ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 14:-


இந்தியாவின் பொருள் நஷ்டத்திற்கு காரணம்
குடி அரசு - தலையங்கம் - 13.09.1931

(நாடோடிகளான ஆரியர் வருகைக்கு முன்பே இங்கே நாகரீகமும் விவசாயமும் பல இடங்களில் தொடங்கப்பட்டிருந்தது. வெளியில் இருந்து வந்த ஆரியர்கள் இங்குள்ள புரோகித வகுப்புக்குள் கலப்புடன் இந்தியாவுக்குள் பரவினர். சிந்துநதி நாகரீகம் முதற்கொண்டு காணப்படும் பணக்காரர்கள் - ஏழைகள் என்ற பிரிவு ஆரியர்களின் வருகைக்கு முன்பே பல இடங்களில் காணப்பட்டது. இங்கே காணப்பட்ட பணக்காரர்களின் பணத்தை அண்டிப் பிழைப்பதையே தொழிலாக புரோகித ஆரிய கலப்பு மாற்றிக் கொண்டது.

சாதியம் – “சிந்தனையின்” அடிப்படையில் சமூகத்தை உருவாகி இருக்க முடியாது. அப்படி உருவாக்க முடிந்திருக்குமாயின் பிறப்பில் மட்டும் தம்மை முதல்நிலையில் வைக்காது, பணம் படைக்கும் தொழிலிலும் முதன்மைப்படுத்தியிருக்கும். “உழைப்புப் பிரிவினையின் தொடர்ச்சியே சாதியாக்கப்பட்டிருக்க முடியும்.” ஆனால் பெரியார் தன் தலைகீழ் பார்வையால் வர்ணத்தை முன்னிருத்தி வர்க்கப் போராட்டத்தை தள்ளிப் போடுகிறார். வர்க்கப் போராட்டத்தால் தான் வர்ணப் பாகுபாட்டை ஒழிக்க முடியும்.

அனைத்து மக்களுக்கு செல்வங்கள் கிடைத்திடும் சமூக அமைப்பு இல்லாது போனதற்கு வர்ணப் பாகுபாட்டையே பெரியார் காரணமாக்கிறார். சொத்துடைமையின் தோற்றமும் அதனை ஒட்டி பிழைக்கும் கூட்டமான பார்ப்பனரையும் வர்க்க அடிப்படையில் பெரியார் பார்க்காததனால் சமூக மாற்றத்திற்கான வர்க்கப் போராட்டத்தை முன்வைக்காமல். வர்ணப் போராட்டத்தை நடத்த வலியுறுத்தி வர்க்க வேறுபாட்டை மறுதலிக்கிறார். வர்ணப் போராட்டம் நடத்திமுடித்தால், சமூக மாற்றம் தானே வரும் என்று கூறுகிறார்.

மூலதனத்தின் ஆதிக்கத்தை பெரியார் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. பார்ப்பனர்களின் கருத்தை வைத்தே பெரியார் சமூகத்தை அணுகுகிறார், சமூகத்தின் தோற்றத்தை ஆராய்ந்து முடிவெடுக்கவில்லை. அப்படி ஆராய்ந்து பார்க்கும் போது பணக்காரர்களுக்கு அடுத்த இடத்தையே பார்ப்பனர் பிடிப்பர்.)

“இந்திய நாடு எவ்விதமான வளத்திலும் மற்ற நாடுகளை விட இளைத்ததல்ல என்பதும், இந்தியாவில் இராஜாக்கள் ஜமீன்தாரர்கள் முதலிய செல்வவான்களும், மற்றும் அவர்களுக்குச் சமானமான மடாதிபதிகள், ஆச்சாரிய பீடங்கள், கோடீஸ்வரர்கள் ஆகியவர்களும் ஆன பிரபுக்கள் மற்ற நாடுகளுக்கு இளைக்காத அளவில் தாராளமாய் இருந்து வருகின் றார்கள் என்பதும் யாவரும் அறிந்த உண்மையாகும். அதுபோலவே வியா பாரிகளும், வியாபாரப் பொருள்களும் கூட மற்ற நாடுகளைப் போலவேதான் இங்கு இருந்து வருகின்றன.

விவசாயத்துறையிலும் ஏராளமான பூமிகள் இருப்பதும், அவற்றிற்கு அனுகூலமான இயற்கை நீர் பாசான வசதிகள் இருப்பதும், ஒவ்வொரு மிராசுதாரர்கள் 1000 ஏக்ரா, பதினாயிரம் ஏக்கரா, சிலர் லக்ஷம் ஏக்ரா - பூமிகளையும் உடையவர்களாக இருப்பதும், விவசாயம் செய்யப்பட வேண்டிய பூமிகள் இன்னும் எவ்வளவோ இருப்பதுமான நாடாகவும் இருப்பதின் மூலம் விவசாயத்துறையிலும் இந்தியா மற்ற நாடுகளுக்கு இளைக்காததாகவே இருந்து வருகின்றது.

இப்படிப்பட்ட பல்வளமும் பொருந்திய இந்திய நாடு ஏன் தரித்திர மான நாடு என்றும், அடிமையான நாடு என்றும், ஏழைகள் பெருத்த நாடு என்றும் சொல்லப்பட்டு வருகின்றது என்பதை தேச முற்போக்கில் கவலை கொண்டவர்கள் யோசிக்கத்தக்கதேயாகும்.

முதலாவது, இந்தியாவின் மேல்கண்ட வளமுள்ள செல்வம் எல்லா மக்களும் அடையத் தக்க மாதிரியான சமூக அமைப்பு இல்லாமல் செல்வங் கள் சில வகுப்பு மக்களுக்கே உரியதாகவும் அனுபவிக்கத் தக்கதாகவுமான சமூக அமைப்பு முக்கியமான காரணமாகும்.
... ...
இந்தியாவின் பொருளாதாரத்துறை சீர்படுவதற்கு முதலாவது வருணாச்சிரம முறை ஒழியவேண்டும். இரண்டாவது மத சம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்படவேண்டும். மூன்றாவது கோவில், குளம், சடங்கு, சாத்தான், சனி விலக்கு ஆகிய எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும். பிறகு அரசன், ஜமீன்தாரன் முதலிய தத்துவங்கள் அழிக்கப்பட்டாக வேண்டும்.

இவைகளை யெல்லாம் மறைத்து வைத்துக்கொண்டு இந்தத் துறைகளில் எல்லாம் புகுந்து அழிக்க வேலை செய்யாமல் இருந்து கொண்டு இருப்பதுடன், வருணாச்சிரம தர்மத்தையும் புராண மரியாதை யையும் பலப் படுத்திக்கொண்டு பொருளாதாரத்துறை சீர்படுத்துவதற்குச் சீமைக்குப் போய் “வெள்ளைக்காரனிடம் வியாபாரம் பேசப் போகின் றேன்” என்று சொல்லுவது அடியோடு அர்த்தமற்றதும், நாணையமற்றது மாகுமா? அல்லது இல்லையா? என்று யோசித்துப் பாருங்கள்.”
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I - பக்-173-174- 178)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக