சனி, 22 பிப்ரவரி, 2020

தாலிகட்டுவது அடிமைப்படுத்துவதற்கு – தந்தை பெரியார்


“இன்னும் சிலர் மோட்சத்திற்குப்போக எள்ளுத் தண்ணீர் இறைக்க குழந்தை தேவை என்று கூறுகிறார்கள். மோட்சம் என்று ஒன்று இருந்தால் தானே அதுவும் தேவை. மோட்சம் என்பதே இல்லாது போனால், பின் என்செய்வது? மற்றும் இன்பத்திற்காக மனைவியா? சொத்திற்காக மனைவியா? என்று சிந்திப்பதில்லை. இன்பத்திற்காக மனைவி என்று யாரும் கருதுவதில்லை. மனைவியை ஒரு அடிமைப் பொருளாகக் கருதுகிறார்களே தவிர ஒரு இன்பப் பொருளாக எண்ணுவதில்லை; வைப்பாட்டியைத்தான் இன்பப் பொருளாக எண்ணுகிறார்கள். பெண்களுக்குத் திருமணத்தின் பேரால் தாலிகட்டி ஆண்களின் இஷ்டப்படி நடப்பதற்காக அவர்களை அடிமைப்படுத்துகிறார்கள். இதுதான் 100க்கு 99 திருமணத்தின் பலன். தாலி அதற்குத்தான் பயன்படுகிறது. அதை மதச்சின்னம் என்கிறார்கள்; ஆம் மதம் மனைவியை அடிமை என்றுதான் சொல்லுகிறது. அந்த மதம் விடப்பட்டால் தாலி ஏன்? மணமானவள் என்று தெரிந்துகொள்ளத் தாலிகட்டுவது என்று கூறுகிறார்கள். ஆனால், ஆண்கள் கல்யாணம் ஆனவர் என்று தெரிந்துகொள்ள அவர்கள் கழுத்திலும் தாலிகட்ட வேண்டாமா? இதில் ஆண்களுக்கு மட்டும் விலக்கு ஏன்? இந்தத் தாலியினால்தான் பெண்களைப் பல வழிகளிலும் இம்சை செய்து வருகிறார்கள். ஒரு சிறு சண்டை வந்தாலும் நான் தாலி கட்டியிருக்கிறேன் என் சொற்படி கேட்கவேண்டும் என்று ஆண் கூறுகிறான். அல்லது தாலி அறுத்துக் கொடுத்துவிட்டுப் போ என்று தாலியை அறுத்துக் கொண்டு ஓட்டுகிறார்கள். பெண்களும் தாலியை எஜமானன் கட்டியது என்று கருதுகிறார்கள். ஆண்கள் சம்பாதித்துப் போடுவதால் அவர்களுக்கு அடிமையாக இருந்து வரவேண்டுமென்று ஆண்கள் சொல்கிறார்கள். அவர்கள் சம்பாதித்தால், பெண்கள் ருசியாக சமைத்துப் போடுகிறார்கள், வேண்டுமானால் ஆண்கள் சமைக்கட்டும், பெண்கள் சம்பாதிக்கப் போகட்டும்.”
(குடிஅரசு 24-11-1945)
(ஈ.வெ.ரா. சிந்தனைகள் – 2009- வே.ஆனைமுத்து, இரண்டாம் வரிசை- பக்கம்- 449 -450)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக