செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

3) நாத்திக அறிவு – தந்தை பெரியார்


(முனைவர் மா.நன்னன் தொகுத்தவை- நூலின் “பெயர் பெரியார் கணினி”)

30.3.1 இன்றைய நிலையில் புத்திக்கு மரியாதை கொடுப்பதே இல்லை. அறிவைக் கொண்டு எதையும் பார்க்க வேண்டும்; அறிவை உபயோகப்படுத்த வேண்டும் என்ற படிப்பினைக்கு இங்கு இடமே இல்லை. புத்தியை உபயோகித்து விசயங்களைத் தர்க்கித்துத் தக்க முறையில் உணர்வது என்று வந்திருந்தால் மக்கள் தலை தூக்கியிருப்பார்கள். அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் யாரும் கவலைப்படுவதில்லை. யாராவது கொஞ்சம் கவலைப் பட்டாலும் அவனுக்கு நாத்திகன் என்று பெயர் சூட்டி அவனை ஒழித்துக் கட்டிவிட முனைகிறார்கள்.

30.3.2 சமுதாயச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொது உடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் உண்மை யான கடைசி எல்லை யாகும்.

30.3.3 எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இட மில்லையோ அங்கெல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது. கிருத்துவையும், முகமது நபியையும் கூட நாத்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான் காரண மாகும்.

30.3.4 சாக்ரட்டீசுக்குப் பின் மேல் நாட்டில் அநேக அறிவு வாதிகள் தோன்றி யிருக்கின்றனர். மேல் நாட்டில் இப்படிப்பட்ட அறிவு வாதிகளுக்கு இன்று நல்ல மதிப்பு உள்ளது. தலை சிறந்த அறிவுவாதிகள் 85 ஆண்டுக்கு மேல் வயதான பெர்ட்ராண்டு ரஸ்ஸல் என்னும் மேதையை யாரும் நாத்திகன் என்றோ, அவரது கொள்கைகள் நூல்களை ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்றோ, தூற்றவோ, ஒதுக்கவோ இல்லை; இன்றும் போற்றப் படுகிறார்.

30.3.5 எவன் முன்னேற்றக் கருத்துக்களைச் சொல்கிறானோ அவனை யெல்லாம் நாத்திகனாக்கி விட்டார்கள். புத்தன், சமணன் எல்லாம் அறிவுப் பிரச்சாரம் செய்த காரணத்தாலேயே ஒழிக்கப்பட்டார்கள். உலகமே போற்றுகிறதே சாக்ரடீசை, அவரை எதற்காக விசத்தைக் கொடுத்துக் கொன்றார்கள்? மக்கள் மூட நம்பிக்கைக்கு எதிராக அறிவுப் பிரச்சாரம் செய்தார் என்பதற்காகத் தானே!

நாத்திகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக