சனி, 29 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 29:-


ஜமீன்தாரல்லாதார் மகாநாட்டில் சொற்பொழிவு - தந்தை பெரியார்

(ஜமீன்தாரர்கள் இந்த ஆட்சி முறைக்குத் தூண்களாக இருந்து வருகிறார்கள், அவர்களை இல்லாமலாக்க வேண்டும் என்று ஜமீன்தாரல்லாதார் மகாநாட்டைப் பெரியார் 1933ஆம் ஆண்டுக் கூட்டினார். இதே போல் முதலாளிகள் அல்லாதார் மாநாடு, தொழிற்சாலைச் சொந்தக்கார்கள் அல்லாதார் மகாநாடு, பணக்காரர்கள் அல்லாதார் மாநாடு போன்று சமூகத்திற்குத் துன்பதை அளிக்கின்றவர்களை அல்லாதார் மாநாடுகளைக் கூட்டி பொதுமக்களுக்கு அவர்களின் கொடுமைகளை விளக்கிக்காட்டி அவைகளை ஒழிக்கச் செய்ய வேண்டியது நமது கடமை என்கிறார் பெரியார்.

ஆதிக்கம் செய்பவர்களை இது போன்று மாநாட்டின் மூலம் நீக்கிட முடியுமா? அவர்களின் வேரை அறிந்து அந்த வேரை அழித்தால்தான் அவர்கள் இல்லாது போவார்கள். அவர்கள் மீதான வெறுப்பைக் கற்பிப்பதால் மட்டும் அவர்கள் அழிந்துவிட மாட்டார்கள். சர்க்காருக்கு இடையே காணப்படும் இந்த ஜமீனை நீக்கி. சர்க்கார் நேராய் செயற்பட்டால் 2 கோடி ரூபாய் இலாபம் ஏற்படும் என்கிறார் பெரியர். அந்தப் பணத்தைக் கொண்டு மக்களுக்கு எவ்வளவு பயன்களை ஏற்படுத்தலாம் என்று ஆதங்கப்படுகிறார்.

வர்க்க சமூகத்தல் அரசு ஒரு வர்க்கத்தின் சார்பாகத்தான் செயற்படுகிறது. அந்த வர்க்க செயற்பாட்டிற்காகத்தான் 2 கோடி போன்று பல கோடிகளைச் செலவளிக்கப்படுகிறது. பணக்காரர்கள் ஆன்மீகத்திற்கு, அதாவது கோவில், குளம், கும்பாபிசேகம் போன்ற செலவுகளைச் செய்வது தமது வர்க்க நலனுக்காகவே. மதப்பிடிப்பு என்பது உழைக்கும் மக்களின் எதிர்புணர்வை மழுங்கடிக்கிறது. அதற்காகத்தான் பணக்கார வர்க்கம் அதற்குச் செலவு செய்கிறது.

பலனடைந்த பணக்கார வர்க்கமும் அரசும் கோடிகளைத் தெரிந்தே செலவிடுகிறது. இதற்குச் செய்யும் செலவை கையில் வைத்திருந்தாலும் இந்த வர்க்க அரசு உழைக்கும் மக்களுக்குத் தேவையானதை செய்யாது என்பதே உண்மையாகும். அரசின் வர்க்கத் தன்மையைப் பெரியார் புரிந்து கொள்ளவில்லை அதனால் தான், அரசு மக்களுக்கு நன்மைகள் அதிகம் செய்யாது இருப்பதற்குக் காரணம் பணப்பற்றாகுறை என்று கருதுகிறார். சமூகத் தீங்கை நீக்க வர்க்க புரிதலும், வர்க்க அரசியலும் அவசியம் தேவை.)

தந்தை பெரியார்:-

“நாம் உலக பொதுஜனங்களுக்குச் செய்யவேண்டிய வேலைகளின் முக்கியத்துவம் எல்லாம் இம்மாதிரியாக பல அல்லாதார்கள் மகாநாடுகள் கூட்டி அவர்களது ஆதிக்கங்களையும், தன்மைகளையும் ஒழிப்பதில் தான் பெரிதும் அடங்கியிருக்கின்றது. இன்னும் இதுபோலவே பல மகாநாடுகள் கூட்ட வேண்டியிருக்கிறது. சுயமரியாதை மகாநாடுகள் கூட்டப்படும் இடங் களில் இம்மாதிரி மகாநாடுகள் அடிக்கடி கூட்டப்படுமென்று எதிர்பார்க்கி றேன். உதாரணமாக லேவாதேவிக்கார்கள் அல்லாதார் மகாநாடு, முதலாளி கள் அல்லாதார் மாநாடு, தொழிற்சாலை சொந்தக்காரர்கள் அல்லாதார் மகா நாடு, வீடுகளின் சொந்தக் காரர்கள் அல்லாதார் மகாநாடு, நிலச்சுவான்தார் அல்லா தார் மகாநாடு, மேல்ஜாதிக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, பணக் காரர்கள் அல்லாதார் மகாநாடு என்பது போன்ற பல மகாநாடுகள் கூட்டி இவர்களின் அக்கிரமங்களையும், கொடுமைகளையும், மோசங்களையும் பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டி அவைகளை ஒழிக்கச்செய்ய வேண் டியது நமது கடமையாகும்.

உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த தன்மைகளால், எந்த எந்த மனிதக் கூட்டங்களால் மனிதசமூகத்திற்கு இடஞ்சல்களும், சமத்துவத் திற்கும், முற்போக்குகளுக்கும் தடைகளும், சாந்திக்கும் சமாதானத்துக்கும் முட்டுக்கட்டைகளும் இருக்கின்றனவோ அவைகளெல்லாம் அழிந் தொழிந்து என்றும் தலை தூக்காமலும், இல்லாமலும் போகும்படி செய்ய வேண்டியது தான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய லக்ஷியமாகும்.

மனித சமூகத்துக்கு உள்ள தரித்திரத்திற்குக் காரணம் செல்வவான் களேயாகும். செல்வவான்கள் இல்லாவிட்டால் தரித்திரவான்களே இருக்க மாட்டார்கள். மேல்வகுப்பார் இல்லாவிட்டால் கீழ்வகுப்பார் இருக்கவே மாட்டார்கள். ஆதலால் தான் இம்மாதிரி அல்லாதவர்கள் மகாநாடு கூட்ட வேண்டு மென்கின்றோம்.
… … …

பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் பிறவியின் காரண மாகவே பரம்பரை உயர்வுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளப்படு பவர்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் இன்றைய ஆட்சி முறைக்கு தூண்கள் போலவும் இருந்துவருகின்றவர்களாவார்கள். பார்ப்பனர் களைப் போலவே ஜமீன்தார்கள் என்பவர்கள் உலகத்துக்கு வேண்டாதவர் களும், உலக மக்கள் கஷ்டங்களுக்கெல்லாம் காரணமாயிருப்பவர்களுமா வார்கள்.
… … …
சாதாரணமாக ஜமீன் என்கின்ற மேற்கண்ட தன்மை, நாட்டில் அடியோடு இல்லாமல் இந்த வாபங்களையும் அதாவது இந்த 2 கோடி ரூபாய் களையும் சர்க்காரே நேராய் அடைவதாய் இருந்தால் அதனால் மக்களுக்கு எவ்வளவு பயன் ஏற்படுத்தலாம் என்பதையும் யோசிக்க வேண்டுகிறேன்.

ஆதலால் மேல்ஜாதி, கீழ்ஜாதி முறை கூடாதென்றும், குருக்கள் முறை கூடாதென்றும் எப்படி நாம் பல துறைகளில் வேலை செய்கின்றோமோ அது போலவேதான் ஜமீன்தாரன் குடிகள் என்கின்ற தன்மையும், முறையும் கூடாதென்று வேலை செய்ய நாம் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றோம்”
(குடிஅரசு – சொற்பொழிவு -27-08-1933)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 128-130 / 133-134)


தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 28:-


தோழர் காந்தி மறுபடியும் சிறைப்பட்டார் – தந்தை பெரியார்

(காந்தியப் போராட்டத்தை விமர்சிக்கலாம், ஆனால் சுதந்திரப் போராட்டத்தை மறுதலிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சுதந்திரப் போராட்டம் ஏகாதிபத்திய அரசை அசைக்கவில் என்று பெரியார் தெரிவித்துள்ளார். காந்தியப் போராட்டம் அரசை அசைக்கிறதோ இல்லையோ அதற்கான மக்கள் ஆதரவு அவர்களை அசைக்கவே செய்யும். காந்தியின் அகிம்சைப் போராட்டம் மக்களின் ஆதரவைப் பெற்றதனால் தான் அதற்கு வலிமை. அகிம்சைப் போராட்டமே எதையும் சாதித்திட முடியாது என்பது உண்மை. ஆனால் அதற்குப் பின்னால் மக்கள் சேரும் போது அதற்குச் சக்தி இருக்கவே செய்யும்.

தேசிய விடுதலை இயக்கத்தை ஒரு போலி இயக்கம் என்று பெரியார் இங்கே கூறியுள்ளார். இதனை அடக்க அரசாங்கம் எடுக்கும் போலி முயற்சியினால் அதிகம் செலவழிக்கப்படுவதாகவும், அதனால் ஏழை மக்களும் நடுத்தர மக்களும் கஷ்டப்படுகிறார்கள் என்று வருத்தப்படுகிறார். தேசிய போராட்டத்தை முதலாளித்துவ ஆதிக்கத்துக்கானது என்கிறார், ஆனால் ஏகாதிபத்திய அரசலால், முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய சுரண்டல் என்கிற இரட்டை சுரண்டலால் எழை மக்கள் அதிகம் அவதிப்படுவதைப் பெரியர் கணக்கில் கொள்ளவே இல்லை. அதனால் தான் தேசிய போராட்டத்தில் ஏழை மக்களும், உடல் உழைப்பால் பாடுபட்டுப் பிழைக்கும் மக்களும் கலந்து கொள்வது தற்கொலையே என்கிறார்.)

தந்தை பெரியார்:-
“… “சாத்தான்தன்மைகொண்ட சர்க்காரை எதிர்த்துச் சத்தியாக்கிரகம் செய்து அதையொழித்துவிடுவது என்று சொல்லிக்கொண்டு, சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு முதலிய காரியங்களெல்லாம் காந்தியாரைப் பற்றிய ஒரு விளம்பரத்துக்கும் பாமர ஜனங்களிடையே ஒருபோலி - உயிரற்ற கிளர்ச்சி ஏற்பட்டு யேற்றப்பட்டு சோர்வும், அவ நம்பிக்கையும் அடையவுந்தான் பயன்பட்டதே தவிர ஒரு அளவுக்காவது சாத்தான் அரசாங்கத்தை அசைக்கவோ, அல்லது அது இக்கிளர்ச்சிகளை லட்சியம் செய்யவோ தக்க மாதிரியில் இதுவரை பயன்படவில்லை.

ஒரு சமயம் சர்க்கார் ஏதாவது தாங்கள் இதை லட்சியம் செய்ததாக காட்டிக் கொண்டிருப்பார்களேயானால் அது போலித்தனமாய் பாமர மக்கள் ஏமாறு கின்றதற்காக காட்டிக்கொண்டிருக்கக் கூடியதாய் இருக்குமே தவிர வேறில்லை. ஏனென்றால் இந்த சத்தியாக் கிரகத்தால் தாங்கள் மிகவும் பயந்துவிட்டதாகக் காட்டிக் கொண்டால் தான் கஷ்டப்படும் மக்கள் வேறு வழியில் பிரவேசிக்காமல் இந்தப் பைத்தியக்காரத் தனத்திலேயே முழுகி இருப்பார்கள் என்கின்ற எண்ணத்தைக் கொண்டு அவர்கள் பயந்தவர்கள் போல் நடித்திருக்கலாம். அல்லது தங்களை ஆதரித்து நிற்கும் ஜனங்களுக்கு ஒரு போலித் திருப்தியை உண்டாக்க வெண்ணி அப்படி நடந்து இருக்க லாமே ஒழிய ஒரு நாளும் சத்தியாக்கிரகக் கொள்கையோ, தேசியக் கொள்கையோ எதுவும் இது வரையில் சர்க்காரை லட்சியம் செய்யும்படி செய்யவே யில்லை என்று தைரியமாய்ச் சொல்லு வோம்.

அன்றியும் இம்மாதிரி ஒரு போலி இயக்கம் நாட்டில் இருந்துகொண்டு ஜனங்களின் உணர்ச்சிகளையும், ஊக்கத்தையும் கவர்ந்து பாழாக்கிக்கொண்டு வருவதில் சர்க்காருக்கும், முதலாளிமாருக்கும் எவ்வளவோ லாபகரமான காரியம் என்று சொல்ல வேண்டும். ஆனால், இதற்காகக் கஷ்டப்படுவதும், நஷ்டப்படுவதும் பாமர ஜனங்களே ஒழிய மற்றபடி முதலாளிமார்களோ உத்தியோகஸ்தர்களோ சர்க்காரோ சிறிதுகூட இல்லவே இல்லை.

இந்தப் போலிக் கிளர்ச்சியை அடக்க அரசாங்கத்தார் எடுத்துக் கொள்ளும் போலி முயற்சிக்கு செலவழிக்கப்படும் காரியங்களுக்குச் செய்யப் படும் செலவுகளுக்கு ஆக ஜனங்களின் வரிப்பணமே செலவழிக் கப்படுகின்றது. இந்த வரியால் பணக்காரர்களுக்கு எவ்வித நஷ்டமும் ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால் புதிய வரிகளாலும் ஜனங்களுக்குச் சர்க்கார் செய்ய வேண்டிய கடமைகளைக் குறைப்பதாலும் ஏழை ஜனங் களும் நடுத்தர ஜனங்களுமே கஷ்டப்படுகிறார்கள்.

ஆதலால் பாமர ஜனங்கள் இதுவரை தாங்கள் முட்டாள்தனமாய் ஏமாந்து முதலாளி ஆதிக்கத்துக்கு தூணான தேசியப் பித்துக்கொண்டு அலைந்த முட்டாள் தனத்தை விட்டுவிட்டு எப்படி நடந்தால் முதலாளி தத்துவம் ஒழிக்கப்படும் என்றும், எப்படி நடந்தால் முதலாளி தத்துவ ஆட்சி அழிக்கப்படும் என்பதையும் கவனித்துப் பார்த்து அதற்கு ஏற்ற கொள்கை கொண்ட இயக்கத்துக்குப் பாடுபடும்படியும் அதற்குத் தங்களால் கூடிய சர்வ தியாகங்களையும் செய்யும் படியும் வலியுறுத்துகின்றோம்.

மற்றபடி ஒரு காதொடிந்த ஊசிக்கும் பயனில்லாமல் காந்தியாருக்கு உலக விளம்பரம் சம்பாதித்துக் கொடுப்பதிலும் சோம்பேறிகளாய் இருந்து ஒரு சிலர் வாழ வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கும் தேசியத்துக்கு ஆக்கம் தேடிக் கொடுப்பதிலும் ஏழைமக்களும் சரீரத்தால் உழைத்து பாடுபட்டுப் பிழைக்கும் மக்களும் கலந்துகொள்ளுவது என்பது தற்கொலையே ஆகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.”
(குடிஅரசு - தலையங்கம் - 06.08.1933)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 125-127)


வியாழன், 27 பிப்ரவரி, 2020

"CAPITAL" ("மூலதனம்”) – தந்தை பெரியார்


பொது உடமைக் கொள்கைகளைப் பற்றிய நூல்களில் எல்லாம் தலை சிறந்து விளங்குவதும் அது சம்பந்தமான எவ்வித சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் சமாதானம் காணக் கூடியதுமான ஒரு புத்தகம் எது என்றால் காரல் மார்க்ஸ் அவர்களால் சுமார் 60, 70 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட (Capital) கேப்பிட்டல் என்கின்ற ஆங்கிலப் பெயருடைய புத்தகமே யாகும்.

இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன் இதற்கு வேண்டிய விஷயங்களைத் தொகுக்கவும், மேல் ஆதாரங்களைக் கண்டு பிடிக்கவும் தோழர் காரல் மார்க்ஸ் அவர்கள் 1485 புஸ்தகங்களை வாசித்துப் பார்த்து விபரம் தெரிந்து கொண்ட பிறகு அந்நூலை எழுதி இருக்கிறார்.

ஜெர்மனியில் கென்சிங்டன் என்னுமிடத்திலுள்ள ஒரு கட்டிடத்தின் ஒரு அரையில் இருந்து கொண்டு இந்த புத்தகம் எழுதி இருக்கிறார்.

கொஞ்ச காலத்துக்கு முன் மாஸ்கோவில் காரல் மார்க்ஸ் இறந்த 51 வது வருடப் பூர்த்திவிழாக் கொண்டாடும் போது மேல்கண்ட கட்டிட அறை போல் மாஸ்கோவில் ஒரு அறை கட்டி அதில் மேற்குறிப்பிட்ட 1485 புத்தகங்களையும் வைத்து அதை ஒரு புத்தகசாலை மாதிரி செய்து யாவரும் வந்து படிப்பதற்கு அனுகூலமாகச் செய்து வைத்திருக்கிறார்கள். இந்தக் கட்டிடத்துக்கு "காரல் மார்க்ஸ் மனை" (மார்க்ஸ் ஹவுஸ்) என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இன்றும் யார் வேண்டுமானாலும் போய் பார்க்கலாம்.
(குடி அரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 23.07.1933)


நாகம்மாள் மறைவு – தந்தை பெரியார்


எல்லாம் நன்மைக்கே

எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11-5-33 தேதி மாலை 7-45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சி யடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுசமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.

எப்படியிருந்தாலும் நாகம்மாளை “மணந்து” வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருஷகாலம் வாழ்ந்து விட்டேன். நாகம்மாளை நான் தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை. நான் சுயநலவாழ்வில் 'மைனராய்' 'காலியாய்' “சீமானாய்' இருந்த காலத்திலும் பொதுநல வாழ்வில் ஈடுபட்டு தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்க முடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிரத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால் நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும், ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும், மூர்க்கமாகவும், குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தாள் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஏதாவ தொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.

அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநல சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநல காரியங்களுக்கும், சிறப்பாக சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பது தான். நாகம்மாள் நான் காங்கிரசிலிருக்கும் போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தியாக்கிரக விஷயத்திலும், சு.ம. இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற் றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே

எது எப்படி இருந்த போதிலும் நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரிய மல்ல. நாகம்மாள் இயற்கையை எய்தினாள். இதிலொன்றும் அதிசயமில்லை.

நாகம்மாளை அர்ப்ப ஆயுள்காரியென்று யாரும் சொல்லிவிட முடியாது. நாகம்மாளுக்கு 48 வயதே ஆனபோதிலும் அது மனித ஆயுளில் பகுதிக்கே சிறிது குறையான போதிலும் இந்திய மக்களில் சராசரி வாழ் நாளாகிய 23 1/2 இருபத்தி மூன்றரை வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். செத்தால் சிரிக்க வேண்டும், பிறந்தால் அழுக வேண்டும் என்கின்ற ஞானமொழிப்படி நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், ஒரு நஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருத வேண்டும் என்றே நான் ஆசைப்படுகின்றேன். ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் அதை உண்மையென்றும் கருதுகிறேன்.

எப்படியெனில் எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும் துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமிருக்காது. அத்துடன் அதைக்கண்டு சகியாத முறையில் யானும் சிறிது கலங்கக்கூடும்.

ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் “குடும்பத் தொல்லை" ஒழிந்தது என்கின்ற ஒரு உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.

இது நிற்க, நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும், லாபமான காரியத்துக்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப் படுத்திக்கொள்ள மாட்டாள். அதற்கு நேரெதிரிடையாக்குவதற்கே உபயோகித்துக் கொள்வாள். ஆதலால் நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.

என்னருமைத் தோழர்கள் பலருக்கு நாகம்மாள் மறைவு ஈடு செய்ய முடியாத நஷ்டம் என்று தோன்றலாம். அது சரியான அபிப்பிராயமல்ல. அவர்கள் சற்று பொறுமையாய் இருந்து இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பார்களானால் அவர்களும் என்னைப் போலவே நாகம்மாள் மறைவு நலமென்றே கருதுவார்கள். நாகம்மாளுக்கு காயலா ஏற்பட்ட காரணமே எனது மேல் நாட்டுச் சுற்றுப்பிரயாணம் காரணமாய் ஒரு வருஷ காலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றாமையே முக்கிய காரணம். இரண்டாவது ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வரும் என்று கருதியது.

மூன்றாவதாக நமது "புதிய வேலைத்திட்டங்களை” உணர்ந்த பின் ஒவ்வொரு நிமிஷமும் தனக்குள் ஏற்பட்ட பயம். ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்கு “கூற்றாக” நின்றது என்றால் இனி இவற்றை விட மேலானதான பிரிவு, ஆபத்து, பொருளாதாரக் கஷ்டம் முதலியவை உண்மையாய் ஏற்பட இருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவுக்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன். 2, 3 வருஷங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் (சங்கராச்சாரிகள் போல) - (அவ்வளவுக்கு ஆடம்பரத்துடனல்ல) (பண வசூலுக்காக அல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப் பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும் கருதி இருந்ததுண்டு. ஆனால் அதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்கவில்லை என்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தாள், இப்போது அந்த தடை இல்லாது போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக.
- ஈ.வெ.ரா.
(குடி அரசு - தலையங்கம் - 14.05.1933)

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 27:-


'மே’ தினம் சமதர்மப் பெருநாள்

1933-வருடம் மே மாதம் 21-தேதி ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதையோரால் தமிழ்நாடு முழுமையும் கொண்டாடப்படும்.

உலகெங்கும் கடந்த 50 வருஷமாக மே தினத்தை ஓர் பெருநாளாகத் தொழிலாளர், கிருஷிகள் (விவசாயிகள்) முதலியோர் கவனித்து வருகின்றார்கள். தாழத்தப் பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஏமாற்றப்பட்டவர்களுக்கும் இந்நாள் வொன்றே உவந்த தினமாகும். இந்நாளில் கோடான கோடி மக்கள் தாங்கள் படும் கஷ்டங்களையும், குறைகளையும் தெரிவிப்பான் வேண்டி, ஆங்காங்கு கூட்டங்கள் போடுவதும், ஊர்வலம் வருவதும், உபன்யாசங்கள் செய்வதும் வழக்கமாயிருந்து வருகிறது. இவ்வருஷம் 'மே' தினமாகிய சென்ற திங்களில் (1933, மே.1தேதி) ஆங்கில நாட்டிலும் (England) பிரான்சிலும் (France) ருஷ்யாவிலும் (Russia) ஜெர்மனி (Germany) இத்தாலி (Italy) அமரிக்காவிலும் (America) இந்தியாவிலும் (India) ஜப்பானிலும் (Japan) மற்றுமுள்ள தொழிலாளர், முதலாளி தேசங்களில் கோடான கோடி மக்கள் தம்தம் குறைகளைத் தெரிவித்தும், குறைகளுக்குப் பரிகாரம் தேடியும், யோசித்தும், பற்பல தீர்மானங்கள் செய்தும் வந்திருக்கின்றனர். இந்த வருஷம் பாரிஸ் பட்டணம், இந்நாளை தொழிலாளர் விடுமுறை நாளாகக் கொண்டாடியது. சமதர்ம நாடாகிய சோவியத் ருஷியாவில் 16 கோடி ஆண், பெண் குழந்தைகள் அடங்கலாக யாவரும், ருஷியா தேச முழுமையும், இத் தினத்தைக் கொண்டாடினார்கள், சமதர்மிகளாகிய நாமும் இத்தினத்தைக் கவனிக்கா மலிருப்பது பெருங்குறைவேயாகும். இம்மாதம் முதல் நாள் கடந்து விட்ட போதிலும், வருகிற ஞாயிற்றுக்கிழமை மே மாதம் 21 தேதி சுயமரியாதை சமதர்ம சபைகள்யாவும், சமதர்ம கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சங்கங்கள் யாவும், அத்தினத்தை பெருந்தினமாகக் கொள்ளல் மிக்க நலமாகும். அன்று காலையிலும், மாலையிலும், அந்தந்தக் கிராமங்களிலும், பட்டணங்களிலும் சமதர்மிகள் ஊர்வலம், சமதர்ம சங்கீதங்களுடன் வரலாம். ஆங்காங்கு கூட்டங்கள் கூட்டி சமதர்மம் இன்னதென்றும், தொழிலாளருக்கும் விவசாயிகளுக்கும் விளக்கமுறச்செய்யலாம். துர்ப்பழக்க வொழுக்கங்களை வொழிக்குமாறு பல தீர்மானங்களைச் செய்யலாம். இவ்விதமாக ஒழுங்காகவும், நியாய முறைப்படி கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.
ஈ.வெ. ராமசாமி
(குடி அரசு - அறிக்கை - 11.05.1933)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 117-118)


தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 26:-


(சமூக முற்போக்குக்கு, பொருளாதாரமும் அரசியலும் அவசியம் என்கிறார் பெரியார். பார்ப்பன சூழ்ச்சியை மட்டும் பேசிக் கொண்டிருப்பது சுயமரியாதை இயக்கமல்ல என்று 1933ஆம் ஆண்டுக் கூறியுள்ளார். இதிலிருந்து அவர் விலகாது தொடர்ந்திருந்தால் தமிழகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்பட்டிருக்கும். இந்தப் போக்கிலேயே நின்றுந்தால் வர்க்கப் போராட்டத்திற்கு உட்பட்டு வர்ணப் போராட்டத்தை நடத்தியிருப்பார்.

அரசியலைப் பற்றிப் பேசிவிட்டு, அன்னியர் ஆட்சி என்பதனால், எந்த ஆட்சியையும் அழிக்க வேண்டியதில்லை என்ற முடிவு எந்த வகையான அரசியல்!! மேலும் பலாத்காரமும, ரகசியமும் வேண்டாம் என்று முடிக்கும் போது அவரது அரசியலின் மென்மைப் போக்கு வெளிப்படுகிறது.)

தந்தை பெரியார்:-
“பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வேலை செய்யாமல் சமூக முற்போக்கு எப்படி ஏற்படும்? ஒரு சமூகத்துக்கு பொருளாதாரமும் அரசியலும் அவசியமானதா அல்லவா? இந்த இரண்டையும் விட்டு விட்டு செய்யும் முற்போக்குக்காக நமது சுயமரியாதை இயக்கம் தேவையே இல்லை. சும்மா அலங்காரமாக, வேடிக்கையாக புராண முட்டாள் தனத்தையும், பார்ப்பன சூழ்ச்சியையும் பேசி காலங்களிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கத்தின் வேலையானால் சுயமரியாதை இயக்கம் அழிந்து போவதே மேலான காரியம் என்று சொல்லுவேன்.
… … …
அரசியலைப்பற்றியும், பொருளாதாரக் கொடுமையைப்பற்றியும் பேசுவதே குற்றமான காரியம் என்று சில தோழர்கள் கருதி இருப்பதாகத் தெரி கின்றது. அது வீண் பயங்காளித்தனமேயாகும். இந்த மாதிரி பயங்காளித்தனம் கொண்ட மனதினால் ஒரு காரியமும் செய்ய முடியாது. அரசியலுக்காகவும், பொருளாதாரத்துக்காகவும் நாம் யாரையும் அடிக்கவோ, தடுக்கவோ, குத்தவோ, சுடவோ, வெடிகுண்டு எறியவோ அல்லது எவ்வித பலாத்காரத்தை உபயோகிக்கவோ வேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை. ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டும் என்பதற்கு நாம் எத்தனை பேரைக் கொன்றுவிட்டோம், யாரை சுட்டோம், யார் மீது வெடிகுண்டு போட்டோம்,
… … …
அன்னிய அரசாங்கமே வேண்டியதில்லை. எங்கள் தேசத்தை எங்களிடம் ஒப்புவித்து விட்டு வெளி நாட்டார் வெளியாகிவிடவேண்டும்” என்று சொல்லும் தேசியவாதிகளின் அரசியலை விட நம்முடைய அரசியல் கொடுமையானதல்ல. முட்டாள் தனமானதல்ல. நாம் என்ன சொல்லுகின்றோம்?

அன்னியன் என்பதற்காக யாரையும் நாட்டைவிட்டு போகும்படி சொல்லுவதில்லை. அன்னியர் ஆட்சி என்பதற்காக எந்த ஆட்சியையும் நாம் அழிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் நாம் என்ன சொல்லுகிறோம். முதலாளித் தத்துவமுரை கொண்ட ஆட்சி வேண்டாம், பாடுபடும் மக்கள் அதன் பயனை அடையும் படியான முரைகொண்ட ஆட்சி வேண்டும் என்று தான் சொல்லுகிறோம்?
… … …
நாம் யாரையும் பார்த்து காப்பி அடிக்கிறவர்கள் அல்ல. நமது தகுதிக்கு நிலைமைக்கு ஏற்ற அளவில் இருக்கின்றோம். பலாத்காரத் தன்மையையோ இரகசிய முறை யையோ நாம் அடியோடு வெறுக்கிறோம். நமது கொள்கை நியாயமும், நேர்மையும் ஆனதால் நமக்கு பலாத்காரமும், ரகசியமும் வேண்டாம்.”

தோழர்களே நாம் தைரியமாயும், நேர்மையாயும், ஒற்றுமையாயும், கவலையாயும் வேலை செய்தோமேயானால் நம்ம ஆயுளிலேயே நமது இச்சை பூர்த்தியாவதைக் காணலாம்.”

(குறிப்பு: 07, 08.05.1953 நாள்களில் திருப்பத்தூரில் நடைபெற்ற வட ஆற்காடு ஜில்லா முதலாவது சுயமரியாதை மாநாட்டில் ஆற்றிய உரை.)
(குடி அரசு - சொற்பொழிவு - 14.05.1933)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 111-113 / 116)

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 25:-


(தேசய விடுதலை என்பது ஒரு முதலாளித்துவப் போராட்டம் தான். ஆனால் பெரியார் இந்திய முதலாளித்துவ ஆட்சியைவிட ஏகாதிபத்திய ஆட்சி மோசமானதல்ல என்று கருதுகிறார். மக்கள் ஏகாதிபத்திய காலத்தில் அனுபவிக்கின்ற கஷ்டங்களுக்கு ஏகாதிபத்திய சர்க்கார் காரணமல்ல, முதலாளிகள் என்கிறார். ஏகாதிபத்திய காலகட்டத்தில் உள்நாட்டு முதலாளிக்கும் ஏகாதிபத்திய சர்க்காருக்கும் நடக்கும் போராட்டத்தில் பெரியார் ஏகாதிபத்தியம் பக்கமே நிற்கிறார். ஆனால் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையேயுள்ள கஷ்டத்திற்குக் காலம்காலமாகக் காணப்படும் கடவுள், மதம், பார்ப்பனியம், மதப் பிரச்சாரகர்கள் என்கிறார். தேசிய போராட்டத்தைப் பெரியார் எதிர்ப்பதை நாம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.)

தந்தை பெரியார்:-
“நமது கவனத்தை அரசாங்கத்தாரும் வேறு ஏதாவது ஒரு வழியைக் காட்டித் திருப்பி விடுவார்கள். ஆனால் உண்மையில் முதலாளிகளின் ஆதிக்கத்திற்கும், அன்புக்கும் விரோதமில்லாமலே தான் அரசாங்கத்தார் நடந்து கொள்ளுவார்கள். அப்படிக்கில்லா விட்டால் அரசனுக்கும், அவனுடைய சிப்பந்திகளுக்கும் உலை வைக்க உடனே முதலாளி வர்க்கம் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். உண்மையில் தொழிலாளிகளுக்கு தீங்கு இழைத்துக் கொண்டிருப்பது முதலாளி வர்க்கம் தான் என்பதை மக்கள் அறியமுடியாமல் பல தேச பக்தர்கள் என்பவர்கள் முதலாளிகளிடம் கூலி பெற்றுக்கொண்டு நம்மை சர்க்கார் பக்கம் திருப்பி விட்டு விடுகிறார்கள். இப்போதும் இந்நாட்டில் உள்ள கஷ்டத்திற்கு காரணம் சர்க்கார் என்றுதான் நீங்கள் கருதுகிறீர்களே தவிர முதலாளிகள் என்று நீங்கள் கருதுவதில்லை. சர்க்காரால் தொழிலாளிக்கு அதிக நஷ்டமில்லை.
… … …
மேனாடுகளில் அன்னிய அரசு, ராஜா அரசு ஆகியவை இல்லாத சுதேச அரசு, குடி அரசு நாடுகள் பல இருக்கின்றன. ஆயினும் அவை பேருக்குத் தான் ஜனங்கள் ஆட்சி என்பது தவிர அரசாட்சி செலுத்துவது ஆதிக்கம் வகிப்பது எல்லாம் பணக்காரக்கூட்டம் தான். அங்கு இன்று லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான தொழிலாளிகள் பட்டினிதான் கிடந்து வாடுகிறார்கள். உலகத்தில் குபேரநாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவின் யோக்கியகைப் பற்றி வெளியில் சொல்லவேண்டியதில்லை. அங்குதான் வேலை யில்லாத் திண்டாட்டம் இன்னும் அதிகமாக இருக்கிறது. 11 கோடி மக்களுக்கு வேலையில்லை, பட்டினி தான் இருக்கிறது. அங்கு வேறு நாட்டான் வந்து அரசாளவில்லை. ஒரு அரசன் இருந்து அரசாள வில்லை. உள்ளூர்க்காரன் சொந்தக்காரன் குடிகள் தான் அரசாளுகிறான். அப்படியிருந்தும் தொழிலாளியின் நிலையானது ஏன் இவ்வளவு கேவலமாக வந்திருக்கிறது என்பதை கவனித்தால் காரணம் விளங்காமல் போகாது.

இந்தியாவில்தான் “வெள்ளைக்காரன் அரசாளுகிறான் இதனால் வேலை இல்லை கஷ்டம் பஞ்சம்," என்று குறை கூறப்படுகிறது. அவசர சட்டங்கள், அடக்கு முறைகள் என்று அலரப் படுகிறது. ஆனாலும் ஆங்கில அரசாட்சியிலும் அல்லது இனி வரப்போகும் காந்தி அரசாட்சியிலும், இங்குள்ள தொழிலாளிகளுக்கு என்ன பயன் ஏற்படும். கருப்பன் அரசாண்டால் இன்னும் ஒரு 50 சங்கராச்சாரியும் ஊருக்கு 10 மடமும் 20 கோவிலும் ஏற்பட்டு இன்றும் மக்களை கொள்ளையடிக்கப் பட்டு மக்களை ஒன்றுபடவிடாமல் சாதிக்கு சாதி சட்டம்போட்டு நசுக்கு வதைத் தவிர வேறு என்ன வழிபிறக்கும்? என்பது இதுவரை சுயராஜ்யம் கேட்கும் தேசியவாதிகள், தேசபக்தர்கள் மகாத்மாக்கள் சொல்வதிலிருந்தும், எழுதுவதிலிருந்தும் தெரியவில்லையா? ஆங்கில ஆட்சியிலேனும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதாக ஏதோ 100-க்கு 4, 2 அனு கூலங்கள் ஏற்பாடு செய்ததாக, செய்வதாக சொல்லப்படுகிறது. கொள்ளை, திருட்டு, ஜாதிமுறை இவைகள் தடுக்கப்படுவதற்கு கடுமையான சட்டங்கள் கையாளப்படுகிறது துவேஷமிருக்கக்கூடாது என்று சொல்லிக் கொள்ளப்படுகிறது.”
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 103---—105)


தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 24:-


(ரஷ்யாவுக்குச் சென்று வந்த பின்பு அது பற்றி இந்தச் சொற்பொழிவில் பெரியார் தெரிவிக்கிறார். ரஷ்ய பயணத்தில் தான் கற்றுக் கொள்வதற்குரிய விஷயம் ஒன்றும் அங்குக் காணவில்லை. இதுவரை கடைபிடித்த சுயமரியாதை இயக்கக் கொள்கை எந்தளவுக்குச் சரியானவை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது என்பதாகக் கூறுகிறார். அரசியல், சமூகக் கிளர்ச்சியைப் போலவே பொருளாதாரத்துறையிலும் நடத்த வேண்டும். 1933ஆம் ஆண்டில் பெரியார் பொருளாதாரப் போராட்டத்தை முதன்மைப்படுதியே வந்துள்ளார்.)

“தோழர்களே! எனது ஐரோப்பிய யாத்திரையிலோ குறிப்பாக ரஷிய யாத்திரையிலோ நான் கற்றுக்கொண்டு வரத்தக்க விஷயம் ஒன்றும் அங்கு எனக்குக் காணப்படவில்லை. ஆனால் நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் மிகவும் சரியானவை என்றும் அக்கொள்கைகளால் தான் உலகமே விடுதலையும் சாந்தியும் சமாதானமும் அடையக்கூடும் என்று தெரிந்தேன். இதுதான் உங்களுக்கு ஐரோப்பாவுக்குச் சென்று வந்தவன் என்கின்ற முறையில் சொல்லும் சேதியாகும்.

நாம் இந்த 7, 8 வருஷ காலமாகவே படிப்படியாய் முன்னேறி வந்திருக் கின்றோம் என்பதை நமது இயக்க வேலையை முதலில் இருந்து கவனித்து வந்திருப்பவர்களுக்கு நன்றாய்த் தெரியும்.

சுமார் 15, 20 வருஷங்களுக்கு முன்பாக நாம் எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று கருதினாலும் எது மக்களுக்கு நன்மையானது என்று கருதினாலும் அதையெல்லாம் அரசாங்கத்தைக் கொண்டே செய்யச் சொல்லி கெஞ்சுவோம். அதற்கு பார்ப்பனர்களையே தரகர்களாய் வைத்து அவர்கள் சொன்னபடி யெல்லாம் கேட்டு அவர்கள் பின்னால் திரிவோம், அவர்கள் சொல்லுவதையே நன்மை என்று கருதுவோம். அன்றியும் அது அரசாங்கம் வேறு பார்ப்பனர்கள் வேறு என்று சொல்ல முடியாத காலமாய் இருந்தது. அந்தக் காலத்தில் பெரும் பணக்காரன், ஜமீன்தாரன், மீராகதாரன் என்பவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் காலடியில்தான் கிடந்தார்கள். அதிலிருந்து ஒரு பெரும் புரட்சி உண்டாயிற்று. அது தான் ஜஸ்டிஸ் கட்சி புரட்சி என்பது. அது தோன்றிய பின்பு பார்ப்பனரல்லாத செல்வவான்களுக்கும் பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்பவர்களுக்கும் சற்று செல்வாக்கு தோன்றிற்று.

பார்ப்பனர்களையே நம்பி இருந்த அரசாங்கமானது பார்ப்பனரல்லாதாரைத் தட்டிக் கொடுத்து அவர்கள் ஆதரவில் இருக்க வேண்டியதாயிற்று.
… … …
இப்பொழுது மேல்கண்ட அரசியல் கிளர்ச்சியும் சமூகக் கிளர்ச்சியும் நடத்தப்பட்டது போலவே தான் இப்போது பொருளாதாரத் துறையிலும் ஒரு கிளர்ச்சி செய்ததாக வேண்டியிருக்கின்றது. இது வெற்றி பெறுமா? இல்லையா? என்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இது நியாயமா? அநியாயமா? அல்லது அவசியமா? அவசியமற்றதா? என்று தான் பார்க்கவேண்டும். அரசியலைப்பற்றி என்னென்ன குற்றம் சொன்னோமோ சமூகத்தில் ஜாதி மதங்களைப்பற்றி என்னென்ன குற்றம் சொன்னோமோ அவைகள் எல்லாம் இன்றைய பொருளாதார இயலிலும் இருப்பதைக் காங்கின்றோம். எப்படி அரசாங்கம் என்பதற்காக சில மக்களின் உழைப்பு வீணாகின்றதோ, எப்படி மேல் ஜாதியான் என்பதற்காக சில ஜனங்கள் இழிவு படுத்தப்படுகின்றார்களோ அதுபோலவே தான் பணக்காரன் முதலாளி என்பதற்காக பல மக்களின் உழைப்பு விணாக்கப்படுவதுடன் இழிவு படுத்த வும் படுகிறார்கள். இந்தக் காரணங்களால் பொருளாதார இயலில் ஒரு பெரும் கிளர்ச்சி செய்யவேண்டியது இப்போது அவசியமாகின்றது. இது இன்று நமது நாட்டுக்கு மாத்திரம் அவசியம் என்று காணப்பட்டதாக நினைக் காதீர்கள். இன்று உலகில் எங்கும் இவ்வுணர்ச்சி பரவி தாண்டவமாடுகின்றது.

ரஷியா தேசத்தில் இவ்வுணர்ச்சி தோன்றி பெரும் புரட்சியாக மாறி வெற்றி பெற்று இன்று காரியத்தில் நடைபெற்றும் வருகின்றது.
… … …
அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை இங்கும் ஏற்படுவதில் யாருக்கும் எவ்வித கஷ்டமோ நஷ்டமோ இருக்காது. பணக்காரனென்றும் மேல் ஜாதிக்காரன் என்றும் அரசன் என்றும் சொல்லிக் கொள்ளப்படுவதில் ஒருவித செயர்க்கை திருப்தி ஏற்படுவதைத் தவிர இவற்றின் பயன்களால் இவர்கள் கவலையற்று. அதிருப்தியற்று சாந்தியாய் மனச்சமாதானமாயிருக்கிறார்கள் என்று யாரும் சொல்லிவிட முடியாது.

உலகம் தோன்றிய காலம் தொட்டு இதுவரை எத்தனையோ பேர் சாதாரண மனுஷர்களாகவும் ரிஷிகளாகவும், மகான்களாகவும் அவதார புருஷர்களாகவும் தெய்வத்தன்மை பொருந்தியவர்களாகவும் ஏற்பட்டு மக்கள் சமூக நன்மைக்காக என்று எவ்வளவோ காரியங்கள் செய்தாகி விட்டது. இவற்றால் வாழ்வில் மனிதனுக்கு எவ்வித சௌகரியமோ உயர்வோ ஏற்பட்டதாக சொல்வதற்கில்லை.
… … …
இன்றைய தினம் இருந்து வரும் எந்த அரசியலை, எந்த மத இயலை, எந்த செல்வ இயலைக் கொண்டும் மேல்கண்ட அக்கிரமங்களை ஒழித்து விடக்கூடும் என்றோ மக்கள் யாவரையும் சமமாக ஆக்கிவிடக்கூடும் என்றோ நினைப்பது முட்டாள் தனமேயாகும். ஆதலால் ஏதாவதொரு புதிய முறையைக் கொண்டுதான் ஆகவேண்டும். அதைப்பற்றி பிறத்தியார் என்ன சொல்லுவார்கள் என்கின்ற கவலையை சிறிதும் வைக்கக்கூடாது. அது கிளர்ச்சி என்று சொல்லப்பட்டாலும், புரட்சி என்று சொல்லப்பட்டாலும் நாம் பயப்பட வேண்டியதில்லை.

கிளர்ச்சியும் புரட்சியும் உலக இயற்கை, மனித இயற்கை, நடப்பு இயற்கை, கிளர்ச்சியிலும், புரட்சியிலும் பிரிக்க முடியாமல் கலந்து இருக்கிறான் என்பதை ஒவ்வொரு மனிதனின் நடப்பையும், உணர்ச்சியையும் கவனித்துப் பார்த்தால் விளங்கிவிடும் நாம் எவ்வித சுயநலத்தையோ பலாத்காரத்தையோ குறிவைத்து இப்படி பேசவில்லை. ஆனால் மக்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து சகிக்க முடியாமல் பரிதாபத் தாலேயே தான் இப்படிப் பேசுகிறோம்.”
(விருதுநகரில் சுயமரியாதைப் பொதுக்கூட்டம்.)
 (குடி அரசு - சொற்பொழிவு - 12.03.1933)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 81---—84)


புதன், 26 பிப்ரவரி, 2020

“குடி அரசு” முதல் இதழ் தலையங்கம் – தந்தை பெரியார்


தாய்த்திரு நாட்டிற்குயாம் இதுகாறும் இயற்றிவரும் சிறு தொண்டினை ஒரு சிறு பத்திரிகை வாயிலாகவும் எம்மால் இயன்றளவு ஆற்றிவரல் வேண்டுமென இரண்டாண்டுகளுக்கு முன்னர் எம்மிடத்து எழுந்த பேரவா இன்று நிறைவேறும் பேற்றை அளித்த இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகின்றோம். ஒரு சிறு பத்திரிகையையேனும் செவ்வனே நடாத்தும் ஆற்றல் ஒரு சிறிதும் எமக்கில்லை என்பதை நன்குணர்வோம். பேரறிவும், பேராற்றலும், விரிந்த கல்வியும், பரந்த அனுபவமும் உடையவர்களே இத்தொண்டினை நடத்தற்குரியார். இவ்வருங் குணங்கள் எம்பால் இல்லாமல் இருந்தும் 'என்கடன் பணிசெய்து கிடப்பதே' என்ற பெரியார் வாக்கை கடைபிடித்தே -- வலிமையால் இப்பத்திரிகை நீண்டகாலம் இத்தமிழுலகில் நிலவித் தேசத்தொண்டு ஆற்றி வரும் என்னும் நம்பிக்கையும், உறுதியும் பெரிதுமுடையோம்.

இஃதோர் பத்திரிகை யுகமாகும். நமது தமிழ் நாட்டில் நாளடைவில் பத்திரிகைகளின் தொகை பெருகிக்கொண்டே வருகிறது. இதுகாறும் எத்துணையோ பத்திரிகைகள் தோன்றின ; அவைகளுள் சிறிதுகாலம் நின்று மறைந்தொழிந்தன சில; நின்று நிலவுகின்றன பல பத்திரிகைகள் பல தோன்று வதற்குக் காரணம் தமிழ்மக்கள் உலகியலை அறிய உளங் கொண்டமையே யாகும். “கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்” என்ற குறுகிய நோக்கம் அருகி வருகின்றது. “இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டா லென்ன” என்று எண்ணி வாழ்நாட்களை விண் நாட்களாக்கி வந்த காலம் கழிந்துவிட்டது. உறங்கிக் கிடந்த நமது நாட்டார் புத்துயிரும், புத்துணர்ச்சியும் பெற்று நாட்டின் விடுதலையைக் கருதிப் பல துறைகளிலும் உழைக்க முன்வந்து நிற்கிறார்கள். அவ்வுணர்ச்சி நன்றாக வேரூன்றி, மேன்மேலும் தழைத்தோங்க ஒவ்வொருவரும் பாடுபடல் வேண்டும். இக்கடனை ஆற்றப் பல வழிகள் உண்டு. அவைகளுள் பத்திரிகையும் ஒன்றாகும். மேனாட்டார் மேன்மையுற்று விளங்குவதற்குக் காரணம் அந்நாடுகளில் ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் வெளிவந்து உலவுவதேயாகும். அந்நாடுகளில் ஒவ்வொரு பத்திரிகைக்கும் பல்லாயிரக்கணக்கான சந்தாதாரர்கள் இருக்கின்றார்க ளென்றும், பத்திரிகை நுழையாத சிறு குடிசைகளும் இல்லையென்றும் நாம் அந்நாட்டுச் சரித்திரங்களில் காண்கிறோம். தமிழ் மக்களின் தொகையை நினைக்கின், இப்பொழுது உலவி வரும் பத்திரிகைகள் மிகக் குறைவாகவே தோன்றும். இன்னும் பல பத்திரிகைகள் காணப்படல் வேண்டும். ஆகையினால் எமது பத்திரிகையை மிகையென்று கருதமாட்டார்களென நம்புகிறோம்.

எமது பத்திரிகையின் நோக்கத்தையறிய விரும்புவார்க்கு நமது தாய்நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்வதேயாகும் எனக் கூறுவோம். நமது நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும் அறிவு வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், சமய வளர்ச்சிக்காகவும் இதன் வாயிலாக இடையறாது உழைத்து வருவோம்.

ஆயிரக்கணக்காக பொருள் செலவிட்டு கட்டிய..... அஸ்திவாரம் பலமில்லாவிடில் இடிந்து விழுந்து அழிந்து போவதேபோல், ஒரு தேசத்தின் அடிப்படைகளாகிய தனி மனிதன், குடும்பம், பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு வகுப்பு, பல வகுப்புக்களாலாகிய கிராமம் ஆகிய இவைகள் எல்லாத் துறைகளிலும் மேன்மையுறாவிடின் அத்தேசம் ஒருநாளும் முன்னேற்றமடையாது. ஆகையினால், நமது தேசம் சுதந்திரம் பெற்று எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கவேண்டுமாயின் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தனது அறிவையும், ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும்; ஒவ்வொரு தனிக் குடும்பமும் நந்நிலையடைய வேண்டும்; ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற்றமடைதல் வேண்டும்; ஒவ்வொரு கிராமமும் பிற கிராமங்களினுடையவோ, நகரங்களினுடையவோ, நாடுகளினுடையவோ உதவியை எந்நாளும் எதிர்பார்த்து நிற்காத வண்ணம் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமெய்தி தனித்தியங்கும் பெருமையை அடைதல் வேண்டும். அடிப்படைகளான இவைகளை அறவேவிடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிகையின் நோக்க மன்று. ஆகவே, இவ்வடிப்படைகளின் வளர்ச்சிக்கான முறைகளில் இடையறாது உழைத்து வருவதே எமது கொள்கையாகும்.

மக்களுக்குள் தன்மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும்; மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும். உயர்வு, தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்துவரும் சாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும். சமயச்சண்டைகள் ஒழியவேண்டும்; கடவுளர்களை நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்லும் இழிதகைமை தொலைய வேண்டும். இன்னோரன்ன பிற நறுங்குணங்கள் நம்மக்கள் அடையப் பாடுபடுவதும் எமது நோக்கமாகும்.

இதுகாறும் விதந்தோதிய நோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றியே ஒழுகுவோம். அன்பு நெறியே எமக்கு ஆதாரம். பொய்ம்மை நெறியையும், புலையொழுக்கத்தையும் எமது அன்பு நெறியால் தகர்த்தெறிவோம். இவர் எமக்கு இனியர், இவர் எமக்கு இன்னார் என்ற விருப்பு வெறுப்புக்கள் இன்றிச் செம்மை நெறி பற்றி ஒழுகி எம்மாலியன்ற தேசத் தொண்டாற்றி வருவோம். “நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற் சென்றிடித்தற் பொருட்டு" எனும் தெய்வப் புலமை திருவள்ளுவரின் வாக்கைக் கடைபிடித்து, நண்பரேயாயினுமாகுக! அவர்தம் சொல்லும், செயலும் தேசவிடுதலைக்குக் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித் தொதுக்கப்படும்.

மேற்கூறிய உயரிய நோக்கங்களைத் தாங்கித் தாய்த்திருநாட்டிற்குத் தொண்டியற்ற வெளிவந்துள்ள எமதருங்குழவியைத் தமிழ்மக்கள் அனைவரும் முழுமனதுடன் ஆதரிப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடையோம். இப் பத்திரிகையின் வருடச் சந்தா ரூபா மூன்றே தான். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று வெளிவரும். இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்குப் போதிய அறிவையும், ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள் பாலிப்பானாக.
(குடி அரசு - தலையங்கம் - 02.05.1925)