திங்கள், 23 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 49:-


காங்கிரசும் ஜவஹர்லாலும் பொது உடைமையும்

(அனைவரின் சமதர்மத்தையும் விமர்சனம் செய்கிறார் பெரியார், தமது சமதர்மத்தை சுயவிமர்சனம் செய்து பார்த்தாரா? இந்தக் கேள்வி எழத்தான் செய்கிறது.

அபேதவாதம் என்கிற சமதர்மத்தை பெரியார் குற்றம் என்று கூறவில்லை, சமதர்மத்தால் தான் மனித சமூகத்திற்கு அமைதி கிட்டும் என்றும் கூறுகிறார். அதனை நோக்கிய பயணம் என்பது சமூக விஷயத்தில் உள்ள கொடுமைகளைக் களைந்த பிறகு என்கிறார். சுதந்திரம், சுயராஜியம், சமதர்மம் ஆகிய அனைத்தும் பிறவி காரணமாக நடைபெறும் கொடுமை நீக்கப்படாமல் உச்சரிப்பது கூடாது என்கிறார். அனைத்தில் இருந்தும் தனித்து, பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு பற்றி எப்படிப் பேச முடியும். பிறவி அடிப்படையிலான உயர்வு தாழ்வு சமூகப் பிரச்சினை என்றால் சமதர்மம் என்பது என்ன பிரச்சினை. அது சமூகப் புரட்சி தானே.

இத்தகைய, பிறவியினால் காணப்படும் ஏற்றத்தாழ்வு பணம்படைத்தவர் அவனிடம் உழைப்பவன் என்கிற பிரச்சினையின் அடிப்படையில் எழுந்தது தானே. அப்படி இருக்கப் பணக்காரர்களை விமர்சிக்காமல், வர்ணத்தை முன்னிருத்துகிற பார்ப்பானை முதலில் ஒழிக்க வேண்டும் என்பது எவ்வாறு சரியாகும். பணக்காரர்களை ஒழிக்காமல் பணக்காரர்களை அண்டி பிழைக்கும் (பார்ப்பனியம்) பார்ப்பானை எவ்வாறு ஒழிக்க முடியும். பணக்காரர்களை ஒழிக்கும் வர்க்கப் போராட்டத்தில் அனைத்துச் சமூகத் தீங்குகளும் உள்ளடக்கி தான் நடத்தப்படும். வர்ணப் போராட்டம் வர்க்கப் போராட்டத்தில் உள்ளடங்கியே நடத்தப்பட வேண்டும். தனித்து நடத்துவது என்பது வடிவத்துடனானப் போராட்டமே ஆகும். அதாவது உள்ளடக்கத்தை விடுத்து வடித்துடனானப் போராட்டமே ஆகும். வர்க்கப் போராட்டம் உள்ளடக்கம் வடிவம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கி நடத்தப்படுகிறது.

பணக்காரர்களை விடுத்துப் பார்ப்பனர்களை முன்வைத்துப் முதலில் போராடுவது பணக்காரர்களுக்கு ஆதாரவாகவே இறுதியில் முடியும். இதன் மூலம் பணக்காரர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். பணக்காரர்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்பனன் போன்ற சமய பிரச்சாரகர்களை ஆதரித்துக் கொண்டே இருப்பர். பணக்காரர்களும் சமய பிரச்சாராகர்களும் தம் பணியைத் தொடர்ந்து கொண்டே இருப்பர். இந்த வர்ணப் போராட்டம் ஒன்றை வேண்டுமானால் ஒழிக்கலாம், அது பார்ப்பானர்களை ஒழித்து அந்த இடத்தில் பார்ப்பான் அல்லாத பிற ஆதிக்கச் சாதிய சமய பிரச்சாரர்களை உருவாக்கலாம். ஆனால் வர்க்கப் போராட்டம், பார்ப்பான் உள்ளடக்கிய அனைத்து ஆதிக்கச் சமய பிரச்சாகர்களையும் ஒழிக்கவே போராடுகிறது. உள்ளடக்க அழிவோடு அனைத்து ஆதிக்க வடிவமும் அழிக்கப்படும். பார்ப்பான் மட்டும் அல்லாது மற்ற ஆதிக்கச் சாதியினரின் மத நடவடிக்கைகளும் அழிக்கப்படும். அரசு எப்படி இறுதியில் உலர்ந்துவிடும் என்று மார்க்சியம் கூறுகிறதோ, அப்படி அனைத்து ஆதிக்க சக்திகளும் உதிர்வதைப் பற்றிய தெளிவு மார்க்சியத்திடம் இருக்கிறது.)

தந்தை பெரியார்:-
“அபேதவாதம் குற்றமென்று நாம் ஒருநாளும் சொல்லமாட்டோம். அதனால்தாள் மனித சமூகத்துக்குள் ஒரு அளவாவது சாந்தியும் சமாதானமும் ஏற்படும் என்பதையும் நாம் வலியுறுத்துவோம். அது பிரசாரம் செய்யப்பட வேண்டிய காலம் எது என்பதையும் நாம் அறிவோம்.

ஆனால் அது சமூக விஷயத்தில் உள்ள கொடுமைகளைக் களையாமலோ - களைய முயற்சி செய்யாமலோ ஏற்பட்டுவிடும் என்பதை நாம் ஒருநாளும் ஒப்புக்கொள்ள மாட்டோம். அபேதவாதம் மாத்திரமில்லாமல் சுதந்திரம், சுயராஜியம் என்கின்ற வார்த்தைகளுக்கும் என்ன அருத்தம் இருந்தபோதிலும் கூட சமுதாயக் கொடுமைகள் அதுவும் பிறவி காரணமாய் இருந்து வரும் கொடுமைகள் நீக்கப்படாமல் அவ்வார்த்தைகளை உச்சரிப்பது கூட யோக்கியமான காரியம் என்று நாம் சொல்ல மாட்டோம்.”
(குடி அரசு - தலையங்கம் - 21.06.1936)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 104)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக