ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 21:-


(பெரியார் 1933 ஆம் ஆண்டுக் கூறியதில் ஊன்றி நின்றிருந்தால் வர்க்கப் போராட்டத்தைத் தான் நடத்த வேண்டும் என்பதை அறிந்திருப்பார். பார்ப்பனர்களுக்கும் சமய பிரச்சாரகர்களுக்கும் பணக்காரர்கள் பணத்தை அள்ளிவீசுவது உழைப்பாளர்களை விழிப்படையாமல் செய்வதற்கே ஆகும். பெரியார் இதனைத் தெளிவாக இங்கே கூறியிருந்தும், அதன் வழியில் தொடாந்து செல்லவில்லை. பார்ப்பனர்களைக் கணக்குத் தீர்த்துவிட்டால் பணக்காரர்களைக் கணக்கு எளிதாகத் தீர்த்திட முடியும் என்று நம்பினார். உள்ளடக்கத்தை விடுத்து வடிவத்தோடு பெரியார் போராடுகிறார்.

பணக்காரர்களைக் கணக்குத் தீர்க்காமல் பார்ப்பானர்களை, சமய பிரச்சாரகாகளைக் கணக்குத் தீர்க்க முடியாது. இதனை மார்க்சியம் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாடு நமக்குத் தெளிவாக விளக்குகிறது.

பெரியார் இங்குக் கூறியதில் விலகாது நின்றிருந்தால் கம்யூனிசத்தை முழுமையாக ஏற்றிருப்பார்.)

கொள்ளை! கொள்ளை! பகற்கொள்ளை !!! – தந்தை பெரியார்

“… … நம்மை 'சூத்திரன்' என்றும், நாலாவது வருணத்தான் என்றும், அடிமை என்றும், பல ஜாதிக்கலப்பால் பிறந்த மக்கள் என்றும், சண்டாளர்கள் என்றும், நம்மைத்தொட்டால் குளிக்கவேண்டுமென்றும் சொல்லும் அயோக்கிய ஆரியப் பார்ப்பனர்களுக்கே மூட்டை மூட்டையாய் பொங்கிப் பொங்கிப் போட்டுத் திரிகின்ற அக்கிரமங்களையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கின்றீர்களே! உங்களுக்கு மானமில்லையா! வெட்கமில்லையா!! சுயமரியாதை உணர்ச்சியில்லையா!!!

நமது நாட்டு அயோக்கியப் பணக்காரர்களும், கொள்ளைக்கார, கொடுமைக்கார, வன்நெஞ்சப் பணக்காரர்களும், எவ்வளவு இழிவாய் - பித்தலாட்டமாய் - மோசடியாய் பணம் சம்பாதித்து, அந்தப் பணங்களையெல்லாம் எந்த அறிவீனர்களிடம் - பாமர ஜனங்களிடம் - ஏழைகளிடம் இருந்து சம்பாதித்தார்களோ அவர்களுக்காகச் சிறிதும் பயன்படுத்தாமல், மேற்குறிப்பிட்ட அந்தச் சோம்பேறிக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவருக்கும், நம்மை “சூத்திரர்கள், நாலாம் வருணத்தார்கள், சண்டாளர்கள்” என்றழைக்கும் மிலேச்சப் பார்ப்பனர்களுக்குமே அழுகின்றார்களே; இதன் சூழ்ச்சியும், இதிலுள்ள புரட்டும் உங்களுக்கு விளங்குகின்றதா? நன்றாய் யோசித்துப் பாருங்கள். இந்தப் பணக்காரர்கள் எல்லாம் ஏழைகளின் குடும்பங்களைக் கெடுத்து, அவர்கள் வீடு வாசல்களைப் பிடுங்கிக்கொண்டு, நடுத்தெருவில் பிள்ளை குட்டிகளுடன் அலையச்செய்து விட்டு - பட்டினியினால் மடியச் செய்துவிட்டுச் சம்பாதித்த பணங்களை இந்தச் சோம்பேறிக்கூட்டப் பார்ப்பனர்களுக்கு அழுவதென்றால் அதில் ஏதாவது இரகசியம் இருக்குமா இருக்காதா? என்பதை யோசித்துப்பாருங்கள். அது என்னவென்றால், அதுதான் உங்களை மறுபடியும் மறுபடியும், மேலும் மேலும் கொள்ளையடிப்பதற்கு - வஞ்சிப்பதற்கு - உங்கள் குடும்பங்களைக் கெடுத்து வாழ்வதற்கு - உங்களைப் பட்டினி போட்டுப் பணம் சேர்ப்பதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சியாகும்.

எப்படியென்றால், சங்கராச்சாரிக்குப் பணத்தைக் கொடுத்து, பெண்டு பிள்ளைகளுடன் அவர் காலில் விழுந்து, அவர் கால் கழுவிவிட்ட தண்ணீரை வாங்கிக்குடித்து, தலையில் தெளித்துக்கொண்டால், முன் சொன்னபடி அவன் எப்படிப்பட்ட கொள்ளைக்காரனானாலும், கொலைகாரனானாலும் எத்தனை குடும்பங்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கியவன் ஆனாலும், மகாபிரபு, தர்மவான். தர்மபிரபு என்று பார்ப்பனர்களாலும், அவர்கள் பத்திரிகைகளாலும், அழைக்கப்பட்டு விடுகிறான். இதனால் இந்தப் பணக்காரர்கள் செய்யும் புரட்டுகளும், அயோக்கியத் தனங்களும் எல்லாம் மறைந்து விடுகின்றன. சற்றும் மானம், வெட்கம் இல்லாமல், இவர்கள் மறுபடியும் பொது ஜனங்கள் முன்னிலையில் வந்து நிற்பதற்குத் தைரியமும் ஏற்பட்டு விடுகின்றது நமது மூடமக்களும், அந்தப் பணக்காரன்களை மகாபிரபு என்றும், தர்மபிரபு என்றும், லட்சுமிபுத்திரன் என்றும் அழைக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். இந்த மாதிரி பித்தலாட்டத்திற்காகத் தான் மேற்கண்ட பணக்காரக் கொள்ளையன் சங்கராச்சாரிக்குப் பணத்தையும் கொடுத்து, மற்றக் காரியத்தையும் செய்கின்றார்கள்.”
(குடிஅரசு – கட்டுரை – 15-01-1933)
 (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 50—51)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக