புதன், 11 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 33:-


(சிங்காரவேலரைத் தொடர்ந்து பொன்னம்பலத்திற்குப் பெரியார் பதிலளிக்கிறார். பார்ப்பனியத்தை ஒழிக்கும் முயற்சியை விடுத்துச் சமதர்மம் பொதுவுடைமை என்று திசை மாறினால் பார்ப்பனியம் பழையபடி துளிர்விடும் என்பது பொன்னம்பலத்தின் கருத்தாகும். இதற்குத் தான் இக்கட்டுரையில் பெரியார் பதிலளித்துள்ளார்.

பார்ப்பனியத்தை ஒழிப்பது மட்டுமே சுயமரியாதை இயக்கத்தின் லட்சியமல்ல என்று பெரியார் கூறுகிறார். சுயமரியாதை இயக்கத்தின் நடவடிக்கையால் பார்ப்பனர்களின் ஆதிக்கம் சில குறைவுபட்டது, அரசியலில் பார்ப்பனரின் ஆதிக்கம் ஓரளவுக்குக் குறைந்தது என்பதுடன் ஒரு எதிர்விளைவை இங்கே பெரியார் குறிப்பிடுகிறார். அதாவது பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் குறைக்கும் முயற்சியின் விளைவாய் பார்ப்பனரல்லாதார்கள் பார்ப்பனர்களின் இடத்திற்கு வந்துவிட்டதாக ஆதங்கப்படுகிறார். இந்தப் போக்கு இன்றும் விமர்சனத்திற்கு உள்ளாகிறது.)

தந்தை பெரியார்:-

தோழர் பொன்னம்பலம்

“தோழர் பொன்னம்பலனார் எழுதியிருக்கும் இவ்வாரக் கட்டுரையில் சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்தில் ஈடுபட்டிருந்த பார்ப்பனியத்தை ஒழிக்கும் முயற்சியிலும் பார்ப்பன ஆதிக்கத்தை அழிக்கும் முயற்சியிலும் இன்னமும் ஈடுபட்டிருக்காமல் அதை விட்டு விட்டு வேறு வழியில் அதாவது சமதர்மம் பொதுவுடமை என்கின்ற வழியில் பிரவேசித் தது தப்பு என்றும் அதனால் பழயபடி பார்ப்பனியம் துளிர்த்து வருவதாக வும், பார்ப்பன ஆதிக்கம் தலை விரித்தாடுவதாகவும் குறிப்பிட்டுவிட்டு நாம் ஏதோ பார்ப்பன மாய்கையில் சிக்கி இருப்பதாகவும் பொருள்பட மிக்க ஆத்திரத்துடன் பல விஷயங்களைக் கொட்டியிருக்கிறார். அதற்கும் சிறிதாவது சமாதானம் கூறவேண்டும் என்றே கருதுகின்றோம்.

முன்போல் பார்ப்பனீயத்தின் கொடுமைகளை வெளியாக்கும் வேலையிலும் பார்ப்பன ஆதிக்கத்தை ஒடுக்கும் வேலையிலும் நமது முயற்சி முழுவதும் இல்லை என்பதை நாம் ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளு கின்றோம். ஆயினும் சுயமரியாதை இயக்கத்தின் வட்சியமெல்லாம் அதுவேதான் என்பதை நம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. பார்ப்பனியத்துக்கும் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் காரணமாயிருப்பது மதம் என்பதை நமது தோழர் பொன்னம்பலனார் அவர்கள் உணர்ந்திருப்பார். அம்மதத்தை ஒழிப்பதில் நாம் முன்னையை விட இப்போது பலமடங்கு தீவிரமாய் இருக்கின்றோம் என்பதையும் தோழர் பொன்னம்பலம் அவர்கள் அறிவார்.

பார்ப்பனியத்தையும், பார்ப்பன ஆதிக்கத்தையும் அழிக்க வேண்டிய அவசியம் நமக்கு எதனால் ஏற்பட்டது. பார்ப்பனியத்தின் பேராவோ, பார்ப்பனர் பேரிலோ, ஏற்பட்டது துவேஷமா? வெறுப்பா வஞ்சகமா? என்பதை யோசித்துப்பார்க்க விரும்புகின்றோம். ஒரு நாளுமல்ல மற்றென்ன வென்றால், பார்ப்பனியமும் பார்ப்பன ஆதிக்கமும் ஏழை மக்களை தாழ்த்தப் பட்ட மக்களை என்றென்றும் தலை எடுக்கவொட்டாமல் அழுத்தி நகக்கி வருவதற்கு ஆதரவாய் இருக்கின்றதென்றும், தாங்களே என்றென்றும் மேன்மையாயும் ஆதிக்கமாயும் இருந்துவரத்தக்கதாய் இருக்கின்றதென்றும் கருதியே அதனுடன் போர் புரிந்து வந்தோம்.

ஆனால் அப்போரின் பலன் என்ன ஆயிற்று என்று பார்ப்போமானால் பார்ப்பனர்களின் ஆதிக்கம் சில குறைவுபட்டது. அரசியல் துறையில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு சாவுமணி அடிக்கத்தக்க நிலைமையும் ஓரளவுக்கு ஏற்பட்டது. ஆனால் இதனால் ஏற்பட்ட பயன் என்ன என்று பார்ப்போமானால் சில பார்ப்பனரல்லாதார் பார்ப்பனர்களின் ஸ்தானத்துக்கு வந்தார்கள். பார்ப்பனர்களைப் போலவே நடந்தார்கள். ஏழைகளையும், தாழ்த்தப்பட்டவர்களையும், தலைதூக்க விடாமல் இருக்க பார்ப்பனர்களுக்கு கையாளாக இருந்து வேலை செய்து வருகின்றார்கள் என்பதுதான் வெளிப்படையாகத் தெரிகின்றது.
… … …
பார்ப்பனரல்லாத மக்கள் அறிவோடு, மானத்தோடு நடந்துகொள்ள யோக்கியதை உடையவர்கள் என்றால், பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதில் அருத்தமுண்டு; அப்படிக்கில்லாமல் பார்ப்பனீயத்தை அழித்து பார்ப்பன அடிமை கையில் ஆதிக்கத்தை கொடுப்பதற்கு பாடுபடுவதென்றால், அது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்வதேயாகும். என்றாலும் எல்லாக்காரியத்தையும், ஏககாலத்தில் செய்கின்ற முயற்சியில்தான் நாம் இருக்கின்றோமேயொழிய அவற்றை அடியுடன் விட்டுவிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
(குடி அரசு - தலையங்கம் - 22.10.1933 )
(தந்தை பெரியாரின் பொதுவுமைமைச் சிந்தனைகள் I I – பக் 164-/-169)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக