திங்கள், 23 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 59:-


ஏன் புரட்சி? எப்பொழுது புரட்சி?

(ரஷ்யாவைப் பார்த்து முதலாளி ஒழிக தொழிலாளி வாழ்க என்று கூப்பாடு போடும் புரட்சியாளர்களுக்குப் புரட்சியைப் பற்றிய ஏ,பி,சி,டி தெரியாது என்கிறார் பெரியார். ஏன் என்றால் நம் நாட்டில் சாதி, மதம், மூடநம்பிக்கை ஆகியவற்றை ஒழித்த பிறகு தான் சோஷலிச புரட்சியைச் செய்ய வேண்டும் என்பதே அவரின் கருத்து. வர்ணப் போராட்டத்திற்கு அடுத்தே வர்க்கப் போராட்டம்.

ஆனால் சாதியைத் தவிர்த்துப் பார்த்தால் அன்றைய ருஷ்யா இன்றைய நமது நாட்டைவிடக் கீழ்நிலையிலும் மூடநம்பிக்கையிலும் இருந்தது. 1905 ஆம் ஆண்டு ஒரு பாதிரியாரின் தலைமையில் தொழிலாளர்கள் தம் குடும்பத்தோடு ஜார் அரண்மனையை நோக்கி பயணித்துக் கோரிக்கை வைத்தால் விடுதலைக் கிடைத்துவிடும் என்ற நம்பிகை கொண்டிருந்தனர். ஆனால் முடிவு ரத்த வெள்ளத்தில் ஜார் அரசால் வீழ்த்தப்பட்டனர். இப்படிப்பட்ட நம்பிகையில் வாழ்ந்தவர்கள் தான் 1917 ஆம் ஆண்டுப் புரட்சியை நிகழ்த்தினர்.

பெரியார் குறிப்பிடுவது போல் குறைந்தபட்சம் தொழிலாளர்களின் தலைவர்களிடம் சாதி, மதம், மூட நம்பிக்கை முதலில் ஒழிக்க வேண்டும். ஆனால் இதை அனைவரிடம் ஒழித்தால் தான் புரட்சி செய்ய முடியும் என்பது நடைமுறையில் எதிர்பார்க்க முடியாத ஒன்று. வர்ணப் போராட்டத்தை வர்க்கப் போராட்டத்திற்குள் நடத்துவதே நடைமுறை சாத்தியமானதாகும். இதற்கு மார்க்சியக் கோட்பாடு சிறப்பாக வழிகாட்டுகிறது.)

தந்தை பெரியார்:-
“ரஷ்யாவைப் பார்த்து, நம் நாட்டில், புரட்சிக்காரர்கள் "முதலாளி ஒழிக! தொழிலாளி வாழ்க!'' என்று கூப்பாடு போடுகிறவர்கள், புரட்சியின் ஏ,பி,சி,டி படிக்காதவர்களே யாகும்.

நம் நாட்டில் ரஷ்யாவில் இல்லாத பல காரியங்கள் புரட்சிக்கு விரோதமாக இருக்கின்றன.

மதத் தொல்லைகள் எவ்வளவு? இனத் தொல்லைகள் எவ்வளவு? ஜாதித்தொல்லைகள் எவ்வளவு? கலை, பழக்கவழக்க, ஆகார உடை முதலியவைகள் எவ்வளவு? மூட நம்பிக்கை எவ்வளவு? இவைகளைப் பற்றி சிந்திக்கிறோமா? இங்குள்ள புரட்சிக் கூப்பாட்டுக்காரர்கள், தங்கள் மதங்களை விட்டார்களா? இன உணர்ச்சியை, ஜாதியை, குறிப்பிட்ட கலை. பழக்க உணர்ச்சிகளை விட்டார்களா? தங்கள் சுயநலத்தை விட்டார்களா? சுயமரியாதையைக் கவனிக்கிறார்களா? எவ்விதப் பேதமும் இல்லாமல் ஒற்றுமையாய் இருக்கிறார்களா?

அவைகள் உள்ள நாட்டில் தான் திடீரென்னு முதலாளி தொழிலாளி புரட்சி உண்டாக முடியும்; ராஜா - பிரஜைகள் புரட்சி கூட முடியும். நாம் அப்படிப்பட்ட புரட்சிக்கு விரோதமாய் இருக்கும் தடைகளை நீக்க முதலில் புரட்சி செய்ய வேண்டும்.!

ஜாதி, மதம், மூடநம்பிக்கை ஆகியவைகள் நம்மை விட்டு ஒழிய வேண்டும்.

முதலாவதாக, தொழிலாளிக்காவது இவை ஒழிந்ததா? தொழிலாளர் தலைவர்களுக்காவது இவை ஒழிந்ததா?

முக்கியமாக ஒருவரை ஒருவர் ஆதிக்கம் செலுத்துவதும், சுரண்டுவதும் நம் நாட்டில் ஒழிய வேண்டியதற்காகவே புரட்சி அவசியமானது. அது எந்தெந்த விதத்தில் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது; யாரை யார் எந்தெந்த விதத்தில் சுரண்டுகிறார்கள்; என்பவைகளைப் பார்த்து அவைகள் எல்லாவற்றையும் ஒழிக்கப் புரட்சி செய்ய வேண்டும். அதுதான் நம்முடைய குறிக்கோள் வார்த்தையாக இருக்க வேண்டும். வாலிபர்கள் இதை நன்றாய் உணரவேண்டும்.
… … …
மூட நம்பிக்கையை வைத்துக்கொண்டு, முதலாளி பணத்தைப் பிடுங்கி, தொழிலாளிக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டால் புரட்சி வெற்றி பெற்றுவிட்டதாக ஆகிவிடாது. மூட நம்பிக்கை உள்ளவரை, பணம் முதலாளிக்குப் போய்ச் சேராவிட்டாலும், முதல் இல்லாத முதலாளி ஆகிய கடவுளுக்கும், புரோகிதனுக்கும், மேல் ஜாதிக்காரனுக்கும் போய்ச் சேர்ந்து விடும். மூட நம்பிக்கை உள்ள மக்களைக் கொண்டு, புரட்சியைக் காப்பாற்றும் பலமான ஸ்தாபனம் அமைக்க முடியாது.”
(விடுதலை – 19-11-1941 மற்றும் குடிஅரசு மறுவெளியீடு 10-01-1948)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 195/196)

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக