புதன், 11 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 36:-


புரட்சி

(ஆங்கில அரசு “குடிஅரசு” பத்திரிகைக்கு நெருக்கடி கொடுக்கும் போது அதனை நிறுத்தவிட்டு “புரட்சி” என்ற பெயரில் புதிய பத்திரிகையை பெரியார் தொடங்கினார்.

இந்த நெருக்கடிக்கு காரணமாக முதலாளி வர்க்க ஆட்சிக்கு காவலாளியான பாதிரி வர்க்கத்தை குறிப்பிடுகிறார். முதலாளி வர்க்கம் பாதிரி வர்க்கத்தன் அடிமையாக இருப்பதனால் பாதிரி வர்க்கத்தை ஒழித்தால் தான் முதலாளி வர்க்கத்தை அழிக்க முடியும் என்கிறார். பாதிரி வர்க்கத்தை ஒழித்தால் வேறொரு காவலாளியைத்தான் முதலாளி வர்க்கம் உருவாக்குமே தவிர அழிந்து போகாது. பிரச்சினையின் வேரில் இருந்து பெரியார் பார்க்காது வடிவத்துடனேயே போராடுகிறார். உள்ளடக்கம் அப்படியே இருக்க ஒரு வடிவத்தை நீக்கினால் அந்த உள்ளடக்கம் தமக்குத் தேவையான வேறொரு வடிவத்தை உருவாக்கிக் கொள்ளும்.

பெரியாரே குறிப்பிடுவது போல் மதமே உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவிடுகிறது. அவ்வளவு தான். உதவிடும் இந்த சக்தியை அழித்தால், அதற்கு மாற்றாக வெரொரு சக்தியை முதலாளித்துவம் உருவாக்கும். உள்ளடக்கமே வடிவத்தை தோற்றுவிக்கிறது, வடிவம் உள்ளடக்கத்தை தோற்றுவிப்பதில்லை.

வடிவத்துடனான போராட்டம் தொடர்வதால் உள்ளடக்கம் அழியப் போவதில்லை. உள்ளடக்கம் அழியாமல் வடிவத்துடனானப் போராட்டம் என்பது உள்ளடக்கத்தை நீடித்து இருக்கவே உதவிடும்.

இந்தப் “புரட்சி”ப் பத்திரிகை ஆங்கில வெள்ளை முதலாளிகளை ஒழித்து இந்திய கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலையை செய்யவில்லை. அனைத்து முதலாளி வர்க்கத்தை அடியோடி அழிப்பதற்கே இந்தப் “புரட்சி”  பத்திரிகை தோன்றியது என்று பெரியார் வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஆனால் பூணுல் பார்ப்பனர்களையும், அங்கி பாதிரிகளையும் அழிப்பது பற்றியே பேசிவருகிறார். இவர்கள் இருவரையும் அழித்தால் கருப்பு முதலாளிகளும் வெள்ளை முதலாளிகளும் அழிந்து போவார்கள் என்று கூறியுள்ளார். மத பிரச்சாரகர்களை அழிப்பதனால் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கம் அழியப் போவதில்லை. முதலாளித்துவ வர்க்கத்தின் மீதான நேரடி போராட்டத்தின் மூலமே அதற்கு உதவிடும் சக்திகளின் அழிவும் அடங்கியிருக்கிறது.)

தந்தை பெரியார்:-

““குடி அரசை” ஒழிக்கச் செய்த முயற்சியால் “புரட்சி” தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும்பான்மையான மக்களின் ஆக்ஷியாகிய குடிஅரசுக்கு உலகில் இடமில்லை யானால் கண்டிப்பாகப் புரட்சி தோன்றியே தான் ஆக வேண்டும்.
… … …
நமது முதலாளிவர்க்க ஆக்ஷயானது தனது காவலாளிகளாகிய பாதிரி வர்க்கத்திற்கு அடிமையாக இருக்க வேண்டியிருப்பதால் “குடி அரசை" அதன் முதுகுப்புறத்தில் குத்திவிட்டது. இந்தக் குத்தானது “பாதிரி வர்க்கத்தை ஒழித்தால்தான் முதலாளி வர்க்கத்தை அழிக்க முடியும்" என்ற ஞான போதத்தை உறுதிப்படுத்திவிட்டது.

ஆதலால் நமது “புரட்சி”யானது “குடி அரசை”க்காட்டிலும் பதின் மடங்கு அதிகமாய் பாதிரி வர்க்கத்தை அதாவது மதப்பிரசார வர்க்கத்தை அடியோடு அழிப்பதையே கங்கணமாய்க் கொண்டு வெளிவர வேண்டி யதாகிவிட்டது.
… … …
மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி.

மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி.

மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி.

மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி.

மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை.

மதமே முதலாளி வர்க்கத்துக்கு காவல்.

மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு

மதமே உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி என்கின்ற முடிவின்பேரிலேயே “புரட்சி” தோன்றியிருக்கிறது என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்.
… … …
வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்கு இன்று “புரட்சி” வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த “புரட்சி” தோன்றவில்லை. அதுபோலவே இந்து மதத்தை ஒழித்து. இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப "புரட்சி” தோன்றியதல்ல.

அதுபோலவே, இஸ்லாம், கிறிஸ்து மதத்தை ஒழித்து இந்து மதத்தை நிலைநிறுத்த புரட்சி வெளிவரவில்லை.

சகல முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்யவேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே “புரட்சி” தோன்றியிருக்கிறது.

அது உயிருள்ளவரையும் அதன் கடமையைச் செய்து கொண்டு இருக்கும்.

ஆதலால் “புரட்சி”யில், ஆர்வமுள்ள மக்கள் “புரட்சியை” ஆதரிக்க வேண்டுகிறோம்.”
 (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 187------189)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக