(முன்னுரையில் இருந்து)
“இந்தியத்துணைக்கண்டத்தின்
தலைசிறந்தசிந்தனையாளர்களில், 'தலைவர்களில் தந்தை பெரியார் தலையாயவர்.
...
...
தம்
வாழ்நாளில் மக்கள் நடுவில் பல்லாயிரக்கணக்கான கூட்டங்களில், அதுவும் தொண்ணூறு வயதைக்
கடந்தும் பேசியவர் உலகில் வேறு எவரும் இலர்! பேச்சைப் போலவே இவர் எழுதுவதையும் தொடர்ந்து
கொண்டிருந்தார். உலகிலுள்ள பெரும் சிந்தனையாளர்களைப் போன்று. இவர் பல்கலைக் கழகத்தில்
பயின்றவர் அல்லர். பட்டம் பெற்றவர் அல்லர். ஆனால், மக்களைப் பயின்று பெரும் சுய சிந்தனையாளராக
மாறியவர்.
...
...
இப்போது,
“தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்'' எனும் தலைப்பில் ஒரு தொகுப்பு வெளிவருகிறது.
இத்தொகுப்பு, தந்தை பெரியாரின் பன்முகப் பரிமாணத்தை, அறிவுத் தெளிவை, அனுபவ முதிர்ச்சியை,
உலகளாவிய சிந்தனையைக் கூடுதலாகப் புலப்படுத்துவதாகும். இத்தொகுப்பை, பொதுவுடைமைச் சிந்தனைகள்
என்பதைக் காட்டிலும், பொதுவுடைமை சார்ந்த சிந்தனைகள் என்பதே பெரிதும் சரியாக இருக்கும்.
இத்தொகுப்பில் பொதுவுடைமைத் தத்துவத்தின் விதிகளுக்கேற்ற கொள்கை விளக்கங்களைப் பெரிதும்
காணமுடியாது. ஆனால், அதன் அடிப்படை விதிகளை எளிமையாக விளக்குகின்ற பாங்கையும், அத்தத்துவத்தைச்
சார்ந்த பல கூறுகளைப் பல இடங்களில் தெளிவாக எடுத்துரைப்பதையும் காணலாம். எவை எப்படியிருப்பினும்
தந்தை பெரியாரின் இச்சிந்தனைகள், பொதுவுடைமையைப் பல கோணங்களில் விளக்கும் அருமையுடையன.
இவையாவும் புத்தம்புதுச் சிந்தனைகள் ஆகும். இவை பொதுவுடைமைத் தெளிவுக்கும், பரப்புரைக்கும்
கூடுதல் பலம் சேர்ப்பதாகும். இத்தொகுப்பிலுள்ள சிந்தனைகள், தந்தைபெரியாரின் சுயசிந்தனையின்
நீட்சியை எடுத்துக்காட்டுவதாகும். பொதுவுடைமைச் சிந்தனைகள் எங்கெல்லாம், எப்படியெல்லாம்
செல்லவேண்டும் என்பதற்கு இச்சிந்தனைகள் நமக்கு வழிகாட்டுவனவாக உள்ளன. இந்த வழி, புது
வழியாக, மண்ணுக்கேற்ற முறையில் வழிகாட்டுவதாகவும் உள்ளது. இதுதான் இத்தொகுப்பின் தனிச்சிறப்பு.
...
...
இத்தொகுப்பு
வெளிவருவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அதனை அறிந்துகொண்டு மேலே செல்வதே ஏற்றது.
கடந்த மார்ச் திங்களில், பெரியார் - மணியம்மை பல்கலைக் கழகத்தில் (தஞ்சை)
28.3.2018, 29.3.2018 ஆகிய இரு நாள்களில் தந்தை பெரியாரை, இந்தியச் சிந்தனையாளர்களுடனும்,
மேலைநாட்டுச் சிந்தனையாளர்களுடனும் ஒப்பிட்டு நோக்கும் கருத்தரங்கு நிகழ்ந்தது. அக்கருத்தரங்கைத்
தமிழர் தலைவர் ஆசிரியர். மானமிகு கி.வீரமணி அவர்களே தொடங்கி வைத்தும் நிறைவுப் பொழிவை
ஆற்றியும் சிறப்புச் செய்தார். அக்கருத்தரங்கில் ஆசிரியரின் விருப்பத்திற்கு ஏற்ப நான்,
‘தந்தைபெரியாரும் சிங்காரவேலரும்' எனுந் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை அளித்து உரையாற்றினேன்.
கருத்தரங்கில் அவ்வுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. கட்டுரையை எழுதுவதற்கு முன்பு,
தந்தை பெரியாரையும் சிங்கார வேலரையும் ஒப்பிட்டாய்வு செய்வதற்குத் தந்தை பெரியாரின்
எழுத்துகளை மீண்டும் பரவலாகப் படிக்கும் நிலை ஏற்பட்டது. அவ்வெழுத்துகளை ஏற்கெனவே யான்
பலமுறை படித்திருந்தாலும். அத்தலைப்பையொட்டிப்படித்தபோது, பெரியாரின் பல சிந்தனைகள்
எனக்குப் புதியனவாகத் தோன்றியதோடு, பல புதுச்சிந்தனைகளும், கட்டுரைகளும் அறிமுகமாயின.
மேலும், தேடத்தேடச் செய்திகள் கிடைத்துக்கொண்டே இருந்தன. அவை, ஒரு பெரும் நூலாக்கத்திற்கு
இடம் தருவதாக இருந்தன. அவை அனைத்தும் பொதுவுடைமையைச் சார்ந்து இருந்ததால், அவற்றைப்
பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் என்று தொகுத்தால், மிகப் பயனுடையதாக இருக்குமென
எண்ணினேன்!
...
...
இத்தொகுப்பில்
இந்தியத் தொழிலாளர்' எனுந் தலைப்பு முதலாகக் 'கம்யூனிஸ்டுகளுக்குத் தடை' ஈறாக 129 தலைப்புகளில்
பேச்சுகளும் கட்டுரைகளும் உள்ளன. இத்தலைப்புகளை நோக்கினால், தந்தை பெரியார் எத்துணையளவு
ஆழ்ந்தகன்று சிந்தித்துள்ளார் என்பதை நன்கு உணரலாம். இத்தொகுப்பில் தொழிலாளரைக் குறித்தும்,
தொழிற்சங்கம் குறித்தும் ஏறக்குறைய 33 கட்டுரைகள் உள்ளன. பெண்ணியம் குறித்து 14 கட்டுரைகள்
உள்ளன. சமதர்மம் குறித்து 21 கட்டுரைகள் உள்ளன. நாத்திகம் குறித்து 3 கட்டுரைகளும்,
மே தினம் குறித்து 5 கட்டுரைகளும் உள்ளன. ஏனைய கட்டுரைகள் பற்பல தலைப்புகளில் பொதுவுடைமையை
அலசுகின்றன. இவை அனைத்தும் சிந்தனைக்கு விருந்தாவன; ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துபவை.
...
...
இத்தொகுப்பிலுள்ள
கட்டுரைகள் “குடிஅரச”, “புரட்சி”, “பகுத்தறவு” ஆகிய மூன்று இதழ்களிலிருந்து மட்டுமே
28-06-1925 முதல் 01-10-1925 வரை கால வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. இன்னும் “விடுதலை”யிலிருந்தும்,
பிற ஏடுகளிலிருந்தும் பின்னர் தொகுக்கப்படும்”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக