வெள்ளி, 13 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 46:-


சம்பளக் கொள்ளை

(“சம்பளக் கொள்ளை என்ற இக் கட்டுரையில் பெரியார், சிலருக்குச் சம்பளம் உயர்த்திக் கொடுத்திருப்பதை எதிர்க்கிறார். இப்படிச் சம்பளம் உயத்திக் கொடுத்ததினால் தான் வேலையில்லாத் திண்டாட்டத்தை அரசாங்கத்தால் குறைக்க முடியவில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்.

சம்பளம் குறைத்துக் கொடுத்து அதனால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தொழிற்சாலைகளை ஏற்படுத்தி அநேகருக்கு வேலை கொடுக்கலாம் என்கிறார்.

இச்சமூகத்தில் காணப்படும் சுரண்டலை பெரியார் புரிந்து கொள்ளவில்லை. அதனால் சுரண்டலாளர்களை எதிர்ப்பதற்குப் பதில் சுரண்டலுக்கு உள்ளாகிற சம்பளக்காரர்களுக்குக் குறைவான சம்பளம் கொடுப்பது பற்றிப் பேசுகிறார். அதனால் தான் சமதர்மத்தைப் பற்றிப் பேசுவதைவிடச் சமமதிப்பு பற்றி அதிகம் பேசுகிறார். சம மதிப்பும் கொடுக்கப்படாத நிலைக்குக் காரணம் சுரண்டலின் வெளிப்பாடு தான்.

சுரண்டலை ஒழிக்காமல் சம மதிப்பைப் பெற முடியாது. சமதர்மப் போராட்டம் (வர்க்கப் போராட்டம்) என்பது சமத்துவத்திற்கான (பிறவியினால் உண்டான வேறுப்பாடை களைவதற்கான) போராட்மும் ஆகும்.)

தந்தை பெரியார்:-
“இன்று நாடெங்கும் படித்த மக்களின் கஞ்சிக்கில்லாத் திண்டாட்டங்கள் நெஞ்சைப் பிளக்கின்றன. இக்காட்சி பாமர மக்கள் திண்டாட்டத்தைப் பார்க்கும் காட்சியைவிட மிக மிக பரிதாபகரமாகவே இருக்கிறது.
… … …
இது விஷயமாய் நமது அரசாங்கத்தில் இப்போது நடந்து வரும் காரியம் எல்லாம் சரியானது என்று சொல்ல முடியவில்லை.

ஏனென்றால் அவசியமில்லாமல் தங்கள் உத்தியோகஸ்தர்களுடைய சம்பளங்களை உயர்த்தி உயர்த்த மக்களுக்கு உத்தியோக ஆசையும், உத்தியோகப் போராட்டமும் ஏற்படும்படி செய்கிறார்கள். இது அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை என்று சொல்லப்படுமானாலும் அவர்களது நடத்தை இப்பயனை விளைவிப்பதற்கு அனுகூலமாகவே இருக்கிறது என்றாவது சொல்லித் தீர வேண்டும்.
… … …
அதாவது ஜில்லா போர்ட் ஆசிரியர்களுக்கு சம்பள கிரேடு ஏற்படுத்தி ஒரு உத்திரவு பிரப்புவித்திருக்கிறார்கள். அதில் B.A., L.T. உபாத்தியாயர்களுக்கு 65 முதல் 100 வரை சம்பளம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது மிகவும் அதிகமான சம்பளம் என்றும் 40 முதல் 60 ரூ. வரை இருந்தாலே படிக்க வேண்டிய மக்களால் தாங்க முடியாததும் வேண்டுமென்றே அதிகமாய் கொடுக்கப்படுவதாகவும் கருதி வந்திருக்கிறோம்.
… … …
ஆகவே, அரசாங்கத்தார் அரசாங்க சம்பளங்களைக் குறைத்தாலல்லாது இன்று இந்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க முடியாது என்பதோடு மாத்திரமல்லாமல், மனித சமூகத்தில் இருந்து வரும் அனேக கொடுமைகளை ஒழிக்கவும் முடியாது என்று சொல்லுவோம்.

சம்பளத்தைக் குறைத்தால் சம்பளம் குறைந்த பணம் மீதியாவதோடு அனேக நிர்வாக உத்தியோகங்களையும் குறைக்கலாம். எப்படி எனில், சம்பளத்தால் குறைக்கப்பட்ட பணங்களைக் கொண்டு ஆங்காங்கு தொழிற்சாலைகளை அரசாங்கத்தார் ஏற்படுத்தலாம். அதனால் அநேகருக்குத் தொழில் ஏற்பட்டுவிடும். இதனால் மக்கள் தொழில் இல்லாமலும் ஜீவனத்துக்கு மார்க்கமில்லாமலும் இருப்பதினால் செய்யப்படும் திருட்டு, கொள்ளை, சமாதானக் கேடான குற்றங்கள், கிளர்ச்சிகள் முதலியவைகள் தானாகவே அடங்கிவிடும். ஆதலால் நிர்வாகக் கோர்ட்டுகளோ சமாதானத்துக்கும் சமாதான பங்கத்தை அடக்கி வைப்பதற்குமாக செய்யப்படும் செலவுகளோ மாத்திரமல்லாமல் ஏழை மக்கள் கவனிக்கப்பட இடமே இல்லாமல் போனதற்கு காரணமான இச்சம்பளக் கொள்ளை சண்டையும் இல்லாமல் போய்விடும்.
… … …
இப்படிச் சொல்லுவதால் அதிக சம்பளம் வாங்கிப் பிழைக்கும் நபர்களுக்கு நாம் விரோதியாகக் காணப்படலாம். ஆனால் பாமர ஜனங்களுக்கு துரோகியாக ஆகி இக் கூட்டத்தார்களின் முகமனுக்கு ஆளாகி தேசபக்தராவதை விட ஈனமான காரியம் வேறு இல்லை என்று கருதுவதால் நாம் நமக்கு சரி என்று பட்டதையும் இன்று முக்கியமாய் செய்யப்பட வேண்டிய காரியம் இன்னது என்று உணர்வதையும் வெளிப்படுத்தி விடுகிறோம்.”
(குடி அரசு - தலையங்கம் - 25.06.1935)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 52/ 57/ 62-63)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக