திங்கள், 3 பிப்ரவரி, 2020

2) தொழிலாளர்களின் தொழிற்சங்கம் – தந்தை பெரியார்


(முனைவர் மா.நன்னன் தொகுத்தவை- நூலின் “பெயர் பெரியார் கணினி”)

28.2.1 உங்கள் சங்கங்களுக் கெல்லாம் நீங்களே தலைவ ராகுங்கள் - உங்கள் நாட்டுத் தொழிலாளர் சங்கங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேருங்கள். பிறகு தொழிலாளர் கட்சி என்ற ஒரு பொதுக் கட்சியை ஏற்படுத்துங்கள். அதில் உங்கள் தொழிலின் பலன் முழுவதையும் நீங்களே அடையத் தக்கதாகவும் தொழிலாளர்களுக்கு வேண்டிய நன்மைகளையும், பொதுமக் களுக்கு வேண்டிய நன்மைகளையும் கொள்கையாக வைத்துப் பரப்புங்கள். அதில் எல்லோரையும் வந்து சேரும்படிச் செய்யுங்கள். அதை விட்டுவிட்டு எடுப்பார் கைக் குழந்தையாய்த் திரிவது தொழிலாளர் உலகத்திற்கே மானக் கேடு.

28.2.2 ஏதாவது ஒரு தொழிற் சாலையில் நித்தியக் கூலிக்கோ மாதச் சம்பளத்துக்கோ பாடுபடுகின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்துப் பேசி விடுவதினாலேயே அல்லது அத் தொழிலாளிகள் விசயமாய்ப் பேசி விடுவதினாலேயே அல்லது அவர்களுக்குத் தலைமை வகிக்கும் பெருமையைச் சம்பாதித்துக் கொண்டதினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளி களுக்குப் பாடுபட்டவர்களாகக் கருதிவிடக் கூடாது.

28.2.3 செல்வம் கடவுள் கொடுத்தார்.. தொழிலாளிகளைக் கடவுள் சிருட்டித்தார். கடவுள் செயலால் இது இரண்டும் சிருட்டிக்கப்பட்டுக் காப்பற்றப்பட்டு வருகிறது. பிச்சை யெடுப்பது அவன் தலை விதி என்று நினைப்பவர் தொழிலாளர் இயக்கத்தில் அங்கத்தினராய் இருக்கவோ, தொழிலாளர் இயக்கத்தை நடத்தவோ சிறிதும் தகுதி அற்றவர் என்றே சொல்லுவேன். அவர் எவ்வளவு பண்டிதராய் இருந்தாலும் பக்தனா யிருந்தாலும் தொழிலாளர் இயக்கத்திற்குப் பதரே, எதிரியே யாவார்.

28.2.4 தொழிலாளர் சங்கங்கள் உங்களுடைய இலட் சியத்திற்கு ஒரு நாளும் உங்களை வெற்றிகரமாக அழைத்துச் செல்லாது என்று நான் கருதுகிறேன். ஏனெனில் உங்களுடைய அந்தஸ்து தொழிலாளர்கள் சங்கங்களின் மூலம் எவ்வளவுதான் உயர்த்தப்பட்டாலும், உங்கள் வாழ்வு நீங்கள் தினம் ரோல்ஸ் ராய்ஸ் காரில் தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வீட்டிற்குக் கொண்டு வந்து விடப்பட்டாலும், அதற்கு ஏற்றபடி முதலாளிகளின் வசதிகளும் ஏற்றப்பட்டு உங்களுக்கும் அவர்களுக் கும் இன்று இருந்து வரும் பேதங்கள், போதாமைகள், குறைபாடு உணர்ச்சிகள் இருந்துதான் வரும். உங்களுக்கு அவர்கள் மாடிவீடு கட்டிக் கொடுத்தாலும் அவர்கள் அதைவிட மேலான பங்களா வீடுகளில்தான் வாழ்வார்கள். பிறகு உங்களுக்குப் பங்களா இல்லாத மனக்குறை இருந்துதான் தீரும்.

28.2.5 உண்மையில் இன்றைய நிலையில் தொழிலாளர் சங்கங்கள் யாவும் முதலாளிகளின் நன்மைக்காகவே பயன்படு கின்றன என்பதுதான் என் அபிப்பிராயம். ஒரு காலத்திய கருத்துக்கு, அதாவது அன்று இருந்த கடவுள், மதம், தலைவிதி, பகவான் செயல் என்பவைகளில் இருந்த மூட நம்பிக்கை நிலைமைக்குத் தொழிலாளர் சங்கங்கள் ஏற்படுத்தித் தங்கள் நிலைமையை உயர்த்திக் கொள்ள வேண்டியது அவசியமாய் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலைமைக்குத் தொழிலாளர் சங்கங்கள் தொழிலாளர்கள் தன்மை மாறுவதற்கு ஏற்ற தாபனங்களாகா.
28.2.6 தொழிலாளர் சங்கம் என்று வைத்துக் கொண்டு அதன் மூலம் தொழிலாளர்கள் உயர வேண்டும் முதலாளிகள் ஒழிய வேண்டும் என்று கூப்பாடு போடுவது (இனி எனக்கு அர்த்தமற்றதாகவே தோன்றுகிறது. சக்ரவர்த்திகளை ஒழித்து விட்டோம். அரசர்களை ஒழித்துவிட்டோம். சமீனை ஒழிக் கிறோம். முதலாளிகள் மாத்திரம் ஏன் ஒழியாமல் இருக்க வேண்டும். ஆகவே முதலாளிகள் என்ற தன்மையும் ஒழியுமானால் தொழிலாளிகள் எப்படி இருக்க முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

28.2.7 தொழிலாளிகளாக ஆக்கப்பட்ட நீங்கள் தொழி லாளிகளாகவே உங்களை எண்ணிக்கொண்டு ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழும் தொழிலாளியாய் இருக்கப் பாடுபடுவதை விட்டு, முதலாளிகளை (முதலாளித் தன்மைகளை) ஒழிக்கப் பாடுபடுங்கள். தொழிலாளர் சங்கங்களை யெல்லாம் முதலாளி ஒழிப்புச் சங்கங்களாக மாற்றி யமையுங்கள்.

28.2.8 சிமினி விளக்கு, பவர் லைட்டு கண்டுபிடித்தவன் ஒரு மேதாவி என்றால் அவன் கண்டு பிடித்ததோடு அது நின்று விட்டதா? அந்த விளக்கை விட்டு விட்டு அதற்கும் மேலான மின்சார விளக்கை இன்று நாம் கைக்கொள்ள வில்லையா? அதைப் போல்தான் எந்தக் காலத்திலோ தோன்றிய தொழிலாளர் சங்கங்கள் இன்றைய நிலைமைக்கு இன்றைய அறிவுக்கு ஏற்றதல்ல என்று நான் கருதுகிறேன்.

28.2.9 இன்று தொழிலாளிகளுக்குப் பாடுபடுவதாகச் சொல்லுகிற தாபனங்கள் எல்லாம் தொழிலாளிக்கு நாத்திகம் தேவையில்லை; அவன் சாமி கும்பிடுவதையோ, கோயில்
குளங்களுக்குத் திருவிழாக்களுக்குப் போவதையோ தடுக்க  வேண்டிய அவசியமில்லை என்பதாக வெல்லாம் சொல்லு கிறார்கள். அந்தப்படி இருப்பதினால் நான் முன்னே சொன்ன மாதிரி தொழிலாளி தனக்குக் கிடைக்கும் பணத்தை இந்த மாதிரிக் கோயில் குளம் திருவிழாக்களிலே செலவிட்டே மூடத்தனத்திற்கும் முட்டாள் தனத்திற்கும் பலியாவானே தவிர சேர்த்த பொருளை மீக்காமல் கண்டதுக்கு, கண்மூடித்தனத்திற்குச் செலவிடுவானே தவிர வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவோ வாழ்க்கைத் தேவைகளைச் சரிக்கட்டிக் கொள்ளவோ முடியாதவனாக ஆகி விடுகிறான்.

28.2.10 முதலாளி தொழிலாளி என்கிற பிரச்சினை எங்கிருந்து வந்தது? மூட நம்பிக்கையிலிருந்து வந்ததல்ல. அந்தப் பிரச்சினை ஆதாரத்தோடுதான் உள்ளது. எப்படி இருக்கிறான் முதலாளி? சட்டத்தின் படி இருக்கிறான். அரசாங்கத்தின் பாதுகாப்பின்படி இருக்கிறான். அரசாங்கத்தின் சலுகையில்தான் அவன் முதலாளியாக வாழ முடிகிறது. ஆகையால் முதலாளி கூடாது என்றால் அவனைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் மீது திரும்ப வேண்டும். முதலாளி மீது பாய்வதால் பலன் ஏதுமில்லை. முதலாளிகள் மீது போராட்டம் துவக்கித் தொழிற் சங்கங்கள் இந்த அய்ம்பது வருடக் காலமாகச் சாதித்தது என்ன?

28.2.11 தொழிலாளர் இயக்கங்கள் நாட்டில் ஏற்பட்ட பிறகுதான் தொழிலாளர்களின் ஒழுக்கமே கெட்டுப் போய் விட்டது. அவர்கள் ஒழுக்கம் மட்டும் அல்லாமல் முதலாளிகளின் ஒழுக்கமும் கெட்டு அதனால் மக்களுக்குப் பெரும் தொல்லையும் ஏற்பட்டு விட்டது.

28.2.12 நல்ல தொழிலாளர் சங்கம் என்ற ஒன்று இருக்க வேண்டும் என்றால் அது முதலாளி இடத்தில் விசுவாசம் சொந்தப் பொறுப்பு போலக் கருதித் தொழில் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது முதலியவற்றைக் கொள்கையாகக் கொண்டிருக்க வேண்டும். அது போலவே சிறந்த முதலாளிகள் என்பவர்களும் தொழிலாளர்களைத் தங்கள் சொந்தப் பிள்ளைகளைப்போல் பாவித்து அவர்கள் நன்மையில் மேம்பாட்டில் நன்மை செலுத்த வேண்டும்.

28.2.13 தொழிலாளிகளுக்கு எத்தனையோ தாபனங்கள் இருக்கின்றன. ஆனால் நாணயமாக ஒழுக்கமாகப் பொதுமக் களுக்கு நட்டம், நாசம், பொருள் சேதம் ஏற்படாமல் பாடுபட ஒரு தாபனம்கூட இல்லை.

28.2.14 100க்குத் 90 பேர் தலைமையாக வயிற்றுப் பிழைப்புக்காரர்கள் தான் தொழிற் சங்கங்களைக் கைப்பற்றிக் கொண்டு இருக்கின்றனர். அவர்களே தலைவர்களாக, செயலாளர் களாக இருந்து கொண்டு வயிறு வளர்க்கின்றனர். அத்துடன் தங்கள் வாழ்வையும் வசதி செய்து கொள்ளுகின்றனர். எனவேதான் அப்படித் தொழிலாளி அல்லாத அரசியல் கட்சிக் காரர்களைச் சேர்க்காதே என்று நாம் கூறுகின்றோம்.

28.2.15 தொழிலாளி என்றால் நாணயம் இல்லாதவன் - காலி - ஒழுக்க ஈனமானவன் என்றுதான் அர்த்தம் வழங்கி இருக்கிறது. இந்த மாதிரியான முறையில்தான் தொழிலாளர் இயக்கங்களை நடத்திச் செல்பவர்கள் கூறி வருகிறார்கள். அதில் இருப்பவர்களும் அந்தத் தன்மையிலேயே இருக்கிறார்கள்.

28.2.16 தொழிலாளர்களிடையே நாணயம், ஒழுக்கம், பொறுப்பு, கடமை இவை ஏற்பட வேண்டும். இது ஏற்பட்டு வளர வேண்டு மென்றால் அதற்கு எசமான்-அடிமை, முதலாளி - தொழிலாளி என்ற நிலை இருக்கக்கூடாது. இந்த நிலைமை இருக்கும் அளவுக்கு இவை வளராது. அதற்குக் காலம் வர வேண்டுமானால் தொழிலாளர்கள் தம்மை ஆளணும். நம் நாட்டிலே அந்தத் தன்மை வரத் தொழிலாளர் தலைவர்கள்
முதலில் பாடுபட வேண்டும்.

தொழிலாளர் – தந்தை பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக