புதன், 11 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 39:-


மீண்டும் சுயராஜ்ய கட்சியா? –

(“புரட்சி” பத்திரிகையில் பெரியார் எழுதிய மூன்று கட்டுரையின் பகுதிகள் இங்கே பதியப்பட்டுள்ளது. முதலாளியின் ஆதிக்கத்தை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சியினை தக்கவாறு திருத்தி சமதர்ம லட்சியத்தை பெறச் செய்வது கடமை என்கிறார் பெரியர். மற்றொரு இடத்தில் தொழிலாளியின் முன்னேற்றத்திற்கு தொழிலாளிகளையே நம்புங்கள் என்று கூறி, தொழிலாளர் உரிமைக்கு வெளியில் இருந்து உதவிடுபவர்களை பிரித்து விடுகிறார். குறிப்பாக அரசியல் கட்சிகளை தொழிலாளர் சங்க தலைமையை ஏற்க விடாதீர்கள் என்றும் கூறுகிறார். அதற்கு அடுத்து உழைப்பவனுக்கே தனது உழைப்பின் முழுப்பயன் சேர வேண்டும். இதுதான் தற்கால நாகரிகம் என்று நாகரிகத்தின் மூலம் சமதர்மத்தை வலியுறுத்துகிறார்.

வர்க்கமாக பிளவுப்பட்ட சமூகம், பெரியார் கூறுகிற இது போன்ற ஆலோசனைகள் ஒன்றுபடுத்துமா?

பலப்பிரயோமற்ற வழிமுறைகளால் சமதர்ம சமூகத்தை மாற்றமுடியும் என்ற பெரியாரின் கனவு சாதியப்படுமா?

சமூகத்தின் வர்க்கத் தன்மையை உணர்ந்தால் தான், வர்ணப் போராட்டத்தை வர்க்கப் போராட்டத்தில் உள்ளடங்கியே நடத்த முடியும் என்ற தெளிவு பிறக்கும்)

தந்தை:-

“நம்நாட்டன் பழைய வர்ணாஸ்ரம தர்மத்தை யொத்த இன்றைய முதலாளி, தொழிலாளி என்ற முறையையும் புரோகிதர் ஆட்சியையும், வியாபாரிகள் கொள்ளையையும் பணக்காரர்கள், சிற்றரசர்கள் போன்றவர்களின் ஆதிக்கத்தையும் மறைமுகமாகவேனும் ஆதரிக்க ஒருப்படும் எந்தக் கட்சியானாலும் அது தக்கவாறு திருத்தி சமதர்ம லக்ஷியம் பெறச் செய்வதும் நமது கடமையாகும். மற்றும் நமது இயக்க வேலைத் திட்டமாகிய பொதுவுடமைத் தத்துவத்தை அதாவது நிலங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்து வசதிகள் முதலியனவற்றை பொதுவாக்கி அந்தந்த ஸ்தாபளங்களில் உழைத்துவரும் விவசாயிகள், தொழிலாளர்கள் முதலியவர்களுக்கு அதனுடைய வருமானங்கள் யாவற்றையும் உபயோகப்படச் செய்து உழைக்கத்தக்க முன்னணி வேலைத் திட்டத்தை தீவிரப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்.”
(புரட்சி - தலையங்கம் - 18.03.1934)

முதலாளிகள் ஆதிக்கம் உஷார்! – தந்தை பெரியார்
“இந்திய நாட்டின் தொழிலாள வகுப்பார்கள் தங்கள் அடிமைச் சங்கிலிகளை அறவே தகர்த்தெறிய, பரிபூரணமாக இன்னும் முற்படவில்லை என்றாலும், ஓர் அளவிற்கு அவர்கள் சமீப காலத்தில் விழிப்படைந்திருக் கிறார்கள் என்பது மாத்திரம் மறுக்க முடியாத உண்மையாகும். தொழிலாளர்களுடைய விழிப்பிற்குக் காரணம், அவர்களுடைய சகிக்க முடியாத கொடிய துன்பங்களும் கஷ்டங்களுமேயாகும்.
… …. ….
முதலாளி வகுப்பின் ஆதிக்கம் ஒழிந்தாலொழிய தொழிலாளி விடுதலை பெற மார்க்கமில்லை என்பதை இன்றைய தினம் யாரும் ஆட்சேபளையின்றி ஒப்புக் கொள்வர். அதோடு ஜாதி அபிமானத்தாலோ - மத அபிமானத்தாலோ தேசாபிமானத்தாலோ, கடவுளபிமானத்தாலோ தொழிலாளர்களுடைய முற்போக்கு கிஞ்சிற்றும் ஏற்படுவதற்கு வழியில்லை என்பதும், சமீப காலத்தில் நாம் அனுபவப் பூர்வமாகக் கூட கண்டறிந்த உண்மையாகும்
… …. ….
தோழர்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிட்டுவிட்டு இதனை முடித்து விடுகின்றோம். அதாவது தொழிலாளியின் முன்னேற்றத்திற்கு தொழிலாளிகளையே நம்புங்களென்பதேயாகும். ”
(புரட்சி - தலையங்கம் – 25-03-1934)

நமது நாகரிகம் - தந்தை பெரியார்

“உழைப்பவனுக்கே தனது உழைப்பின் முழுப்பயன் சேர வேண்டும். இதுதான் தற்கால நாகரிகத்தின் சரிசமத்துவ வாழ்க்கை. உலக மக்களில் எவருக்காகினும், இந்த சரி சமத்துவ சமதர்மம் குறைவுபடுமேயானால். அது காட்டுமிராண்டி அநாகரிக வாழ்க்கையே யொழிய நமது நாகரிகமாகாது.”
(புரட்சி - தலையங்கம் – 01-04-1934)

(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 213------221)


                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக