புதன், 11 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 45:-


மே தினம் என்றால் என்ன? (12-05-1935)

(மே தினக் கொண்டாட்டம் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரிக் கொண்டாட முடியாது என்கிறார் பெரியார். இது மிகச் சரியான பார்வையாகும். ஆனால் இதை ஒட்டி அவர் கூறுவது கேள்விக்கு உரியதே!

மேலை நாடுகளில் தொழில் நிலையையும் செல்வ நிலையையும் முன்வைத்து வகுப்புப் போர் (வர்க்கப் போர்) என்று நடத்தப்படுகிறது, ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்படுவது பிறவி நிலைமையைப் பிரதானமாய்க் கொண்டுள்ளதை பெரியார் சுட்டிக்காட்டுகிறார். இதன் மூலம் அவர் என்ன முடிவுக்கு வருகிறார் என்றால், இந்தியாவில் தொழில், செல்வ நிலைமைகளை முன்வைத்துப் புரட்சி செய்யவது முக்கியமானதாய்க் கொள்ளாமல் பிறவி பேதத்தை மாற்ற புரட்சி செய்ய வேண்டும். ஆதலால் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் சாதி கீழ் சாதி என்ற பேதத்தை ஒழிக்கும் புரட்சியே இந்தியாவுக்குப் பொருத்தமானது என்கிறார் பெரியார்.

இந்த மேல் சாதி கீழ் சாதி என்கிற பிறவி பேதம் என்பது தொழில் செய்பவர், வேலை வாங்குபவர் என்கிறதை முன்வைத்து தானே ஒழிய அவர்கள் பிறவி பேதத்தை மட்டும் முன்வைத்தல்ல. தொழிலாளி – முதலாளி அதாவது உழைப்பவர். உழைப்பை வாங்குபவர் என்கிற நிலைமைக்கு எற்ற வடிவம் தான் இந்தப் பிறவு பேதம். அனைத்து நாட்டில் உள்ள தொழில் செய்பவர் வேலை வாங்குபவர் என்கிற போக்கே, இங்கேயும் உள்ளடக்கமாகும். மேலை நாடுகளில் காணப்பட்ட அடிமை முறை என்பது அன்றைய அங்கே காணப்பட்ட வடிவமாகும். உள்ளடக்கம் எங்கேயும் ஒன்றே. பிறவி பேதம் என்பது வடிவம் தான். உள்ளடக்க ஒழிப்பின் மூலமே வடிவத்தை ஒழிக்க முடியும்.

இவ்வாறு பெரியார் நோக்காமல் போனதனால், இந்தியாவில் மே நாள் தொழிலாள முதலாளி என்கிற பேதத்தை ஒழிக்கும் போராட்டமாக இல்லாது பார்ப்பான், சூத்திர என்கிற நிலையை ஒழிப்பதற்கான புரட்சியை முன்வைத்த கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்கிறார்.

மேலும் கூறுகிறார், இன்று நம் நாட்டிலுள்ள பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற கிளர்ச்சி பெரிதும் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியேயாகும். ஆதலால் முதலாளி வாக்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெறும் சாதியாகிய பார்ப்பன சாதியை ஒழிக்க வேண்டும் என்கிறார். பெரியாரே பல இடங்களில் கூறுகிறதைப் போல இந்தப் பார்ப்பன சாதியின் பார்ப்பனப் போக்கு என்பது பணம்படைத்தவர்களின் நலன்களுக்கு உருவானது தான்.

பணக்காரர்களின் தயவில் தான் பார்ப்பனர்கள் வாழ்கின்றனர். பார்ப்பனர்களை அழித்தால், அந்த இடத்திற்கு மாற்றாக வேறுயொருவரை பணக்காரர்கள் உருவாக்கிக் கொள்வர். பணக்காரர்களை அண்டி தான் பார்ப்பனர்கள் பிழைக்கின்றனர். பார்ப்பனர்களை நம்பி பணக்காரர்கள் பிழைப்பு நடத்துவதில்லை. அவர்களின் பிழைப்புத் தொழிலாளர்களைப் பிழிவதில் அடங்கியிருக்கிறது. அவ்வாறு பிழியப்படும் தொழிலாளி எழுச்சி கொள்ளாமல் மட்டுப்படுத்துவது தான் பார்ப்பனர்களின் பணி. இந்தப் பணியை அவர்கள் செய்ய முடியாது அழிக்கப்படுவார்களானால், அந்த இடத்திற்கு மற்றொருவர் மாற்றப்படுவார் என்பதே உண்மை. இதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் அது முதலாளிகளுக்கு அதாவது பணக்காரர்களுக்கே ஆதாயமாக முடியும்.

பணக்காரர்களைவிடத் தாங்கள் தான் பிறப்பில் மேலானவர்கள் என்று பார்ப்பனர்கள் எவ்வளவு கூக்குரல் இட்டாலும். பணக்காரர்களின் தயவில் தான் பார்ப்பனர்களின் வாழ்வு அடங்கியிருக்கிறது.)

தந்தை பெரியார்:-
மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப்படுவதானாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெய்னில் கொண்டாடப்படுவது போல் பிரஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.

அதுபோலவே தான் மேல் நாடுகளில் ஐரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை.

ஏனெனில் ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகின்றது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை.

ஆரம்ப தசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.
… … …
மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும் செல்வ நிலையையும் பொருத்து இருக்கிறார்கள்.

அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி யென்றும் வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகின்றது.

இந்தியாவில்

ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு அடிமைப் படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய்க் கொள்ளாமல் மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும்பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும் செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ புரட்சியோ செய்வது முக்கியமானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்ற கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.

ஏனென்றால் இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும் அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.
… … …
மற்றும் ஜாதி காரணமாகவே, தொழிலாளிகளாகவோ, சரீரப் பிரயாசைப்படும் உழைப்பாளிகளாகவோ இல்லாமலும் சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும்படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக்கிறார்களா இல்லையா என்றும் பாருங்கள்

இந்தியாவில் தொழிலாளி முதலாளி அல்லது எஜமான் அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான் சூத்திரன் பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில் தான் பெரியதொரு கிளர்ச்சியும் புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாட வேண்டியதாகும்.

இந்தியாவில் வகுப்புப் போர் என்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் ஒரு ஜாதியார் 100க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளியாகவும், அடிமையாகவும், ஏழைகளாகவும், மற்றவர்களுக்கே உழைத்துப் போடுகின்றவர்களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப்பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறுவிதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.

இன்று முதலாளி தொழிலாளி என்பதற்கு நாம் என்ன வியாக்கியானம் செய்கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி அந்தஸ்துடன் வாழுவதையும் பாடுபடுகின்றவன் ஏழையாய் இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லுகின்றோம்.

ஆகவே ஜாதியையும் அதற்கு ஆதாரமான மதத்தன்மையையும் அழிக்காமல் வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழிலாளித் தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையை அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.

இந்தியாவில் ஏழை மக்களுக்கு ஆக தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆக பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும் மதத் தன்மையையும் ஒழிக்க சம்மதிக்க வில்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர்களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.
… … …
இந்து மக்களின் மதமும் அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தக் காரணத்தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும், இந்நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லுகின்றேன்.

இந்த முதலாளி தொழிலாளி நிலைமைக்கு வெள்ளையர் கருப்பர்கள் என்கின்ற நிற வித்தியாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் தொழிலாளி முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தியர்கள் கவனத்துக்கு கொண்டு வந்தவர்களே வெள்ளையர்களேயாகும். அந்த முறை மாற்றப்படக் கூடாது என்பதை மதமாகக் கொண்டிருக்கிறவர்களே கருப்பர்களாகும். ஆகையால் இதில் வெள்ளையர் கருப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்பதைத்தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.
… … …
இன்று நம் நாட்டில் உள்ள பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி பெரிதும் தொழிலாளி முதலாளி கிளர்ச்சியேயாகும். இந்தக் கிளர்ச்சியின் பயனாகவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி முதலாளி வகுக்கப்பட்டிருப்பது ஒரு அளவு மாறி வருகின்றது.

இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அனேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும் தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.
(குடிஅரசு – சொற்பொழிவு – 12-05-1935)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 42-47)


                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக