(கண்டிப்பாக ஒரு சங்கம் இருந்துதான் தீரவேண்டும் என்கிற பைத்தியம்
தொழிலாளர்களுக்கு இருக்குமானால் இவ்வித அரசியல் தலைவர்களைவிட முதலாளிகள் தலைமை
அதிக மோசமானதல்ல என்பதே நமது அபிப்பிராயம்- தந்தை பெரியார்)
(குடிஅரசு- 18-04-1926)
“தற்காலம் நமது நாட்டிலுள்ள தொழிலாளர்
இயக்கங்கள் - என்று சொல்லப்பட்டவைகள் எடுப்பார் கைக்குழந்தைகள் போல் தங்களுக்கென
எவ்வித சக்தி இல்லாமலும், தங்களுக்குத் தேவை இன்னதென்றுகூட அறிய முடியாமலும்,
தாங்களே தங்கள் சங்கத்தை நடத்திக்கொள்ள சக்தியற்றவர்களாகவும் இருந்து
கொண்டிருப்பதல்லாமல் சுயநலத்துக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், அரசியலில்
சம்பந்தப்பட்டு அரசியல் பேரைச் சொல்லிக் கொண்டு வாழும் சில பொறுப்பற்றவர்கள்,
தொழிலாளர்களில் வாயாடிகளாகவும் செல்வாக் குற்றவர்களாகவும் இருப்பவர்களைப் பணங்
கொடுத்தோ உதவி செய்தோ அவர்கள் மூலமாய்த் தங்களைத் தொழிலாளர்களுக்குத்
தலைவர்களாகும்படி செய்து, அதன் மூலமாய் தலைமை பெற்ற சில சுயநலக்காரர்களைத்
தங்களுக்குத் தலைவர்களாய் வைத்துக்கொண்டு அவர்கள் சொல்லுகிறபடி ஆடவும் ஒருவரை
அடியென்றால் அடிக்கவும், திட்டும்படி சொன்னால் திட்டவும், இம்மாதிரியான
காரியங்களைச் செய்துகொண்டு அவர்களின் கை ஆளுகள் போலிருந்து அந்நியரின்
நன்மைக்காகத் தங்கள் சங்கங்களை விட்டுக்கொடுக்கும் படியான நிலைமையிலிருந்து
வருகிறது.
இவ்விதமான நிலைமையிலுள்ள சங்கங்கள்
நாட்டிற்காவது தொழிலாளர்களுக்காவது என்ன நன்மையைக் கொடுக்க முடியும்?
உண்மையாகவே நம்நாட்டுத் தொழிலாளர்களுக்குத்
தங்களுக்குள்ளாகவே ஒரு தலைவரை ஏற்படுத்திக் கொண்டு தங்கள் நன்மைக்கு உழைக்க
தங்களுக்குச் சக்தியில்லையானால் அரசியலில் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு
வாழும் பொறுப்பற்றவர்களும் சுயநலக்காரர்களுமான அரசியல் தலைவர்களைவிட - பிராமண
தலைவர்களைவிட - அவர்கள் சொற்படி ஆடும் தலைவர்களைவிட இத்தொழிலாளர்களின் உண்மையான
முதலாளிமார்களே மேலானவர்கள் என்று சொல்லவேண்டியிருக்கிறது.
ஏனெனில், அரசியல் தலைவர்களென்போர்,
தொழிலாளர்களுக்குத்தாங்கள் தலைவர்களாயிருக்கிறோமென்கிற பெருமையினாலும், அவர்களிடம்
தங்களுக்குச் செல்வாக்கு இருப்பதாய்ப் பிறர் நம்பும்படி செய்து கொள்வதாலும்,
முதலாளிகளை விரட்டி தங்கள் சொந்த நன்மை பெறுவதும், தங்கள் பிள்ளைக்
குட்டிகளுக்கும், இனத்தார்களுக்கும், முதலாளிகள் தயவு பெற்று உத்தியோகங்கள்
சம்பாதித்துக் கொடுப்பதும், தங்கள் தேர்தல் காலங்களில் வோட்டுகள் பெறவும்,
தங்களுக்கு வேண்டிய வேறு அபேட்சகர்களுக்கும் வோட்டு வாங்கிக்
கொடுக்கபிரதிப்பிரயோஜனம் பெறுவதுமான காரியங்களுக்காகவே பிரயத்தனப்பட்டு தொழிலாளர்
தலைவர்கள் ஆகிறார்களேயல்லாமல், உண்மையில் இவ்வரசியல் தலைவர்களும், பிராமண தலைவர்களும்
தொழிலாளர் தலைவர்களாகுவதற்கு எவ்வித யோக்கியதை உடையவர்களுமல்ல,
நம்பிக்கையுடையவர்களுமல்ல என்பதேநம்முடைய அபிப்பிராயம். அல்லாமலும் முதலாளிமார்கள்
தொழிலாளர்களுக்கு ஏதாவது நன்மையோ தீமையோ செய்ய வேண்டுமானால் இம்மாதிரி
தலைவர்களுக்கு வேறே பலமாதிரி லஞ்சம் கொடுக்க வேண்டி வருகிறது.
எது நன்மை ? எது தீமை? என்று அறிய முடியாத பாமர
தொழிலாளிகள், தங்களுக்குள்ளேயே ஒரு தலைவரை எடுத்துக் கொள்ள யோக்கியதையும்
ஆசாமியும் இல்லையானால், அவ்வித யோக்கியதை வரும் வரை தங்களுக்குச் சங்கம்
வேண்டாமென்றிருப்பதே நலமென்றுகூடச் சொல்லலாம். அப்படிக்கில்லாமல், கண்டிப்பாய்
தங்களுக்கு ஒரு சங்கம் இருந்துதான் தீரவேண்டுமென்கிற பைத்தியமிருக்குமானால் இவ்வித
அரசியல் தலைவர்களைவிட முதலாளிகள் தலைமை அதிக மோசமானதல்லவென்பதே நமது அபிப்பிராயம்.
...
விவசாய சங்கத்துக்கு வியாபாரிகள்
தலைவர்களாயிருப்பது போலவும், பிராமணரல் லாதார்களுக்கு பிராமணர்கள்
மதகுருவாயிருப்பது போலவும், இந்தியாவை அய்ரோப்பா ஆளுவது போலவும், நமது
தொழிலாளிகளுக்கு அரசியல் தலைவர்கள் என்று சொல்லும்படியானவர்கள்
தலைவர்களாயிருக்கிறார்கள் என்று சொல்லுவது கொஞ்சமும் குற்றமாகாது. அரசியல்
தலைவர்களான கசாப்புக் கடைக்காரன் மூலமாய் நமது தொழிலாளிகள் முதலாளிகளுக்கு
உணவாவதைவிட நேரிலேயே போய்விட்டால் ஒரு சமயமில்லா விட்டாலும் ஒரு சமயத்தில்
முதலாளிகளுக்கு ஈவு இரக்க முண்டானாலும் உண்டாகலாம்.”
(தொழிலாளர் இயக்கம் – தற்கால நிலைமை)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக