தொழிற்சங்கமும் தொழிலாளரும் (18.01.1947)
(தொழிற்சங்கம் ஏற்படுத்தியதின் நோக்கமான தொழலாளர்களின் நலன்
கிடைக்கவில்லை என்று பெரியார் தெரிவிக்கிறார். தொழிற்சங்கம் ஏற்படுத்தப்பட்டதைத் தாம்
குறைகூறவில்லை என்றும், தொழிற்சங்க சட்ட 22ஆம் பிரிவு தான் தொழிலார் நலனைகளைப் பாழ்படுத்தக்
கூடியதாக இருப்பதாகக் கூறுகிறார். சொழிற்சங்க நிர்வாகிகளாகத் தொழிற்சங்கத்தற்குத் தொடர்பில்லாதவர்கள்
இருக்கலாம் என்கிற சட்டத்தையே பெரியார் தொழிலாளர்களுக்குத் தீங்கானதாகச் சொல்கிறார்.
கம்யூனிஸ்டுகளைத் தொழிலாளர்கள் ஆதரிப்பதற்குக் காரணம் கம்யூனிஸ்டுகள்
கூறும் ஆசை வார்த்தையே ஆகும். தொழிலாளர்கள் தங்கள் நலனை தாங்களே பாதுகாத்துக் கொள்ள
வேண்டும், அந்நியர்கள் அவர்களுக்குள்ளே நுழையக்கூடாது என்பதே தமது நிலையாடாகப் பெரியார்
கூறியுள்ளார்.
தொழிலாளர்களுக்கும் பாட்டாளிகளுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை
அறியாத பெரியார் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யின் இரண்டாம் அத்தியாயத்தைத்
தெளிவாகப் புரிந்திருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. தொழிலாளர்களுக்கும் கம்யூனிஸ்ட்டுக்கும்
உள்ள தொடர்பின் அவசியத்தை அறிக்கை தெளிவாக முன்வைக்கிறது.
“கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் நடைமுறை ரீதியில், ஒவ்வொரு
நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளில், மிகவும் முன்னேறிய, மிகவும் உறுதி வாய்ந்த
பிரிவாக, மற்றவர்கள் அனைவரையும் முன்னோக்கி உந்தித் தள்ளுகின்ற பிரிவாக உள்ளனர். மறுபுறம்
தத்துவ ரீதியில், கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத
ஓர் அனுகூலத்தை, அதாவது, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும்,
இறுதியில் ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தைப்
பெற்றுள்ளனர்.” (அறிக்கை)
இதே போல் லெனின் கூறுகிறார், தொழிலாளர்கள் தன்னியல்பு போராட்டங்களின்
மூலம் தொழிற்சங்க உணர்வை மட்டுமே பெற முடியும், தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை
எதிர்த்துப் போராடுவது, அவசியமான தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக்
கட்டாயப்படுத்த முயல்வது, முதலியவற்றின் அவசியத்தைப் பற்றிய துணிபு மட்டுமே வளர்த்துக்
கொள்ள முடிகிறது என்பதே அனைத்து நாடுகளின் வரலாறு உணர்த்துகிறது. இந்தக் கரு வடிவிலான
உணர்வை கம்யூனிச உணர்வாக மாற்றுவதற்கான அறிவுத் தலைமை வெளியில் இருந்து தான் அவர்களுக்குக்
கொண்டுவரப்பட வேண்டும். நவீன விஞ்ஞானக் கம்யூனிசத்தின் மூலவர்களான மார்க்சும் எங்கெல்சும்
அப்படிப்பட்ட படிப்பாளிப் பகுதியினரைச் சேர்ந்தவர்களே என்று லெனின் “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலில் கூறியுள்ளார்.
தொழிலாளர்களுக்கு மார்க்சிய மூலவர்கள் குறிப்பிடுகிற மாதிரி
செயற்படாத கம்யூனிஸ்டுகளை விமர்சிக்கலாம் ஆனால் அவர்களின் வழிகாட்டுதல்களே கம்யூனிசத்தைப்
படைக்கும்.
“திராவிடக் கழகம்” தொழிலாளர்களைப் பற்றி
என்ன நோக்கம் கொண்டுள்ளது என்பதை அடுத்து பெரியார் கூறுகிறார். நம் நாட்டில் பிறவித்
தொழிலாளர்களும் நடைமுறையில் தொழிலாளர்களும் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்காகவும்
திராவிடர் கழகம் பாடுபடுகின்றனது என்கிறார். இந்தப் பிறவித் தொழிலாளர்களில் பார்ப்பனரல்லாத
பணக்காரர்களும் அடங்குவர். இவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் பார்ப்பனியத்தின்படி
சூத்திரர்களே, சூத்திரர் என்றால் பிறருக்கு உழைப்பவர். இந்தப் பணக்கார கோடிஸ்வரர்கள்
பிறவி சூத்திர் என்ற வகையில் தொழிலாளர் என்கிறார் பெரியார்.
இத்தகைய பிறவி கோடிஸ்வர சூத்திரர்களிடம் உழைக்கும் ஏழை மக்களுக்கு
விடிவு என்ன என்று பெரியாரிடம் கேட்டால், முதலில் பிறவி முதலாளியான பார்ப்பனனை ஒழிக்க
வேண்டும். அதுவரை கூலி உயர்வு போராட்டம் நடத்தக் கூடாது, அப்படி நடத்தினால் அது இந்த
முதலாளித்துவ முறையை ஏற்றதாகும், அதனால் கூலி உயர்வு போராட்டத்தை நடத்தாமல் பார்ப்பனரல்லாத
பணக்கார முதலாளிகளின், பார்ப்பன பணக்கார முதலாளின் சுரண்டலுக்கு ஒத்துழைத்துக் கொண்டிருக்க
வேண்டும்.
வர்க்கப் போராட்டத்தை, வர்ணப் போராட்டத்திற்கு அடுத்துத்தான்
நடத்த வேண்டும் என்றால், பணக்கார பார்ப்பன முதலாளியிடமும் வர்கப் போராட்டத்தை நடத்தாமல்,
வர்ணப் போராட்டத்தையே நடத்த வேண்டிவரும். இத்தகைய பெரியாரின் கருத்து உழைக்கும் தொழிலாளர்களால்
மறுதலிக்கப்படும் என்பதில் கம்யூனிஸ்டுகளுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
அடுத்து, இன்று கம்யூனிஸ்டுகள் அடக்கப்படுவது, தொழிற்சங்கத்தின்
உள்ளே காங்கிரஸ் சோஷலிஸ்ட்களுக்குச் செல்வாக்கு தேடுவதற்கே என்கிறார் பெரியார். அதற்கு
அவர்களுக்கு ஒரு சிறந்த ஆலோசனையும் கூறியுள்ளார், “உள்ளபடியே நாட்டில் அமைதி நிலவச் செய்ய வேண்டுமானால் கம்யூனிஸ்ட்களை ஒழிக்கத்
திட்டம் வகுப்பதை விட அந்நியர்கள் தொழிற்சங்கத்தில் புகலாம் என்ற சட்டத்தை ஒழித்துவிடவேண்டும்
என்று கூறுகிறோம்.”
உண்மை தான் தொழிலாளர்களிடம் இருந்து கம்யூனிஸ்டுகளைப் பிரித்துவிட்டால்
கம்யூனிச செயற்பாடு தடைப்பட்டுப் போகும். இது போன்ற பெரியாரின் கண்ணோட்டங்கள் உழைப்பாளர்களுக்கு
எந்த நலனையும் கொடுக்காது. பெரியாரின் பகுத்தறிவுவாத கண்ணோட்டம் தொழிலாளர்களின் சுரண்டலை
தொடர்வதற்கே உதவிடும். அதனால் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட்களின் பக்கமும்,
கம்யூனிசத்தின் பக்கமும் நிற்பர். தொழிலாளர்களின் விடுதலை விஞ்ஞானக் கம்யூனிசத்தினால்
தான் கிட்டும்.)
தந்தை பெரியார்:-
“தொழிற்சங்கம், தொழிலாளர் நலனைப் பாதுகாத்தற் பொருட்டு
அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டது. அத்தொழிற்சங்கம் எந்த நோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்டதோ
அந்நோக்கத்திற்குச் சிறிதளவும் பயன்படவில்லை. யாருடைய நலன் பாதுகாக்கப்படுவதற்கு எழுந்ததோ,
அவர்களுடைய நலனும் பாதுகாக்கப்படவில்லை.
… … …
தொழிற்சங்கம் ஏற்படுத்தப்பட்டதை நாம் குறைகூறவில்லை.
அத்தொழிற் சங்கத்தின் சட்டதிட்டங்களின் 22ஆம் பிரிவுதான் தொழிலாளர்களின் நலத்தைப் பாழ்படுத்தக்கூடியதாயுள்ளது.
22ஆம் பிரிவின்படித் தொழிற்சங்க நிர்வாகிகளுள்
பகுதிக்குக் குறைந்தவர்கள் தொழிற்சங்கத்திற்குச் சம்பந்தமல்லாதவர்களாக இருக்கலாம் என்பது.
அப்பிரிவைத்தான் நாம் ஓட்டை என்கின்றோம். அப்பிரிவை அடிப்படையாக வைத்துக்கொண்டே
கம்யூனிஸ்ட்களும், காங்கிரஸ் சோஷலிஸ்ட்களும்
தொழிற் சங்கத்திற்குள் புகுகின்றனர். அவர்கள் தொழிற்சங்கத்திற்குள் புகுந்து தங்களின்
தனிப்பட்ட கட்சி விளம்பரத்துக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபடுவதைத் தவிர தொழிலாளர்களின்
முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதில்லை என்று கூறலாம்.
… … …
தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட்களை ஓரளவில் ஆதரிக்கின்றனர்
என்றால், அவர்களுக்குக் கம்யூனிஸ்ட்கள் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை ஏய்க்கின்றனர்.
தொழிலாளர்களின் கூலியை உயர்த்துகிறோம், அவர்களின் வேலை நேரத்தைக் குறைக்கின்றோம் என்று
தொழிலாளர்களிடத்தில் ஆசைமொழி பேசுகின்றனர் கம்யூனிஸ்ட்கள். அவர்கள் பேச்சை நம்பிப்
போராட்டத்தில் இறங்குகின்றனர் தொழிலாளர்கள். ஆனால் போராட்டத்தில் இறங்குவதால் வரும்
பலனைப்பற்றி அவர்கள் கருதுவதில்லை . காரணம் அவர்கள் அதைப்பற்றிச் சிந்திக்கவிடாமல்
கம்யூனிஸ்ட்கள் தடுப்பதுதான்
… … …
இந்நிலையில் போராட்டம் செய்யும் தொழிலாளர்களுக்கும்,
போராட்டம் செய்யக்கூடாது என்று சொல்லும் தொழிலாளர்களுக்கும் பெரும் போர் நிகழ்கின்றது.
உடனே கலகத்தையடக்க போலிஸ் குறுக்கிடுகின்றது. அதனால் 100-க்கணக்காகத் தொழிலாளர்கள்
உயிரிழக்கின்றனர்.
ஆகவே, கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸ் சோஷலிஸ்ட்களும்
தொழிற்சங்கத்தில் புகுந்து வேலைசெய்ய, சட்டம் இருப்பதால்தான் இப்படிப்பட்ட கோரமான விளைவுகள்
உண்டாகின்றன என்று கூறலாம்.
எனவே, நாம்
கூறுவதெல்லாம் தொழிலாளர்கள் தங்கள் நலனைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளட்டும், அந்நியர்கள்
அவர்களுக்குள்ளே பிரவேசிக்கக்கூடாது என்பதுதான். அதற்காகத் தொழிற்சங்க சட்டத்தின்
22 ஆம் பிரிவை அரசாங்கத்தார் நீக்கிவிடவேண்டும் என்றும் கூறுகிறோம்.
… … …
திராவிடர்
கழகம் தொழிலாளர்களைப்பற்றி என்ன நோக்கம் வைத்துள்ளது என்று கேட்கலாம். திராவிடர் கழகமே
தொழிலாளரின் இயக்கமாகும். நாட்டின்கண் 100க்கு 90 பேர்களுக்குமேல்
பிறவித் தொழிலாளர்களாகவும் நடைமுறையில் தொழிலாளர்களாகவும் உள்ளனர். அவர்கள் அனைவருக்காகவும்
திராவிடர் கழகம் பாடுபடுகின்றது. எனவே தொழிற் சங்கத்திற்குள் புகுந்து திராவிடர்
கழகம் வேலை செய்ய வேண்டுமென்பது அவசியமில்லை. கம்யூனிஸ்ட் கட்சியினரைப் போல் தொழிலாளர்களுக்குக்
கூலியை உயர்த்துகிறோம், வேலை நேரத்தைக் குறைக்கின்றோம் என்று ஆசை வார்த்தை பேசவில்லை
- திராவிடர் கழகத்தினர்.
திராவிடர் கழகத்தினர் கூறுவதெல்லாம் தொழிலாளர்கள்
தொழிற்சாலையின் பங்குதாரர்களாக ஆகவேண்டுமென்பது தான். மேலும் தொழிலாளர்கள் உண்மையில்
பிறப்பினால் தொழிலாளர்கள் அல்ல என்றும், வாய்ப்பினால் அவர்கள் தொழிலாளர்களாக ஆக்கப்பட்டவர்கள்
என்றும், ஆக்கப்படவேண்டும் என்பதற்காகவும், பிறவியில் ஜாதி இருக்கக்கூடாது என்பதற்காகவும்
திராவிடர் கழகம் பாடுபடுகின்றது.
தொழிலாளர்களுக்குக் கூலியை உயர்த்துவதும், வேலை
நேரத்தைக் குறைப்பதும், வெளியிலிருந்து தொழிற்சங்கத்துள் புகுகின்றவர்களின் வேலையல்ல.
அது தொழிலாளர்களாலேயே! செய்து கொள்ளப்பட வேண்டியது ஆகும்.
மேலும் “சூத்திரன்” (தேவடியாள் மகன்), "சற்சூத்திரன்
(நல்ல தேவடியாள் மகன்) என்று ஆவதால், ஒரு பகுத்தறிவற்றவன் எவ்வளவு பலனைப் பெறுவதாகக்
கருதுகின்றானோ அவ்வளவு பலனைப் பெற்றதாகத்தான் 10 அணா கூலிபெற்ற தொழிலாளி ரூ.1-0-0 பெற்றால்
கருதுவானே ஒழிய, அவன் தொழிலாளி தன்மையிலிருந்து மீளமாட்டான். அதாவது, தான் தொழிலாளி
முதலாளிக்கு அடிமை என்பதை "அதிகக் கூலி" பெறுவதன் மூலம் ஊர்ஜிதப்படுத்திக்
கொள்கிறான் என்று கூறலாம். ஆனால், தொழிலாளர்கள் தொழிற்சாலையில் காலப்போக்கில் பங்குதாரர்களாக
ஆக்கப்படுவது சூத்திரப் பட்டத்தையே அடியோடு தொலைப்பதற்குச் சமமாகும். அதற்காகத்தான்
திராவிடர் கழகமும் பாடுபட்டு வருகின்றது.
ஜாதியில், பிறப்பில், காரியத்தில் உழைப்பு இல்லாத
பார்ப்பனர்கள் தொழிலாளர்கள் காரியத்தில் பிரவேசிக்கிற பித்தலாட்டங்களுக்கு இடம் தந்தது
தொழிற்சங்க சட்டத்தின் 22ஆம் பிரிவேயாகும்.
பார்ப்பனர்களையே தலைவர்களாகக் கொண்ட கம்யூனிஸ்ட்
கட்சியும், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியும், தொழிலாளரின் இழி நிலையை மாற்றியமைக்கும்
என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஆகவே, பார்ப்பான் சம்பந்தப்பட்ட எந்தத் தொழிலாளர் சங்கமும்
தொழிலாளிகள் என்பதாக (சூத்திரர் அடிமை என்பதாக) ஓர் இனம் அல்லது வர்க்கம் நாட்டில்
இருக்கக்கூடாது என்று வேலை செய்ய முடியவே முடியாது. அப்படி வேலை செய்வதாயிருந்தால்
பார்ப்பனன் தற்கொலை செய்துகொள்ள சம்மதித்ததாகத்தான் அர்த்தம்.
… … …
ஆகவே, தொழிலாளர்கள்
தங்கள் நலத்தைத் தாங்களாகவே பாதுகாத்துக் கொள்ளவேண்டும்; அந்நியர்களைத் தொழிற்சங்கத்துள்
புகவிட்டுத் தம்மைப் பிளவுபடுத்திக் கொண்டு பல கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகவேண்டாம் என்று
கூறுகிறோம்.
உள்ளபடியே நாட்டிலே குழப்பம் விளைவிக்கக்கூடாது
என்று அரசாங்கம் கருதுமானால், அந்நியர் தொழிற்சங்கத்துள் புகலாம் என்னும் சட்டத்தைப்
போக்கட்டும். அந்நியர்கள் உள்ளே புகுந்த காரணத்தால் ஏற்படும் குழப்பத்தை அடக்குகின்ற
வகையில் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகின்றவர்கள் வெள்ளையுள்ளம்
படைத்த தொழிலாளர்கள் தான் என்பதை அரசாங்கம் உணரட்டும்.
கம்யூனிஸ்ட்கள் தொழிற்சங்கத்துள் புகுந்து குழப்பம்
விளைவிப்பதாலேயே கம்யூனிஸ்ட்களும் பல தொல்லைகளுக்காளாக நேரிடுகின்றது.
… … …
தொழிற்சங்கத்திற்கு உள்ளே சென்றுள்ள கம்யூனிஸ்ட்களை
ஒழித்துக்கட்டிக் காங்கிரஸ் சோஷலிஸ்ட்களுக்குச் செல்வாக்கு தேடிக்கொடுப்பதற்காகத்தான்
இன்று கம்யூனிஸ்ட்கள் அரசாங்கத்தாரால் அடக்கப்படுகின்றனர் கம்யூனிஸ்ட்களை ஒழித்துக்கட்டி,
சோஷலிஸ்ட்களை உட்புகுத்தப் பாடுபடும் அரசாங்கத்தின் தன்மை, 'அவன் கிடக்கிறான் குடிகாரன்,
எனக்கு ஒரு மொந்தை போடு' என்று கூறுவதைப் போலிருக்கின்றது.
உள்ளபடியே
நாட்டில் அமைதி நிலவச் செய்ய வேண்டுமானால் கம்யூனிஸ்ட்களை ஒழிக்கத் திட்டம் வகுப்பதை
விட அந்நியர்கள் தொழிற்சங்கத்தில் புகலாம் என்ற சட்டத்தை ஒழித்துவிடவேண்டும் என்று
கூறுகிறோம்.”
('குடிஅரசு' = துணைத் தலையங்கம் -18.01.1947)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 158/160)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக