நாலாவது தீர்மானம் கதரைப் பற்றியது. நமது ஜனங்களுக்குக்
கதருக்கும், தேசவிடுதலையாகிய சுயராஜ்யத்திற்கும் என்ன சம்பந்த மென்பதே தெரியாது. சுயராஜ்ய
மென்றால் என்ன என்பதைப் பற்றி நமக்குள் பெரிய அபிப்பிராய பேதமாயிருக்கிறது. நம்மில்
படித்தவர்கள் சுயராஜ்ய மானது நம்மை ஆள்வோர்களால் சீமையிலிருந்து அனுப்பப்படுமெனக் கருதுகிறார்கள்.
நம்மை ஆளுகிறவர்கள் யாரென்பதை நாம் நன்றாய் கவனிக்க வேண்டும். அநேகர் போலீசாரும் கலெக்டரும்தான்
நம்மை ஆளுகிறவர்களென்று கருதுகிறார்கள். சிலர் கவர்னரும், நிர்வாகசபை மெம்பர்களும்,
மந்திரிகளுமென்று கருதுகிறார்கள். வேறுசிலர் வைஸிராயும், பார்லிமெண்டும், இந்திய மந்திரியுமென்று
கருதுகிறார்கள். இவர்களில் யாரும், சுதாவாய் நம்மை ஆளுகிறதில்லை, பின்னையாரென்று கேட்பீர்கள்;
ஐரோப்பாவிலுள்ள வர்த்தகக் கூட்டத்தார் அரசாட்சி
என்கிற பெயரால் நம் நாட்டில் செய்யும் வர்த்தகத்தைத்தான் நாம் அரசாங்கம் என்று கருதி
வருகிறோம்.
ஒரு வியாபாரி எப்படி அயலூரிலுள்ள தன்னுடைய வியாபாரத்திற்குத்
தன்னூரிலிருந்து ஒரு ஏஜண்டை அனுப்பிக் காரியம் பார்க்கச் செய்கிறானோ, அதுபோலவே ஐரோப்பிய
வியாபாரிகள் இந்திய வியாபாரத்திற்கு வைஸிராய் என்ற பெயரால் தங்களது ஏஜண்டு ஒருவரை அனுப்பி
விடுகிறார்கள். அவர் தனக்கு வேண்டிய காரியஸ்தர்களையும், கணக்குப் பிள்ளைகளையும், காவல்காரர்களையும்,
எடுபிடி ஆள்களையும், கவர்னர், நிர்வாகசபை மெம்பர்கள், மந்திரிகள், ஜட்ஜிகள், கலெக்டர்கள்,
தாசில்தார்கள், மாஜிஸ்ட்ரேட்டுகள், டாக்டர்கள், போலீஸ்காரர்கள், பாரஸ்டுகாரர்கள், ஆப்காரி
இலாகாதார்கள் என்கிற பெயர்களால் சிப்பந்திகளாக நியமித்து மேற்சொன்ன தங்கள் வியாபாரத்தை
நடத்துகிறார்கள். இவ்வளவு உத்தியோகஸ்தர்களும், இவர்களுடைய தொழில்களும், ஐரோப்பிய வியாபாரிகளுக்குத்தான்
பொருப்பே தவிர நமக்கு எந்த வழியிலும் ஜவாப்தாரிகளென்று சொல்லுவதற்கில்லை.
உதாரணமாக, ஓர் வைஸிராய் என்ற ஏஜண்ட் புதிதாக இந்தியாவிற்கு
வருவாரேயானால் இந்தியாவிலிருக்கிற ஐரோப்பிய வியாபாரிகளிடம் போய் அவர்கள் நன்மைகளைக்
கவனிக்கத் தானிருப்பதாகவும், அது விஷயத்தில் கவலைப்பட வேண்டியதில்லையென்றும் அவர்களுக்குத்
தைரியம் சொல்லி அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றுத்தான் ஆசனத்தில் அமருவதைப் பார்க்கிறோம்.
இதுமாதிரியே ஒவ்வொரு குட்டி அதிகாரி ஏஜண்டும் அந்த வியாபாரிகளுக்குத்தான் ஜவாப்தாரிகளாயிருப்பதையும்
பார்த்து வருகிறோம்.
இந்த முறையில் அவர்கள் நம் நாட்டில் செய்யும் வியாபாரமென்பது
கேவலம் நம்மிடமிருந்து வரி வசூல் செய்கிறார்களே அது அல்லவே அல்ல. அதனால் அவர்களுக்கு
ஒன்றும் பெரிய லாபம் கிடையாது. தங்கள் வியாபாரத்தின் செலவுக்கு நமது வரிப்பணங்களை உபயோகித்துக்
கொள்ளுவது தவிர அதுவே அவர்களுடைய நோக்கமும் லாபமும் அல்ல. ஆனால், அவர்களுடைய லாபமெல்லாம்
நம்நாட்டு விளைபொருள்களை தங்கள் நாட்டிற்கு
அள்ளிக்கொண்டு போவதும், அவற்றை அங்கு சாமான்களாகச் செய்வதும், அந்தச் சாமான்களை நம்
நாட்டில் கொண்டுவந்து விற்பதும் அவைகளை நாம் வாங்கும்படிச் செய்வதும், அதனால் 100-க்கு
100-ம் சில தருணங்களில் 100-க்கு 1000மும் லாபம் சம்பாதிப்பதுதான் அவர்களின் நோக்கம்.
இந்த வகையாய் அவர்கள் செய்யும் வியாபாரத்தினால் நம் தேசத்திலிருந்து தங்கள் நாட்டிற்கு
அவர்கள் கொண்டுபோகும் செல்வம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களாய் விடுகின்றது. இப்படி
நமது செல்வம் கொள்ளை போவதால் தான் நம் தேசத்தில் வறுமையும், பஞ்சமும், பிணியும் ஏற்படுகிறதே
தவிர வேறுவிதமாகத் தாங்கமுடியாத வரிப்பளுவினா லென்றோ, உத்தியோகமும் அதிகாரமும் இல்லாததினாலென்றோ
மாத்திரம் சொல்லமுடியாது. நம் நாட்டுச் செல்வம் அந்நிய நாட்டிற்குப் போகாத முறையில்
நம்மை யாராண்ட போதிலும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
நம் செல்வங்களெல்லாம்
இப்படிக் கொள்ளை போய்க் கொண்டிருக்க நம்மை நாமே ஆண்டு கொண்டாலும் ஒருக்காலும் அது சுயராஜ்யமேயாகாது.
ஆகையால்தான் மகாத்மா காந்தி அவர்கள் சுயராஜ்ய மென்பதை நம்நாட்டுப் பொருள் வெளிநாட்டுக்குப்
போகக்கூடாதென்பதைத்தான் முதலாவதாகக் கருதுகிறார். அந்நிய நாட்டு சாமான்கள் நமக்கு வேண்டாமென்று
நாம் சொல்லிவிட்டால் அந்நியர்கள் உங்களுடைய தேசம் எங்களுக்கு வேண்டிய தில்லை. அநாவசியமாய்
நாங்களிங்கு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க முடியாதென்று மூட்டை கட்டிக்கொண்டு சவாரி
அடிக்கப் பார்ப்பார்கள். அப்பொழுது நாம் அவர்களைப் பார்த்து அவசரப்படாதீர்கள் இன்னும்
கொஞ்ச காலத்திற்கு இருங்கள்; எங்களுக்குள்ளிருக்கும் தகராறுகளைத் தீர்த்துவிட்டுப்
போங்கள் என்றுதான் சொல்ல வேண்டிவரும்.
ஆகையால் சுயராஜ்யம் பெறுகிற நிலையில் யார் நம்மை
ஆளுகிறார்கள். ஆங்கிலர்கள் என்பதைப் பற்றி நாம் கவலையெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
நம்மையும் நம் தேசத்தையும் யாருடைய சாமான்கள் ஆளுகிறது? நம் தேசத்து ஏழைகளை, தொழிலாளர்களை
எந்த எந்த தேசத்துச் சாமான்கள் பட்டினி போட்டு அவர்களது சுயமரியாதையையும் ஆண்மையையும்
கெடுக்கின்றது என்று யோசித்து அந்தச் சாமான்களை விலக்கி நம் சாமான்களை நம்மை ஆளும்படி
செய்வதுதான் சுயராஜ்யம். இந்த சுயராஜ்யம் சம்பாதிப்பதற்கு முதலாவது நம்மையும் நமது
மானத்தையும் ஆண்டு கொண்டிருக்கிறதும் நம் தேசத்திலிருந்து வருஷம் ஒன்றுக்கு 60, 70
கோடி ரூபாய்க்கு மேலாகக் கொள்ளை கொண்டு நம் நாட்டு ஸ்திரீகளுக்கும், தொழிலாளிகளுக்கும்
வேலையில்லாமல் செய்வதான அந்நிய நாட்டுத் துணிகளுக்குப் பதிலாக நம் நாட்டு ஸ்திரீகளைக்
கொண்டு கைராட்டினத்தால் நூல் நூற்கச் செய்து நம் நாட்டு நெசவாளர்களைக் கொண்டு கைத்தறியால்
நெய்வித்த துணியை நாம் எல்லோரும் உபயோகிப்பதுதான் மகாத்மா அவர்கள் கதர், கதர் என்று
சொல்லுவது.
இந்தக் கதர் மாத்திரம் மகாத்மாவினிஷ்டப்படி நம்மெல்லாராலும்
அங்கீகரிக்கப்படுமேயானால் நம் நாட்டின் தாங்கமுடியாத வரி யென்று சொல்லப்படுகின்ற
150 கோடி ரூபாயில் அரைவாசியாகிய 75 கோடி ரூபாய் நம் நாட்டுக்கு மிகுதியாகி விடும்.
அந்நிய சாமான்களால் நம் நாட்டிலிருந்து போகிற பணம் ரசவாதத்தைவிட அதிக தந்திரமாய்ப்
போய்க் கொண்டிருக்கிறது. 20 கெஜமுள்ள அந்நிய நாட்டு மல் துணியாகிய பீஸை எடைபோட்டுப்
பார்த்தோமேயானால் 2.1/2 இராத்தல் கனம் தான் இருக்கும். அதை வண்ணானுக்குப் போட்டுத்
துவைத்து அதன் பேரிலிருக்கும் கொழுப்பையும், வெள்ளைக் களிமண்ணையும் நீக்கி எடைபோட்டுப்
பார்த்தால் இரண்டு இராத்தல் தானிருக்கும். இந்த இரண்டு இராத்தல் எடையுள்ள இருபது கெஜம்
துணியை நமக்கு விற்பது 15 ரூபாய்க்கு. இதற்காக அந்நிய நாட்டார் நம்மிடமிருந்து வாங்கிக்
கொண்டுபோகும் பஞ்சிற்கு நமக்குக் கொடுப்பது இரண்டு இராத்தல் எடைக்கு 1.1/4 ரூபாய் இந்த
1.1/4 ரூபாய்க்கு நம்மிடமிருந்து பஞ்சு வாங்கிக்
கொண்டு போய்ச் செய்த துணியை நம்மிடமே 15 ரூபாய்க்கு விற்று 13.3/4 ரூபாய் லாபம் சம்பாதிக்கிறார்களானால்
நம் தேசத்தில் இப் பொழுது உபயோகப்படுத்துகிற இவ்வளவு அந்நிய நாட்டுத் துணிக்கும் இன்னும்
மற்ற மருந்துச் சாமான்கள், கண்ணாடி, பீங்கான்கள் முதலிய எண்ணிறந்த சாமான்களுக்கும்
எவ்வளவு பணத்தைக் கொடுத்து நம் தேசம் ஏழையாய்ப் போய்விடுகிறது? அது மாத்திரமல்லாமல்
நம் ஏழைத் தொழிலாளிகள் வேலையில்லாமல் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? ஆகையால் உண்மையாய்
நமக்குச் சுயராஜ்யம் வேண்டுமானால் நம் தேசத்திலிருக்கும் ஏழைகளிடமும் தொழிலாளிகளிடமும்
நமக்கு அன்பிருக்குமேயானால் நாம் ஒவ்வொருவரும் கதர் உடுத்த வேண்டியதும், கதர் உற்பத்திக்கு
வேண்டிய அனுகூலம் செய்யவும் வேண்டியதும்தான்.
(குறிப்பு: 23,24.05.1925, பள்ளத்தூரில் நடைபெற்ற
காரைக்குடி மாவட்ட முதலாவது அரசியல் மாநாடு - நிறைவுரை தொடச்சி)
குடி அரசு -சொற்பொழிவு - 07.05.1925
(தொடச்சி. குடி அரசு - 21.05.1925)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக