திங்கள், 23 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 60:-


ஸ்ட்ரைக்குகளும் - கம்யூனிஸ்டுகள் சம்பந்தமும்

(வேலைநிறுத்தத்தின் போது ஒவ்வொரு முறையும் அரசு முதலாளிகளின் பக்கத்திலேயே நிற்பதையும், தேர்தலில் பங்குபெறும் கட்சி, பஜாஜ், டாட்டா போன்ற பணக்காரர்கள் பணம் பெற்று போட்டியிடுவதையும் வைத்து அரசு என்பது முதலாளிகளுக்குச் சாதகமாகச் செயற்படுவதாகப் பெரியார் குறிப்பிடுகிறார். ஆனால் மார்க்சியத்தின் தொடக்கப்பாடம் அரசு என்பது பணக்கார வர்க்கத்தின் சுரண்டலுக்கு ஆதரவாகவும் அதனை எதிர்ப்பபவர்களுக்கு எதிராகவும் செய்படுவதற்குத் தோற்றுவிக்கப்பட்டது என்கிறது. அரசின் சாரம்சமே சுரண்டும் வர்க்கத்தின் நலன்களைக் காப்பதற்றுவதில் அடங்கி இருக்கிறது.

இன்றைய தொழிலாளர்களின் துன்பத்திற்குப் பரிகாரம் என்ன என்பதைக் கம்யூனிஸ்டுகள் கவனிக்காது, இந்த வேலை நிறுத்தத்தினைத் தொடர்ந்து செய்து, பெரும் துன்பம்- தொல்லை அடைந்து இறுதியில் பொதுஜன அபிப்பிராயம் பலப்பட்டு முதலாளிகள் மீது வெறுப்பு ஏற்பட்டு ஒரு காலத்தில் திடீர் என்று புரட்சி ஏற்படும், அப்போது முதலாளி ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என்று உபதேசம் செய்து கொண்டே இருந்தால் தொழிலாளர்களுக்கு விமோசனம் ஏற்பட்டுவிடுமா? என்று பெரியார் கேள்வி எழுப்புகிறார்.

நடைமுறையில் நம்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் தொழிற் சங்க நடவடிக்கயை முன்வைத்து இப்படிப் விமர்சிக்கலாம். ஆனால் கம்யூனிசக் கோட்பாட்டை அறிந்து கொண்டிருந்தால் புரட்சியைப் பற்றி இவ்வளவு எளிதாகக் கூறிவிட முடியாது. அதற்கான பொருளாதார, தத்துவ விளக்கங்கள் விஞ்ஞா வழிப்பட்ட வகையில் நிறுவப்பட்டுள்ளது.

வர்க்கப் போராட்டம் பற்றிய கம்யூனிசத்தின் கோட்பாட்டை அறிந்து கொள்ளாததால், குறிப்பாக மார்க்சிய பொருளாதாரம், முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி பற்றியும், அதனைத் தொடர்ந்து வர்க்கப் போராட்டம் முற்றி புரட்சி ஏற்படுவது பற்றியும் மார்க்சின் மூலதனம் நூல் விளக்கியிருப்பதைப் பெரியார் உணர்ந்து கொள்ளவில்லை.

அதனால் தான் பெரியாரால் இவ்வாறு கூற முடிகிறது. “இன்றைய வேலை நிறுத்தங்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தூண்டுதலாலும், அல்லது அந்த மனப்பான்மைக்காரரின் முயற்சித் தலைமையாலும் நடைபெறுபவையாகும். பொது உடைமைத் தத்துவம் வேறு, தொழிற்சாலைத் தொழிலாளிகளின் கூலி உயர்வு, சவுகரியத் தேவை சம்பந்தமான வேலை நிறுத்த தத்துவங்கள் வேறு.”

அன்றைய பொருளாதார உற்பத்தி உறவுகளில் காணப்படும் முரணுக்கு ஏற்ப அரசு தோன்றுகிறது என்கிற மார்க்சிய தத்துவத்தின் தொடக்கத்துக்கு மாறாகப் பெரியார், கம்யூனிஸ்டுகளின் பேச்சைக் கேட்டு, தொழிலாளர்கள், முக்கால்பாக எதிரிகளாகிய அரசாங்கத்தை விட்டுவிட்டு, கால்பாக எதிரிகளாகிய முதலாளிகள்மீது முழுபலத்தையும் செலுத்துவதாகவும் கூறுகிறார். இது மார்க்சிய தத்துவத்தின் தலைகீழ் பாடமாகும். இத்தகைய பெரியரின் கருத்தை கம்யூனிஸ்டுகளோ, முற்போக்கு தொழிலாளர்களோ ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை மறுக்கிற பெரியாரின் கருத்து தொழிலாளர்களுக்கு எதிராக மட்டுமில்லாத, வேலைநிறுத்தத்தை விமர்சிக்கிர முதலாளிகளுக்கு ஆதரவாகவும் போகிறது.

பெரியார் கம்யூனிஸ் கட்சி அறிக்கையை முதன்முதலில் வெளியிட்டிருக்கலாம், அதே போல் இன்று பலர் தங்களைக் கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொள்ளலாம் ஆனால் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற மார்க்சிய கோட்பாட்டிற்கு எதிராகச் செயற்படுபவகர்கள் மார்க்சியவாதியாகவோ, கம்யூனிஸ்ட்டாகவோ இருக்க முடியாது. ஏன் என்றால் அது தான் கம்யூனிசத்தின் தொடக்கப் பாடம், மார்க்சியத்தின் அடிப்படை.

மனிதனது கருத்துகளும் நினைப்புகளும் கண்ணோட்டங்களும்சுருங்கச் சொன்னால் மனிதனது உணர்வானதுஅவனது பொருளாயத வாழ்நிலைமைகளிலும் சமூக உறவுகளிலும் சமூக வாழ்விலும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுடனும் மாறிச் செல்வதைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த ஞானம் வேண்டுமா, என்ன?. பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அறிவுத்துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறதுகருத்துக்களின் வரலாறு நிரூபிப்பது இதன்றி வேறு என்னவாம்?” (அறிக்கை)


தந்தை பெரியார்:-
“வேலை நிறுத்தங்கள் ஏற்படும் போது ஒவ்வொரு வேலை நிறுத்தத்திற்கும், சர்க்கார் முதலாளிகளையே ஆதரித்து நிற்கின்றது என்பது ஒருபுறமிருந்தாலும், தொழிலாளிகளை ஒழுங்காக நடத்த யோக்கியமான, பொறுப்பான தலைவர்களுமில்லை என்பதே வேலை நிறுத்தங்களுக்குப் பெருவாரியான தோல்வியும், அதில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்குப் பெரும் தொல்லையும், துன்பமும் ஏற்படுவதற்குக் காரணமாகும்.

இன்றைய சுயராஜ்ய அரசாங்கம் என்பது முதலாளிகள் அரசர்ங்கமேயாகும். “நேருவும், காந்தியாரும், பட்டேலும் முதலாளிகளா?'' என்று சிலர் கேட்கலாம். இப்படிக் கேட்பவர்கள் விஷயமறியாதவர்களே ஆவார்கள். நேருவும், காந்தியாரும், பட்டேலும் முதலாளிகளா அல்லவா என்பது விவகாரத்துக்கிடமானது என்று வைத்துக் கொண்டாலும், இவர்கள் பார்ப்பனர்களால் பிரதிஷ்டை செய்து வைக்கப்படும் கடவுள்களைப் போல் முதலாளிகளால் பிடித்து வைக்கப்பட்ட ஆட்சியாளர்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா? என்று கேட்கிறோம்.
… … …
பிர்லா, பஜாஜ், டாடா, டால்மியா, பம்பாய் மில் முதலாளிகள், வியாபாரிகள் தயவில்லாவிட்டால், இவர்களுக்கு இந்தப் பதவிகள் எப்படிக் கிடைக்க முடியும்? என்பதோடு ஏழை மக்களுக்கும், தொழிலாளிகளுக்கும், 100-க்கு 90 பேர்களான பாமர மக்களுக்கும் இவர்கள் பதவிக்கும் எதாவது சம்பந்தம் ஒட்டு உண்டா என்றும் கேட்கிறோம்.
… … …
பார்ப்பனர்களும், தொழிலாளிகளின் பேரால் தொழில் செய்யாமல் வாழ்க்கை நடத்தும் பொது உடைமைவாதிகள் சமதர்மவாதிகள் என்று சொல்லப்படும் எவ்விதக் காரியார்த்தமான பொறுப்புமில்லாத தியாகிகளாகவும் இருக்கலாம். இந்த நிலையில், தொழிலாளிகளுக்கு என்ன காரியம்தான் நிறைவேற்றிக் கொள்ள முடியும்?

வேலை நிறுத்தங்கள் சதா சர்வ காலம் ஏற்பட்ட வண்ணமாக: இருக்கிறதையும், சர்வ வேலை நிறுத்தமும் பெரிதும் தோல்வியே அடைந்து வருவதையும், தோல்வி மாத்திரமல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களும், அவர்களது மனைவி மக்கள் ஆகியவர்களும், தொல்லையும், துன்பமும் அடைந்து நைந்து கொண்டு இருக்கும் போதும், இதற்குக் காரணம் என்ன? பரிகாரம் என்ன? என்பதைப்பற்றிக் கவனிக்காமல் “இப்படியே செய்து கொண்டு வந்து பெரும் துன்பம் - தொல்லை அடைந்து வந்தால், பின்னால் பொது-ஜன அபிப்பிராயம் பலப்பட்டு முதலாளிகள் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு, ஒரு காலத்தில் திடீர் என்று புரட்சி ஏற்படும்; அப்போது முதலாளிகள் ஒழிக்கப்பட்டு விடுவார்கள். ஆதலால் தோல்வி - துன்பம் - தொல்லை ஆகியவைகளைப்பற்றிக் கவலைப்படாமல் சதா அடிக்கடி வேலை நிறுத்தம் செய்யவேண்டும்'' என்று உபதேசம் செய்துகொண்டே வந்தால், எப்படிப்பட்ட வேலை நிறுத்தத்தினாலாவது தொழிலாளிகளுக்கு அவர்கள் கருதும் விமோச்சனம் ஏற்பட்டுவிடுமா? என்று கேட்கிறோம்.

இந்த உபதேசம் எப்படி இருக்கிறது என்றால், பாதிரிமார்கள் ஏழை மக்களைப் பார்த்து.

“ஓ பரிதாபத்திற்குரிய ஏழை மக்களே! உங்கள் ஏழ்மைத்தனத்தைப்பற்றி நீங்கள் சிறிதும் சிந்தியாதீர்கள்! இந்த ஜென்மத்தில் உங்கள் ஏழ்மையையும், கஷ்டங்களையும் பொறுமையோடு பொறுத்துக் கொண்டு நீங்கள் நாணயமாய்ப் பாடுபட்டுக் கொண்டே வருவீர்களேயானால், பரமண்டலத்தில் இருக்கும் பகவான் இவைகளைக் கவனமாய்ப் பார்த்துக் குறித்து வைத்து மேல் உலகத்தில் அல்லது அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு மேலான வாழ்வை அளிப்பார்! செல்வவான்களைப் பழி தீர்த்துவிடுவார்! அதாவது ஊசியின் காதில் ஒட்டகம் புகுந்தாலும் புகும், இந்தப் பணக்காரன் அதாவது உங்களைக் கசக்கிப் பிழிந்து கொள்ளை அடித்துப் பணம் சேர்க்கும் பணக்காரன், மோட்சத்திற்குப் போகமாட்டான் ஒரு நாளும், ஆனதால், பொறுமையாய் இருங்கள்! செல்வவான்களைப் பற்றிப் பொறாமைப்படாதீர்கள்!!'' என்று உபதேசம் செய்வது போல் இருக்கிறது!

இந்தப் பாதிரிகள் பணக்காரர்களின் ஏஜெண்டுகள் என்பதை ஏழை மக்கள் உணருவதில்லை. அதுபோல்தான் இருக்கிறது இந்த தொழிலாளிகளை “நீ சதா வேலை நிறுத்தம் செய்து துன்பமும், தொல்லையும் அடைந்து கொண்டே வா, ஒரு காலத்தில் புரட்சி ஏற்படும்" என்று இந்தப் புரட்சி வீரர்கள் சொல்லுவதும்.
… … …
இன்றைய வேலை நிறுத்தங்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தூண்டுதலாலும், அல்லது அந்த மனப்பான்மைக்காரரின் முயற்சித் தலைமையாலும் நடைபெறுபவையாகும். பொது உடைமைத் தத்துவம் வேறு, தொழிற்சாலைத் தொழிலாளிகளின் கூலி உயர்வு, சவுகரியத் தேவை சம்பந்தமான வேலை நிறுத்தத் தத்துவங்கள் வேறு.
… … …
இன்றைய கம்யூனிஸ்ட்டுகள், நம் நாட்டில் தொழிலாளர்கள் சங்கத்தாரால் தொழிலாளிகள் சந்தாவினால் இயக்க வேலையையும், சொந்த வாழ்வையும் நடத்துகிறவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு முக்கியம் தங்கள் இயக்க நடப்பும், வாழ்க்கை நடப்பும் நடந்துகொண்டே இருக்கவேண்டியதுதான் முக்கியமே தவிர, தொழிலாளிகளின் இன்றைய லட்சியமான கஷ்ட நஷ்டங்கள், குறைபாடுகள் தீரவேண்டுமென்பது முக்கியமல்ல. வேலை நிறுத்தங்கள் ஏற்படுவதால் கம்யூனிஸ்ட்டுகளுக்கு விளம்பரம் ஏற்படுகிறது என்பதைத் தவிர இதுவரை வேறு தொழிலாளர் நலம் எதுவுமே ஏற்படுவதில்லை.
… … …
பரிதாபத்திற்குரிய தொழிலாள மக்கள், கம்யூனிஸ்ட்டுகள் பேச்சைக் கேட்டுக்கொண்டு, தங்களுடைய முக்கால்பாக எதிரிகளாகிய அரசாங்கத்தை விட்டுவிட்டு, கால் பாக எதிரிகளாகிய முதலாளிகள்மீது தங்கள் முழு பலத்தையும் செலுத்துவது பயனற்றதாக ஆகிவிடுகிறது. தொழிலாளிகளின் எதிர்ப்புச் சக்தி பெரிதும் வீணாகி விடுவதோடு இதில் அரசாங்கம் மிகவும் “யோக்கியமான" நிலையை அடைந்து தொழிலாளிக்கும். முதலாளிக்கும் மத்தியஸ்தம் செய்து சட்டம் சமாதானத்தைக் காப்பாற்றும் "நிருவாகபதி - நியாயாதிபதி"த் தன்மையை அடைந்துவிடுகிறது.

இன்றைய அரசாங்கத்திற்கு இவ்வளவு பலம் வந்ததற்கும், தொழிலாளிகள் விஷயத்தில் அரசாங்கம் இவ்வளவு கேடாக நடந்து கொள்ளும் தைரியம் ஏற்பட்டதற்கும் காரணம், இந்தக் கம்யூனிஸ்ட்டுகளும் இன்று அல்லல்படும் தொழிலாளிகளுமே ஆவார்கள்.

முதலாளி அரசாங்கத்தை எதிர்ப்பவர்களுடனும் தொழிலாளர்களுடைய உண்மையான நண்பர்களுடனும் சம்பந்தம் வைத்துக் கொள்ளாமல், அவர்களை நம்பாமல் தொழிலாளர் சந்தாவில் பிழைக்கும் கம்யூனிஸ்ட்டுகள் முதலியவர்களால் நடத்தப்பட ஏற்றுக் கொள்வதானது மிகமிகப் பயித்தியக்காரத்தனமான கேட்டைத் தேடிக் கொள்ளுவதாகும்.”
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 199/204)

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக