திங்கள், 3 பிப்ரவரி, 2020

3) தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் – தந்தை பெரியார்


(முனைவர் மா.நன்னன் தொகுத்தவை- நூலின் “பெயர் பெரியார் கணினி”)

28.3.1 போராட்டம் துவக்கு முன்பு விளைவை நன்றாய்ச் சிந்தித்து ஒருவாறு அதன் பலா பலனை ஏற்க நம்மைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும். தொழிலாளிகளுக்காகப் பரிந்து பேசுவதாக வேஷம் போட்டுக் கொண்டு, தொழிலாளிகளைச் சுற்றிக் கொண்டிருக்கிறவர்கள் நயவஞ்சகத் துரோகிகளாக இருக்கக் கூடாது. தொழிலாளர்களின் தலைவர்கள் வழிகாட்டி கள் என்பவர்கள் முதலாளித் தன்மை கொண்டவர்களாகவோ, முதலாளிகளின் இரகசியக் கூலிகளாகவோ இருக்கக் கூடாது.

28.3.2 நீங்கள் (தொழிலாளர்கள்) வேலை நிறுத்தம் செய்திருக்கிறீர்கள். இதை நாங்கள் முழு மனதோடு ஆதரிக் கிறோம். ஆனால் கூலி உயர்வுக்குச் செய்யும் வேலை நிறுத்தத்தை நாங்கள் அவ்வளவு முக்கியமானதாகக் கருதுவதில்லை. ஏனெனில் அது தொழிலாளிகளைத் தொழிலாளர்களாகவே இருக்கவைக்கும் வேலை என்பது எங்கள் கருத்து.

28.3.3 முதலாளிகளின் இலாபத்தையும் நிர்வாகிகளின் கொள்ளையையும் கட்டுப்படுத்த வேண்டும். அப்படிக்கு இல்லாமல் இன்றைய தினம் நடக்கும் தொழிலாளர்கள் கிளர்ச்சி, போராட்டங்கள் ஆகியவைக ளெல்லாம் ஏதோ சில்லரைக் காரணங்களுக்குத்தான் நடத்தப்பட்டுத் தொழிலாளிகளுக்குச் சிறு இலாபமும், பொது மக்களுக்குப் பெரும் நட்டமும், தொல்லையும் அடையவே நேரிடுகிறதே தவிர, உண்மையில் அவர்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாகக் காணவில்லை.

28.3.4 ஏகாதிபத்திய ஆதிக்கமானது உலக உற்பத்திக்கே காரணத்தர்களான பாட்டாளி உரிமையைப் பறிக்க இதுவரை துப்பாக்கி, பீரங்கி, குண்டுகள் சகிதம் அடக்கு முறையை வீசி வீசிப் பார்த்துக் கண்ட பலன் என்ன? அடக்கு முறையின் கை அலுத்ததே யன்றிப் பாட்டாளி மக்களின் எழுச்சியை அடக்க முடியவில்லை.

28.3.5 நான் முடிந்த வரை வேலை நிறுத்தங்களைத் தடுத்தே வந்திருக்கின்றேன். ஒன்றும் முடியாத நிலையிலே கடைசிப் பட்சமாகத் தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, ஸ்ட்ரைக்கையே ஒரு வேலையாக வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஸ்ட்ரைக்கில் தோல்வி ஏற்பட்டால் தூண்டிவிடுபவனுக்கு ஒரு கட்டமும் இல்லை; தொழிலாளர்களுக்குத்தான் மரியாதை குறைந்துவிடும்.

28.3.6 வேலை நிறுத்தப் போராட்டத்தால் கட்டமோ தொல்லையோ அடைவது அரசாங்கமல்ல; பொது மக்கள்தான். அரசாங்க ஊழியர்கள் பொது மக்கள் சேவகர்கள். பொது மக்களின் வரிப்பணத்திலிருந்து மற்ற எவரையும் விட அதிகச் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் மேலும் அதிக உயர்வு கோருவதைப் பொதுமக்கள் எப்படி ஆதரிக்க முடியும்.

28.3.7 பொது மக்கள் வரிப் பணத்தை வாங்கி வாழக் கூடிய ஊழியர்கள் பொது மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ரயில், தபால், தந்தி ஆகியவைகளை இயங்க வொட்டாமல் செய்வது என்றால் இது பொது மக்களுக்கு எவ்வளவு பெரிய துரோகம் செய்வதாக ஆகும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். வேலை நிறுத்தத்தினால் அரசாங்கத்துக்கு எந்தத் தொல்லையு மில்லை. அவர்களை அசைக்கவும் முடியாது. பொறுப்பும் அறிவும் உள்ள மக்கள் இதனை வெற்றி பெறாமல் செய்ய வேண்டும்.

28.3.8 வேலை நிறுத்தங்களில் பெரும்பாலும் ஏன் முழுவதுமே பாதிக்கப்படுபவர்கள் தமிழர்களேயாவர். வேலை நிறுத்தத்தைத் தூண்டிவிட்ட, அல்லது ஈடுபட்ட பார்ப்பனர்கள், பார்ப்பனத் தலைவர்கள் எல்லாம் மிகவும் சாமர்த்தியமாக நடந்து கொண்டு பார்ப்பன மேலதிகாரிகளால் காப்பாற்றப்பட்டு விட்ட னர்.

28.3.9 பிணத்தைச் சுடும் வெட்டியானுக்கு எப்படி அந்தப் பிணத்தின் சாவைப் பற்றிய கவலையே கிடையாதோ, அது போல் சர்க்கார் சிப்பந்திகளுக்கு நேரத்தைப் பற்றி பாத்திரம் அல்லாமல் வேறு பொறுப்போ கவலையோ கிடையாது. இந்த நிலையில் இருக்கிற தொழிலாளிகளும் சர்க்கார் சிப்பந்திகளும் ஸ்ட்ரைக் செய்வது என்றால் நாட்டு ஆட்சி கண்டிப்பாக மக்கள் ஆட்சி அல்ல என்பதோடு பொறுப்பற்ற ஆட்சி என்றுதான் நான் கருதுகிறேன். சர்க்கார் சிப்பந்திகள், ஃபேக்ட்டரி தொழிலா ளர்கள் ஆகிய இரு கூட்டத்திற்கும் தங்கள் சவுகரியமே முக்கியம் என்றால், இவர்கள் யாருக்குப் பயன்படத் தொழில் செய் கிறார்களோ அவர்கள் நிலைமையைப் பற்றிச் சிந்திக்க ஆட்கள் எங்கே ?

28.3.10 தொழிலாளர் சங்கப் போராட்டமென்றால் முதலாளிகளை ஒழித்து முதலாளி தொழிலாளி , என்ற பேதமில்லாமல் செய்வது என்றால் சரி, நியாயம். அதை விட்டு விட்டுக் கூலி உயர்வைக் கருதியே ஒரு சங்கம் இருக்கிறது என்றால் அதற்குப் போராட்டம் எதற்கு? வேலை நிறுத்தம் எதற்கு? நாச வேலை எதற்கு?

28.3.11 ஸ்ட்ரைக் என்றால் இதில் ஈடுபடுபவர்கள் பரம முட்டாள்கள்; இதை நடத்துகிறவர்கள் பரம அயோக்கியர்கள்; அதாவது சட்டம், அமைதி, கட்டுப்பாடு, ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றில் சிறிதும் கவலை அற்றவர்கள். இப்படிப்பட்ட இவர்களைக் கொண்டு நடத்தப்படும் காரியம் எப்படி ஒழுங்காக இருக்க முடியும்?

28.3.12 ஸ்ட்ரைக்கைப் பெரிதும் சமூகத் துரோகமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும்; ஏனென்றால் ஸ்டிரைக் செய்தவனுக்கு ஒன்றும் நட்டம் இல்லை; தூண்டி விட்டு நடத்துபவனுக்கும் நட்டமில்லை; சிலருக்கு நல்ல வரும்படியும் உண்டு, ஆனால் பொதுமக்களுக்கு அசவுகரியம்; பல கோடிக்கணக்கான பொருள், வருவாய் நட்டம். எந்த ஸ்டிரைக் கிலும் இவை தடுக்கப்பட முடியவில்லை.

28.3.13 ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப் படுவதற்காகப் போராடுவது என்பது பயனற்றதே யாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான் களின் பேரில் முதலாளிகள் ஒன்று சேர்ந்து நாலணா அதிகப்படுத்தி விடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்து சாமான் வாங்க வேண்டியது தொழிலாளர்களே ஆவார்கள். ஆகவே முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம் கொடுத்து இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள்.

தொழிலாளர் – தந்தை பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக