திங்கள், 24 பிப்ரவரி, 2020

கடவுளுக்கு ஒரு வார நோட்டீஸ் – தந்தை பெரியார்


(தங்களால் நிறுவும் ஆட்சி தான் சிறந்தது என்பதாக மதங்கள் கருதுகின்றன. மேலும் அதுவே சதர்ம ஆட்சி போன்றது என்கின்றது. இதனை பெரியார் கேள்விக்குள்ளாக்குகிறார். அதுமட்டுமல்லாது, பணவிஷயங்களில் வித்தியாம் வைத்துக் கொண்டு மற்ற விஷயங்களில் சமத்துவம் பேசுவது சமதர்மம் அல்ல என்கிறார்.

உலகம் பொது, உலகத்தில் உள்ள செல்வம் பொது அதனால் எல்லாவற்றையும் மக்களுக்கும் பொதுவாக்கப்பட வேண்டும் என்று ஒரு அறநெறிக் கருத்தாக பெரியார் பொதுவுடைமையைக் கருதுகிறார். தனிவுடைமை சமூகம் பல நூறாண்டுகளாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது. அறநெறிக் கருத்தின் மூலம் பொதுவுடைமை சமூகத்தைப் படைத்திட முடியாது என்பதை மார்க்சியம் அறிவுறுத்துகிறது.

வர்க்க சமூகத்தின் வளர்ச்சி எவ்வாறு கம்யூனிச சமூகத்துக்கு மாறுகிறது என்பது பற்றி மார்க்சியம் தத்துவம் பொருளாதாரம் ஆகியற்றின் வழியில் நிறுவுகிறது.)

தந்தை பெரியார்:-
தலைவரவர்களே! தோழர்களே! சமதர்மம் என்பது நமக்கொரு புதிய வார்த்தை அல்ல, எல்லாச் சமூகத்தாரும் எல்லா மதஸ்தர்களும் விரும்புவதும் அந்தப்படியே யாவரும் நடக்க வேண்டுமென்றும் எதிர்பார்ப்பதும், ஒவ்வொரு சமூகத்தானும், ஒவ்வொரு மதஸ்த்தனும் தங்கள் தங்கள் சமூகங்களிலும், மதங்களிலும் இருக்கின்றதென்று சொல்லி பெருமை பாராட்டிக் கொள்ளுவதுமான வார்த்தையேயாகும்.

ஆனால் காரியத்தில் மாத்திரம் உண்மையான சமதர்ம தத்துவங்களை எடுத்துச்சொன்னால் “இது சாத்தியப்படுமா” என்று பேசுவதாகவும் இது நாஸ்திகமென்றும், துவேஷமென்றும் சொல்லுவதாகவே இருக்கிறது.

எச்சமதர்மக்காரனையாவது அழைத்து உங்கள் சமூகத்தில் மதத்தில் சமதர்மம் இருக்கிறது என்றாயே நீ ஏன் இப்படி யிருக்கிறாய், அவன் ஏன் அப்படியிருக்கிறான், நீ ஏன் எஜமானனாயிருக்கிறாய், அவன் ஏன் அடிமையாயிருக்கிறான், நீ ஏன் பிரபுவாய், செல்வந்தனா யிருக்கிறாய், அவன் ஏன் ஏழையாய், தரித்திரனாய், பிச்சைக்காரனாய், பட்டினிகிடப்பவனாயிருக்கிறான்? உனக்கு ஏன் மூன்றடுக்கு மாளிகை? அவனுக்கு ஏன் ஓட்டைக் குடிசை கூட இல்லை ? நீ ஏன் வருஷம் 10000 கணக்காய் லாபம் பெருக்கி ராஜபோகம் அனுபவித்து லக்ஷாதிபதியாய் விளங்குகின்றாய்? அவன் ஏன் நஷ்டப்பட்டு, கை முதலை இழந்து கடன் காரனாகிறான்? நீ ஏன் பிச்சை கொடுக்கத் தகுந்தவனானாய் அவன் பிச்சை வாங்கத் தகுந்தவனானான்? நீ ஏன் பாடுபடாமல் வேதத்தையும், மந்திரத் தையும் சொல்லிக் கொண்டு நோகாமல் வயிறு வளர்க்கின்றாய்? அவன் ஏன் பாடுபட்டு இடுப்பொடிந்து, கூன்விழுந்து இளைத்துப்போகிறான். உன் பிள்ளை ஏன் பி.ஏ., எம்.ஏ.- ஐ.சி.எஸ். பாரிஸ்டர் படிக்க முடிந்தது? அவன் பிள்ளை ஏன் கையெழுத்துப் போட கூடத் தெரிந்து கொள்ள முடியவில்லை என்பன போன்ற சாதாரணமான பொதுக்கேள்விகளைக் கேட்டால் சமதர்மம் மதக்காரர்கள் என்பவர்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

முட்டாள்தனமானதும், போக்கிறித்தனமானதுமான பதிலைத்தான் சொல்லுவார்கள். அதென்னபதிவென்றால் "ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இருக்கின்றனவா? ஒன்று உயர்வு, ஒன்று தாழ்வு ஆகத்தானே கடவுள் சிருஷ்டியின் இயற்கை இருக்கின்றது என்று சொல்லுகிறார்கள். இந்தப் பதிலைப்படித்த மேதாவிகளான பி.ஏ, எம்.ஏ. பண்டிதர்களும், சாஸ்திரிகளும், குருமார்களும், பாதிரிகளும் மௌலானாக்களும், தத்துவஞானி என்பவர்களும், மகாத்மாக்கள் என்பவர்களும் அரசியல் ஞானிகள் சீர்திருத்தக் காரர்கள், பரோபகாரிகள், ஆஸ்திகர்கள், பிரமஞானிகள், பிரம சமாஜக் காரர்கள் முதலாகிய எல்லாப் பொருப்பு வாய்ந்த கனவான்களும் சொல்லு கின்றார்களென்றால் இந்தக் கூட்ட மக்களோ, மதமோ, அரசியலோ, ஞானமோ, சமதர்மமாகுமா என்று யோசித்துப்பாருங்கள்.

ஏழை பணக்காரக் கொடுமைக்கும், சோம்பேறி உழைப்பாளி தன்மையில் உள்ள வித்தியாசத்திற்கும் “ஐந்து விரல்களும் ஒன்று போலிருக்கின்றனவா” என்கின்ற உதாரணத்திற்கும் ஏதாவது பொருத்தமிருக்கிறதாவென்று யோசித்துப் பாருங்கள், இந்த பதிலை ஒன்றா முட்டாள்த்தனம் அல்லது போக்கிறிதனமான பித்தலாட்டத்தனம் என்று தானே சொல்லவேண்டும். இன்னும் வெளிப்படையாகப் பேச வேண்டுமானால் இன்று காணப்படும் மதம், ஜாதி, சமூகம், அரசாங்கம், ஞானம், தத்துவ சாஸ்திரம் முதலியவை களெல்லாம் சமதர்மத்துக்கு விரோதமான குஷி எண்ணத்தின் மீது கட்டப் பட்டவைகளென்று தான் சொல்லவேண்டும். இதுமாத்திரமல்லாமல் இவைகளெல்லாவற்றிற்கு மாதாரமாய்க் கொள்ளப்படும் கடவுள் என்ற தன்மையும் இந்த உண்மை சமதர்மத்திற்கு விரோதமான தன்மைகளை நிலை நிறுத்தவும் அதன் குற்றங்களை உணராமலிருக்கவும், திருத்துப்பாடு செய்யாமலிருக்கவும் தந்திரக்காரர்கள் செய்த சூஷியேயாகும். அல்லவென்றால் இச்சூட்சிகளைக் கண்டுபிடிக்க முடியாத திருத்துப்பாடு செய்துகொள்ள முடியாத மூட மக்களின் அறியாமை உணர்ச்சியேயாகும்.

இன்றையத்தினம் வார்த்தையில் சமதர்மமே யொழிய காரியத்தில், வாழ்க்கைத் தத்துவத்தில் எங்கே சமதர்மம் இருக்கிறது?

ஒருவனுக்கு மகிமையில், சம்பாதனையில், அல்லது சொத்தில் இத்தனையில் ஒரு பங்கு என்று பிச்சை கொடுத்துவிட்டால் அது சமதர்ம மாகிவிடுமா? ஒருவனை தொட்டுக் கொண்டால் அது சமதர்மமாகிவிடுமா? ஒருவன்கூட இருந்து சாப்பிட்டுவிட்டால் அது சமதர்மமாகிவிடுமா? ஒருவனைக் கோவிலுக்குள் விட்டுவிட்டால் அது சமதர்மமாகிவிடுமா? ஒருவன் கூட இருந்து கடவுளைப் பிரார்த்தனை செய்தால் அது சமதர்ம மாகிவிடுமா? ஒருவன் கஞ்சித்தொட்டிவைத்து எல்லோருக்கும் கஞ்சி ஊற்றினால் அது சமதர்மமாகிவிடுமா? ஒரு சத்திரம் கட்டி வைத்துவிட்டால் அது சமதர்மமாகிவிடுமா? எல்லோரையும் ஒன்றாய் உட்கார்ந்து படிக்கச் சொன்னால் சமதர்மமாகிவிடுமா? எல்லோரும் ஒன்றாயிருந்து கும்பிட ஒரு கோவில் கட்டி விட்டால் சமதர்மமாகிவிடுமா வென்றுயோசித்துப்பாருங்கள். இவற்றால் இதைசெய்கின்ற மனிதனுக்கோ, இதை அனுபவிக்கின்ற மனிதனுக்கோ, முறையே நஷ்டமென்ன லாபமென்ன? இவையெல்லாம் வெரும் பித்தலாட்ட சமதர்மங்கள்.

உலகம் பொது, உலகத்திலுள்ள செல்வம் போக போக்கியம் பொது, உலகத்தில் மனிதவாழ்க்கைக்கு வேண்டிய காரியத்திற்காக மனிதன் செய்ய வேண்டிய வேலைகளெல்லாம் பொது அதனால் ஏற்படும் பலன்களெல்லாம் எல்லா மக்களுக்கும் பொது சரிபாகம் பிரித்துக்கொள்ளத்தக்கது. இதற்கு மீறி நடந்தால் குற்றம் தண்டிக்கத்தக்கது என்று எந்த மதம், எந்த சமூகம், எந்த அரசாங்கம், எந்த அரசியல் ஞானம், எந்த மதத் தத்துவஞானம், எந்த மகாத்மா முதலியவைகள் கூறுகின்றன என்பதை சிறிது யோசித்துப் பாருங்கள். மத வெறி காரணமாக தன்தன் மதம் சமதர்ம மதம் என்பதும், சமயவெறி காரணமாக தன் தன் சமயம் சமதர்ம சமயமென்பதும் அரசியல் வெறி சூக்ஷி காரணமாக தன் தன் அரசியல் முறை சமதர்மம் என்பதுமான பித்தலாட்டங்கள் தான் நடைபெறுகின்றனவே யல்லாமல் உண்மை சமதர்மம் எங்கே இருக்கின்றது? எதில் இருக்கின்றது என்பதை நடுநிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள்.

அரசனும், ஆண்டியும் ஒன்றாயிருந்து ஒரு ஓட்டலிலிருந்து சாப்பிட்டால், ஒரு கோயிலில் கும்பிட்டால், ஒரு பள்ளிக்கூடத்தில்படித்தால், ஒரு தெருவில் நடந்தால், ஒரு குளத்தில் தண்ணீர் சாப்பிட்டால், ஒரு காற்றை சுவாசித்தால் இவையெல்லாம் எப்படி சமதர்மமாகிவிடும்? என்று யோசித்துப் பாருங்கள். இதைச் சொல்லி மக்களை இன்னும் எத்தனை காலத்திற்கு உண்மையான சமதர்ம மில்லாமல் கொடுமைப்படுத்தி ஏழைகளின் தொழில் செய்து, பாடுபடும் பாட்டாளிகளின் ரத்தத்தை சோம்பேரிகளும், சுயநலக்காரர்களும், வன்னெஞ்சக்காரர்களும் உரிஞ்சும்படி விட்டுக்கொண்டிருப்பது என்பதை யோசித்துப் பாருங்கள், மேல்கண்ட கொடுமைகளுக்கும், பித்தலாட்டங்களுக்கும் உயர்வு தாழ்வுகளுக்கும் என்ன சமாதானமிருக்கின்றது.

ஆண்டவன் செயல், “கடவுள் சித்தம்' 'அவனவன் முன் ஜென்மப்பலன்' என்று சொல்வதோடு 'ஐந்து விரல்களும்' ஒன்று போல் இருக்கின்றனவா என்று கேட்கும் கேள்வியுமல்லாமல் வேறு என்ன? ஆண்டவன் செயலை ஒப்புக்கொள்ளாதவனும் ஐந்துவிரலும் ஒன்று போலிருக்குமா என்கின்ற சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாதவனும் இந்த சமாதானத்தைப்பற்றி என்ன சொல்லக்கூடும்? இந்த சமாதானம் போக்கிறித்தனமானதும், முட்டாள் தனமானதும், பித்தலாட்டமானதும் என்று தானே சொல்லித்தர வேண்டும். ஐந்து விரல்களும் ஒன்றுபோலிருக்கின்றனவா வென்று கேட்டவர்கள் அரசியலில் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் கேட்பதின் கருத்து என்ன? ஒன்றாய் சாப்பிடவும், ஒன்றாய் பிரார்த்தனை செய்யவும், ஒன்றாய் படிக்கவும், ஒன்றாய் உத்தியோகம் பார்க்கவும், ஒன்றாய் அதிகாரம் செலுத்தவும், உரிமைகள் கேழ்ப்பதின் அர்த்தம் என்னவென்று யோசித்துப்பாருங்கள்.

வெள்ளைக்காரன் இந்த நாட்டுச் சொந்தக்காரன் அல்லாததால் இந்த நாட்டை விட்டுப்போய் விட வேண்டும் என்கின்றோம். அதே முறையில் பணக்காரனும், மிராசுதாரனும், ஜமின்தாரனும் பாடு படாதவர்களானதினால் அவர்கள் மற்றவர்கள் பட்டபாட்டின் பலன்களை அனுபவிக்கத் தகுதியுடையவர்கள் அல்லவாதலால் அவைகளை எல்லாம் பாடுபடுவர்களுக்கு விட்டு விட்டு அவர்களும் மண்வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நாங்கள் சொன்னால் “ஐந்து விரல்களும் ஒன்று போலிருக்கிறதா? ஆண்டவன் செயலுக்கு யார் என்ன செய்யக்கூடும்?” என்றால் இது போக்கிறித் தனமான சமாதானமா? இல்லையா வென்று யோசித்துப்பாருங்கள்.

சில சமயக்காரர்கள் சீர்திருத்தவாதிகள் பிறவியில் ஜாதி உயர்வு தாழ்வு கூடாது என்கின்றார்கள். காரணம் என்னவென்றால் சமதர்மம் என்கின்றார்கள். இது சரிதான். ஆனால் பிறவியில் பணக்காரர்கள், ஜமீன் தாரர்கள் ராஜாக்கள், பிரபுக்கள், ஏழைகள், வெட்டியான்கள் என்னும் வகுப்புகளும் பணவிஷயமான தொழில் விஷயமான வித்தியாசங்களும் இருப்பது சமதர்மமா என்று கேட்டால் அதை “ஆண்டவன் - செயல்” என்கின்றார்கள். இது நியாயமா அல்லது அயோக்கியத்தனமா வென்று யோசித்துப்பாருங்கள். போலி சமதர்மத்தையும், ஆண்டவனையும், ஐந்துவிரல்களையும் போக்கிறிகள் தங்கள் சுயநலத்துக்கு தகுந்தபடி உபயோகித்துக்கொண்டு மூடர்களை நம்பச் செய்து, மோசம் செய்து வருகின்றார்கள். ஆதலால் சமதர்மத்தில் உண்மையான திருஷ்டியுள்ளவர்கள் இந்த ஆண்டவனை - சமதர்மத்துக்கு விரோதமான ஆண்டவனை போக்கிறிகளும், சோம்பேரிகளும் தங்கள் சுயநலத்துக்கு உபயோகித்துக்கொண்டு தொழில் செய்யும் பாட்டாளிகளையும், ஏழைமக்களையும் ஏமாற்ற உபயோகிக்கும் ஆண்டவனை அடியோடு ஒழிக்க வேண்டியதுதான் சமதர்மத்துக்கு அஸ்திவாரக்கல் நாட்டும் வேலையாகும்.

ஏனெனில் ஆண்டவன் என்கின்ற ஒரு சாக்கு சொல்ல இடமில்லை யானால் உலகிலுள்ள அயோக்கியத் தனங்களுக்கும், கொடுமைகளுக்கும், பித்தலாட்டங்களுக்கும், எந்த மனிதனாலும் எப்படிப்பட்ட சமாதானமும் சொல்ல முடியவே முடியாது. அப்படி வேறு எந்த சமாதானமும் சொல்லப்பட்ட போதிலும் அந்த சமாதானங்கள் அரை நிமிஷநேரம் கூட நிலைக்காது. ஆண்டவன், கடவுள், பகவான் என்கின்றதான வார்த்தைகள் அர்த்தமற்றதும் வெகுகாலமாகச் சொல்லிச்சொல்லி மக்களைப் பயப்படுத்தி அவர்களது ரத்தத்தில் ஊரச்செய்து விட்டதினாலும், அந்த ஒரு வார்த்தைக்குத் தான் உழைப்பாளிகளான மூட ஜனங்கள் பயப்படுகின்றார்கள்.

உண்மையான சமதர்மத்தைவிரும்புகின்ற மக்கள் எவ்வளவுதான் ஆஸ்திகர்களாயிருந்தாலும் கொஞ்ச காலத்திற்காவது அவர்களது கடவுளை பகிஷ்காரம் செய்து வைத்துத்தான் ஆக வேண்டும். அல்லது ஐந்து நாள் பத்து நாள் வாய்தாக் கண்டு கடவுளுக்கு ஒரு நோட்டிலாவது கொடுத்தாக வேண்டும். அதாவது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பாடுபடும் மக்களாகிய நாங்கள் அதுவும் ஜனங்களிடம் பக்தி கொண்டு, உனது படைப்புகளான உலக மக்களுக்கு விவசாயம் செய்து தானியங்களை உண்டாக்கியும் தொழில்கள் செய்து சாமான்களை உண்டாக்கியும், வேலைகள் செய்து அவைகளை நாட்டிற்குக் கொண்டுவந்து சேர்த்தும் கொடுத்த மக்களாகிய நாங்கள் இன்று மாத்திரமல்லாமல், வெகு காலமாய் வீடு இல்லாமல், போதிய துணிகளில்லாமல் ஆகாரமில்லாமல் அவஸ்தைப்பட்டு பட்டினி கிடக்கின்றோம். மேற்கண்ட பாடுகள் படாத சோம்பேறிகள் ராஜாவாகவும், ஜமீன்தாரனாகவும், முதலாளியாகவும், குருவாகவும், மதப்பிரசாரகனாகவும், பெரிய பெரிய அதிகாரியாகவும் இருந்து கொண்டு அளவுக்கு மேல் அனுபவித்துக்கொண்டு மனம் பதரும்படி செல்வங்களை விணாக்கிக்கொண்டு வாழ்கின்றார்கள்.

இவைகளையெல்லாம் ஒரு வாரத்தில் சரிசெய்து எல்லோருக்கும் செல்வத்தையும், வேலையையும் சரி சமமாக்கி சமதர்மத்தை ஏற்பாடு செய்கின்றாயா? இல்லையா என்று ஒரு நோட்டீஸ் கொடுத்து விட வேண்டும். ஒரு சமயம் ஆஸ்திகர்களான கடவுள் பிரசாரகர்கள் இதற்கு இவ்வளவு பெரிய காரியத்திற்கு ஒரு வாரம் போறுமா வென்று கேழ்ப்பார்கள். கடவுள் சர்வசக்தியும் நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்யக்கூடிய வல்லமையும் உடையவர் என்று சொல்லப்படுவதால் ஒரு வார நோட்டிலே அதிக காலம் என்று சொல்லலாம். ஆகையால் அந்த வாய்தாவில் சமதர்மம் ஏற்படாவிட்டால் அதை ஒழித்து அந்த உணர்ச்சியையே அப்படி ஒரு விஷயமோ, வஸ்துவோ, பொருளோ ஒன்று இருந்ததாகவே ஞாபகத்திற்கு வரமுடியாமல் செய்து சமதர்மத்தை நிலைநாட்ட முயற்சி செய்ய வேண்டும்.

அப்படிக்கில்லாமல் செக்கு மாடு சுற்றுவது போலும், அறைத்த மாவையே திரும்பத்திரும்ப அரைப்பது போலும், ஆண்டவன் செயல், ஆண்டவள் செயல் என்று சொல்லிக்கொண்டும் ஆண்டவனை தினம் 5 தடவை 10 தடவை பிரார்த்தித்துக்கொண்டும், பூஜை. உற்சவம், பிரார்த்தனை செய்யச்செய்து கொண்டுமிருப்பதில் பயனென்னவென்பதை யோசித்துப் பாருங்கள்.

சமதர்மம் என்று நாம் சொல்வது எல்லா மக்களுடைய, எல்லா மத மக்களுடைய, எல்லா உலக மக்களுடைய சமத்துவத்தைப் பொருத்ததே யொழிய யாரோ, ஒரு சில சமூகத்திற்கோ, வகுப்புக்கோ, மதத்திற்கோ, தேசத்திற்கோ என்பதாக அல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் மனிதனின் வாழ்க்கைக்கு சமதர்மம் என்பது ஒப்பற்ற சாந்தியையும், மனத் திருப்தியையும், நிம்மதியையும் அளிப்பதாகும். இன்று மனித சமூகமென்பதில் எந்த ஒரு தனிமனிதனுக்கும் அவன் எந்த நிலையில் இருப்பவனானாலும், எந்தப் பதவியிலிருப்பவனானாலும் சாந்தியோ, மனதிருப்தியோ, நிம்மதியோ, உண்மையான சந்தோஷமோ, பரஸ்பர அன்போ, பொறாமை யற்ற தன்மையோ இருக்கின்றது வென்பதை யோசித்துப் பாருங்கள்.

(குறிப்பு: 20.03.1933 இல் சிவகங்கை அரண்மனை வாசல் மைதானத்தில்
நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.)
(குடி அரசு - சொற்பொழிவு - 02.04.1933)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக