நாஸ்திகர்களே
சமதர்மவாதிகள்!
(1949லிலும் பெரியார் நமது நாட்டிற்க சமூகச் சமதர்மமே முதலானது பொருளாதாரச் சமதர்மமே அதற்கு அடுத்தப்படியானது என்கிறார். பணம் படைத்தவர்களிடம் பணம் சேர்ந்த முறையை யார்தான் சரியானது என்று சொல்ல முடியும் என்று கேள்வு எழுப்பும் பெரியார் அடுத்த என்ன கூறுகிறார் என்பதைப் பாருங்கள். இந்தப் பணக்காரர் ஏழை முறையை மாற்ற வேண்டும் என்று சொல்லும் போது கடவுளையும் மதக் கொள்கைகளையும் குறுக்கே கொண்டுவந்து போட்டால் அக்கடவுளையும் மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்? என்று கேட்கிறார்.
குறுக்கே அவர்கள் போடுவதற்குக் காரணமே பணம் படைத்தவர்களைக் காப்பாற்றுவதற்குத் தானே. பணம்படைத்தவர்களின் சுரண்டலை ஒழித்துவிட்டால் யாருக்காக. யார் குறுக்கே கொண்டு வந்து மததைப் போடுவார்கள். பணம்படைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கு உருவானதை ஒழிக்கப் பெரியார் விரும்புகிறார். ஆனால் பணக்காரர்களை ஒழிக்காமல் மதத்தை ஒழிக்க முடியாது என்பதே உண்மையாகும்.
மூலதனத்திற்கும் மதத்திற்கும் உள்ள பிணைப்பை பெரியார் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதனால் தான், “மனித வாழ்க்கைக்கும் பேதாபேதங்களுக்கும் கடவுள் சம்பந்தமில்லை என்று சொல்லும் பட்சம் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?” என்று கூறுகிறார். இது வாதத்திற்குக் கூறியதாகத் தெரியவில்லை. மதத்தில் காணப்படும் வர்க்க சார்பை தெரியாததனால் தான் அவ்வாறு கூறுகிறார்.)
தந்தை
பெரியார்:-
“சமதர்மம் என்கின்ற வார்த்தைக்கு, சமுகத்துறையிலும் பொருளாதாரத் துறையிலும்,
மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய்ப் (பேதமின்றி) வாழவேண்டும் என்பதையே, சமதர்மம்
என்று நான் கருத்துக்கொண்டு சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்குப் பிரயோகிக்கின்றேன்.
ஏனெனில், மற்ற நாட்டில் சமுகத் துறையில் நமது நாட்டில்
உள்ளது போன்ற பிறவி உயர்வு, தாழ்வு, பேதா பேதம் இல்லை. பொருளாதாரச் சம்பந்தமே பெரிதும்
மற்ற நாடுகளில் இருக்கின்றன. நமது நாட்டுச் சமுதாய உயர்வு தாழ்வானது, பிறவியிலேயே வகுக்கப்பட்டு
அதை மதத்தோடு பொருத்தி, அதற்கு அரசியல் பாதுகாப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது.
அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில்
ஆரம்பித்தால், அதற்கு நம் நாட்டு மக்கள், அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை
நிலையில் இருக்கும் மத நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்களே சிறிது கூட ஒப்பமாட்டார்கள்.
ஒப்பமாட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல், அவர்களே நமக்கு எதிரிகளாகவும் இருப்பார்கள்.
ஏனெனில் பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு, அம்மதம் பாமர
மக்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும், அதை மாற்றாமல் அதை மாற்றுவதற்குத்
தகுந்த முயற்சி எடுக்காமல், மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவது, பாலைவனத்தில் இருந்து சத்தம்
போடுவது போலவேயாகும்.
முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால்
உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டுச் சமதர்மத்துக்கு முதற்படியாகும்.
அதனாலேயே பொருளாதார சமதர்மமே மனித சமுக சாந்திக்கு, மருந்து என்று கருதி இருக்கும்
நான், சமுதாயத்தில் வாழ்க்கையில் சமதர்மத்தை அபேதவாதத்தை முக்கியமாய் வலியுறுத்திவருகிறேன்.
… … …
நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து,
மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிருக்கிறது.
ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான், சமுக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழமுடியும்.
பொருளாதார பேதத்துக்கும், சமுக ஜாதி பேதமுறைதான் பெரிதும் காரணமாய்க் காவலாய் இருந்து
வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதிபேதமே பொருளாதாரச் சமதர்ம முறையை
நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதாரப் பேதத்துக்கு இடமளித்தும்
வருகிறது.
எந்தக் காரணத்தைக்
கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம். எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து
விட்டாலும், நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான்
உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்குப் பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்குக்
காரணமெல்லாம், அவர்களில் பிறவியில் கீழ் மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும்.
நமது மக்களுக்கு வெறும் பொருளாதாரச் சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம்
ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி, பொருளாதாரச் சமதர்மம் சொன்னால் தான் உண்மையாகக்
கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது.
ஆகவே சமுக
சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம்
பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கின்றது என்றும், பிறவி
ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம். மதத்தைப் பற்றியோ மதத்தில்
உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும்
அதை நாஸ்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால் தான் சமதர்மம் பேசுகின்ற யாரும்
கண்டிப்பாய் நாஸ்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.
நாஸ்திகனாவதற்குக் கடவுள்
இல்லை என்றுகூடச் சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே
போதுமானதாக இருக்கிறது.
… … …
ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக
முடியாது. நாட்டுக் கோட்டையார்களில் 10 லட்சம், 20 லட்சம், கோடிக் கணக்கான ரூபாய் சொத்துள்ளவர்கள்
இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும் பாட்டிற்கும் இவர்கள்
அனுசரிக்கும் முறைக்கும் இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு
பணம் கொடுத்திருக்க முடியுமா? ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத்தினால், தொழில் முறையினால்,
மனவலிமையினால், சம்பவங்களால் ஏற்பட்டதென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? இவ்வளவு
பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதாரமாய் இருந்த முறையை யார்தான் சரியானமுறை என்று சொல்லிக்கொள்ள
முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும்
நிலையை யார்தான் நல்லநிலை என்று சொல்ல முடியும்? இவற்றையெல்லாம் மாற்றவேண்டும் என்று
சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டுவந்து குறுக்கே போட்டால் அக்கடவுளையும்,
மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?
… … …
எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும்
இருக்கக் கூடாது என்பதற்காக நான் கூறவில்லை. மனிதச்
சமூக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய், எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும், அப்படிப்பட்ட
கடவுளை இருக்கவிடக் கூடாது என்றும் தான் வற்புறுத்திக் கூறுகிறேன். மனித வாழ்க்கைக்கும்
பேதாபேதங்களுக்கும் கடவுள் சம்பந்தமில்லை என்று சொல்லும் பட்சம் அக்கடவுளைப் பற்றி
நமக்கு என்ன கவலை?”
('குடிஅரசு' - கட்டுரை - 18.06.1949)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 230/235)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக