திங்கள், 24 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 22:-


சீர்திருத்தம்

“பெரியார் தமது போராட்டத்தைச் சீர்திருத்த போராட்டமல்ல அழிவுப் போராட்டம், அதாவது புரட்சிப் போராட்டம் என்கிறார். சீர்திருத்தம் என்பது பழைய நிலைமைகள் இன்னும் வெகுகாலம் நிலைத்திருப்பதற்குத்தான் பயன்படும் என்பதே அவரின் கருத்து. மூட நம்பிக்கைகளில் மூழ்கியுள்ள தொழிலாளர்களுக்கு இன்றைய நிலையில் பொருளாதார விடுதலை பயன்படாது, அவர்களின் கடவுள், மத மூடநம்பிக்கைகள் ஒழிப்பது தான் முதல் வேலை, அது பொருளாதார விடுதலைக்குத் துணைபுரியும் என்று கூறுவது சீர்திருத்தமே. பொருளாதாரப் போராட்டத்திற்கு இது வழிவகுக்கும் என்று கூறுகிறவாதம் சீர்திருத்தமே.


கோவில் நுழைவுப் போராட்டமும் சீர்திருத்தப் போராட்டமே.

பெரியாரை சீர்திருத்தவாதி என்பதே கம்யூனிஸ்டுகளின் விமர்சனம். சீர்திருத்தம் பற்றிப் போராட்டத்தை மார்க்சியம் ஏற்றுக் கொள்கிறது. கூலிமுறை முழுமையும் ஒழியும்வரை சீர்திருத்தத்தை மார்க்சியம் ஏற்கிறது. கூலிமுறையை எதிர்க்காத சீர்திருத்தத்தை மட்டும் முன்வைத்துச் செயற்படுகிற சீர்திருத்தவாதத்தை மார்க்சியம் வன்மையாகக் கண்டிக்கிறது.

சீர்திருத்தம் செய்வது இன்றைய நிலையைத் தக்கவைக்கிறது என்கின்ற அராஜகவாதிகளின் கூற்றை மார்க்சியம் மறுக்கிறது. சீர்திருத்தம் என்பதை முற்ற மறுப்பது ஆராஜகவாதம் என்கிறது மார்க்சியம்.”

“தவிர அப்பத்திரங்களின் இரண்டொரு இடங்களில் நமது இயக்கம் சீர்திருத்த இயக்கமென்றும், பொது நல இயக்கமென்றும், குறிப்பிட்டிருக்கிறீர்கள், அவைகளை நான் ஒப்புக் கொள்வதில்லை. நமது இயக்கம் சீர்திருத்த இயக்கமல்ல. ஆனால் அழிவு வேலை இயக்கம் என்றே சொல்லு வேன். சீர்திருத்தம் என்றால் எதை சீர்திருத்துவது? இன்றைய நிலைமையில் மனித வாழ்க்கைக்கு. சமத்துவத் தன்மைக்கு பெரும்பான்மையான மக்களாகிய ஏழை மக்கள் படும் கஷ்டமும், தரித்திரமும் இழிவும் நீங்குவதற்கு அனுகூலமாக என்ன கொள்கைகள், நடைமுறைகள் இங்கு இருக்கின்றன? என்று பாருங்கள். அதாவது மத சம்பந்தமாகவோ, கடவுள் சம்பந்தமாகவோ, பொருளாதார முறை சம்பந்தமாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ ஏதாவது ஒரு கொள்கை மனித சமூக ஜீவகாருண்யத்திற்காவது சமத்துவத்திற்காவது ஏற்றதாய் இருக்கின்றதா? என்று பாருங்கள். இருந்தால்தானே சீர்திருத்தம் செய்வீர்கள்? மதம் கடவுள் பொருளாளன் அரசன் இவர்கள் எல்லோரும் மக்களை வருத்தி வஞ்சித்துக் கொடுமைப்படுத்தி வாழும் மக்களாவார்கள். இவர்கள் எல்லோருமே ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகள். ஆளுக்கொரு வேலை பார்க்கின்றவர்கள். இவர்களுக்கு அனுகூலமாகவே எல்லாம் இருக்கின்றன. இவைகளில் எதை சீர்திருத்தம் செய்தாலும் செய்ய நினைத்தாலும் அவை இன்னும் வெகுகாலம் நிலைத்திருப்பதற்கு தான் பயன்படுமே தவிர மாறுதலை உண்டாக்க முடியாது. இவைகள் எல்லாம் அழித்தொழிந்தால் ஒழிய கஷ்டம் நீங்கப்போவதில்லை.
… … …
நமது முன்னோர்கள் காலம் தொட்டு ஆயிரக்கணக்கான வருஷங்களாய் சீர்திருத்தவாதிகளாய் இருந்தும் பார்த்தாய் விட்டது. எந்த துறையில் சீர்திருத்தமடைந்திருக்கிறோம். ஏழை “சீர்திருந்தமடைந்து" நாளுக்கு நாள் பட்டினியும், நோயும், இழிவும் அடைந்து கொண்டே போகிறான். பணக்காரனும் சோம்பேரியும் சீர்திருத்தமடைந்து நாளுக்குநாள் பெரும் பணக்காரனாகி, பிரபுவாகி, ஜமீனாகி, ராஜாவாகி தலைமுறை தலைமுறை ஜமீனும், ராஜாவுமாய் ஆகிக்கொண்டே போகின்றான். சீர்திருத்தத்தின் பலனைக் காண்பதற்கு இன்னும் வேறு என்ன உதாரணம் வேண்டும். ஆகவே ஏழைத்தன்மை, பணக்காரத்தன்மை என்கின்ற இரண்டு தன்மையும் உலகில் இருக்கக்கூடாது என்று அவைகளை அடியோடு அழிப்பது நல்ல வேலையா? அல்லது அத்தன்மைகள் எந்த ரூபத்திலாவது என்றும் இருக்கும்படி சீர்திருத்தம் செய்வது நல்ல வேலையா? என்று யோசித்துப்பாருங்கள். அழிவு வேலைக்கு எதிர்ப்புத்தான் சீர்திருத்த வேலை என்பது. தீமைகளுக்கு காவல்தான் சீர்திருத்தம் என்பது. ஆகவே தீமைகளை அழிக்க வேண்டுமானால் அவற்றின் காவல்களையும், காப்புகளையும் முதலில் நிர்த்தூளியாக்க வேண்டும்.

அரசனையானாலும், மதத்தையானாலும், கடவுளையானாலும், நாம் எதிர்ப்பதும், அழிக்க முற்படுவதுமான காரணமெல்லாம் இவை தீமைக்கு காவலாய் இருக்கின்றன என்கின்ற ஒரே நோக்கமேயல்லாமல் அவைகளிடம் நமக்கு பொறாமையோ, துவேஷமோ ஏற்பட்டதாலல்ல. ஏழ்மைக் கஷ்ட மில்லாமலும், பணக்காரக்கொடுமை இல்லாமலும், பார்ப்பன உயர் சாதி இல்லாமலும் பறைய தாழ்ந்த ஜாதி இல்லாமலும் முதலாளி ஆதிக்கமில்லாமலும் கூலி அடிமைத்தன்மை இல்லாமலுமிருப்பதற்கு ஆதாரமான மதம், கடவுள், அரசன், சட்டம், நீதி, தர்மம் ஆகியவர்களை நாம் அழிப்பதில்லை. அவை களைப்பற்றி நமக்கு கவலையே இல்லை. இவர்கள் விஷயத்தில் நாம் மதத் துரோகியோ, கடவுள் துரோகியோ, ராஜத்துரோகியோ சட்டம் மறுக்கவோ, அதர்மக்காரனாகவோ நாம் சிறிதும் விரும்பவில்லை.

ஏழை பணக்காரத்தன்மையையும் கீழ்மேல் ஜாதியையும், முதலாளி அடிமையையும் கொண்டதான நிலைமைகள் நடைபெற ஆதரவாயிருக்கும் கடவுள், மதம், அரசன், தர்மம், சட்டம் ஒழிந்தே ஆகவேண்டும். ஆதரவா யிருக்கும் கடவுள், மதம், அரசன் என்பவைகள் மாத்திரமல்ல இவைகளை அனுமதித்துக்கொண்டிருக்கும் அரசாங்கமும், நீதி, ஒழுக்கம், பழக்கம், வழக்கம் முதலியன என்பவையையும், நாங்கள் அழித்தே தீருவோம். ராஜத்துரோகி, கடவுள்துரோகி, மதத்துரோகி பூச்சாண்டிகள் இனி சுயமரியாதைக் காரர்களிடம் செல்லாது.

சுயமரியாதைக்காரர்களிடம் மாத்திரமல்ல, வெகு சீக்கிரத்தில் உலகத்திலேயே அவைகளுக்கு இடமில்லாமல் போகப்போகின்றது. இது காலவரையும் கஷ்டப்படும் மக்கள் தங்கள் தலைவிதியின் மீதும், கடவுள் மீதும், பழி போட்டுக்கொண்டு தலைவிதியை மாற்றவும் கடவுள் தயவு பெறவும் என்று, மேலும் மேலும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்துவந்தார்கள். ஆனால் இப்போது சுயமரியாதைக்காரர்களால் நாத்திகர்களால், கடவுள் மதத் துரோகிகளால் ஜனங்கள் உண்மையை உணர்ந்து கொண்டார்கள். இவைகள் சோம்பேரிகளும், பணக்கார முதலாளிகளும் செய்யும் சூழ்ச்சியும், பித்தலாட்டமுமே யொழிய வேறல்ல என்றும், கடவுளும் மதமும் இந்த பித்தலாட்டக்காரர் கற்பனைகளே தவிர வேறு இல்லை என்றும் உணர்ந்துகொண்டார்கள். நன்றாய் உணர்ந்துகொண்டார்கள். இப்பொழுது இவைகளை எப்படி ஒழிப்பது? என்பதில்தான் கவலையாய் இருக்கிறார்கள்.

வேகமாய்ப் போகவேண்டிய - போவதற்கு தயாராய் இருக்கிற - மோட்டார் காருக்கு முன்னால் பனை மரத்தைக் கொண்டுவந்து போட்டது போல், இன்று கடவுளும், மதமும், அரசாங்கமும் குறுக்கே கொண்டு வந்து போடப்பட்டு இருக்கின்றன. இவை வெகு நாளையத்த கடவுளாய் இருந்தாலென்ன? அவதார புருஷர்களால் உண்டாக்கப்பட்ட மதமாய் இருந்தாலென்ன? சட்டப்படி அமைக்கப்பட்ட அரசாங்கமாய் இருந்தால் என்ன? ஒழிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பின் அவை தானாக ஏற்பட்டால் என்ன சட்டப்படி ஏற்பட்டால் என்ன? சும்மா ஏற்பட்டால் என்ன? ஒழியவேண்டுமா? வேண்டாமா? என்பது தானே முக்கிய விஷயம்.”

முழுமையாக வாசிக்க :- "கோவை உபசாரப் பத்திரங்கள் – தந்தை பெரியார்"
(குடி அரசு - சொற்பொழிவு - 05.02.1933)
(குறிப்பு: 30.01.1933 இல் கோவை சுயமரியாதைச் சங்கத்தாராலும் மற்ற சங்கத்தாராலும் வழங்கிய உபசாரப் பத்திரத்திற்கு பதிலளித்து ஆற்றிய உரை.)

(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 60—61 62-64)

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக