பெர்னாட்ஷா
– மேத்தா – தந்தை பெரியார்
(“கம்யூனிஸ்ட் கட்சி
அறிக்கை”யை தமிழில் வெயிட்டிருந்தாலும், பெரியாரது சோஷலிசம் விஞ்ஞான வழிப்பட்ட
கம்யூனிசமாக இல்லை என்பதை அவரது இந்த துணைத் தலையங்கத்தின் மூலம் அறிந்திட முடிகிறது.
பெர்னாட்ஷா – மேத்தா ஆகியோர்களின் வழிப்பட்ட சமதர்ம கருத்தே பெரியாரின் கருத்தாகும்
என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.)
நமது இயக்கப் பிரசாரத்தைக் கண்டு நமது நாட்டு வைதீகர்களும்,
பண்டிதர்களும் நடுநடுங்குகிறார்கள், நமதியக்கக் கொள்கைகள் எல்லா மக்கள் மனத்திலும்
பதிந்துவிட்டால் தங்கள் சுயநலத்திற்குக் காரணமாக இருக்கும் வைதீகம் அழிந்துவிடும் என்று
அஞ்சுகிறார்கள். உண்மையில் இவ்வாறு பயப்படுவதற்குக் காரணம் பகுத்தறிவில்லாமையும், பழைய
சாஸ்திரங்களிலும், பழக்க வழக்கங்களிலும் வீண் அபிமானம் கொண்டிருப்பதுமே யாகும். அபிமானத்தைப்போல அறிவைத் தடைபடுத்தும் கருவி உலகத்தில்
வேறு ஒன்றும் இல்லை. எவ்வளவுதான் படித்தவர்கள் மூட நம்பிக்கைகளை ஒழிக்க அஞ்சி அவைகளைக்
காப்பாற்ற முயன்றாலும் காலம் சும்மா விடுவதில்லை. உலகம் புகழும் பரந்த அறிவினர்கள்
உள்ளத்தில் உண்மை உணர்ச்சித் தோன்றி வெளிப்பட்டு விடுகின்றது.
உலகத்தில் உள்ள கவிஞர்களில் மிகச் சிறந்த - பரந்த
- அறிவினராகிய "ஜியார்ஜ் பெர்னாட்ஷா" என்பவரைப்பற்றி அறியாதார் எவரும் இலர்.
அவர் கூறுவது முழுவதும் நமது இயக்கக் கொள்கைக்கு
ஆதரவளிக்கக் கூடிய மொழிகளேயாகும். அவர் எழுதிய நூல்களைக் கற்றோர் அனைவரும் அவருடைய
அபிப்பிராயங்களை நன்கு அறிவார்கள். அவர் இங்கிலாந்தில் சமீபத்தில் ஆகாசவசனி மூலம் ஒரு
பிரசங்கம் செய்தார். அப்பிரசங்கத்தின் சுருக்கம் வருமாறு:
"நான் மிகவும் பெரிய
மனிதன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். பிரிட்டீஷ் ஆகாயவசனிக் கார்ப்பொரேஷனும் இவ்வாறே
கருதுகிறது. நானும் ஒரு சாதாரண தாடியுள்ள கிழவனைப் போலவே இருக்கிறேன் என்பதை என் படத்தின்
மூலம் அறிந்திருப்பீர்கள், நீங்கள், நான் பெரிய மனிதனானது எப்படி என்னும் ரகசியத்தை
அறிய ஆசைப்படுவீர்கள்.
உண்மையில் பெரிய மனுஷனென்றோ,
பெரிய மனுஷி என்றோ யாரும் இல்லை. மக்கள் கொண்டுள்ள பலவாறான மூட நம்பிக்கைகளில் இதுவும்
ஒன்றாகும்.
குழந்தைகளால் பெற்றோர்களுக்குப்
பெரும் பொறுப்பு உண்டாகிற தென்று பலர் கூறுகிறார்கள், இப்படி கூறுவது சிறிதும் பொருளற்ற
வார்த்தை யாகும். குழந்தைகளால் ஏற்படும் பெரும் செலவைப் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
இறந்து போனவர்களுக்குப்
பதிலாக புதிய மக்களை உண்டாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தைச் சேர்ந்ததாகும். இதன் பொருட்டு அரசாங்கத்தார் பெற்றோர்களுக்குத்
தாராளமாகப் பண உதவி செய்ய வேண்டும்.
இறந்து போனவர்களுக்குப்
பதிலாகப் புதிய மக்களை உண்டாக்கு வதனால் ஏற்படும் செலவு முழுவதும் இப்பொழுது பெற்றோர்களையே
சேருகிறது. ஆனால் பிரமச்சாரிகளுக்கு இவ்விஷயத்தில் எவ்வகையான செலவுமில்லை.
ஆகையால் பெண்களுக்குக்
கொஞ்சமேனும் புத்தி இருக்குமாயின், அரசாங்கத்தார் குழந்தைகளைப் பெறுவோர்களுக்குத் தக்க
ஒத்தாசை செய்வதாக உறுதி கூறாமவிருக்கும் வரையிலும், தாங்களும் பிரம்மச்சரி யத்தை மேற்கொண்டு
"குழந்தைகளைப் பெறமுடியாது” என்று கண்டிப்பாக அரசாங்கத்தாருக்கு எச்சரிக்கை செய்து
விட வேண்டும்.”
இதுதான் திரு. பர்னார்ட்ஷா அவர்களின் பிரசங்கமாகும்.
இதன் பொதுக் கருத்து, நாட்டின் ஜனப்பெருக்கத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், மக்கள்
தொகையை அதிகப்படுத்த வேண்டிய கடமையும் அரசாங்கத்தைச் சார்ந்தது என்பதாகும். இத்தகைய
சிறந்த அரசாங்கம் ஏற்பட வேண்டுமானால் முதலில் மக்களிடம் இருக்கும் மூட நம்பிக்கைகள்
யாவும் ஒழிய வேண்டும் என்று தான் நாம் கூறுகிறோம்.
அடுத்தபடியாக தொழிலாளர் தலைவர்களில் ஒருவரான திரு.யமுனா தாஸ் மேத்தா அவர்கள் சென்ற
6-8-32 வெள்ளிக்கிழமை மாலை பம்பாய் பிரவொட்ஸ்கி விடுதியில் மாணவர் கூட்டத்தில் சமதர்மத்தைப் பற்றி ஒரு பிரசங்கம் செய்துள்ளார்.
அப்பிரசங்கம் வருமாறு:
“மக்களின் சுபாவமே சமதர்மத்தை
நாடி நிற்கின்றது. சமதர்மத்தின் தத்துவம் ஜீவகாருண்யமுடையது. இக்கொள்கை மற்றய நாடுகளை
விட இந்தியாவிற்கு மிகவும் அவசியமாகும். ஆகையால் இந்த தத்துவத்தை நன்றாக உணர்ந்து ஆதிக்கத்தையும்
வேற்றுமையையும் ஒழிக்கும்படி மாணவர்களை வேண்டிக் கொள்ளுகிறேன்.
பண்டைக் காலத்தில் இருந்த
மதத்தலைவர்களும், அறிஞர்களும், மக்களுடைய வறுமைத் துன்பத்தைப் போக்கும் பொருட்டு
"தர்மம் புரிய வேண்டியது அவசியம்" என்று உபதேசம் புரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
ஜன சமூகம் தற்பொழுது எந்த அடிப்படையின் மேல் இருக்கிறதோ அந்த அடிப்படையை அடியோடு மாற்றி
வேறு விதமாக அமைத்து விட்டால் தருமம் கொடுப்பதும், தருமம் வாங்குவதும் பிச்சை எடுப்பதும்
ஒழிந்து போகும் என்பதே சமதர்ம வாதிகளின் அபிப்பிராயமாகும்.
இப்பொழுதுள்ள ஜன சமூக அமைப்பின்படி
மக்கள் வாழ்க்கைக்கு வேண்டிய அவசியமான சாதனங்கள் எல்லாம் சில மனிதர்களின் ஆதிக்கத்தில்
உள்ளன. உணவுப் பொருள்களைத் தரும் விளைநிலங்கள் ஜன சமூகத்திற்குப் பொதுவாக இல்லை. அவைகள்
சிலருடைய ஆதிக்கத்தில் மட்டுமே இருக்கின்றன. நிலம் வேண்டுமானால் நிலச் சுவான்தார்களிடம்
பணம் கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது.
யாருக்கும் முதலே இருக்கக் கூடாதென்று சமதர்மவாதி கூறவில்லை.
முதல் இல்லா விட்டால் எக்காரியமும் நடைபெறாது. ஆனால் ஒரு அளவுக்கு மேல் தனிப்பட்ட சொத்து
இருப்பதற்கு இடமில்லை. எல்லோரையும் ஒரே அளவுக்குக் கட்டுப்பாடு செய்வதும் கஷ்டமானதே.
ஆனால் லட்சாதிபதியின் மகனுக்கும், தோட்டியின் மகனுக்கும் உள்ள வேற்றுமையை ஒழிக்க வேண்டுமென்பதே
சமதர்வாதியின் கொள்கையாகும். பகுத்தறிவைத் துணையாகக் கொண்டால்தான் இத்தகைய சமதர்மம்
ஏற்படும்படி செய்யலாம்.”
என்பது திரு. மேத்தா அவர்களின் பிரசங்கமாகும், இதிலிருந்து
எந்தக் கொள்கை பரவவேண்டுமானாலும், அது ஐக்கிய ஆட்சிக் கொள்கை யானாலும், பூரண சுயேச்சைக்
கொள்கையானாலும், சமதர்மக் கொள்கை யானாலும், பொது உடமைக் கொள்கையானாலும் முதலில் மக்களிடமுள்ள மூட நம்பிக்கைகள் அழிய வேண்டும்.
அதன் பின்தான் ஜனசமூகத்திற்கு நன்மையை அளிக்கத் தகுந்த எந்த அரசியல் அமைப்பையும் ஏற்படுத்த
முடியும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய அபிப்பிராயத்தையே அறிவுடையோர் அனைவரும் வெளியிட்டு
வருவதை மேற்கூறிய அபிப்பிராயங்களைக் கொண்டு உணரவாம்.
உலகம் இவ்வாறு
விரைந்து சமதர்ம உலகத்திற்குச் சென்று கொண்டிருப்பதை அறியாதக் கிணற்றுத் தவளைகள்
சுயமரியாதை இயக்கத்தைப் பழிக்கத் தொடங்குகிறார்கள். அவ்வியக்கத்தினால் உண்டாகும் நன்மையை
உணராமல்; கோயிலை இடிக்கச் சொல்லுகிறது. குளத்தைத் தூர்க்கச் சொல்லுகிறது மதத்தை அழிக்கச்
சொல்லுகிறது சாஸ்திரங்களை கொளுத்தச் சொல்லுகிறது. ஜாதியைப் போக்கச் சொல்லுகிறது என்று
கூறி பாமர மக்களை அதற்கு எதிராகத் திருப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால் மேற்கூறியவாறு
இவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் மேல் பழிசுமத்துவதாகக் கூறுவதாகக் கருதிக்கொண்டு செய்யும்
பிரச்சாரமே உண்மையான சுயமரியாதைப் பிரச்சாரமாகும். அறிவுடையவர்கள் இதை யோசித்துப் பார்த்தால்,
அதாவது சுயமரியாதை இயக்கம் இவ்வாறு கூறுவதற்குக் காரணம் என்னவென்பதை ஆராய்ந்து பார்த்தால்
உண்மையை அறிந்து கொள்ளுவார்கள் என்பது நிச்சயம்.
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)
(குடிஅரசு - துணைத் தலையங்கம் - 14.08.1932)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I - பக்-10-13)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக