை அவர்கள் அறிந்தே வர்ணப் போராட்டத்தை உள்ளடக்கிய வர்க்கப் போராட்டத்தை நடத்துவர். மார்க்சை ஏற்ற கம்யூனிஸ்டுகளுக்குப் பெரியாரின் ஆலோசணையைப் புறக்கணிப்பர், மார்க்சின் விஞ்ஞானக் கம்யூனிசத்தின் படியே செயற்படுவர்)

தந்தை பெரியார்:-
“இந்தியாவில் உழைப்பாளி சுகபோகி என்கின்ற இரண்டு வகுப்புகள் இருக்கின்றன. அவையே பெரிதும் ஏழை பணக்காரன் என்பதாகப் பரிணமிக்கச் செய்கின்றன.

உண்மையான சமதர்மத்துக்கு ஒருவன் உழைப்பதானால் அவன் முதலில் உழைக்கும் வகுப்பு ஒன்று, (உழைப்பின் பயனை அனுபவித்துக் கொண்டு) சுக போகியாய் இருக்கும் வகுப்பு ஒன்று என்று இருப்பதை ஒழிக்க வேண்டியதேயாகும். அடியோடு கிள்ளி எறிய வேண்டியதேயாகும். இதைச் செய்யும் வரையில் எவ்வித பொருளாதார சமதர்மத் திட்டமும் அரை வினாடி அளவும் நிலைக்காது என்பதை சமதர்மம் பேசுவோர் - நினைப்போர்- ஆசைப்படுவோர் மனதிலிருந்த வேண்டும்.

பணக்காரனை மாத்திரம் குறைகூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சமதர்மமேயாகும்.

ஏன் அப்படிச் சொல்லுகிறோம் என்றால் இந்திய சமூக அமைப்பானது பிறவியின் காரணமாகவே ஏழையையும் பணக்காரனையும் அல்லது உழைப்பாளியையும் சுகபோகியையும் உண்டாக்கி இருக்கிறது.

உதாரணமாக இன்றைய சுகபோகிகள் எல்லாம் மேல் ஜாதிக்காரர்களாகவும் பாட்டாளிகள் அல்லது உழைப்பாளிகள் எல்லாம் கீழ் ஜாதிக்காரர்களாகவும் இருப்பதைக் காணலாம்.

அதுபோலவே பணக்காரர்களும் பெரிதும் மேல் ஜாதிக்காரர்களாகவும், ஏழைகள் பெரிதும் கீழ் ஜாதிக்காரர்களாகவும் ஜன சங்கைப் பொதுவில் இருப்பதைக் காணலாம். இந்தப்படியாக இருப்பதற்கு முக்கிய காரணமாய் இருக்கும் பிறவி ஜாதிப் பாகுப்பாட்டை உடைத்து நொறுக்காமல் எப்படி சமதர்மத்தை - பொருளாதார சமதர்மத்தைத்தான் ஆகமட்டும் ஏற்படுத்தவோ நிலைக்கச் செய்யவோ முடியும் என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்.

இன்றைய தினம் ஏதோ ஒரு அரசன் மூலமோ அல்லது ஒரு சர்வாதிகாரியின் மூலமோ இந்தியாவில் பொருளாதார சமதர்மப் பிரகடனம் ஏற்பட்டு விட்டதாகவே வைத்துக் கொள்ளுவோம். அந்தப்படியே கணக்குப் பார்த்து இந்திய மக்கள் எல்லோருக்கும் இந்தியப் பொருள்களை பங்கிட்டுக் கொடுத்து விட்டதாகவே வைத்துக் கொள்ளுவோம்.

பிறகு நடப்பதென்ன? என்பதை யோசித்தால் என்ன விளங்கும்? மறுபடியும் பழய நிலையே ஏற்படுவதற்கு ஆன காரியங்கள் நிகழ்ந்து கொண்டே போய் ஒரு சில வருடங்களுக்குள் பொருளாதார உயர்வு தாழ்வுகள் தானாகவே பழயபடி ஏற்பட்டு விடும் என்பதில் சிறிதும் ஆவேபணை இருக்காது.

ஏனெனில் பிரகடனத்தால் பொருளாதார சமதர்மம் தான் செய்யப்படுமே ஒழிய அதுவும் தற்கால சாந்தியாய் அல்லாமல் சமூக சமுதாய சமதர்மம் ஏற்பட இடமில்லை. அது பிறவியின் பேராலேயே தங்கிவிடும். அது தனது காரியத்தை எப்படிப்பட்ட பொருளாதார சமதர்மத்திலும் செய்து கொண்டுதான் இருக்கும்.

அதுவும் மதத்துக்கும் ஜாதிக்கும் பெயர்போன இந்திய மக்களுக்குள் கல்வி அறிவற்று மூடநம்பிக்கையில் ஆழ்த்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய பாமர மக்களுக்குள் பிறவி பேதம் நீக்கப்படாதவரை எப்படிப்பட்ட பொருளாதார சமதர்மமும் கடுகளவு மாற்றத்தையும் உண்டாக்கிவிடாது.

உதாரணமாக நாட்டுக் கோட்டையார்கள் 10 லக்ஷக்கணக்கான பணம் சேகரித்தும் அவர்களது சேகரம் பெரிதும் கோவில் கட்டவும் சடங்கு செய்யவும் “மேல்" ஜாதியாகக் காட்டிக் கொள்வதிலுமே பெரும் பாகம் பாழாகி கூடிய சீக்கிரம் சாதாரண நிலைக்கு வரத்தக்க வண்ணம் சரிந்து கொண்டிருக்கிறதைப் பார்க்கிறோம்.

மற்றும் பார்ப்பனரல்லாதார் சமூகத்தில் பலர் கீழ் ஜாதிக்காரர்கள் என்பவர்கள் எவ்வளவு செல்வம் தேடியபோதிலும் ஜாதிமத சம்பிரதாயம் காரணமாக அடிக்கடி சருக்கி விழுந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் சமூகத்தில் தாழ்ந்த நிலையில் தான் இருக்கிறார்கள். செல்வவான்களாய் கோடீஸ்வரர்களாய் இருந்தும் கீழ்ஜாதிக்காரர்களாய்தான் இருந்து வருகிறார்கள்.

சமதர்ம வாசனையே சிறிது கூட இல்லாதவர்களும் சமதர்மத்துக்கு பிறவி எதிரிகளாய் இருப்பவர்களுமான பார்ப்பனர்கள் எவ்வளவு ஏழைகளாகவும், எவ்வளவு பாப்பர்களாகவும், எவ்வளவு சோம்பேரிகளாகவும், உழைக்காதவர்களாகவும் இருந்தாலும் மக்களின் சராசரி வாழ்க்கையை விட மேலாகவும் மனித சமூகத்தில் மேல் நிலையை உடையவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.
... … …
வெறும் பொருளாதார சமதர்மம் பார்ப்பனனை ஒன்றும் செய்து விடாது; மேலும் பார்ப்பானுக்கு பொருளாதார சமதர்மம் அனுகூல மானதேயாகும். எப்படியெளில் இப்போது அவனால் பிச்சை வாங்கப்படும் நபர்கள் ஒரு பங்காய் இருந்தால் பொருளாதார சமதர்மத்தில் பார்ப்பானுக்கு பிச்சை கொடுக்கும் நபர்கள் 10 பங்காக ஆகிவிடுவார்கள். அப்போது அவனுக்கு (பார்ப்பானுக்கு) சமதர்மத்தில் பிரித்துக் கொடுக்கும் சொத்துக்கள் தவிர மற்றும் ஜாதி மத சடங்குகள் காரணமாக அதிகப் பிச்சையும் சேர்ந்து ஒவ்வொரு பார்ப்பனனும் ஒவ்வொருங்கராச்சாரி, மடாதிபதி ஆக சுலபத்தில் மார்க்கம் ஏற்பட்டு விடும். இந்த நிலை மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலை அதாவது இன்றைய நிலையை உண்டாக்கி விடும்.
… … …
இந்தியாவில் ஜாதியும் மதமும் சிறப்பாக ஜாதி ஒரு கடுகளவு மீத்தப்பட்டாலும் எப்படிப்பட்ட சமதர்மமும் நிமிட நேரத்தில் கவிழ்ந்து போகும் என்பதை சமதர்மிகள் என்பவர்கள் கருத்திலிருந்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

இரண்டையும் ஏக்காலத்தில் ஏன் செய்யக் கூடாது? என்பது சிலருக்கு விளாவாய் இருக்கலாம். இரண்டையும் ஏககாலத்தில் செய்வது என்றால் நாடும் தகுதி இல்லை. அரசியலும் தகுதி இல்லை என்பதோடு அவை இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டால் எதிர்ப்புக்கு பலம் அதிகமாகிவிடும் என்பதோடு செய்பவர்களுக்கும் சக்தி குறைந்துவிடும் என்று கூறுவோம். நமது அரசியல் ஜாதி மதத்தையே பெரிதும் ஆதாரமாய்க் கொண்டிருக்கிறது. பொருள் இரண்டாவதேயாகும்.

மற்றும் சமுதாய சமதர்மத்துக்கு அதாவது ஜாதிகளை ஒழிப்பதற்கு என்றால் பணக்காரன் சேருவான். ஏனெனில் எவ்வளவு பணக்காரனாய் இருந்தாலும் 100க்கு 99 பேர் "கீழ் ஜாதிக்காரர்”களாகவே இன்று இருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் சேருவார்கள். பணக்காரளை ஒழிக்க பார்ப்பான் சேர மாட்டான். சேருவதாய் இருந்தாலும் ஜாதி இருப்பதன் பலனாக மறுபடியும் பணக்காரனை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று கருதியே சூழ்ச்சித் திறமாய்ச் சேருவான்.

ஆதலால் உண்மையான நாணையமான சமதர்மக்காரர்கள் இன்று பணக்காரனுடன் போராடிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு ஜாதியை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பார்ப்பானை ஒழிக்கும் காரியத்தில் ஈடுபட்டு பார்ப்பனியம் ஒழிக்கப்பட முயற்சிக்க வேண்டியது முதற் கடமையாகும் என்பது நமது அபிப்பிராயம்.
… … …
இந்தியாவுக்கு இந்திய மக்களுக்கு நன்மை வேண்டுமென்று கருதுகிறவன் இந்தியன் என்கின்ற நிலையில் இந்திய நிலை என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி நடக்கவேண்டுமே ஒழிய மேல்நாட்டைப் பற்றி படித்து விட்டு புஸ்தகப் பூச்சியாய் இருப்பது விண் பிரயாசையேயாகும். மேல்நாட்டு சமுதாய நிலைபோல் நம்நாட்டு சமுதாய நிலை ஆகும்போது மேல்நாட்டு முறைகளை கையாளுவது பொருத்தமுடையதாகும். அப்படிக்கில்லாமல் "குருடன் ராஜ விழி விழிக்கப் பார்ப்பது" என்பது போல நாம் இந்திய பறையன், சக்கிலி, பிராமணன் சூத்திரன் என்கின்றவர்கள் உள்ள ஊரில் பொருளாதார சமதர்மம், மார்க்கிசம், லெனினிசம் என்று பேசுவது வெறும் வேஷமும் நேரக்கேடுமேயாகும் என்று கூறுவோம்.

ஆதலால் இன்று சமதர்ம வாலிபர்கள் தயவு செய்து கொஞ்ச நாளைக்காவது பணக்காரனை வைவதை மறந்துவிட்டு ஜாதியை ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டு சமுதாய சமதர்மத்தை உண்டாக்கவும் சமுதாயப் புரட்சிகளை உண்டாக்கவும் பாடுபடுவார்களாக. எதிர்பாராத சம்பவங்களால் நிலைமை அனுகூலமாய் இருக்கும் சமயம் பொருளாதாரத்தைப் பற்றியும் யோசிப்போமாக.
(குடி அரசு - தலையங்கம் - 29.11.1936)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 115/120)


                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக