எனது அறிக்கையின் விளக்கம் (31.03.1935)
- தந்தை பெரியார்
(பெரியாரின் இந்த அறிக்கை மிகவும் முக்கியமானதாகும்.
இந்த அறிக்கைக்குப் பிறகு பெரியார் சமதர்மம் பற்றிப் பேசுவதில் உள்ள மாற்றத்தை கவனிக்க
வேண்டும்.
ரஷ்யாவுக்குச் செல்வதற்கு முன்பே பெரியார் சுயமரியாதைக்
கருத்தோடு சமதர்மத்தையும் இணைத்தே பேசிவந்தார். ரஷ்யாவுக்குச் சென்று வந்த பின்பும்
அவ்வாறே தொடர்ந்தார். ரஷ்யாவிலிருந்து வந்ததும் இன்னும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ததை
அவரே திருத்துறைப்பூண்டி மாநாட்டு உரையில் கூறியுள்ளார்.
ஆனால், ஆங்கில அரசாங்கத்தின் கெடுபிடிக்குப் பிறகு, சமூகச்
சமதர்மமே நம்நாட்டில் முதலாகச் செய்ய வேண்டியது பொருளாதாரச் சமதர்மம் அதற்கு அடுத்ததே
என்று மாற்றிக் கொண்டார், ஆனால் சமதர்மக் கருத்துக்களைக் கருத்துநிலையில் தொடர்ந்து
கூறியே வந்துள்ளார். அந்தக் கருதது பார்ப்பனர்களை ஒழிப்பதில் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது,
பணக்காரார்களை ஒழிப்பது பற்றி அவர் நேரடியாகக் கூறுவதில்லை. பார்ப்பனர்களை ஒழித்துவிட்டால்
பணக்காரர்கள் பகுத்திறிவைக் கொண்டு தெளிவு பெற்றுச் சமதர்மத்தை ஏற்பர் என்பது போல்
தமது பேச்சுகளை மாற்றிக் கொண்டார்.
அதுமட்டுமல்லாது பிறப்பால் ஏற்றத்தாழ்வு கொண்ட நம் நாட்டில்
பணக்காரனை மாத்திரம் குறைகூறும் சமதர்மம் வெறும் பொறாமை சமதர்மமேயாகும்
(29-11-1935) என்று கூறு அளவுக்குப் பெரியால் செல்கிறார்.)
தந்தை
பெரியார்:-
“உண்மை விளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரான
தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் மீதும் காலஞ்சென்ற
பகத்சிங்கால் எழுதப்பட்ட "நான் ஏன் நாஸ்திகன்
ஆனேன்?" என்ற புஸ்தகத்தை முறையே பிரசுரித்ததற்காகவும், மொழி பெயர்த்ததற்காகவும்
இந்தியன் பினல் கோர்ட் 124ஏ செஷன்படி ராஜ துவேஷக்
குற்றம் சாட்டி கைதியாக்கி சிறையில் வைத்து வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள்
அறிந்ததாகும்.
அவ்வழக்கு மேல்கண்ட இரு தோழர்களாலும் ராஜ துவேஷத்தை
உண்டாக்கவோ, அதைப் பிரசாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கவில்லை என்று
அரசாங்கத்திற்குத் தெரிவித்து ராஜதுவேஷம் என்று கருதத்தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப்பட்டு
விட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின் பேரில் அரசாங்கத்தார் வழக்கை
வாபீஸ் வாங்கிக் கொண்டு தோழர்கள் ஈ.வெ.கி., ப.ஜீ. அவர்களை விடுதலை செய்துவிட்டார்கள்.
இந்தப்படி இந்த இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக்
கொண்டு விடுதலையடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும் பெரும்பான்மையான
அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த மன்னிப்பு கொடுக்கப்பட்டதும், அதை சர்க்கார்
ஏற்றுக் கொண்டதும் ஆகிய இரண்டு காரியமும் மிகுதியும் இந்தக் கேசையே பொறுத்தது மாத்திரமல்ல
என்பது இதில் முக்கிய விஷயமாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை இயக்கத்தைப்
பற்றி சர்க்காரார் மனதில் எப்படியோ தப்பு அபிப்பிராயம் ஏற்பட்டு எப்படியாவது சுயமரியாதை
இயக்கத்தை அடக்கி அழித்துவிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள் என்பதாக நான்
கொஞ்ச நாளைக்கு முன்பே தெரிந்து கொண்டேன்.
… … …
மற்றும் நான் மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தில்
இருந்து வந்த பிறகு, தமிழ் ஜில்லாக்களில் சுமார்
175 சுயமரியாதைக் கிளைச் சங்கங்கள் பல பெயர்களின் பேரால் ஏற்பட்டு ஏதோ சிறிது வேலை
செய்து வந்ததை, சர்க்கார் இ.ஐ.ஈ. இன்ஸ்பெக்டர்கள் ஆங்காங்கு சென்று அங்கத்தினர்கள்
பயப்படும்படியான மாதிரியில் பல விசாரணைகள் வெளிப்படையாகவும், இரகசியமாகவும் நடத்தி
தடபுடல் செய்ததின் மூலம் பல சங்கங்கள் பயந்து மூடப்பட்டும் யாதொரு வேலையும் செய்யாமலும்
இருக்கவும் நேர்ந்துவிட்டது.
இயக்க சம்மந்தமுள்ள பல பெரிய ஆட்கள் என்பவர்களும்,
சர்க்கார் உத்தியோகம் முதலியவைகளில் சம்பந்தமுள்ள சிலர்களும், இதை அறிந்து இயக்கத்திலிருந்தும்,
சங்கத்திலிருந்தும் விலகிக் கொள்ளவும் பாராமுகமாய் இருக்கவும் ஆரம்பித்ததோடு
"சுயமரியாதை இயக்கம் ஆபத்தான இயக்க"மென்று சொல்லவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
இவை ஒருபுறமிருக்க, இயக்கத்தில் கலந்து வேலை செய்து
கொண்டு இருந்த தொண்டர்களில் பலர் தங்கள் உற்சாகத்தைக் காட்டிக் கொள்ளும் முறையில் தலைகால்
தெரியாமல் வேகமாகப் பேசுவதும், பாடுவதும் அதைப் பார்த்த போலீசார் அங்கொன்றும் இங்கொன்றுமாக
குறித்து சர்க்காருக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்துக் கொள்ளத் தூண்டுவதுமான காரியங்களும்
எனது தகவலுக்கு அவ்வப்போது சில வந்து கொண்டே இருந்தது. அன்றியும் என் பேரிலும் என்
தங்கை பேரிலும் இயக்கத்தை அடக்க வேண்டுமென்ற கருத்தோடே செய்ததாக எண்ணும்படி பல வழக்குகள்
தொடுத்து காவல் தண்டனை, அபராதங்கள் முதலிய தண்டனைகளும் விதிக்கப்பட்டோம்.
இதனால் எல்லாம் நம்முடய விரோதிகள் பலரும் இயக்கத்தில்
பொறுப்பில்லாமல் கலந்து விளம்பரம் பெற்று வாழ்ந்து வந்த சிலர் மாத்திரம் "பேஷ்
பேஷ்" என்று நம்மை உற்சாகப்படுத்துகிற மாதிரியில் பேச முடிந்ததே ஒழிய மற்றபடி
இயக்கம் வளர்ச்சியடைய முடியாமல் போகவும் சர்க்காரின் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகுமே
என்கின்ற பயத்திற்கும் இடம் தந்ததால் இயக்கப் பிரமுகர்களில் இரண்டொருவர் யோசனைக்கு
இணங்கி இதைப்பற்றி சர்க்காரிலேயே சில பொறுப்புள்ள அதிகாரிகளைக் கண்டு பேச வேண்டிய அவசியத்திற்கு
உள்ளானேன்.
அப்படிப் பேசியதில் எனக்கும் இரஷியாவுக்கும் பணப்போக்குவரத்தோ,
பிரசார சம்பந்தமோ ஏதும் இல்லை என்று விளக்க வேண்டி இருந்ததோடு சுயமரியாதை இயக்கம் சட்டமறுப்பு
இயக்கமல்லவென்றும், சர்க்காரோடு ஒத்து உழையா இயக்கமல்லவென்றும், சட்டத்தையும் சமாதானத்தையும்
மதியாத இயக்கமல்லவென்றும் எடுத்துச் சொன்னதோடு அதன் ஆரம்பகால முதல் நாளது வரை பல சமயங்களில்
வெளியிடப்பட்டும், பல மகாநாடுகளில் தீர்மானிக்கப்பட்டும் இருக்கும் வேலைத் திட்டம்,
தீர்மானங்கள் முதலியவைகள் எல்லாம் சட்ட வரம்பிற்கு உட்பட்டு நடத்தும் காரியங்களாகவேதான்
இருந்து வருகிறதென்றும் விளக்கிக் காட்டினேன்.
மற்றும் சட்ட விரோதமாக அல்லது ராஜத்துவேஷமுண்டு
பண்ணுவதற்கு ஆக பதிப்பிக்கப்பட்டதென்றோ, பேசப்பட்டதென்றோ ஏதாவது காட்டப்படுமானால் அதற்குப்
பதில் சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் ஒப்புக் கொண்டேன்.
இந்த நிலைமையில் பிரஸ்தாப வழக்கு சம்மந்தப்பட்ட
விஷயங்கள் எனக்குக் காட்டப்பட்டன. அதைக் கண்ட பிறகு அது ராஜத் துவேஷமான விஷயம் என்று
சர்க்கார் முடிவு செய்து விட்டார்கள் என்பதையும், அது எப்படியும் ராஜத் துவேஷமான விஷயம்
என்று தீர்ப்புப் பெறும் என்பதையும் விவகாரம் பேசுவதில் பயன் ஏற்படாது என்பதையும் உணர்ந்தேன்.
உணர்ந்ததும் உடனே அதை மன்னித்து விடுங்கள்
என்று சொல்லிவிட்டேன். அதிகாரிகளும் அந்தப்படியே ஒப்புக் கொண்டார்கள்.
ஆகவே இந்த
சம்பவமானது இயக்க சம்பந்தமாய் சர்க்காருக்குள்ள தப்பபிப்பிராயத்தை நீக்க வேண்டும் என்பதற்காகவே
ஏற்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்ளவே இதை எழுதுகிறேன்.
நம் இயக்கம் (சுயமரியாதை இயக்கம்) சமூகத் துறையில்
உள்ள குறைகளை நிவர்த்திப்பதற்கென்றே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்ததும், சர்க்கார்
அதிகாரிகள் முதல் அனேக செல்வவான்களும் இயக்கத்தில் கலந்து வேலை செய்து வந்ததும் எவரும்
அறியாததல்ல. ஆனால், சிறிது காலம் சென்றபின் மக்களுக்குள்ள
சமுதாயக் கொடுமை தீர வேண்டியது எவ்வளவு அவசியமோ அது போலவே மக்களுக்குள்ள பொருளாதாரக்
கொடுமையும் தீர வேண்டியதும் மிகவும் அவசியமென்று கருதியதால், பொருளாதார சம்பந்தமாக
நாம் சிறிது பிரசாரம் செய்ய ஆரம்பித்தோம் என்றாலும் அதன் பிறகே அரசாங்கத்தார் தப்பபிப்பிராயங்
கொண்டு இயக்கத்தை அடக்க அடக்குமுறை பிரயோகம் ஆரம்பித்து விட்டார்கள் என்று உணருகிறேன்.
இதையேதான் அதிகாரிகள் முன்பும் தெரிவித்துக் கொண்டேன்.
ஆனால் ஒரு அளவுக்கு சர்க்காருடன் ராஜி ஏற்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற
ஆசையின் மீதே பொருளாதார விஷயத்தில் சமதர்மக் கொள்கையை பிரசாரம் செய்வதில் சர்க்காருக்கு
ஆட்சேபணை இல்லை என்றும், ஜாதி மத சம்பந்தமான விஷயங்களில் வேறு ஜாதி மதக்காரர்கள் மனம்
புண்படும்படியோ அவமானம் ஏற்படும்படியோ என்று இல்லாமல் ஜாதி மத கண்டனங்கள் செய்து கொள்ளலாம்
என்றும் முடிவுக்கு வந்தோம். சர்க்காரோடு இந்த மாதிரியான ஒரு சமாதான முடிவுக்கு வராதபஷம்
சர்க்காருக்கும் நமக்கும் வீண் தொந்தரவும் மனக்கசப்பும் ஏற்பட்டுத் தீரும் என்கின்ற
நிலையில் மற்ற ஆதாரங்களும் முயற்சிகளும் நிலைமைகளும் இருந்ததால் நான் இந்த சமாதானத்துக்கு
வரவேண்டியதாயிற்று. ஆகவே இதன் பலன் என்னவானாலும் அதற்கு நானே பொறுப்பாளி என்றுதான்
சொல்ல வேண்டும்.
சில இளைஞர்களுக்கு இது கேவலமாகத் தோன்றலாம்; என்றாலும்
நாம் இயக்க சம்பந்தமாக நமது கொள்கைகளிலோ திட்டங்களிலோ எதையும் விட்டுக் கொடுத்து சமாதானம்
செய்து கொண்டதாக எனக்குப் படவில்லை; ஆதலால் யார் எப்படி நினைத்தாலும் நமக்கு ஒன்றும்
முழுகிப் போய்விடாது என்று தைரியமாகச் சொல்லுகிறேன்.
சுயமரியாதை இயக்கம் சட்ட வரம்புக்கு உட்பட்ட இயக்கம் என்பதையும், நாம் சட்ட
வரம்புக்கு உட்பட்டு பிரசாரம் செய்கிறவர்கள் என்பதையும் ஈரோடு சுயமரியாதை இயக்கம் சமதர்மக்
கட்சி வேலைத் திட்டத்திலேயே கடசி பாராவில் தெளிவாய்க் காட்டி இருக்கிறோம்.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக