கொச்சி,
திருவாங்கூர், திருநெல்வேலி தொழிலாளர் மகாநாடு
(இன்றைய தொழிலாளர்கள் பிரச்சினை என்பது உலகமக்கள் பிரச்சினை
என்று பெரியார் கூறுவது மகிழ்ச்சியைத் தருகிறது. அடுத்து உழைப்பாளர்களின் கஷ்டம் உலகம்
தோன்றியது முதல் எவ்வித மாறுதலும் இல்லாமல் தொடர்வதைக் குறிப்பிடுகிறார். இதைப் போக்க
முயற்சித்தவர்களின் செயற்பாடு இதுவரை எந்தப் பயனையும் தரவில்லை. அதற்குக் காரணம் பிரச்சினையின்
அடிதளத்துக் கோளாறுகளை அவர்கள் லட்சியம் செய்யவில்லை என்கிறார்.
சமூகத்தில் உள்ள மனிதர்களின் சூழ்ச்சியையும், அக்கிரமமான நடத்தையும்
தான் அதற்குக் காரணம் என்கிறார் பெரியார். மனிதனுக்குப் பகுத்தறிவு என்ற சிறப்பான சிந்தனா
சக்தி இருந்தும் இதனைப் பயன்படுத்தாததை மற்றொரு காரணமாகக் குறிப்பிடுகிறார். பகுத்தறிவைப்
பயன்படுத்தாதற்குக் காரணமாக மதங்களின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டுகிறார்.
தொழிலாளர்களின் துன்பங்கள் நீங்க வேண்டுமானால் முதலாளித் தன்மை
இல்லாமல் செய்ய வேண்டும். முதலாளித்துவத்தை எப்படி இல்லாமல் செய்வது என்பது பற்றி இங்கே
பெரியார் விவரிக்கவில்லை.
கூலி உயர்வுக்காகத் தொழிலாளர்கள் போராடுவது பயனற்றது என்கிறார்.
கூலி உயர்வினால் பொருட்களின் விலை ஏறும் அது தொழிலாளர்களைப் பாதிக்கும் என்கிறார்.
இத்தோடு நில்லாமல், முதலாளிகளுடனான கூலித் தகராறு என்பது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும்
இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சி என்கிறார்.
கூலிப் போராட்டத்தில் தான் வர்க்கப் போராட்டத்தின் வித்து அடங்கியிருக்கிறது.
இதல்லாமல் இறுதி போராட்டத்திற்குத் தயாராக முடியாது. கூலி உயர்வுக்கான போராட்டம், கூலி
முறை ஒழிப்பிற்கான போராட்டமாக வளர வேண்டுமானால், கூலிப் போரட்டத்தில் இருந்து தான்
தொடங்க வேண்டும். கூலிப்போராட்டத்தை மறுத்துவிட்டு, கூலிமுறையின் ஒழிப்பைப் பற்றித்
தொழிலாளர்களிடம் பேச முடியாது.
இன்றைய கஷ்டங்களை ஓரளவுக்காவது குறைப்பதற்குக் கூலி உயர்வு அவசியமே,
கூலிக்கான போராட்டத்தின் மூலமே வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியும். வர்க்கப் போராட்டம்
அல்லாது தொழிலாளர்களுக்கு விடுதலை கிடையாது. பெரியாரைப் போன்றே வேஸ்டன் என்பவரும் கூலி
உயர்வு தொழிலாளர்களுக்கு நன்மையைப் பயக்காது என்று கூறியுள்ளார். இதனை மார்க்ஸ் “கூலி,
விலை, லாபம்” என்ற நூலில் மறுத்துள்ளார்.
தொழிலாளர்களின் விடுதலை வர்க்கப் போராட்டத்தில் தான் அடங்கியிருக்கிறது, கூலிவுயர்வுப்
போராட்டம் மூலமே வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியும்.)
“தொழிலாளி
மக்கள் பிரச்சினை உலக மக்கள் பிரச்சினை என்கின்ற கருத்தின் மீதே அது சம்மந்தமாக எனக்குப்
பட்ட சில விஷயங்களை உடக்ளுக்கு எடுத்துச் சொல்ல ஆசைப்படுகிறேன்.
தோழர்களே! இன்றைய உலக நிலை அதாவது மனித சமூகத்தின் வாழ்க்கைத்தன்மையானது துக்கம் கவலை
அதிர்ப்தி, சாந்தியற்ற தன்மை, ஒருவருக்கொருவர் தாழ்ந்த தன்மை, ஒருவரை ஒருவர் அடக்கி
ஆளும் தன்மை ஆகியவைகளுக்கு ஆளாகி அவதிப்பட்டுக் கொண்டு இருக்கத் தக்கதாகவே இருந்து
வருகிறது. இந்த நிலையானது இன்று நேற்று ஏற்பட்டது என்று சொல்லி விடுவதற்கு இல்லாமல்,
உலகம் தோன்றியதாகச் சொல்லப் படும் காலமுதல் நாளது வரையிலும் எவ்விதமான மாறுதலும் இல்லாமலே
இருந்து வருகிறது. மனித சமூகத்தில் உள்ள இவ்விதமான கஷ்டங்களையும், கொடுமைகளையும்
குறைகளையும் நிவர்த்திப்பதற்காக வென்று வெகுகால மாகவே அதாவது நமக்கு சரித்திர பூர்வமாய்
விளங்கும் பல ஆயிரக் கணக்கான வருஷங்களாகவே அநேக மனிதர்கள், கடவுள், கடவுள் அவதாரம்,
கடவுள் குமாரன், கடவுள் தூதன், கடவுள் தன்மை பெற்றவர் என்னும் பெயர்களாலும், ரிஷிகள்,
முனிவர்கள், சித்தர்கள், மகாத்மாக்கள், ஞானிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்ற பெயர்களாலும்
தோன்றி எவ்வளவோ காரியங்கள் திருத்தப்பாடுகள் உண்டாக்கியதாக எழுதி வைக்கப்பட்டும் சொல்லப்பட்டும்
வருகின்றது.
…
… …
இவைகளின்
பயனாகவெல்லாம் அநேக காலமுதல் நாளது வரையில் பெரும்பான்மையான மனித சமூகத்திற்கு சிறிதாவது
கஷ்டமோ துன்பமோ, கவலையோ, ஒழிந்திருப்பதாகச் சொல்லமுடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.
…
… …
இப்படிப்பட்ட
பெரியார்கள் என்பவர்களால் மனிதச் சமூகத்திற்குள்ள கஷ்டங்கள், துன்பங்கள் ஏன் ஒழிக்கப்படவில்லை?
இவர்களால் எல்லாம் ஆகாத காரியம் நம்மால் ஆகி விடுமா? என்பனபோன்ற விஷயங்களை யோசித்து
ஒரு முடிவுக்கு வந்த பிறகேதான் நாம் இன்று என்ன செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றோம்
என்பதை யோசிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
…
… …
இந்தப் பழைய
நிலை மாறவில்லையென்றும், மாற்றுவதற்காக தோன்றிய பெரியார்கள் எல்லாம் ஏன் தோல்வி அடைந்துவிட்டார்கள்
என்றும் யோசித்துப் பார்ப்போமேயானால் முறையே அதன் காரணமும் அப்படிப்பட்டவர்களின் தவறுதலும்
நமக்கு நன்றாய் விளங்கும்.
எனக்குத்
தோன்றியவரையிலும் “பெரியார்”களுடைய முயற்சி களெல்லாம் வெற்றிபெறாமல் போனதற்குக் காரணம்
அப்பெரியார்கள் கஷ்டநிலை என்பதற்குக் காரணம்
என்ன என்பதையே அவர்கள் சரியாய் உணரவில்லை என்றுதான் சொல்லுவேன். அஸ்திவாரத்தில் உள்ள கோளாறுகளை லட்சியம் செய்யாமல்
மேலும் மேலும் கட்டிடங்கள் கட்டியதாலேயே கட்டின கட்டிடங்களெல்லாம் இடிந்து விழுந்து
கொண்டே வந்துவிட்டன.
…
… …
ஒரு
விவகாரத்தை ஒழிக்க (பைசல் செய்ய முன்வந்த ஒருவன் ஐந்தும் + ஐந்தும் =பனிரெண்டு
(5+5=12) என்று கருதிக்கொண்டு விவகாரத்தை தீர்க்க முற்படுவானேயானால் அப்படிப்பட்டவனால்
விவகாரம் சரியான தீர்ப்பு அடைய முடியுமா? அதுபோலவே உலகக் கஷ்டத்தைப் போக்குவதற்குத்
தோன்றிய அவதாரங்கள் (பெரியார்கள்) எல்லாம் மனித சமூகத்தின் கஷ்டங்களுக்கு காரணமாயிருப்பது
மனித சமூகத்திலுள்ள சிலரின் சூழ்ச்சியென்றும்
அக்கிரமமான நடத்தையென்றும் கருதாமல் தங்களால் நிரூபிக்கச் சாத்தியமற்றதும் தங்களுக்கே
புரியாததுமான ஒரு வஸ்துவைக் கற்பனை செய்துகொண்டு அதற்கே சகல சக்திகளையும் கொடுத்து
எல்லாவற்றிற்கும் அதையே பிணையாக்கி அதன்பேரிலேயே எல்லாப் பழிகளையும் போட்டு அதற்கும்
தங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாகக் காட்டி அதன் தயவினாலேயே உலகக் கஷ்டங்களைப் போக்க
முயற்சிப்பதாகச் சொல்லி அந்தப்படியே மக்களையும் நம்பச் செய்துவிட்டு போய்விட்டார்கள்.
…
… …
இதன்றி இனி மற்றொரு காரணம் என்னவென்றால் அதாவது
இன்றைய மேல்கண்ட நிலைகள் மனித சமூகத்துக்கு பெருந்துன்பமாய் இருந்தும் மனிதனுக்கு பகுத்தறிவு
என்பதான ஒரு விசேஷ சிந்தனா சக்தி இருந்தும் அத்துன்பத்தை ஒழித்துக் கொள்ள அது பயன்படாமல்
போனதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால் மனித வாழ்க்கையில் மனிதன் தான் இன்று உயிருடன்
இருக்கும்போது அனுபவிக்கும் கஷ்டங்கள், துன்பங்கள் ஆகியவை எல்லாம் லட்சியம் செய்யத்தக்க
தல்லவென்றும் அதாவது இந்த வாழ்வே நிலையற்றதென்றும் “மனிதன் இறந்தபிறகு தீர்ப்பு நாளிலோ,
அல்லது மற்றொரு உலகமாகிய மேல்லோகத்திலோ" அனுப் விக்கப்போகும் விஷயங்களே முக்கியமானதென்றும்
அதைப் பற்றியே மனிதன் கவலை செலுத்தவேண்டும் என்றும் மதங்கள் மூலம் கற்பிக்கப் பட்டதும்
ஒரு முக்கிய காரணமாகும். இத்தியாதி காரணங்களே இந்த விதமான கற்பனைகளே மனித சமூகத்தின்
துக்கங்கள் ஒழிக்கப்படுவதற்கு இடையூராய் இருந்து வந்திருக்கின்றன.
அப்படிக்கில்லாமல்
இருக்குமானால் உலகில் உள்ள ஜீவராசிகளில் எல்லாம் விசேஷமானது என்றும் மனித ஜீவனுக்கு
உயர்ந்த ஞானமும், அறிவும், சிந்தனாசக்தியும் இருந்து வருகின்றது என்றும் சொல்லப்பட்ட
ஒரு சமூகம் இவ்வித கீழ்நிலையில் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாய் இருந்து வந்திருக்க
முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள்.
…
… …
இவைகள் தவிர முதலாளிகள்
என்பவர்கள் தங்கள் நிலை என்றும் நிலைத்திருக்கவும், தொழிலாளிகள் என்னும் பேரால் உலக
பெரும்பான்மையான மனித சமூகம் தங்களை எதிர்க்காமலும், தாக்காமலும் இருப்பதற்காக வேண்டிய
பந்தோபஸ்துக்காக ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவர்களுமாகின்றார்கள். நாளாவட்டத்தில் அந்த ஆட்சியின்
ஆதிக்கத்தையும் தங்கள் கைக்குள் கொண்டுவந்துவிடவே முயற்சிப்பவர் களாகவுமிருந்து வருகிறார்கள்.
…
… …
ஆதலால் தொழிலாளிகளது கஷ்டமும்,
துன்பமும், அடிமைத்தனமும், கவலையும் குறையும் நீங்கவேண்டுமானால் முதலாளித்தன்மை என்பது
இல்லாமல் போயே ஆகவேண்டும். அப்படிக்கில்லாமல் வேறு எப்படிப்பட்ட காரியம் செய்தாலும் தொழிலாளி
துன்பமும், இழிவும், தரித்திரமும் ஒருநாளும் ஒழியாது மனிதனுக்கு இருக்கும்.
…
… …
தொழிலாளிகளின் கவலை யெல்லாம் தங்களுக்கு எவ்வளவு
வேண்டும் என்பதல்ல. தங்களுடைய நிலைமை மற்ற யாருடைய நிலைமைக்கும் தாழ்ந்ததாக இருக்கக்கூடாது
என்பதேயாகும்.
எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள்
நிலை தாழ்ந்திருக்கவும் பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும்
கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கிய தத்துவமாய் இருக்கவேண்டும்.
அப்படிக்கில்லாமல் ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படு
வதற்காக போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித்
தருவானேயானால் தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின்பேரில் முதலாளிகள் ஒன்றுசேர்ந்து
நாலணா விலை அதிகப்படுத்தி விடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்து சாமான் வாங்கவேண்டியவர்கள்
தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலதுகையில் கூலி அதிகம் கொடுத்து
இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்ளுவார்கள்.
முதலாளிகளுடன் கூலித் தகரார்
என்பது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய
சூழ்ச்சியேயாகும்.
4 அணா கூலிக்கு வேலை செய்ய மக்கள் இன்று 14 அணா
கூலி பெருவது எனக்குத் தெரியும். இதன் பயனாய் அவனுடைய நிலை சிறிதுகூட உயர்ந்ததாக சொல்ல
முடியாது. அடிமைத்தன்மையும், தரித்திரமும் அவனைச் சூழ்ந்து கொண்டே இருக்கின்றது. 4
அணா கூலிகொடுத்த முதலாளி அப்போது இருந்ததைவிட இப்போது 14 அணா கொடுக்கும் போது எத்தனையோ
பங்குமேன்மையாய் மோட்டாரிலும், ஆகாய ரதத்திலும் செல்லுகிறான். சந்திரகாந்த மண்டபத்தில்
வசிக்கிறான். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 கையெழுத்துப் போடுவதுடன் அவனது வேலை முடிவடைந்து
விடுகின்றது. இந்த நிலையை அவர் பிள்ளை, பிள்ளை தலைமுறைக்குப் பத்திரப் படுத்திக் கொள்ளுகிறான்.
தொழிலாளி நிலை இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறதா பாருங்கள். அவன் பிள்ளைகள் 3 வது,
4-வது பாரம்வரையில் கூட படிக்க முடியவில்லை. ஓதம் (ஈரம்) இல்லாத இடத்தில் படுக்க முடிய
வில்லை. இடுப்புக்குத் தவிர மேலுக்குத் துணியில்லை. இந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.”
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 152------158)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக