புதன், 5 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் - அணிந்துரை- ஆசிரியர் கி.வீரமணி


வர்க்கத்தை வர்ணம் தான் நிர்ணயிக்கிறது

(“தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்” என்ற நூலுக்கு
கி.வீரமணி அவர்களின் அணிந்துரையில் இருந்து)

தந்தை பெரியார்தம் சுயமரியாதை இயக்கம் வேறு பொதுவுடைமை இயக்கம் வேறு என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பொது உடைமை + பொது உரிமை + சமதர்மம் = சுயமரியாதை இயக்கம்.

சமதர்ம இயக்கம்தான் இவ்வியக்கம். சமதர்மம் என்பதற்குரிய தேவை அயல்நாடுகளில் - குறிப்பாக - வேறு முன்னுரிமையைக் கொண்டது. இந்தியாவில் அதற்கு முதல் உரிமை என்பதற்குத் தேவை - குலதர்மத்திற்கு எதிரானவையே!
மற்ற நாடுகளில் உள்ள சமூகபேதம் வர்க்க பேதம் - (Class) என்பது ஏழை-பணக்காரன். முதலாளி தொழிலாளி என்பனவாகும்.

இது பொருளாதார அடிப்படையைக் கொண்ட அளவுகோலாகும். இங்கோ - நம் நாட்டிலோ. உயர்ஜாதி - ‘பிராமணன்'. கீழ்ஜாதி - ‘சூத்திரன்', 'பஞ்சமன்-பறையன்' என்னும் ஜாதி அடிப்படையைக் கொண்ட- என்றும் நீங்காத- நீக்கப்பட முடியாத பிறவிப் பேதம்.

“நேற்றைய பணக்காரன்” –இன்று ஏழையாகலாம், மீண்டும் பணம் சம்பாதித்தால் பணக்காரனாக மாறலாம்.

ஆனால்,

நேற்றைய உயர்ஜாதிக்காரன் இன்றும் “பிராமணன்”, இன்றும் கீழ்ஜாதிக்காரன் “சூத்திரன் - பஞ்சமன்” என்றும் கீழ்ஜாதிக்காரனே! இந்தப் பிறவி பேதம் கடவுள்களால் உருவாக்கப்பட்டது – மதத்தின் சனாதன தர்ம சாஸ்திரங்களால் (வேதம் மனு, கீதை, இராமாயணம், பாரதம் முதலியவற்றால்) உருவாக்கப்பட்ட மாற்றப்படவே முடியாத ”வருண தர்மம்”.

“அனைவருக்கும் அனைத்தும்” கிடைக்கக் கூடாது என்பதையே (மனு) தர்மமாக - பகவத் கீதையாக, குலதர்மத்தை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. எனவேதான், தந்தை பெரியார் அவர்கள் சமதர்மம் - என்கிறபோது, இங்கே அயல்நாட்டுப் பேதத்திற்கும். நம் நாட்டுச் சமூக பேதத்திற்கும் இடையிலான அடிப்படையே வேறுபடுகிறது என்று கண்டறிந்தார்.
… … …
…இந்தச் சமுதாய பேதம் ‘வருணபேதம்' மட்டுமல்ல; பாலின அநீதியையும் உடும்புப்பிடி போல பற்றியுள்ள பெரும்பான்மை ஹிந்து மத சமூகம், இங்கே வந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏனைய பெரு மதங்களைக் கூட, தொற்றுநோய் போலப் பற்றிக்கொள்ளும் மதமாகும்.

அதுபோலவே 'தொழிலாளி' என்னும் பெயர் எப்படிக் கீழ்ஜாதி சூத்திரனுக்குள்ள பெயரோ, அதுபோல முதலாளிகளும் கூட நம் நாட்டில் மூவகைப்பட்டவர்கள் என்கிறார் தந்தை பெரியார்.

1.   பணத்தை மூலதனமாகப் போட்டு - முதல் தந்த - முதலாளி ஒருவர்:

2.   ஒவ்வொரு கடவுளும் - கற்சிலைகளாக இருந்தாலும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் முதலாளிகள் - கல் முதலாளிகள்!

3. எந்தக் கடின உழைப்பும் - உடல் உழைப்பும் செய்யாமல் - பிறவியினாலேயே உயர்ந்தவர் என்று கடவுள்களாலும், மதங்களாலும், சாஸ்திர, வேத, இதிகாசங்களாலும் கற்பிதங்கள். செய்யப்பட்டுப் பிறவி முதலாளிகளாக உள்ளவர்கள் ''பிராமணர்கள்'.

எனவேதான் இங்குள்ள சமூக பேதமான - பிறவிப் பேதமான - ஜாதி - தீண்டாமை - பெண்ணடிமை ஒழிப்புகளுக்கே முன்னுரிமை கொடுத்து, பேதமற்ற சமூகத்தை உருவாக்க தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டார்.
… … …
ரஷ்யாவிற்கு - அய்ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் 1931 டிசம்பர் 13 (13.12.1931); திரும்பியது 1932 நவம்பர் 11இல் - ஏறத்தாழ 11 மாதங்கள். இதில் அதிக நாள் சோவியத் ரஷ்யாவில் செலவிட்டார்.

அய்ரோப்பிய சுற்றுப் பயணம் முடிந்து தமிழ்நாடு திரும்பிய தந்தை பெரியாருக்கு விருதுநகரில் அளித்த ஒரு வரவேற்பின்போது பேசுகிறார்:

"தோழர்களே. எனது அய்ரோப்பிய யாத்திரையாலோ, குறிப்பாக ரஷ்ய யாத்திரையாலோ நான் கற்றுக்கொண்டு வரத்தக்க விஷயம் ஒன்றும் அங்கும் எனக்குக் காணப்படவில்லை ; ஆனால், நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் மிகவும் சரியானவை என்றும், அக்கொள்கைகளால்தான் உலகமே விடுதலையும். சாந்தியும், சமாதானமும் அடையக்கூடும் என்றும் தெரிந்தேன். இதுதான் நான் அய்ரோப்பாவிற்குச் சென்று வந்தவன் என்கின்ற முறையில் சொல்லும் சேதியாகும்.
(குடிஅரசு' 12.3.1933, பக்கம் 7)

இதில் தந்தை பெரியார் அவர்கள் சொற்களைக் கூர்ந்து நோக்குங்கள்.

அறிந்துகொண்டு திரும்பியவை அநேகம் இருக்கலாம்;

கற்றுக் கொண்டு வருவது வேறு; அறிந்து கொண்டு வருவது வேறு.

தந்தை பெரியார் தனது இயக்கம் சரியான கொள்கை - லட்சியப் - பாதையில் செல்கிறதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளக் கிடைத்த அனுபவமே அது என்பதை எவ்வளவு அழகாக விளக்கியுள்ளார் பார்த்தீர்களா?

ஆனால், அதே நேரத்தில் இதற்கு அடுத்து இரண்டாண்டுகளில் - 1935இல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற மாநாட்டில் ஆற்றிய உரையில் தவறாது ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

“நான் ரஷ்யாவுக்குப் போவதற்கு முன்பே பொதுவுடைமைத் தத்துவத்தை, சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசி வந்தது உண்மைதான்.

ரஷ்யாவிலிருந்து வந்ததும் இன்னும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ததும் உண்மைதான்.'
(திருத்துறைப்பூண்டி மாநாட்டு உரை, - 'குடிஅரசு' 21.3.1935.)

என்றாலும், இங்குள்ள சமுதாயத்திற்குப் பொதுவுடைமைச் சிந்தனைக்கு முன்பாக பொது உரிமைச் சிந்தனைகளும் செயலாக்கமும் தேவை என்பதால், பொருளாதாரக் கண்ணோட்டத்தைவிட, சமூக இழிவு ஒழிப்பு, உரிமை மீட்பு - இவற்றிற்கே தன் இயக்கம் மூலம் முதற்பணி - முதல் லட்சியமாக முன்னிறுத்தினார்கள்.
… … …
வர்க்கம் - வருணம் விவாதங்களில் ஈடுபட்டு, போராட வேண்டிய பொன்னான காலங்களைச் செலவழித்தது வரலாற்றுப் பிழையாகும்.

சமதர்மத்தின் விளைச்சல், குலதர்மத்தின் அழிவின் மூலமே ஏற்படமுடியும்.

கள்ளியும், விஷச் செடிகளும், பாம்புகளும், புதர்களும் மண்டிக்கிடக்கும் வயப்புக் காட்டை அழித்த பிறகே - அதில் பயிரிட முனைய முடியும்.

அதுபோலத்தான் தீண்டாமை, ஜாதி, பெண்ணடிமை - என்ற முப்பெரும் சமுதாயக்கேடுகளும் அக்கேடுகளால் ஏற்பட்ட சமூக அநீதிகளின் நிலைப்பாட்டினை ஒழித்து, 'அனைவரும் சமம்.'

'அனைத்தும் அனைவருக்கும்' என்னும் தத்துவம் ஆளுமை பெருகுவதற்குமுன், நோயின் மூலத்தை அறிந்து மருத்துவப் பணியாற்றலே முக்கியமாகும்!
… … …
… பொருளாதாரத்தில் வறுமைக்கும் ஏழ்மைக்கும் கீழ்ஜாதியான ஆட்பட மூலகாரணமே – வர்ணாசிம தர்மப்படியே தான். வர்க்கத்தைகூட வருணம் தான் நிர்ணயிக்க முக்கிய காரணியாக இருந்தது என்பது விளங்குகிறது அல்லவா?”



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக