திங்கள், 23 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 50:-


சமதர்மமும் முதலியாரும்

““காங்கிரசும் ஜவஹர்லாலும் பொது உடைமையும்” என்பதைத் தொடர்ந்து “சமதர்மமும் முதலியாரும்” என்ற கட்டுரையை பெரியார் எழுதியுள்ளார். சமதர்மம் வேண்டாம் என்று கூறுகிறவர்கள் இருக்கிற ஜஸ்டிஸ் கட்சியில் சமதர்மிகள் எப்படி இடம் பெறமுடியும் என்கிற திரு.வி.க எழுப்பி கேள்வி பதிலாக இதனை பெரியார் எழுதியுள்ளார்.

பொருளாதார சமதர்மம், அரசியல் சமதர்மம், சமூக சமதர்மம், தேசிய சமதர்மம் என்று பல சமதர்மங்கள் இருக்கிறது என்கிறார். இவைகளை இடம், பொருள், ஏவல் ஆகியவைகளைப் பொருத்தே சமதர்மத்தை கையாள வேண்டும் என்கிறார்.

இதனைத் தொடர்ந்து பெரியார் கூறுகிறார், தாம் (ராமசாமியார்) சமதர்மக்காரர்தான். ஆனால் எமது சமதர்மம் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரைப் பார்த்து ஏற்பட்டதல்ல அல்லது அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டவை அல்ல என்பதை நேரிடையாக கூறிகிறார் பெரியார். அதனால் இரண்டையும் ஒப்பாய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.

இந்தத் தொடர் புலவர் பா.வீரமணி அவர்களின் தொகுப்பில் உள்ளதைக் கொண்டு தொகுத்துரைக்கப்படுகிறது. அந்த தொகுதியில் குடிஅரசு 31-03-1035 ஆண்டு தலையங்கம் (எனது அறிக்கையின் விளக்கம்) தவிர்க்கப்பட்டுள்ளது. இதனைப் படித்தறியாமல் பெரியாரின் சமதர்மத்தைப் பற்றி கருத்தின் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியாது.

ரஷ்யாவுக்கு சென்றுவருவதற்கு முன்பே பொதுவுடைமைத் தத்துவத்தை சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசி வந்ததாகப் பெரியார் கூறியுள்ளார். ஆனால் பெரியாரிடம் மார்க்ஸ் கூறுகிற விஞ்ஞானத்தன்மையினதான  பொதுவுடைமையின் மீது அவருக்கு ஏற்பு இல்லை என்பதே உண்மையாகும்.

விஞ்ஞான தன்மையினதான மார்க்சியத்தின் மீது அவருக்கு புரிதல் இருந்திருந்தால் பார்ப்பனியம் என்கிற வடித்தோடு, தமது போராட்டத்தை முதன்மைப் படுத்தியிருக்கமாட்டார். உள்ளடகத்தைவிடுத்த வடிவத்துடனானப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கமாட்டார். அதே போல மதத்தை ஒழித்தப் பிறகே அடுத்த வேலை என்கிற அவரது போக்கு மதம் பற்றிய மார்க்சிய அணுகுமுறைக்கு எதிரானதாகும். மதத்தினுடைய இருப்பிற்கான காரணங்கள் அழியாமல், மதத்தன் அழிவு என்ற காரியம் முழுமை அடையாது என்பதை பகுத்தறிவுவாதத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது. பகுத்தறிவுவாதம் மதத்தை ஒரு கருத்தியலாக மட்டுமே பார்ப்பதனால், கருத்துப் போதராட்டத்தை மட்டுமே தொடுக்கிறது. அதற்காதன பொருளாதாரப் போராட்டத்தை மறுதலித்துவிட்டது.

பொருளாதாரப் போராட்டத்தின் முதன்மைத் தன்மையை புரிந்திடாத பகுத்தறிவுவாதக் கண்ணோட்டம் கண்டிப்பாக நமதுநாட்டு பொதுவுடைமைக் கண்ணோட்டமாக இருக்க முடியாது. அது பகுத்தறிவுக் கண்ணோட்டம் தான் மார்க்சியக் கண்ணோட்டமாகாது. மார்க்ஸ் கூறியவையே அனைத்து நாட்டுக்கான பொதுவுடைமைக் கோட்பாடாகும்.”

தந்தை பெரியார்:-
“தோழர் கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் 13-11-36ந் தேதி “நவசக்தி "யில் நாயக்கர் என்ற தலைப்பில் ஈ.வெ. ராமசாமியை சில கேள்விகள் கேட்டு சில புத்திமதி கூறியிருக்கிறார். அதற்காக முதலியாருக்கு நன்றி செலுத்தி விடையளிப்போம்.
… … …
சமதர்மம் வேண்டாம் என்கின்ற ரெட்டியாரும், செட்டியாரும். சாயபும் ஜஸ்டிஸ் கட்சியில் இருப்பதால் உண்மை சமதர்மிகள் என்பவர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியில் இடமில்லாமல் போகவேண்டியதுதான் என்பது முதலியார் அவர்களின் முடிந்த முடிவானால் காங்கிரசில் தோழர்கள் காந்தியார், படேல், ராஜேந்திரர், சத்தியமூர்த்தியார், ஆச்சாரியார், ஜார்ஜ் ஜோசப், ஜமால் மகம்மது, தாவுத்ஷா முதலியவர்கள் சமதர்மத்தைப்பற்றிப் பேசுவதும் தோழர் நேரு சமதர்மத்தைப் பற்றிப் பேசுவதும், தோழர்கள் மாசானி, ரங்கா, பிரகாஸ் முதலியவர்கள் சமதர்மத்தைப்பற்றிப் பேசுவதும் ஆன கருத்துக்களின்படி இவர்கள் எல்லோரும் காங்கிரசில் இருக்க இடமுண்டா என்று அறிய ஆசைப்படுகிறோம். அதையும் முதல் அவசர சந்தர்ப்பத்தில் முதலியார் அவர்கள் விளக்குவார் என்று நம்புகிறோம்.
… … …
ராமசாமியார் சமதர்மத்தில் கருத்துக் கொண்டவர். ஆர்வங் கொண்டவர். அதுவே இன்று காணும் மனித சமூகக் குறைகள் பெரும்பாலான வற்றிற்கும் மருந்து என்பதை முடிந்த முடிவாகக் கொண்டவர். ஆனால் சமதர்மம் பொருளாதார சமதர்மம் என்றாலும், அரசியல் சமதர்மம் என்றாலும், சமுதாய சமதர்மம் என்றாலும், தேசிய சமதர்மம் என்றாலும் வார்த்தை வேறுபாடுகள், திட்ட வேறுபாடுகள், செய்முறை வரிசைக்கிரம வேறுபாடுகள் ஆகிய பல சமதர்மம் என்பதோடு சதா போரிட்டுவருகின்றன என்பதை முதலியார் அவர்கள் ஒப்புக்கொள்வார் என்றே கருதுகிறோம். அதை "நவ சக்தி" தலையங்க குறிப்புகளிலும் காண்கிறோம்.

ராமசாமியின் சமதர்மம், காந்தியாரின் சமதர்மம். நேருவின் சமதர்மம், ரஷ்யாவின் சமதர்மம். ஜர்மனியின் சமதர்மம், ஸ்பெயினின் சமதர்மம், இந்தியாவின் பழய சமதர்மம் என்பன போன்ற பல சமதர்மம் நபர், இடம், காலம் ஆகியவைகளையும் கொண்டு சமதர்மம் விவாதப் போரிட்டு வருகின்றது என்பதும் முதலியார் அவர்கள் ஒப்புக்கொள்ளுவார்கள் என்றே கருதுகிறோம்,

இவைகள் தவிர எந்த இயல் சமதர்மமானாலும் எந்த நபர் சமதர்மமானாலும் எந்த தேச எந்த கால சமதர்மமானாலும் இடம், பொருள், ஏவல் ஆகியவைகளை பொறுத்துத்தான் கையாட வேண்டியதாகுமே தவிர எல்லா விடத்தும் எந்நேரமும், எந்நிலையிலும் ஒரே மாதிரி கையாளுவதென்பது அறிஞர் கடன் அல்ல என்பதையும் முதலியார் அவர்கள் அனுமதிப்பார்கள் என்றே கருதுகிறோம்.

ஆகவே தயவு செய்து முதலியார் அவர்கள் ராமசாமியார் சமதர்மத்தை விட்டு விட்டார் என்றோ, ராமசாமியார் சமதர்மத்துக்கு ஜஸ்டிஸ் கக்ஷில் இடமில்லை என்றோ கருதாமல் இருக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.

ராமசாமியார் சமதர்மக்காரர்தான். ஆனால் அவரது சமதர்மம் காரல் மார்க்சைப் பார்த்தோ, ஏஞ்சல்லைப் பார்த்தோ, ரஷியாவைப் பார்த்தோ, லெனினைப் பார்த்தோ ஏற்பட்டதல்ல என்பதையும் அல்லது அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டவை அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

அன்றியும் ராமசாமியின் சமதர்மம் வயிற்றுப்பிழைப்புக்கோ மேடைப் பிரசாரத்துக்கோ, தலைமைப் பதவிக்கோ ஊர்மெப்புதலுக்கோ ஏற்பட்டதல்ல என்பதையும் முதலியார் அவர்கள் உணர வேண்டுகிறோம்.

அன்றியும் ராமசாமியாரின் சமதர்மமானது ஜஸ்டிஸ் கஷியையோ காங்கிரசையோ இளைஞர்களையோ முதியோர்களையோ செல்வ ராஜாக்களையோ காவடிகளையோ லட்சியம் செய்தோ நம்பியோ பிரசாரம் செய்யவோ அமுலுக்குக் கொண்டுவரச் செய்யவோ வேண்டியதுமல்ல.

அன்றியும் இன்று ராமசாமியார் தனது சமதர்மத்தை நடத்துவது சமதர்ம பூமியில் இருந்தோ பொது உடைமை ஆக்ஷியிலிருந்தோ நடத்துவதாகக் கருதிக் கொண்டிருக்கும் நபரும் அல்ல. மற்றும் ராமசாமி தனது சமதர்மத்துக்கு எந்த நபருடைய நற்சாக்ஷி பத்திரத்தையோ ஆமோதிப்பையோ எதிர்பார்த்து நடத்தவேண்டியவரும் அல்ல.

அதற்கு ஆக சங்கமோ ஸ்தாபனமோ குறிப்பிட வேண்டும் என்கின்ற கவலை கொண்டவரும் அல்ல.

மற்றென்னவென்றால் தன் புத்தியையே தன் வலிமையையே தன் பொறுப்பையே நம்பி தன் காலில் நிற்கக்கூடிய தன்மையிலேயே நடக்கிறவர்.

அதற்கு அவருக்கு துணைவர்கள் யாராவது உண்டு அல்லது வேண்டும் என்று ஏற்பட்டால் “குணம் குடி கொடி கொண்டால் உயிருக்கு உயிர்தான், இல்லாவிட்டால் என்னமோ" என்கின்ற மாதிரி தன்னை நம்பி தன்னை அடைந்து தனது கொள்கையை கமா, புள்ளி மாறுதல் இல்லாமல் ஒப்புக் கொள்ளுகிறவர் எவரோ அவரே துணைவர், அவரே நண்பர். அவரே தோழர், மற்றவர் யாரானாலும் உலக சுபாவத்துக்கு நண்பனே கூட்டாளியே அல்லாமல் உண்மைக்கோ சமதர்ம முயற்சிக்கோ அல்ல என்பது அவர் கருத்து.
… … …
ராமசாமிக்கு சமதர்மம் தெரியும். எப்போது பிரசாரம் செய்வது, எப்படி செய்வது என்பதும் அவருக்குத் தெரியும்.

முதலியாரே பார்த்து பயந்து, தோழரே நாயக்கரே வேண்டாம், இவ்வளவு வேண்டாம் என்று அன்பால் கெஞ்சி கருணையால் தாடையை பிடிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

சமதர்மத்தின் பிறவி எதிரிகளான பார்ப்பனர்க்கு கையாளாய் கூலியாய் இருந்து சமதர்ம சித்திக்கு அதிக தூரம் ஏற்படுத்துவதை விட கூடியவரை சமீபமாக நிலைமையை நாட்டை மக்களை செய்யலாம் என்பதே இன்றைய ராமசாமி தொண்டு, ஆகவே முதலியார் பொறுத்தருள்வாராக.
(குடிஅரசு – 22-11-1936)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 105-113)


                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக