திங்கள், 23 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 55:-


தொழிலாளர் இயக்கம்தான் திராவிடர் கழகம்

(06.07.1946)

(இந்தச் சொற்பொழிவை பெரியார் 1946 ஆம் ஆண்டு நிகழ்த்தியதாகும். திராவிடக் கழகம், தொழிலாளர் இயக்கம்தான் என்பதை நிறுவ முயற்சிக்கிறார். மார்க்ஸ் லெனின் காலம் பழையதாகிவிட்டது என்றும் கூறியிருக்கிறார். அதனால் இந்தச் சொற்பொழிவை ஊன்றிப் படிப்பது பெரியார் கூறுவது என்னவென்பதை ஆராய்ந்து அறிய வேண்டும்.

கூலி உயர்வுக்குச் செய்யும் வேலை நிறுத்தத்தை முக்கியமானதாகக் கருதாமை, பார்ப்பனர்களைவிட முதலாளிகள் அதிகம் கெட்டவர்கள் இல்லை என்பது போன்ற பெரியாரின் கருத்தால் தொழிலாளர்கள் திராவிடர் கழகத்தின் மீது பற்றி வைக்கவில்லை. இதனைப் பெரியார் 20, 25 ஆண்டுகளின் அனுபவம் என்கிறார். தொழிலாளர்கள் தம்மை ஆதரிக்கவில்லை என்பதனால் ஒரு காலத்திலும் கவலைப்படவில்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

பாட்டாளிகள் தொழிலாளர்கள் என்று உழைப்பாளர்களை மார்க்சியம் இரண்டாகப் பிரிக்கிறது. ஆலைத் தொழிலாளர்களைப் பாட்டாளிகள் என்றும் மற்ற உழைப்பாளர்களைத் தொழிலாளர்கள் என்று அழைக்கிறது. தொழிற்புரட்சியைத் தொடர்ந்து உருவான தொழிலாளர்களே பாட்டாளிகள். இவர்கள் இன்றை உற்பத்தி முறையின் தொடர்பால் இவர்களை மார்க்சியம் புரட்சிகரமானவர்கள் என்றும் சமூகத்தை மாற்றுவதற்குத் தலைமைத் தாங்குவார்கள் என்றும் கூறுகிறது. இதனைப் பெரியார் புரிந்து கொள்ளாது, “இயந்திரங்களின் முன்னால் நிற்பவர்கள் மாத்திரம்தானா தொழிலாளர்கள்?” அதாவது அவர்கள் மட்டும் தான் பாட்டாளிகளா? என்று இந்தச் சொற்பொழிவில் கேளிவி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் இருக்கும் பெரியார், மார்க்சியம் கூறுகிற வர்க்கப் பார்வையைப் புரிந்து கொண்டிருப்பார் என்று கருதமுடியாது. அதன் விஞ்ஞானத் தன்மையை அறிந்திருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.

மதத்தின் வர்க்கத் தன்மையைப் பெரியர் புரிந்து கொள்ளாததால், தொழிலார்கள் பிரச்சினைக்குத் தீர்வாக் சுரண்டும் முதலாளியை எதிர்க்கத் துணியாமல், முதலாளிகளின் சுரண்டலுக்கு ஆதராவாகச் செயற்படும் மதத்தை முதலில் ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். தொழிலாளர்களைப் பார்த்து பெரியர் கேட்கிறார், உங்களை ஏழ்மையாகப் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுளை ஒழிக்க வேண்டும் என்கிறார். கடவுள் மதம் போன்ற சிந்தனைகள் தொழிலாளர்கள் எழுச்சி கொள்ளாமல் தடுப்பதற்குப் பணக்காரர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்பதில் தான் அதன் வர்க்கத் தன்மை அடங்கியிருக்கிறது. அதனால் தான் பணம் படைத்தவர்கள் கோவில் குளம் சத்திரம் போன்றவற்றுக்கு அதிகம் செலவு செய்கின்றனர். இதனை மார்க்சியம் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறது. இந்த வர்க்கப் பார்வை பகுத்தறிவுவாதப் பார்வைக்குக் கிடையாது. அதனால் தான் பெரியர் ஏழ்மைத் தன்மைக்குக் காரணம் தொழிலாளர்களின் ஏமாளித்தனம் என்கிறார். தனிவுடைமையின் சுரண்டலே ஏழ்மைக்குக் காரணம் என்பதைப் பகுத்தறிவுவாதம் ஒப்புக் கொள்வதில்லை. உள்ளடக்கத்தை விடுத்து வடிவத்துடனானப் போராட்டமானது, முடிவுக்கு வராமல் உள்ளடக்கத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும். சுரண்டல் வர்க்கம் சுரண்டிக் கொண்டே இருக்கும்.

சமூகம் வர்க்கமாகப் பிளவுபட்டு பல நூறாண்டுகள் கடந்துவிட்டது. இன்றைய சுரண்டல் சமூகத்தில் மனிதர்களுக்கு நல்ல சாப்பாடும் நல்ல சுகமும் கொடுக்க வேண்டியது இயற்கை தர்மமாகும் என்கிறார் பெரியார். மேலும் ஒவ்வொரு ஜீவனுக்கும் உணவு என்பது இயற்கை நியதி என்கிறார். இத்தகைய பெரியாரின் அறநெறிக் கருத்துக்கள், வர்க்கமாய்ப் பிளவுபட்டுக் காணப்படும் தொழிலாளர்களுக்கு எவ்வாறு வழிகாட்டியாக இருக்க முடியும்?.

தொழிலாளர்களின் கூலிவுயர்வுக்கான போராட்டத்தை மறுத்தலிப்பவர், ஆலைத் தொழிலாளர்களான பாட்டாளிகளின் போராட்ட உணர்வை உணர்ந்து கொள்ள முடியாதவர், மார்க்சும் லெனினும் காலாவதியானவர் என்று தான் கூறமுடியும். ஆனால் பெரியார் 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனுதர்மம் மட்டும் இன்றும் நடைமுறையில் அப்படியே இருப்பதாகக் கருதுகிறார்.

வாழ்நிலை தான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை. அதாவது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ப உற்பத்தி உறவுகள் அமைகின்றன, இந்த உற்பத்தி உறவுகளுக்கு ஏற்பவே அன்றைய சிந்தனைகள் தோன்றுகின்றன. இதனையே அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாடு வலியுறுத்துகிறது. மார்க்சியம் கூறுகிறபடியே வரலாறு செல்கிறது என்பதை அவ்வப்போது ஏற்படுகிற பொருளாதார நெருக்கடிகள் உறுதிப்படுத்திவருகின்றன. மார்க்ஸ் கூறுகிற சமூக மாற்றம் ஏற்படும் வரை, கம்யூனிச சமூகம் உருவாகி வளர்ச்சி அடையும் வரை மார்க்சியமே உழைப்பாளர்களுக்கு வழிகாட்டி.)

தந்தை பெரியார்:-
தோழர்களே! இக்கூட்டம் தொழிலாளர்களின் தற்காலப் பிரச்சினையாகிய (பக்கிங்காம் கர்னாட்டிக்) மில் ஸ்ட்ரைக்குச் சம்பந்தமாக திராவிடர் கழகத்தாரால் கூட்டப்பட்ட கூட்டம். “தொழிலாளர்களுக்கும் திராவிடக் கழகத்தாருக்கும் அதிக ஒற்றுமை இல்லை. திராவிடர் கழகத்தார் தொழிலாளிகளைச் சரிவரக் கவனிப்பதில்லை” என்பது ஒரு புகார். இது தொழிலாளர்களின் தெரியாத்தனமேயாகும். தொழிலாளிகளுக்கும், தொழிலாளர் இயக்கங்களுக்கும் பெருவாரியாய் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், புராணப் பிரசங்கிட் ஆகிய ஸ்தாபனங்கள்தான் அதிக சம்பந்தம் வைத்துக்கொண்டு, அவைகளை ஆதரித்து வருகிறார்களே தவிர, திராவிடர் கழகத்தினிடம் தொழிலாளர்களுக்குப் பற்றில்லை. இது எனது 20, 25 வருஷம் அனுபவம் என்றாலும், நான் தொழிலாளர்கள் நம்மை ஆதரிக்கவில்லையே என்று ஒரு காலத்திலும் கவலைப்பட்டதில்லை. அதற்காக அவர்களைப் பிடிக்க நான் வலை வைத்ததுமில்லை.

பைபிளில் உள்ள ஒரு வாக்கியம் போல், அதாவது, ஏசு கிருஸ்து அவர்கள் தேவனை நோக்கி, “தேவனே! அவர்கள் தாங்கள் செய்வது இன்னது என்று தெரியாமல் நடந்து கொள்ளுகிறார்கள்; அவர்களை மன்னித்தருள வேண்டும்” என்று சொன்னதாகச் சொல்வது போல், நம் நாட்டுத் தொழிலாளிகள் தாங்கள் செய்வதின் பயனை உணராமல் தங்கள் நிலைமையையும் உணராமல், வஞ்சகர்கள் கையில் சிக்கி, தலையெடுக்க முடியாமல் தாழ்ந்து கிடக்கிறார்கள் என்றாலும், அவர்கள் சம்மதமும் தகவலும் இல்லாமலே நாம் செய்வதைச் செய்வோம் என்று நாங்கள் அவர்களுக்காகவே தொண்டாற்றி வருகிறோம். எங்கள் தொண்டு யாவும் தொழிலாளர்களுக்காகவேதான். நாங்களும் தொழிலாளிகள் தான். ஆகவே வாய்ப்பினால் மாத்திரம் தொழிலாளிகளல்லாமல் பிறவியினால், சட்டத்தினால், சாஸ்திரங்களால், கடவுள்களால், கடவுள் சிருஷ்டியினால் நாங்கள் தொழிலாளிகளாக ஆக்கப்பட்டவர்கள். அப்படிப்பட்ட தொழிலாளிகள் தான் திராவிடர்கள்.
… … …
இயந்திரங்களின் முன்னால் நிற்பவர்கள் மாத்திரம்தானா தொழிலாளர்கள்? வண்டி ஓட்டுகிறவர்கள், வண்டி இழுக்கிறவர்கள், வீதி கூட்டுகிறவன் கக்கூசுக்காரன் வண்ணார், நாவிதர், குயவன், உழுபவன், விதைப்பவன், தச்சன், கொல்லன், சக்கிலி, பறையன், செக்கு ஓட்டுகிறவன், நெசவு நெய்பவன் முதலிய சரீரத்தால் உழைத்து, வயிற்றுக்கு வாழ்வுக்கு மாத்திரம் சம்பாதித்து அன்றாட வாழ்க்கைக்கு அன்றாடம் வரும்படி எதிர்பார்த்து நிற்கும் யாவரும் தொழிலாளி அல்லவா என்று கேட்கிறேன்.
… … …
சில தொழிலாளர் தலைவர்கள் என்பவர்கள் என் மீது, குரோதம் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பற்றி விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். நீங்கள் வாயில்லாப் பூச்சி; அறிவில்லா ஜந்து; என்கின்ற மாதிரி அந்த வஞ்சகப் பேச்சுக்குக் காது கொடுத்துப் பைத்தியக்காரர்களாக இருந்து வருகிறீர்கள்.
… … …
எது மதம்? எது கடவுள்? என்பது இந்த அன்னக்காவடிகளுக்குத் தெரியுமா என்று கேட்கிறேன். நான் எந்த மதத்தை, எந்தக் கடவுளை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன் என்பது இந்தத் தற்குறிகளுக்குத் தெரியுமா? என்று கேட்கிறேன்,

எந்த ஒரு மதம் ஒரு மனிதனைப் பிராமணனாகவும், ஒரு மனிதனைச் சூத்திரனாகவும் அதாவது தொழிலாளியாகவும், பாட்டாளியாகவும், பறையனாகவும் உண்டு பண்ணிற்றோ, அந்த மதம் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன். ஒழிய வேண்டுமா, வேண்டாமா? (ஆம், ஒழிய வேண்டும் என்னும் பேரொலி) எந்தக் கடவுள் ஒருவனுக்கு நிறைய பொருள் கொடுத்தும் ஒருவனுக்குப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழ உரிமை கொடுத்தும் மற்றொருவனை உழைத்து உழைத்து ஊரானுக்குப் போட்டுவிட்டுச் சோற்றுக்குத் திண்டாடும்படியும், இரத்தத்தை வேர்வையாய்ச் சிந்தி உடலால் உழைத்த வண்ணம் இருந்து கீழ் மகனாய் வாழும் படியும் செய்கிறதோ அந்தக் கடவுள் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன். அந்தக் கடவுள் ஒழிய வேண்டுமா, வேண்டாமா? (ஆம், ஆம், ஒழிந்தே ஆகவேண்டும் என்கின்ற பேரொலி) ஆகவே தோழர்களே! இது சொன்னால் நான் நாத்திகனும், மத துவேஷியுமா? “ஆம், ஒழிய வேண்டும்” என்று சொன்ன நீங்கள் மதத்துவேஷியா, நாத்திகர்களா? தோழர்களே! நம்மை நாத்திகர்கள் என்கின்ற இந்தப் பாஷாண்டங்கள்தான் நாத்திகர்களாவார்கள்.
… … …
மக்கள் யாவரையும் சமமாய் படைத்து, சமமாய் நடத்தும் கடவுள் இடமும், மதத்திடமும் நமக்கு என் வெறுப்பு, ஒழிப்பு வரவேண்டும்? ஆகையால் நம்மைப் பற்றிக் குறை கூறுபவர்கள் நம் எதிரிகளின் நிபந்தனையில்லாத அடிமைகளேயாவர். நீங்கள் பிறவி தொழிலாளர் சூத்திர ஜாதியில் இருந்து விலக வேண்டுமானால் பிராமணன் சூத்திரன் உள்ள மதம் ஒழிந்தாக வேண்டும். உங்களில் எத்தனை பேர் இருப்பீர்கள் அப்படிப்பட்ட மதத்தை ஒழித்துக் கொண்டவர்கள்.

ஏழ்மைத் தன்மையில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமானால், நீங்கள் உழைத்து உழைத்துப் பாடுபட்டுக் குறையாளராய் இருப்பவர்களாய் இருப்பது மாறியே ஆகவேண்டுமானால், உங்களை இப்படிப் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுள் இருந்தால் அது ஒழிந்தே ஆகவேண்டும். இதுதான் தொழிலாளிக்கு, சூத்திரனுக்கு 'சஞ்சீவி மந்திரம்' என்பேன்.
… … …
செல்வம் கடவுள் கொடுத்தார், தொழிலாளிகளைக் கடவுள் சிருஷ்டித்தார். கடவுள் செயலால் இது இரண்டும் சிருஷ்டிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு வருகின்றன. பிச்சையெடுப்பது அவன் தலைவிதி என்று நினைப்பவர் தொழிலாளர் இயக்கத்தில் அங்கத்தினராய் இருக்கவோ, தொழிலாளர் இயக்கத்தை நடத்தவோ சிறிதும் தகுதி அற்றவர் என்றே சொல்லுவேன். அவர் எவ்வளவு பண்டிதராய் இருந்தாலும், பக்தனாயிருந்தாலும் தொழிலாளர் இயக்கத்திற்குப் பதரே; எதிரியேயாவார். இதனால் அதாவது, இப்படிச் சொல்லுவது நாத்திகமானால், இதற்காக நீங்கள் எங்களுடன் சேரக்கூடாது என்றால், உங்கள் சம்பந்தம் இல்லாமலே எங்களால் ஆனதை எங்களுக்கும் உங்களுக்குமாக இருந்து வரும் திராவிடர் கழகத்தில் நாங்கள் தொண்டாற்றி வருகிறோம். திராவிடர் விடுதலைதான் தொழிலாளர் விடுதலையாகும்.

எனவே, இந்தக்காலத்துக் காங்கிரஸ்காரர், காங்கிரஸ் பக்தர்கள் யோக்கியதை இதுவானால், கம்யூனிஸ்ட் பக்தர்களும், vங்களை வைவதும், உங்களை அணைப்பதும், எங்களுக்கு ஆசரியமாய் இருக்கிறது. கம்யூனிஸ்ட்காரருக்கு எப்படி ஒருவன் சூத்திரனானான்? கீழ் ஜாதியானான்? என்பது முதலில் தெரிய வேண்டும். ஏனெனில் சூத்திரன்தான் அதாவது, கீழ் ஜாதியான்தான் இந்த நாட்டில் ஏழையாய், தொழிலாளியாய், மனித உரிமை இல்லாதவனாய், உழைப்பின் பயனை அனுபவியாதவனாய், மூடனாய் இருக்கிறான். அவனைக் கீழ்ஜாதி தன்மையில் இருந்து மாற்றிவிட்டால் இந்த நாட்டில் ஒரு ஜாதி பணமில்லாவிட்டாலும், சக ஜீவியாய் எஜமானாய் இருப்பதும், பணம் இருந்தும் பாட்டாளியாய், நல்வாழ்வு இல்லாமல் கீழ்வாழ்வாய், அடிமையாய் இருப்பதும், பெரும்பாகம் ஒழிந்து விடும். இதைக் கம்யூனிஸ்டுகள் கோராமல் தங்கம் எடுத்தவன் யார்? முத்துக் குளித்தவன் வாய் வயல்கள் செய்தவன் யார்? வரப்பு செதுக்கிறவன் யார்? மாடமாளிகை கட்டினவன் யார்? நந்தவனம் வைத்தவன் யார்? அனுபவிப்பவன் யார்? என்று சோம்பேறிப் பாட்டுப்பாடினால் போதுமா? இது செய்தவர்கள் யார், அனுபவிப்பவர் யார் என்பது கடுகளவு அறிவுள்ளவனுக்கும் தெரியுமே! அதாவது மடையன், ஏமாளி, மானமற்றவன் செய்தான், தந்திரசாலி, வஞ்சகன், கடவுள் பிரச்சாரக்காரன் அனுபவிக்கிறான்.

ஆகவே மடையன் புத்திசாலியாகி, மான மற்றவனுக்கு மான உணர்ச்சி ஏற்பட்டு, இந்த நிலைக்குக் காரணம் நமது ஏமாளித்தனமே ஒழிய கடவுளல்ல, மதமல்ல, முன்ஜன்மமல்ல, விதி அல்ல, இவையெல்லாம் புரட்டு இவைகளைத் தகர்த்தெறிவது எனது முதல்வேலை என்று எண்ணுகிறானோ அவனே முதலாளிகளை செல்வவான்களை மாடமாளிகை கூடக் கோபுரங்கள், அரண்மனையில் வசிப்பவர்கள் ஆகியவர்களை ஒழிக்கத் தகுந்தவனாவான்.
… … …
இன்று நீங்கள் வேலை நிறுத்தம் செய்திருக்கிறீர்கள். இதை நாங்கள் முழுமனதோடு ஆதரிக்கிறோம். ஆனால் கூலி உயர்வுக்குச் செய்யும் வேலை நிறுத்தத்தை நாங்கள் அவ்வளவு முக்கியமானதாகக் கருதுவதில்லை. ஏனெனில், அது தொழிலாளிகளைத் தொழிலாளர்களாகவே இருக்க வைக்கும் வேலை என்பது எங்கள் கருத்து. ஏன் என்றால் தொழிலாளிக்கு அதிகக் கூலியும், வீடு வைத்தியம், படிப்பு வசதியும், முதலாளி செய்வது என்பது, ஒருவன் தன் மனைவியை எப்போதும் அடிமையாய் அடைத்து, தனது நலனுக்குவைத்திருப்பதில் அவளை அந்தக் காரியத்தில் உற்சாகமூட்டி நல்ல பக்தி விவாசமுள்ள அடிமையாகச் செய்ய தங்க வைர நகை, பட்டுச் சேலை, சீப்பு, சோப்பு, கண்ணாடி, வாசனை எண்ணெய் பவுடர் வாங்கிக் கொடுப்பது போலவே தவிர, சம உரிமை அடைவதற்கு அல்ல என்பது போலவேயாகும்.

தொழிலாளிக்கு வேண்டியது கூலியும், நல்வாழ்க்கை வாழச் செலவுமே அல்ல என்பதை ஒவ்வொரு தொழிலாளியும் கவனத்தில் வைக்கவேண்டும். அவனுக்கு வேண்டியது தொழிலின் பயனை சம உரிமையுடன் அனுபவிக்க வேண்டும். அடைய வேண்டும் என்பதோடு, தான் அந்த யந்திர சாலைக்கு ஒரு கூட்டாளியாக பங்காளியாக இருக்க வேண்டுமே ஒழிய, ஒரு தொழிலாளியாக வேலைக்காரனாக இருக்கப்படாது என்பதேயாகும். தொழிலாளி முதலாளி தன்மை முறை இருக்கவே கூடாது. தொழிலாளர் சங்கம் என்கின்ற பெயரும் இருக்கக்கூடாது. ஒரு தொழிற் சாலைக்கு அங்கு வேலை செய்பவர்கள் பங்காளிகளாக அல்லாமல் கூலிக்காரர்களாக இருப்பது என்பது முட்டாள்தனம், அடிமைத்தனம், மானமற்றதனம் ஆகும்.
… … …
பணத்தைப் போட்டு யந்திரம் வாங்கித் தொழிலாளியைப் போட்டு வேலை செய்தால்தான் லாபம் வருகிறது. இந்த லாபத்தில் பெரும்பாகம் வேலைக்குத் தானே கிடைக்க வேண்டும்? முதலுக்குச் சிறுவட்டிதானே கிடைக்கவேண்டும்? அதுவும் மிஷினுக்கு எண்ணெய் போடுவது எப்படியோ, எஞ்சினுக்கு விறகு போடுவது எப்படியோ அதுபோல் அதில் வேலை செய்பவருக்கும். அந்த மனித மிஷின் கெடாமல் எண்ணெயும் விறகும் போல் நல்ல சாப்பாடும் நில்ல சுகமும் கொடுக்க வேண்டியது இயற்கை தர்மமாகும்.

ஆகவே நிர்வாகம்தான் சம்பளம் முதலுக்கு வட்டி, மிஷினுக்கு எண்ணெய் விறகு என்பன போல், தொழிலாளிக்கும் வாழ்க்கைச் சவுகரியம் செய்து கொடுத்து விட்டு, மீதி உள்ள லாபத்தில் மிஷின் தேய்மானத்திற்கு ஒரு தொகை ஒதுக்குவது போல், தொழிலாளியின் ஓய்வுகால நல்வாழ்க்கைக்கு ஒரு தொகை ஒதுக்கி வைத்துவிட்டு மீதியையே முதலும் வேலையும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். நாளாவட்டத்தில் யந்திர சாலை தொழிற்சாலைகள் தொழில் செய்பவர்களுக்குச் சரிபாகச் சொந்தமாக ஆகவேண்டும். இதற்காகவல்லவா, இந்தக் காரியத்திற்கு அல்லவா தொழிலாளர் இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம் ஆகியவை இருக்க வேண்டும்? ஆனால், இன்று இவை இரண்டும் முதலையும் முதலாளிகளையும் பெருக்கிக் கொழுக்க வைத்துத் தொழிலாளிகளுக்கு மயக்கத்தைக் கொடுக்கும் மதுபோல் கொஞ்சம் கூலி உயர்வும், சிறிது சவுகரியமும் செய்து கொடுத்து, அவர்கள் என்றும் தொழிலாளிகளாகவே இருக்க வைக்கும் சதிவேலை ஸ்தாபனம் இருந்து வருகின்றது.

இதிலிருந்து தெரிவதென்னவென்றால், தொழிலாள - ஸ்தாபனங்களுக்கும், தொழிலாளர் தலைவர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் இனி வேண்டியது என்ன என்பதே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

காரல்மார்க்சின் காலம் வேறு, லெனின் காலம் வேறு, இந்தக் காலம் வேறு இந்தக் காலத்துக்கு வேண்டியது பழைய காலத்தில் பழைய பெரியார்கள் கண்டு பிடித்ததும், சொன்னதுமாகியவற்றில் இருக்க முடியாது. அவை போதாது. 1946 ஜுன் மாதத்திய ரயில்வே கெய்டு ஜூலை மாதத்துக்குச் செல்லாது. ரயில் தவறிவிடும். ஆகவே தொழிலாளிகள் தங்களை இனி அரை நிமிடமும் தொழிலாளி என்று எண்ணாமல், முதலாளிகள் சொந்தக்காரர்கள் ஆகப் போகிறவர்கள் என்று எண்ண வேண்டும். இதற்கு அவர்கள் இன்றைய சுயநலப்புலிகளான தலைவர்களிடம் இருந்து விடுபட வேண்டும். புராண வாழ்வுக்காரர்களைப் பார்ப்பன (பிராமணர்)களை விட்டு விலக வேண்டும். பார்ப்பனர்களைவிடப் புராணக்காரர்களான பார்ப்பன அடிமைகளைவிட முதலாளிகள் அதிக கெட்டவர்கள் அல்ல.
… … …
உங்கள் மில் முதலாளிகள் இதற்கு இணங்க வேண்டியதும் அவசியமும் நேர்மையும் ஆகும். உங்கள் முதலாளிகள் நிர்வாகிகள் யார்? உங்கள் உழைப்பால் பயனடைபவர்களேயாவார்கள்.

உங்கள் உழைப்புக்குக் கூலி, அதாவது உங்களுக்குச் சாப்பாடு போட்டு விட்டதால் அவர்கள் கடன் தீர்ந்து விட்டதாகக் கருதக் கூடாது. ஒவ்வொரு ஜீவனுக்கும் உணவு என்பது இயற்கை நியதியாகும். அநேக ஜீவன்கள் உழைப்பு இல்லாமலே உணவு கொண்டு ஜீவிக்கின்றன. அநேக மனித ஜீவன்களும் உழைப்பு இல்லாமல் பெருவயிறோடு நடமாடுகின்றன. நீங்கள் உழைத்துவிட்டு உணவு கொண்டு ஜீவிப்பது என்பது மற்றவர்களுடைய உதவியால் அல்ல; அது இயற்கையாலேயே, நிர்ப்பந்தத்தாலேயேயாகும்.
… … …
நீங்கள் திராவிடர்கள், நாங்கள் திராவிடர்கள் நம்மை இழிவுபடுத்தி கொடுமைப்படுத்தி, துன்பப்படுத்தி நடத்துகிறவர்கள் ஆரியர்கள். இதை நீங்கள் உணர்ந்துவிட்டால் நமக்கு இந்தக் கஷ்டம் இராது. ஆகவே தொழிலாளத் தோழர்களே! இதுவரை நடந்தது நடந்து போனது போகட்டும். இனியாவது திராவிடர்கள் யாவரும் கட்டுப்பாடாய் ஆரியர்கள் போல ஒற்றுமையாய் இருமனப்பட்ட லட்சியமாய் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் தொழிலாளிகள் என்றாலும், நாங்கள் உங்கள் தொண்டர்கள்; உங்களுக்காகவே உயிர்வாழ்பவர்கள், இதை உணருங்கள்; சமாதானமாக பலாத்காரமில்லாமல் நடந்து கொள்ளுங்கள்.
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 142/157)

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக