செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (26-12-1926)– தந்தை பெரியார்


“வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால் நமது பார்ப்பனர்கள் ஒரே கூச்சலாக 'தேசம் போச்சுது', 'ஒற்றுமை குலைந்தது', 'வகுப்பு வாதம் மிகக் கெட்டது' என்று ஒரே கூச்சலாக எல்லாப் பார்ப்பனர்களும் ஒன்றாய்க் கூப்பாடு போடுவதுடன் கூலி கொடுத்தும் நம்மவர்களைப் பிடித்தும் அப்படியே கத்தச் சொல்வதும் நாம் எல்லோரும் அறிந்த விஷயமே. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஏன் பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்கு காரணம் ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் கொஞ்ச நாளைக்கு முன்பு “பொய் மான் வேட்டை" என்று நவசக்திக்கு எழுதிய ஒரு வியாசத் தில் தன்னை அறியாமலே காட்டிவிட்டார். அதாவது, “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது பார்ப்பனர்களை இனி நீங்கள் நாட்டுக்குத் தொண்டு செய்ய வேண்டியதில்லையென்று ஒதுக்கி வைப்பதாகும். பல்லாயிர வருஷங்களாக நாட்டுக்குத் தொண்டு செய்து வந்த ஒரு ஜாதியினரை இவ்வளவு சுலபத்தில் (வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் மூலம் ஒதுக்கி விட முடியாது. அறிவும் பயிற்சியும் திறமையும் கொண்டவர்கள் நாட்டிற்கு வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். இதில் உள்ள மற்ற அம்சங்களைப் பற்றி இப்போது கவனிக்காவிட்டாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பார்ப்பனருக்குத்தான் கெடுதி என்பதாக அவரே வெளியிட்டிருக்கும் போது மற்ற பார்ப்பனர்கள் ஆக்ஷேபிப்பதற்குக் காரணம் வேண்டுமா? அது மாத்திரமல்லாமல் இப் பார்ப்பனர்கள் தங்களுக்கு கெடுதி என்று வெளிப் படையாய்ச் சொல்லிக் கொள்ள யோக்கியதையும் தைரியமும் இல்லாததால் தேசத்திற்கு கெடுதி என்று வெள்ளைக்காரர்கள் சொன்னார்கள்; ஜெர்மா னியர்கள் சொன்னார்கள்; ஜப்பானியர்கள் சொன்னார்கள்; துருக்கியர்கள் சொன்னார்கள் என்றும் சமாதானமும், ஆதாரமும் சொல்லுகிறார்கள்.”
 (குடிஅரசு - கட்டுரை - 26-12-1926)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக