செவ்வாய், 3 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 30:-


பொது உடமை

“பெரியார் 1933ஆம் ஆண்டுகளில் பொதுவுடைமை என்பதை எவ்வாறு கருதினார் என்பதை இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது. கூட்டுக்குடும்பம் போன்ற ஒரு சமூகக் குடும்பமாகப் பொதுவுடைமையைக் கருதினார். ஆகவே இப்படிப்பட்ட பொதுவுடைமைக் கொள்கையை எதிர்ப்பதற்கு நியாயமான ஒரு காரணமும் இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்.

அத்வைத வேதாந்தத்தோடு பொதுவுடைமைக் கொள்கையைச் சமப்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது. வேதாந்தக் கொள்கைக்குப் பொதுவுடமைத் தத்துவம் எவ்விதத்திலும் விரோத மானதல்ல என்ற பெரியாரின் கருத்து மேலும் ஆச்சரியப்படுத்துகிறது. அத்வைதத்தின் ஆத்ம ஒருமையையும் மார்க்சியத்தின் பொருளாயத ஒருமையையும் பெரியார் வேறுபடுத்திப் பார்க்க முடியாதவராய் இருந்துள்ளார்.

பொதுவுடைமைக் கோட்பாட்டிற்கு விரோதனவர்களாக அரசர், பாதிரி, குரு. முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், மேல்ஜாதிக்காரன் போன்றவர்களைக் குறிப்பிட்டு, இப்படிப்பட்டவர்களின் ஆட்சேபனைகளை லட்சியம் செய்ய வேண்டியதில்லை என்று கூறிவிடுகிறார்.

மேலும் இப்படிப்பட்டவர்கள் சாவதானமாக நல்லறிவைக் கொண்டு யோசித்துப் பார்த்தால் தங்களுக்குப் பொதுவுடைமைக் கோட்பாடு கெடுதியில்லை என்பதை உணருவார்கள் என்பதாகப் பெரியார் கூறியுள்ளார்.

வாழ்க்கையில் கவலையும் துக்கமும் இல்லா ஒரு நிலையைப் பகுத்தறிவுள்ள மனிதர்கள் வெறுக்கவோ மறுக்கவோ முடியாது என்பதே பெரியாரின் முடிபாக இருக்கிறது. ஒருவருக்குப் பொதுவுடைமைச் சிந்தனை ஏற்படப் பகுத்தறிவு போதுமானதாகக் கருதியுள்ளார். வர்க்க சார்பைப் பற்றிப் பெரியார் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

தனிச்சொத்துடைமை அடிப்படையில் சமூகம் வர்க்கமாய்ப் பிளவுபட்டு நெடுங்காலமாய் நீடிக்கும் போது வெறும் நல்லறிவைக் கொண்டோ, பகுத்தறிவைக் கொண்டோ இந்தப் பொதுவுடைமைக் கோட்பாட்டை ஆதிக்கவாதிகள் ஏற்றுக் கொள்ள முடியாது.

பெரியாரின் வர்ணப் பேராட்டம் கம்யூனிஸ்டுகளின் வர்க்கப் போராட்டத்திற்கு மாற்றாகவோ, துணையாகவே இருக்காது என்பது தெளிவு.”

தந்தை பெரியார்:-
பொது உடமை என்கின்ற வார்த்தையானது மக்களின் காதுகளில் படும்போதே அது ஒரு பயங்கர சப்தம்போல் கருதப்படுகின்றது.
… … …
பொதுஉடமை என்னும் வார்த்தையானது அது பற்றிய ஆராய்ச்சியே இல்லாத காரணத்தாலும் சுயநலத்தின் காரணமாய் அவ்வார்த்தைக்கு எதிராகவே பிரசாரங்கள் நடைபெறுவதாலும் பொது ஜனங்களுக்கு பொது உடமை என்றால் வெறுப்பாயும், பயமாயும் தப்பிதமாயும் தோன்றலாம். எந்தப் புதிய கொள்கையும், அபிப்பிராயங்களும் ஆரம்பகாலத்தில் பாமர மக்களிடை வெறுப்பாகவும் கஷ்டமாகவும்தான் தோன்றும்.
… … …
பொது உடமை என்பது ஒரு குடும்பத்தில் உள்ள சொத்துக்கள், வரும்படிகள், தொழில்கள், லாபநஷ்டங்கள், இன்ப துன்பங்கள், போகபோக்கியங்கள், பொறுப்பு கவலைகள் முதலாகியவைகள் எல்லாம் எப்படி அக்குடும்ப மக்களுக்கு பொதுவோ அதுபோல் தான் ஒரு கிராமத்திலோ, ஒரு பட்டணத்திலோ, ஒரு மாகாணத்திலோ, ஒரு தேசத்திலோ, ஒரு கண்டத்திலோ, ஒரு உலகத்திலோ உள்ள மேற்கண்டவைகள் எல்லாம் ஆங்காங்குள்ள அவ்வளவு பேருக்கும் பொதுவானது என்பதாகும். சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் பொது உடமைக் கொள்கையின் கட்சி லட்சியம் உலகம் பூராவும் ஒருகுடும்பம். உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள். உலகத்தில் உள்ள செல்வம் இன்பம் போகபோக்கியம் முதலியவை எல்லாம் அக் குடும்ப சொத்து. குடும்பமக்கள் (உலகமக்கள்) எல்லோருக்கும் அக்குடும்ப சொத்தில் (உலகசொத்தில்) சரிபாகம் என்கின்ற கொள்கையேயாம். ஆகவே பொது உடமை என்பது ஒரு கணக்குப் பிரச்சினை (Mathematic Problem) ஆகும்.

ஆகவே இப்படிப்பட்ட கருத்துக்கொண்ட பொது உடமைக் கொள்கையை வெறுக்கவோ, எதிர்க்கவோ நியாயமான முறையில் யாதொரு காரணமும் இருப்பதாய் நமக்குத் தோன்றவில்லை.

ஆனால் சகோதரனுடைய பங்கை மோசம் செய்து சகோதர துரோகத் தின்மூலம் அதிகப் பங்கை ஆசைப்படுகிற மனப்பான்மை உள்ளவனும், குடும்ப வேலைகளில் தனக்குள்ள சரிபாகப் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்ளாமல் மற்ற சகோதரர்களையே அதிகமாய் உழைக்கச் செய்து தான் சோம்பேரியாய் இருந்து அதிகப்பங்கை அடைந்து மற்றவர்களுக்கு போதுமான அளவு கூலி கொடுக்காமல் வஞ்சித்து ஏமாற்ற வேண்டும் என்கின்ற தான மனப்பான்மை உள்ளவனும்தான் பொதுவுடமைக் கொள்கையை வெறுக்கவும் எதிர்க்கவும் கூடும்.

நிற்க, மற்றொரு விதத்திலும் பொதுவுடமைத் தத்துவம் என்பது எல்லா ஜனங்களாலும் மதிக்கத்தக்கது என்கின்றதான வேதாந்த தத்துவம் என்பதும் ஆகும். எப்படியெனில் எல்லா சரீரத்திலும் வசிக்கும் ஆத்மா ஒன்றே என்றும், எப்படி ஒரே சூரியன் பதினாயிரம் குடம் தண்ணீரில் பதினாயிரம் சூரியனாகக் காணப்படுகின்றதோ அதுபோல் கோடானு கோடி ஜீவராசிகளினுள்ளும் கோடானகோடி ஆத்மாவாகக் காணப்படுகின்றது என்று சொல்லப்படுகின்றது. ஆதலால், ஒவ்வொரு சரீரத்திலும், வெவ்வேறு ஆத்மாவாக இருக்கின்ற தென்றோ ஒவ்வொரு ஆத்மாவுக்கும் வெவ்வேறு வித சைதன்னிய அதாவது ஞானமோ, வேற்றுமை உணர்ச்சியோ இல்லை என்கின்ற தத்துவமே வேதாந்தமாகும். ஆதலால் அப்படிப்பட்ட வேதாந்தக் கொள்கைக்கு பொதுவுடமைத் தத்துவம் எவ்விதத்திலும் விரோத மானதல்ல.
… … …
ஆனால் யாருக்கு விரோதமாகவும், ஆட்சேபிக்கத்தக்கதாகவும் கெடுதி தரத்தக்கதாகவும் இருக்கும் என்று பார்ப்போமேயானால் சுயநலம் கொண்ட மக்களாகிய சக்கிரவர்த்தி, அரசர், பாதிரி, குரு. முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், மேல்ஜாதிக்காரன் (பார்ப்பான்) என்று சொல்லப்படு பவர்களுக்கும் இவர்களுக்கு கூலிகளாய் இருப்பதினாலேயே உயர்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்களுமான மக்களுக்கும் ஆட்சேபனையாய் இருக்கலாம். இவர்களுடைய ஆட்சேபனைகளை நாம்லட்சியம் செய்ய வேண்டியதில்லை.
… … …
கடைசியாக குருமார்கள், பாதிரிமார்கள் என்று சொல்லுகின்ற கூட்டத்தார்களின் யோக்கியதைகளும் அறிஞர்கள் உணர்ந்ததேயாகும். எப்படியெனில் குரு, பாதிரி, முல்லா, புரோகிதர்கள் என்கின்ற கூட்டத்தார்கள் அரசர்கள், செல்வவான்கள், சோம்பேரிகள் ஆகியவர்களுடைய லைசென்சு பெற்ற கூலிகளேயாவார்கள். இவர்களுடைய உழைப்பின் பயன் எல்லாம் அரசர்களுக்கும், செல்வவான்களுக்கும், சோம்பேறி கூட்டத்தார்களான மதப் பாஷாண்டிகளுக்குமே பயன்படத்தக்கதாதலால் இவர்களது அதிருப்தியைப் பற்றியோ, அழுகையைப் பற்றியோ, நாம் சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை.

இருந்தபோதிலும் இந்த கூட்டத்தாரும் சாவதானமாய் இருந்து நல்லறிவைக் கொண்டு யோசித்துப் பார்ப்பார்களானால் பொதுவுடமைத் தத்துவம் என்பது தங்கள் கூட்டத்தாருக்கும் கெடுதி இல்லை என்பது விளங்கும்.
… … …
மத சம்மந்தமான ஆதாரங்களில் காணப்படும், மோட்சத்திற்கும், முத்திக்கும் சொல்லப்படும் கருத்தெல்லாம் கவலையும், துக்கமும் அற்ற தன்மை என்று தான் சொல்லப்படுகின்றதே ஒழிய மற்றபடி வேறு ஒரு லோகத்தில் போய் வெல்வெட்மெத்தையில் சதா தூங்கிக் கொண்டிருப்பது என்று சொல்லப்படவில்லை. ஆனால் இப்படி எங்காவது ஒன்று இரண்டு இடத்தில் சொல்லப்படுவதாய் சொல்லப்பட்டாலும் அது புரோகிதர்களுடையவும், முல்லாக்களுடையவும், பாதிரிகளுடையவும் கூட்டத்தாரின் வயிற்றுப் பிழைப்புக்காகக் கற்பித்துக் கொண்ட புராணப்பிடுங்கல் கற்பனை என்பதை எல்லா தத்துவ ஜன அறிஞர்களும் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். ஆகையால் பகுத்தறிவுள்ள மனித ஜீவர்கள் வாழ்க்கையில் கவலையும் துக்கமும் இல்லாத ஒரு நிலையை ஒருநாளும் வெறுக்கவோ, மறுக்கவோ முடியவே முடியாது.

ஆகவே பொது உடமை என்பது பொது மனித தர்மமென்றும் சகோதரத் தன்மையும், சமத்துவத் தன்மையும் கொண்டதென்றும் வேதாந்த தத்துவத்துக்கும், ஆஸ்திகத்தன்மைக்கும் தத்துவத்துக்கும் ஏற்றது என்றும் மதத் தலைவர்களுக்கும் தேசியத்துக்கும், நீதிக்கும், பகுத்தறிவுக்கும் ஒத்ததென்றும் அரசர்களுக்கும் செல்வவான்களுக்கும் பாதிரிப் புரோகிதக் கூட்டங்களுக்கும் நன்மை பயக்கக்கூடியதென்றும் பொது உடமைத் தத்துவ மேதான் மோட்ச நிலை என்பதும் முத்திநிலை என்பதுமாகும் என்றும் ஒருவாறு சுருக்கமாய் விளக்கிக்காட்டியிருக்கிறோம்,…”
(குடி அரசு - தலையங்கம் - 10.09.1933)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 143------149)
                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக