மே தினமும் திராவிடர் கழகமும் – தந்தை பெரியார்
(பாட்டாளிகளுக்கே பாராளும்
உரிமை உண்டு என்பதை வற்புறுத்திய ஓர் இயக்கம் என்றால் அது ஒரே ஒரு திராவிடர் இயக்கந்தான் என்று பெரியார்
1948 ஆண்டு அடித்துச் சொல்லுகிறார். 1973 வரை பெரியாரின் நடவடிக்கையினாலும், அதனைத்
தொடர்ந்து திராவிடர் இயக்க நடவடிக்கையினாலும்
பாட்டாளிகளுக்கு அரசாளும் நிலை ஏற்பட்டுள்ளதா? அதற்கான படிநிலை வளர்ச்சியில் தொடர்க்க
நிலையையாவது தொடப்பட்டுள்ளதா? பார்ப்பனிய எதிர்ப்பைத் தொடர்வதைத் தவிர எதேனும் முன்னேற்றம்
கண்டுள்ளதா?
48ஆம் ஆண்டு மாரியம்மன் திருவிழா, 50ஆம் ஆண்டு ஜயப்பன் விழா,
ஒவ்வொரு மாதமும் பிரதோச விழா இது போன்ற விழாக்கள் குறைபடாது கூடிக் கொண்டே செல்கிறது.
இது பற்றிய விமர்சனம் நம் நாட்டு கம்யூனிஸ்டுக்
கட்சியின் மீதும் திராவிடர் கழகம்
மீதும் வைப்பதைத் தவிர்க்க முடியாது. வர்ணப் போராட்டத்தை நடத்தும் திராவிடர் கழகமும்
வர்க்கப் போராட்டத்தை நடத்துவதாகச் சொல்லும் கம்யூனிஸ்டுக் கட்சிகளும் சுய பரிசீலனை
செய்ய வேண்டும்.
திராவிடர் கழகம் தமது போராட்டத்தை வர்ணத்துடன் நிறுத்திக் கொள்ளாது
வர்க்கப் போராட்டத்துடன் இணைக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் என்று கூறிக் கொள்பவர்கள்
தங்களை இயக்கவியல் பொருள்முதல்வாதிகளாகச் செழுமைப்படுத்துவது இன்றைய அவசியமாகும்.
கம்யூனிஸ்டுகள் பொருள்முதல்வாதப் பார்வையில் சாதி, மதம் போன்றவற்றைத்
தீவிரமான விமர்சனத்தை வைக்க வேண்டும். அத்வைத மார்க்சியம், வைணவ மார்க்சியம், சைவ மார்க்சியம்,
சித்தர் மார்க்சியம் போன்ற போக்குகளைப் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் விமர்சிக்காததில்
கம்யூனிஸ்டுகளின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது. இன்றைய தடுமாற்றம் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு
சிறுதும் உதவாது. கம்யூனிஸ்டுகள் பொருள்முதல்வாதிகளாகச் செழுமைப்பட்டு அதன் அடிப்படையில்
செயற்பவோம்.
அப்போது தான் மதம் பற்றிய பகுத்தறிவுவாதக் கண்ணோட்டத்திற்கும்,
இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திற்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாக்க முடியும்.
அதன்படி, அவரவர் அதனதன் வழியில் பயணிக்க முடியும்.)
தந்தை பெரியார்:-
“வர்க்க ரீதியான போராட்டம் என்ற பெயரால், தொழிலாளி
- முதலாளி ஆகிய இருவருடைய இருவேறான நிலையையும் அழிந்துபடாமல் காப்பாற்றி, தொழிலாளி
தொழிலாளியாகவே பிறந்தான்; தொழிலாளியாகவே வாழ்வான்; தொழிலாளியாகவே சாவான். அதற்கு நாங்கள்
கியாரண்டி, ஆனால் தொழிலாளிக்குக் கூலி உயர்வு கொடு! என்று முதலாளிகளிடத்தில் ஒப்பந்தம்
செய்து கொண்டு தொழிலாளர்களிடத்தில் பேரம் பேசும் இந்தியக் கம்யூனிட்டுகளை இந்த ஒப்பந்தத்திற்காக அல்லது முதலாளிக்கும் தொழிலாளிக்கும்
இடையேயுள்ள தரகர்களான தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காகப் பல ஏழைக்குடும்பங்கள் பட்டினி
கிடந்து பலர் சோத்துக்கில்லாமலும், துப்பாக்கி முனையாலும், செத்துமடிய காரணகர்த்தர்களாக
இருக்கும் இந்தியக் கம்யூனிடுகளைத் தீவிரமாகக் குறை சொல்லும் சமதர்ம வீரர்களின் யோக்கியதைதான்
என்ன? கம்யூனிஸ்டுகளைவிட இவர்களின் நடத்தை, நாணயம் எந்த வகையில் மேம்பட்டு விட்டது
என்று சொல்லி விட முடியும்?
வருணாசிரம முறையை அழித்தொழிக்க மனதாலும் எண்ணாதவர்கள்:
மக்கள், மாக்கள் என்ற தத்துவத்தை அழித்து அதாவது மக்களுக்குள் சமவுரிமையை ஒப்புக்கொள்ளாது
அதற்கு விரோதமாக இருக்கும் சாஸ்திரம், சட்டத்தைக் குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசாதவர்கள்;
அவனியின் போக்குக்கு ஆண்டவர்களும், ஆண்டவர்களின் அருள் பெற்ற ஞானிகளும், ரிஷிகளும்
வழிகாட்ட வேண்டுமென்று எண்ணுகிறவர்கள், பேசுகிறவர்கள்; மூடநம்பிக்கையும், மூடப்பழக்க
வழக்கங்களும் தொழிலாளர்களிடையே அழியாமல் குலையாமல் அப்படியே இருக்க வேண்டுமென்று விரும்பி
அதை நாகரிகம் என்ற போர்வையைப் போர்த்திக் கையாண்டு வருகின்றவர்கள்; சுருக்கமாகத் தொழிலாளி
தொழிலாளியாகவே இருக்க வேண்டுமென்று நம்பி அதற்கான வழிகளிலே காரியம் செய்யக் கூடியவர்கள்;
என்று சொல்லக் கூடிய அளவில்தான், இந்தியக் கம்யூனிஸ்டுகளும், இந்திய சோஷியலிஸ்டுகளும்
நடைமுறையில் செய்துகொண்டு வருகிறார்கள்
…
… …
விஞ்ஞான ரீதியில் பகுத்தறிவைத் துணைகொண்டு பாடுபடும்
பாட்டாளிக்கே பாராளும் உரிமையும், பாங்குடன் வாழும் உரிமையும் உண்டு என்பதை வற்புறுத்தும்
ஓர் இயக்கம் உண்டு என்றால், அது ஒரே ஒரு திராவிடர் இயக்கந்தான் என்பதை மே தின விரும்பிகளுக்கு
நாம் ஞாபகமூட்டுகிறோம்.”
('குடிஅரசு' - தலையங்கம் - 01.05.1948)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 215/216)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக