புதன், 11 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 35:-


அகில கூட்டுறவாளர்கள் தினம்

ரஷ்யாவின் கூட்டுறவு வாழ்க்கை விபரங்கள்


(ரஷியாவுக்குச் சென்றுவந்த அனுபவத்தின் அடிப்படையில், அந்நாட்டில் கூட்டுறவு சிறப்பாக நடைபெற்றுவருவதைக் கண்ணுற்ற பெரியார் அங்குள்ள நிலைமைகளையும் நம் நாட்டு நிலைமைகளையும் ஒப்பிட்டு பார்க்கிறார். பொதுவுடைமை உற்பத்தி முறையில் உள்ள சமூகத்தின் கூட்டுறவை இங்கே அப்படியே உருவாக்க முடியாது என்பதைப் பெரியார் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

பொதுவுடைமையைப் பேசாமலேயே, எல்லோரும் லாபம் பெறுவோம், அதிக லாபமும் அதிக ஓய்வும் கிடைக்கும் என்று கூறினால் ஒவ்வொரு தனிப்பட்டவர்களையும் ஒன்றுபடுத்திவிடலாம் என்று பெரியார் கருதுகிறார். இது போன்று கருத்துக்களின் மூலம் உணர்ச்சிகளைப் பக்குவப்படுத்திச் சரிப்படுத்தி வைப்பது பற்றிப் பேசுகிறார். தனிவுடைமை சிந்தனை என்ற ரத்தத்தை எடுத்துவிட்டுக் கூட்டுறவுச் சிந்தனைகள் என்ற ரத்தத்தைப் பாய்ச்ச வேண்டும் என்கிறார்.

கம்யூனிச சித்தாந்தத்தின் விஞ்ஞானத் தன்மையைப் பெரியார் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. பொதுவுடைமைச் சமூகத்திற்குத் தேவையான பொருளாதார நிலைமைக் கணக்கில் கொள்ளாது கருத்துவழியில் பேசுவது வரலாற்றியல் பொருள்முதல்வாதத்திற்குப் புறம்பானதாகும். மார்க்சிய வழியிலான பொதுவுடைமை சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கும் அதனை அடைவதற்கும் மார்க்சிய பொருளாதாரம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பற்றிய புரிதல் அவசியமாகும்.)

தந்தை பெரியார்:-

“நான் (கோவாப்ரேடிவ்) கூட்டுறவு சங்கங்கள் என்ற விஷயத்தில் ஆதியில் கொஞ்சம் அக்கரை கொண்டவனாய் இருந்தவன். முதல் முதலாக நம்முடைய சென்னை ரிஜிஸ்ட்ரார் தோழர் ராமச்சந்திரராவும், அதுசமயம் டிப்டி கலைக்டராக இருந்த தோழர் நாராயணசாமி அவர்களும் இங்கு கோவாப்ரேடிவ் ஸ்தாபனம் ஏற்படுத்த முதல் முதல் என்னிடமே வந்தார்கள். எங்கள் வீட்டில்தான் கூட்டம் கூட்டப்பட்டது. பாங்கு புஸ்தகத்தைப் பார்த்தாலும் நான்தான் முதல் பங்குக்காரனாக இருப்பது தெரியவரும். அதற்காகப் பெரிதும் நானும் அந்தக் காலங்களில் உழைத்திருக்கிறேன். என்றாலும் இன்றைய நிலைமையானது நான் கோவாப்ரேடிவ் சொசைட்டிகளிலிருந்து சிறிது விலகி அலக்ஷிய அபிப்பிராயமுடையவனாக இருக்கிறேன். ஏனெனில் எங்கு பார்த்தாலும் கக்ஷியும் சுயநலத்துக்கு ஸ்தாபனங்களை உபயோகித்துக்கொள்வதும் அதன் உத்தேசங்களுக்கு விரோதமாக பணக்காரர்கள் ஆதிக்கம் செலுத்துவதுமாய் இருந்துவருவதேயாகும் “
… … …
ரஷ்யா நாட்டின் கூட்டுறவு முறைகளைப்பற்றி பேசுபவன் என்று உங்களுக்கு தலைவர் எடுத்துச்சொன்னார். சர்வ விஷயத்திலும் ஐக்கிய பாவமான கூட்டுறவு முறையானது சாத்தியப்படுமா என்று ஒருகாலத்தில் கருதி இருந்தேன். ஆனால் எனது மேல்நாட்டு அனுபவங்களினால் அதிலும் குறிப்பாக ரஷ்யாவின் கூட்டுறவு முறைகளைக் கவனித்துப் பார்த்ததினால், கூட்டுறவு முறையைப் பற்றிய எனது எண்ணம் சாத்திய மாகக் கூடிய தென்பது மிக்க பலமாக உறுதிப்பட்டது.

என்னைப் பொறுத்தவரையில் என்னைப்பற்றி யார் என்ன நினைத்துக் கொண்டிருந்தபோதிலும் எனது முடிவான லக்ஷியம் அதாவது எனது எண்ணம் ஈடேறுமானால் அது உச்சஸ்தானம் பெற்ற உயரிய கூட்டுறவு வாழ்க்கை முறையாகத்தானிருக்கும் என்பதுதான் என் அபிப்பிராயம். கூட்டுறவு என்கிற உயரிய சரியான நிலையானது, நம்முடைய நாட்டில் ஏற்பட்டுப்போனால் ஜனசமூகமானது கவலையற்று சஞ்சலமற்று நாளைக்கு என் செய்வோம் என்று ஏங்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலைமையற்று நிம்மதியாக சவுக்கியமாக குதூகுலமாக வாழவழி ஏற்பட்டுவிடும்.
… … …
கூட்டுறவு வாழ்க்கையென்றால் பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது எவ்வாறு உதவி செய்வது என்கிற விஷயங்களே நமது வாழ்க்கையின் முக்கிய லக்ஷியமாய் இருக்கவேண்டும். என்பதாகும். இவைகளில் தனித்தனி மனிதனைப்பொறுத்த தத்துவம் என்பதே கூடாது.
… … …
நம்முடைய நாட்டில் அளவுக்கு மீறிய செல்வச் செருக்கு கொண்டவர்களையும் கல்நெஞ்சம் படைத்த கணத்த முதலாளிமார்களையும் ஒரு பக்கத்தில் வெகு பந்தோபஸ்தாய் வைத்துக் கொண்டிருக்கின்றோம். மற்றொரு பக்கத்தில் வேலையில்லாத்திண்டாட்டக்காரர்களையும் பிச்சைக்காரர்களையும் வைத்துக் கொண்டிருக்கிறோம். இவைகளெல்லாம் ஏன் இப்படி இருக்கிறது? இது போன்ற நிலைமை ரஷ்யாவில் இல்லையே! ஆதிக்கக்காரனுக்கும் ஆதிக்கத்திற்கும் கொஞ்சமாவது இடமிருக்கிறவரையிலும் தொல்லைப்படுகிறவர்களும் தொல்லையும், தரித்திரமும், ஏழ்மையும் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்யும்.
… … …
ஒவ்வொரு தனிப்பட்டவனையும் ஒன்றுபடுத்தி நீயும் வா எல்லோரும் ஒரு காரியத்தை செய்வோம். எல்லோரும் லாபம் பெறுவோம். அதிக லாபமும் அதிக ஓய்வும் எடுத்துக்கொள்ளும் என்று ஏன் கூட்டுறவுத்தன்மையை பிரவேசிக்கக்கூடாது?

இம்முறைகள் என்றைக்காவது தலைதூக்கிதான் ஆகவேண்டும். இதற்காக பொதுவுடமை வேண்டுமா? பொதுவுடமை பேச்சே வேண்டிய தில்லை. ஆனால் இன்றே கூட்டுறவு தன்மையைக் கைப்பற்றுங்கள், வட்டி விஷயத்திலும் பாங்குகளில் ஏராளமான ரூபாய் தூங்குகிறது.
… … …
நமது சரீரத்தில் கஷ்டம் ஏற்பட்டால் நமக்கென்னவென்று நாம் இருப்போமா? அதுபோல் நமது உணர்ச்சிகள் இருக்கவேண்டும். சிப்பியானது திறந்திருக்கும் பொழுது மழை ஜலம் விழும்போது தான் முத்தாகிறது. அதுபோல் தான் நமது உணர்ச்சிகள் பக்குவப் படுத்தி சரிப்படுத்தி வைத்துக்கொண்டு தயாராகவே இருக்க வேண்டும். அப்பொழுது கண்டிப்பாக பலன் ஏற்பட்டுவிடும். நம்முடைய அபிப்ராயந்தான் ஜனசமூக அபிப்பிராயம் என்று தன்நம்பிக்கையுடன் நாம் வேலை செய்யவேண்டும். நமது உடலில் பழைய தனித்தனித் தத்துவ இரத்தத்தை எடுத்துவிட்டுக் கூட்டுறவுத் தன்மை என்ற இரத்தத்தைப் பாய்ச்ச (Inject) செய்யவேண்டும். இது நம்மால் முடியுமா? என்று இருக்கக்கூடாது. கண்டிப்பாய் இது முடியாமல் போய்விடாது.”
(குடி அரசு - சொற்பொழிவு - 12.11.1933)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 175------186)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக