புதன், 11 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 38:-


சமதர்மப் பிரச்சார உண்மை விளக்கம்

(ராஜ நிந்தனை குற்றத்திற்குப் பெரியார் கலெக்டர் முன் பதிலளிக்கிறார். சமதர்ம வேலைத் திட்டத்திலோ, பிரசாத்திலோ பலாத்காரம், துவேஷம், இம்சை இடம் பெற்றிருககவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இங்குமட்டுமல்லாது எங்குமே பலாத்காரமற்ற சமூக மாற்றத்தைப் பற்றியே பெரியார் பேசுகிறார். முதலாளிகளிடம் கருத்துரையால் மனமாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் பெரியார் இவ்வாறு பேசுகிறார்.)

“இ.பி.கோ. 124-A ஷென்படி தொடரப்பட்டுள்ள “பொதுவுடைமை" பிரசாரத்திற்காகவும் – “இராஜ நிந்தனை” என்பதற்காகவுமுள்ள வழக்கு கோவையில் 12-1 ஆரம்பிக்கப்பட்ட போது தோழர் ஈ.வெ. இராமசாமி அவர்கள் கோவை ஜில்லா கலெக்டர் GW. வெல்ஸ் IC.S. அவர்கள் முன் தாக்கல் செய்த ஸ்டேட்மெண்ட்:-
… … …
4) என்ன காரணத்தைக் கொண்டு என்மேல் ஆதாரமற்ற இந்தப் பிராது தொடரப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் என்னுடைய சமதர்மப் பிரசாரத்தை நிறுத்தி விடச் செய்வதற்காக முதலாளி வர்க்கமோ அல்லது மத சம்பிரதாயக்காரர்களோ செய்த சூழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. வியாசத்தின் விஷயத்திலாவது. பதங்களிலாவது. நோக்கத்திலாவது சாட்டப்பட்ட குற்றத்தின் அமைப்பே கிடையாது.
… … …
6) நான் 7,8 வருஷ காலமாய் சுயமரியாதை இயக்க சமதர்ம பிரசாரம் செய்து வருகிறேன். சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழவேண்டுமென்பது அப்பிரசாரத்தின் முக்கிய தத்துவமாகும்.
… … …
8) அவ்வியக்க லட்சியத்திலோ, வேலைத் திட்டத்திலோ, பிரசாரத்திலோ, அதற்காக நடைபெறும் “குடி அரசு"ப் பத்திரிகையிலோ பலாத்காரம், துவேஷம், இம்சை இடம் பெற்றிருக்கவில்லை. எந்த விதத்திலாவது அவை நமது நாட்டில் இடம் பெறுவது என்பதும் எனக்கு இஷ்டமான காரியம் அன்று.
… … …
10) அரசாங்கமானது முதலாளித் தன்மை கொண்டதாய் இருப்பதால் அது இத்தகைய சமதர்மப் பிரசாரம் செய்யும் என்னையும் எப்படியாவது அடக்க வேண்டுமென்று முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதில் அதிசயமில்லை.
… … …
12) இப்படிப்பட்ட ஒரு மாறுதல் உண்டாக ஆசைப்படுவதும் அதற்காக பலாத்காரம், துவேஷம், இம்சை ஆகியவைகள் இல்லாமல் பிரசாரம் செய்வதும் குற்றமாகாது.

13. ஏதாவது ஒரு கொள்கைக்கு பிரசாரம் பரவ வேண்டுமானால் அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக் கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்கு முறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காக நாமே வலுவில் போய் கஷ்டத்தைக் கோரி எடுத்துக் கொள்ளக் கூடாது என்றாலும் தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை யாரும் இழந்து விடக் கூடாது. இந்தப் பிரசாரத்தை தடுக்க வேண்டுமென்று கருதி இந்த வழக்கைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் எப்படியாவது எனது வியாசத்தில் துவேஷம், வெறுப்பு, பலாத்காரம் முதலியவைகள் இருப்பதாக கற்பனை செய்து தீர வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். அந்தப்படி செய்யப்படும் கற்பனைகளால் நான் தண்டிக்கப்பட்டாலும் பொதுவாக என் மீது நம்பிக்கையும் நல்ல எண்ணமும் உடையவர்களும் சிறப்பாக எனது கூட்டு வேலைக்காரத் தோழர்களும் தப்பான அபிப்பிராயம் கொள்ளக்கூடுமாதலால் அப்படிப்பட்ட கற்பனைகளை மறுத்து உண்மையை விளக்கி விட வேண்டுமென்றே இந்த ஸ்டேட்மெண்டைக் கொடுக்கக் கடமைப்பட்டவனானேன். ”
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 202------205)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக