திங்கள், 23 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 56:-


மதமும் - மனித சமதர்மமும்
(கடவுளையும் மதத்தையும் பிரித்துப் பெரியார் பேசுகிறார். கடவுளால் உருவான நோயைவிட மத நோய் மிகவும் கொடியது என்கிறார். சமூகப் பிரச்சினைகளுக்கு மதமே காரணம், கடவுள் அல்ல என்பதாகப் பெரியார் கருதுகிறார். அந்தக் கடவுளின் பேரால் தான் மதப் பேதங்கள் உருவாகிறது. இந்து மதம் என்று இன்று சைவத்தையும் வைணவத்தை இணைத்துக் கூறினாலும் இது பல ஆண்டுகளாகத் தனித்தனி மதமாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இரண்டு தத்துவங்களும் மிகமிக நெருக்கமானது, இரண்டும் முப்பொருள் உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இருவருக்கும் கடவுள் வேறு. அந்தக் கடவுளின் பெயர் தான் வேறுவேறு, சைவத்திற்குக் கடவுள் சிவன், வைணவத்தற்குக் கடவுள் நாராயணன். ஆனால் இவ்விரு மதத்திற்கும் உள்ள சண்டைகள் கடவுளின் பெயரால் தான் நடைபெறுகிறது. அந்தக் கடவுளின் பெயரை காப்பதற்குத் தான் சண்டைகள் நடைபெறுகிறது.

ஆனால் மதம் என்பது புரோகிதருக்கு ஆதாயங்களைத் தருவதாகப் பெரியார் கருதியிருக்கலாம். கடவுள் என்பது அவ்வாறில்லை என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் கடவுள் என்ற ஒன்று இல்லை என்றால் மதம் என்ற ஒன்று தோன்றியே இருக்காது என்பதே உண்மை.

மதங்களின் வர்க்க சார்பு கடவுள் செய்கையால் தான் நிலைநிறுத்தப்பட்டுள்ளது மதங்களின் சடங்குகளால் அல்ல. பெரியாரைப் பொருத்தளவில் புரோகித எதிர்ப்புக்கு கொடுத்த முக்கியத்துவம், வர்க்க சார்புக்கு கொடுக்கப்படவில்லை. அவர் புரோகித எதிர்ப்பில் இருந்தே மதங்களை அணுகியிருப்பதனால் வர்க்க சார்பை விட்டுவிட்டார். ஆனால் மார்க்சியம் மதங்களின் - கடவுளின் வர்க்க சார்பையே வலியுறுத்துகிறது. அதில் தான் அதன் முக்கித்துவம் அடங்கியிருக்கிறது.

கடவுள்கள் திருத்தத்திற்கு உட்பட்டவைகளாகலாம். ஆனால் மதம் அவ்வாறு திருத்தத்திற்கு உட்படுவதில்லை. மதத்தின் அழிவு தான் அதன் திருத்தமாக இருக்கும் என்பதே பெரியாரின் கருத்தாகும். மதம் திருத்தத்திற்கு உள்ளாகாமல் இருந்திருந்தால் அது இன்று அழிந்து போயிருக்கும். ஆதிசங்கரர் பேசியது வேதாந்த அத்வைதம் என்று கூறப்பட்டாலும் அவர் அதில் பல சேர்ப்புகளைக் கொடுத்துள்ளார். அதே போல விவேகானந்தத் கூறியது அத்வைதம் என்றாலும் அவரும் பல சேர்ப்புகளைக் கொடுத்துள்ளார்.

சமூக மாற்றத்திற்கு ஏற்ப மதம் தம்மை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அது அழிந்தே போகும். நிலப்பிரபுத்துவச் சமுத்தில் இருந்து முதலாளித்துவச் சமூகத்திற்கு மாறும் போது கிறித்துவத்தில் திருத்தம் ஏற்பட்டுச் சீர்திருத்த சபையாக மாறுகிறது. அதனைத் தொடர்ந்து மாறாமல் இருந்த கத்தோலிக்கச் சபையிலும் மாறுதல்கள் ஏற்படுகிறது. பெரியார் சொல்வது போல் மதங்கள் மாறாது இருப்பதில்லை.

இந்தியாவில் உள்ள சைவமும் வைணவமும் பெரிய அளவிலோ சிறிய அளவிலோ மாறிக் கொண்டே இருக்கிறது. மாறாதது மறைந்து போய்விடும் என்பதே வரலாறு.

மதத்தின் வளர்ச்சி தேவையற்று, ஏன் மதமே தேவையற்று உலர்ந்துவிடும் நிலையைப் பற்றி மார்க்சியம் பேசுகிறது. மதம் பற்றிய தெளிவு மார்க்சியத்தில் இருக்கிறது. அந்தத் தெளிவு பகுத்தறிவுவாதத்தில் இல்லை. மார்க்சியத்தில் இருக்கும் தெளிவு இங்குள்ள மார்க்சியவாதிகளிடம் இருக்கிறதா? என்று கேட்டால் அது எதிர்நிலையான பதிலே வரும். அது மார்க்சியத்தின் குறையல்ல. ஆனால் பல சிறந்த மார்க்சியவாதிகள் நம் நாட்டில் இருக்கவே செய்கின்றனர்.

இங்கு இறுதியில் கூறுகிறார், மதங்களால் மக்களுக்குப் பல செயற்கைக் குறைபாடுகள் உண்டு பண்ணப்படுகின்றன. தனிச்சொத்துடைமையின் விளைவாக உருவானதை பெரியார் மதங்களின் செயற்கையான படைப்பாகப் பார்க்கிறார். பகுத்தறிவுவாதப் பார்வைக்கு வர்க்கப் பார்வை கிடையாது. மதங்களின் கருத்துக்கள் அன்றைய சமூக உற்பத்தியின் உறவுகளால் தீர்மானிக்கப்படுகிறது. மதப் பிரச்சாரகர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை.)

தந்தை பெரியார்:-

“உலகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் பீடித்திருக்கும் ஒரு பெரும் வியாதி கடவுள்கள், மதங்கள் என்னும் இரு தொத்து நோய்களேயாகும். இவற்றுள் கடவுள்கள் நோயைவிட மதங்கள் நோய் என்பது மிகமிகக் கொடியதாகும்.

உண்மை கடவுள் என்கின்ற தத்துவத்தால் மக்கள் அதிகமாகப் பிரிக்கப்பட்டிருக்கவில்லை; ஆனால் எப்படிப்பட்ட மதத்தாலேயும் மக்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் ஏன் இப்படிச்சொல்லுகிறோம் என்றால், கடவுளைப் பற்றிய ஒரு கருத்துள்ளவரும். மதத்தால் வேறுபட்டவராகப் பிரிக்கப்பட்டவராக இருந்து வருகிறார்கள். ஆனால் கடவுளைப் பற்றிய வேறு வேறு கருத்துள்ளவர்களும் மதத்தால் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.
… … …
கடவுள் உணர்ச்சி வேறு பல காரணங்களுக்குக் கேட்டை விளைவிப்பதாக இருந்தாலும், உலகப் பொது நலனுக்கும் ஒற்றுமைக்கும் கேடு உண்டாக இடம் தந்து மக்களுக்கு ஒன்றுபோல் கேடு செய்து வருவது மதங்களேயாகும்.

கடவுள்கள் திருத்தத்திற்கு உட்பட்டவைகளாகலாம். ஆனால் மதம் திருத்துப்பாட்டுக்கு இடம் கொடுப்பதில்லை. மதத்தின் அழிவுதான் திருத்தம் என்று சொல்ல வேண்டி இருக்கிறது.
… … …
மனிதச் சமுதாயத்தை ஒன்றுபடுத்தவும், சமதர்மம் தழைத்து ஓங்கவும், மதங்களே முதலில் அழிக்கப்பட வேண்டும். ஏனெனில் கடவுள் முன்னிலையில் மக்கள் யாவரும் ஒன்று என்று சொல்லி எந்தக் காரியத்தையும் துவக்கலாம். ஆனால் மதங்களின் முன்னிலையில் எல்லா மத மக்களும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது. மதங்களாலேயே மக்கள் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் எனவே மக்கள் யாவரும் ஒன்று சரிசமம் என்றால் மதங்கள் அழிய வேண்டி வந்து விடுமாதலால், மதங்கள் மக்களை ஒன்றுபடுத்தச் சம்மதியா.
… … …
மதங்கள் பிரிவினைக்கும், பேதத்திற்கும் காரணமாய் இருப்பது மாத்திரமல்லாமல் மடமைக்கும், மூடநம்பிக்கைக்கும் காரணமாக இருக்கின்றன. பயத்தின் அஸ்திவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும், மூடநம்பிக்கை. மடமை என்கின்ற அஸ்திவாரத்தின் மீதே மதங்கள் இருக்கின்றன. இம்மாதிரி மதங்களே தான் கடவுளையும் சிறுமைப்படுத்திவிட்டன என்பது மாத்திரம் அல்லாமல், எதற்கு ஆகக் கடவுள் தேவை என்றும் சொல்லப்படுகின்றதோ, எதற்கு ஆகக் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று எண்ண மக்கள் செய்யப்படுகின்றார்களோ அதற்கு மாறாகப் பலன் உண்டாகும்படி மதங்கள் செய்துவிடுகின்றன

மற்றும், எந்த மதமும் மக்களுடைய இயற்கைக் குறைபாடுகளைப் பரிகாரம் செய்யவில்லை என்பது மாத்திரமல்லாமல், மதங்களால் மக்களுக்குப் பல செயற்கைக் குறைபாடுகளும் உண்டு பண்ணப்படுகின்றன.

எனவே, மனித தர்மவாதி, மனித சமதர்மவாதி. (மனித) ஜீவ காருண்யவாதி, மதங்களால் பாதிக்கப்படாதவனாகி, மதங்களில் இருந்து வெளிவந்து அல்லது மதங்களுக்கெல்லாம் மேம்பட்டவனாக இருந்து கொண்டு தொண்டாற்ற வேண்டியவனாகிறான்.
('குடிஅரசு = 27.07.1946 )
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 158/160)

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக