சனி, 22 பிப்ரவரி, 2020

எது பொதுவுடைமை? – தந்தை பெரியார்


(பணக்காரர்களின் தனிவுடைமையைக் காப்பதற்கே சாமிகளும், மதங்களும், மதப் பிரச்சாரர்களும் தோன்றினர். தனிவுடைமையின் உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப மற்றவைகள் மாற்றிக் கொள்கின்றன. ரத்ததிற்கு ரத்தம் கேட்கும் சமூகத்தில் மதமும் அதையே கூறும். ரத்தம் கேட்காமல் அடங்கி இருக்க வேண்டிய சமூகத்தில் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்ட சொல்லும். கருத்துக்கள் வடிவங்களே அன்றைய உற்பத்தி சத்திகளும் உற்பத்தி உறவுகளும் அந்த வடிவங்களைத் தோற்றுவிக்கும் அடித்தளமாகும்.

பெரியார் வடிவத்துடனேயே போராடுகிறார். உள்ளடக்கத்தை அதாவது அடித்தளத்தை எதிர்க்காமல் விட்டுவிடுவதின் மூலம் அதனைக் காப்பாற்றுகிறார். உள்ளடக்கம் (அடித்தளம்) மாறாமல் வடிவத்தை மாற்ற முடியாது என்பது இயக்கவியல் பொருள்முதல்வாதமாகும். பகுத்தறிவுவாதம் வடிவத்துடனேயே போராடுகிறது. பொருள்முதல்வாதம் உள்ளடத்தின் மாற்றத்தோடு சேர்த்து வடிவத்துடன் போராடுகிறது.)

தந்தை பெரியார்:-
************************
“இன்றையப் பொதுவுடைமைக்காரர்கள் என்பவர்களின் யோக்கியதை தான் என்ன? வெங்கடாசலபதிக்கு (ஒரு கருங்கல் பொம்மைக்கு) பத்து இலட்சம் ரூபாயில் கிரீடமா? மற்றும் பல குழவிக்கல், தாமிர பொம்மை ஆகியவைகளின் பேரால் நடக்கும் அட்டூழியங்களைப் பாருங்கள். ஊர்தோறும் கோவில், மணிதோறும் பூசை, மாதந்தோறும் உற்சவம், வருஷந்தோறும் சாமி திருமணமா? இவைகளுக்குப் பண்டு எவ்வளவு? பண்டம் எவ்வளவு? பூசாரி பண்டாரசன்னதி எவ்வளவு? எனவே நம்நாட்டு, இனத்தின் அறிவு, செல்வம், முயற்சி எதில் மண்டிக்கிடக்கின்றன? "நம்மவர்களே'' ஆன கிருபானந்தவாரிகள், திருநாவுக்கரசுகள் ஆகியவர்கள் காலட்சேபமும்; இசை அரசுகள் சங்கீதங்களும்; நாடக மணிகள் நாடகங்களும், சினிமாக்களும்; பண்டித மணிகள் வித்துவத்தன்மைகளும் இன்று எதற்காகப் பயன்படுகின்றன? இவைகள் பொதுவுடைமையின் எதிரிகள் அல்லவா? இவர்கள் எல்லோரும் தனி உடைமைக்காரர்களின் நிபந்தனை இல்லாத அடிமைகள் அல்லவா? இவைகளை அச்சுக் குலையாமல் - அசையவிடாமல் காப்பாற்ற இடம் கொடுத்துக்கொண்டு, பணக்காரனைப் பார்த்து ஆத்திரப்பட்டால், குரைத்தால், பாமரத் தொழிலாளிகளை ஏமாற்றினால் பொதுவுடைமை ஆகிவிடுமா?”
(குடிஅரசு 01-09-1945,
திருச்சியில் 27-08-1945 இல் திராவிட வாலிபர்
சங்க ஆண்டு விழாவில் சொற்பொழிவு)
(ஈ.வெ.ரா. சிந்தனைகள் – 2009- வே.ஆனைமுத்து, இரண்டாம் வரிசை- பக்கம்- 4305)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக