புதன், 11 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 37:-


ஜவார்லாலும் பொது உடமையும்

(பலாத்காரச் செயலில் பிரவேசமில்லாமல் பலாத்காரத்தைப் பிரசாரம் செய்யாமல் பொதுவுடமைத் தத்துவம் ஏற்படப் பிரசாரம் செய்வதில் எவ்வித தப்பிதமும் இல்லை என்பதே நமது அபிப்பிராயம் என்கிறார் பெரியார். உலகச் செல்வங்களான பொருட்களும், பூமியும் பொதுஜனங்கள் எல்லோருக்கும் சொந்தம் என்கின்ற பொதுவுடைமைக் கொள்கையானதை குற்றமானது என்று எந்த அரசாங்கமும் கூறவில்லை என்கிறார். பணக்காரரிடம் உள்ள பொருளும், பூமியும் தாங்கள் பாடுபட்டதால் தான் சேர்ந்தது, அதனால் பொதுஜனம் எல்லோருக்கும் அதில் அனுபவமும் ஆதிக்கமும் வேண்டும் என்று சொன்னால், அதற்கான சட்டங்கள் செய்ய வேண்டும் என்று சொன்னால் இது எந்தச் சட்டம்பபடி குற்றமாகும்? என்று பெரியார் கேட்கிறார்.

மேலும் உயர்நிலையில் இருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்படலாம், எதிர்ப்பும் ஏற்படலாம், இது இயற்கையாகும். இப்படிப்பட்ட அதிருப்திகள் எதுவும் நீடித்து நிற்காது, ஒரு அரைத் தலைமுறைக்குள் அவ்வதிருப்திகள் மறைந்துவிடும். இது உலகச் சுபாவம், வாழ்க்கை முறை என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் ஏற்பட்டுவிடும். ஆதலால் இதற்காக யாரும் பயப்பட வேண்டியதில்லை. பின்வாங்கவும் வேண்டியதில்லை என்று உறுதி கூறுகிறார்.

வர்க்க சமூகத்தின் ஆதிக்கத்தைப் பெரியார் புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது. வர்க்க சமூகம் பெரியார் நினைப்பது போல் சும்மா இருந்திடாது என்பதே வர்க்க போராட்ட வரலாறு சொல்லும் பாடமாகும். இந்த வரலாற்றைப் பெரியார் புரிந்து கொள்ளாதனால் தான் பலப்பிரயோகம் பற்றிய தவறான முடிவுக்கு வந்துள்ளார்.)

தந்தை பெரியார்:-

“பொதுவுடமை” என்பதுபற்றி யாரும் பயப்பட வேண்டியதில்லை. எந்த அர்த்தத்தில் பொதுவுடமையை எடுத்துக்கொண்டாலும் அதற்கு எப்படிப்பட்ட வியாக்கியானம் செய்வதாயிருந்தாலும் பலாத்காரச் செயலில் பிரவேசமில்லாமல் பலாத்காரத்தைப் பிரசாரம் செய்யாமல் பொதுவுடமைத் தத்துவம் ஏற்பட பிரசாரம் செய்வதில் முயற்சி செய்வதில் எவ்வித தப்பிதமும் இல்லை என்பதே நமது அபிப்பிராயம். இதை சென்ற வருஷமே தெரிவித்து இருக்கிறோம். அதற்குப் பிறகு பல அரசாங்க உயர்தர நீதிஸ்தல தீர்ப்பு களும் தாராளமாய் இருக்கின்றன.
… … …
அன்றியும் உலக செல்வங்களான பொருள்களும், பூமிகளும் பொது ஜனங்கள் எல்லோருக்கும் சொந்தமாக்கப்பட்டு அவற்றின் பலன்கள் எல்லோருக்கும் பொதுவாக சரிசமமாக இருக்கும்படி செய்வதையும் அதற்கு ஏற்றதொரு ஆட்சியை ஏற்படுத்தி நடத்துவதில் பொதுஜனங்கள் எல்லாருக்கும் உரிமை இருக்கும்படி செய்வதும் ஆன பொதுவுடைமைக் கொள்கையானது குற்றமானது என்பதாக இதுவரை எந்த அரசாங்கமும் கூற வில்லை. மேலும் உலகிலுள்ள எல்லா அரசாங்கங்களும் இக்கொள்கை யைப் பிரசாரம் செய்ய அந்தந்த நாடுகளில் இடம் கொடுத்தே வருகின்றன.
… … …
அதுபோலவே தான் ஒரு தனி மனிதன் எந்தக் காரணத்தினாலேயோ செல்வங்கள் தன் கைக்கு வரும்படியான முறைகள் செய்து நாட்டு மக்கள் பாடுபட்டு உழைக்கும் பயன்கள் தனக்கு வந்து சேரும்படியான ஏற்பாடு செய்து அதன் மூலம் ஒருவன் பொருளும், பூமியும் சேர்த்துப் பணக் காரனாகிவிட்டால் அந்தச் செல்வத்தைப் பொது ஜனங்கள் பார்த்து “அது எங்களுடைய செல்வம், நாங்கள் பாடுபட்டதால் நீ சேர்த்துக்கொள்ள முடிந் தது. ஆதலால் எங்கள் எல்லோருக்கும் அதில் அனுபவமும் ஆதிக்கமும் இருக்க வேண்டுமென்று சொன்னால், அல்லது அதற்கேற்ற சட்டங்கள் செய்ய வேண்டுமென்று சொன்னால் இது எந்த சட்டப்படி குற்ற மாகும்? இதை யார் எப்படி ஆக்ஷேபிக்க முடியும்? என்பது நமக்கு விளங்கவில்லை.
… … …
ஆனால் இப்படிப்பட்ட காரியங்களால் உயர்நிலையில் இருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்படலாம். அதனால் எதிர்ப்பும் ஏற்படலாம். இவை யும் இயற்கையேயாகும். அப்படிப்பட்ட அதிருப்திகள் எதுவும் நீடித்து நிற்காது. ஒரு அரைத் தலைமுறைக்குள் அவ்வதிருப்திகள் மறைந்து விடும்.

பிறகு உலக சுபாவமே - வாழ்க்கை முறையே இப்படித்தான் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் ஏற்பட்டுவிடும். பிறகு அதிருப்தியோ எதிர்ப்போ ஆன காரியங்களுக்கு இடமே இருக்காது. ஆதலால் இதற்காக யாரும் பயப்பட வேண்டியதில்லை. பின் வாங்க வும் வேண்டியதில்லை.
(புரட்சி - தலையங்கம் - 17.12.1933)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 198------201)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக